2009

2009

கிளிநொச்சிக்கும் நானே ஜனாதிபதி; அப்பகுதியை அபிவிருத்தி செய்வது எனது பொறுப்பு – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgமுழு நாட்டினதும் ஜனாதிபதி என்ற வகையில் கிளிநொச்சி மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியது தமது பொறுப்பாகுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிளிநொச்சிக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுத்த பெருந்தொகைப் பணம் புலிகளுக்குத் தேவையான கட்டடங்களையும், பதுங்குக் குழிகளையும் நிர்மாணிப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, அங்கு இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் எதனையும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

ஒரு வழியால் நுழைந்து மற்றொரு வழியில் வெளியேறக் கூடிய பதுங்கு குழிகளைப் புலிகள் அமைத்திருக்கிறார்கள். நான் அவற்றை நேரில் பார்த்தேன்.

பாதை அபிவிருத்தியோ, மின்சார வசதியோ குடிதண்ணீர் விநியோகமோ, சனசமூக நிலையமோ எதுவுமே அமைக்கப்படவில்லை. எனவே, அந்தப் பகுதியில் அபிவிருத்தியை செய்ய வேண்டும். நான் ஒரு மாகாணத்தின் ஜனாதிபதி அல்ல; நாட்டின் ஜனாதிபதி ஆகவே அது என் கடமை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருடனான சந்திப்பொன்று நேற்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இங்கு சங்கத்தின் கீதத்தைக் கொண்ட இறுவட்டு ஒன்றும் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

இன்று முக்கியமான ஒருநாள். இந்த நாட்டின் போக்குவரத்துத் துறையில் 5% அதிகமான பங்களிப்பைச் செய்கின்ற முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்று கூடியிருக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 800 பேரை இங்குக் கொண்டு வந்திருந்தேன். கொழும்பில் பெரிய பெரிய ஆட்கள் இல்லாது போன போது நீங்கள் தான் கைகொடுக்கிறிர்கள். உங்கள் சேவையை மதித்துத்தான் நாம் இங்கு உங்களை அழைத்திருக்கின்றோம். கொழும்பில் ஒரு பாதுகாப்புப் படையினரைப் போன்று நீங்கள் செயற்படுகிறிர்கள். உங்களின் தொழில் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்பதை நிரூபித்திருகிறோம். அதனால்தான் உங்களையும் அழைத்துப் பேசி வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தோம். முன்னரைப் போல் தனி அறையில் தயாரிக்கப்படவில்லை. அன்று என்னைச் சந்தித்த முச்சகர வண்டி சாரதிகள், பெற்றோல் கேட்கவில்லை. நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமற் செய்து நாட்டை மீட்குமாறு தான் கேட்டார்கள். அதனைச் செய்வதாக வாக்குறுதியளித்ததைப் போல், நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன் இன்று சந்திக்கின்றேன்.

பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களைப் பயணமாக வைத்துக் கொண்டு சண்டை செய்கிறார்கள். இன்னும் சிறிய பகுதிதான் நாம் மீட்க வேண்டியுள்ளது. நாம் தமிழர்களுடன் சண்டையிடவில்லை. முஸ்லிம் மக்களுடனோ, அமைப்புகளுடனோ சண்டை செய்ய வில்லை. நாம் பயங்கரவாதிகளுடன் தான் போரிடுகிறோம். அந்த மக்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

ஆனால், புலிகளும், அவர்களது ஆதரவாளர்களும் உலகம் முழுவதும் சென்று, எமக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார்கள். ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும், இராணுவன் தளபதியும் மக்களைக் கொல்வதாகக் கூறுகிறார்கள். உடனடியாக ஐ. நா. கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்கிறார்கள். உதவியை நிறுத்தச் சொல்கிறார்கள். இந்த நாட்டு மக்களைப் பட்டினி போடும் தேவை எதிர்க் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு உண்டு. நாட்டை அபிவிருத்தி செய்ய கடன் கேட்டால், தமிழர்களைக் கொல்வதாகக் கூறுகிறார்கள். நாம் அப்பாவி மக்களைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கொல்லவும் இல்லை. மக்களைப் பாதுகாக்கவே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். வட பகுதியிலிருந்த சுமார் ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்கள் இன்று அகதி முகாம்களில் உள்ளனர். அவர்களை மீளக் குடியமர்த்த வேண்டியது எனது கடமை.

யுத்தம் செய்தால், நாட்டில் அபிவிருத்தி செய்ய முடியாது என்றார்கள். நாம் யுத்தத்தை செய்து கொண்டு அபிவிருத்தியையும் முன்னெடுக்கின்றோம். அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையைப் 12 இலட்சமாக அதிகரித்துள்ளோம். இ. போ. ச. ஊழியர்களுக்கு முன்பு 6 மாதம் சம்பளம் வழங்கவில்லை. அதற்கெல்லாம் வாய் திறக்காமல் இருந்து விட்டு இப்போது போனஸ் தாமதம் என்றதும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். புத்தாண்டுக்கு வீடுகளுக்குச் செல்ல வேண்டும். யுத்தத்தை இரண்டொரு நாளைக்கு நிறுத்துங்கள் என்று படையினர் என்னிடம் கேட்டால், எப்படியிருக்கும். அவர்களுக்கு அம்மா, அப்பாவைப் பார்க்கவும், பெண்டாட்டி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க விடுமுறை எடுக்க முடியாது என்பதால் தான், நான் அவர்களிடத்துக்குச் சென்றேன். இனிமேல் கோரிக்கைகளை முன்வைக்கும் முன்னர் படையினரையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யூ.எஸ். எயிட் பிரதிநிதிகளுடன் அமைச்சர் முரளி சந்திப்பு- கிழக்கு அபிவிருத்தி பற்றி ஆராய்வு

karuna_amman.jpgகிழக்கு மாகாண உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புகள் தொடர்பாக யூ. எஸ். எயிட் நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் முரளிதரன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்.

யூ. எஸ். எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி றெபேக்கா மற்றும் இணைப்பாளர்கள் அரசியலமைப்பு தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து யூ. எஸ். எயிட் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு விலகியிருக்கும் போராளிகளுக்கும் போரினால் பாதிப்புற்று கணவனை இழந்த தாய்மாருக்கும் புதிய முறையிலுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் மற்றும் கால்நடை அபிவிருத்தி விவசாயம் தொழில்நுட்பக் கல்வி முறைமை தொடர்பாகவும் மட்டக்களப்பு ஆயித்தியமலையிலுள்ள அரிசி ஆலையைப் புனர்நிர்மாணம் செய்து அதை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதன் மூலம் அதிகமான மக்கள் பயனடைவரெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொக்கட்டிச்சோலை மண்முனை இணைக்கும் பாலம் திட்டத்தினையும் அமைச்சர் முன்வைத்தார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் பணய கைதிகளை விடுவித்துள்ளதாக நேட்டோ கூறுகிறது

piratasdentro.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடித்து பணயமாக வைக்கப்பட்டிருந்த 20 பேரை ஏடன் வளைகுடாவில் பணியில் ஈடுபட்டிருந்த தமது கடற்படையினர் விடுவித்துள்ளதாக நேட்டோ கூறுகிறது.

அங்கு பணியில் ஈடுபட்ட நேட்டோவின் டச்சு கடற்படையினர் கடற்கொள்ளையர்களை நிர்ப்பந்தித்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த, பெரும்பாலும் ஏமன் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று நம்பப்படுகின்ற பணயக்கைதிகளை விடுவிக்கச் செய்ததாக நேட்டோ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த கடற்கொள்ளையர்களின் ஆயுதங்கள் களையப்பட்ட போதிலும், டச்சுச் சட்டப்படி அவர்களை கைது செய்வது சட்ட விரோதம் என்பதால், அவர்களை தடுத்து வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இரண்டு பெல்ஜியம் நாட்டவர் மற்றும் ஒரு டச்சுக்காரர் உள்ளடங்கலாக 10 மாலுமிகளுடன் சேர்த்து பெல்ஜியம் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்துள்ளதாக பெல்ஜியம் கூறியுள்ளது

பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம்: எஞ்சிய 61 பேருக்கான நியமனம் மீளாய்வு

sri-lanka-upcountry.jpgமத்திய மாகாணத்தில் 61 பேருக்கான ஆசிரியர் நியமனத் தெரிவு மீளாய்வு செய்யப்படவுள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட பெருந்தோட்ட ஆசிரிய நியமனத்தின் எஞ்சிய 61 பேருக்கான நியமனத்திற்கான பெயர்ப்பட்டியல் நேர்முகப் பரீட்சையின் பின் கடந்த வருட இறுதியில் வெளியிடப்பட்டது.

இந்நியமனம் வழங்கும் முன் மாகாண சபை கலைக்கப்பட்டதுடன், தற்காலிகமாக நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின் தற்போதைய மத்திய மாகாண கல்வி அமைச்சர், பதவியேற்றவுடன் உடனடியாக இந்நியமனங்களை இரத்துச் செய்ததுடன் மீளாய்வு செய்யப்படும் என்றார்.

அமைச்சர் பி. இராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் மீளாய்வு நடவடிக்கை கெட்டம்பே கல்வி அமைச்சில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.

பெயர்ப்பட்டியல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட பின் நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதிக்குள் நடாத்தப்படும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

புதுமாத்தளனுக்கு மேலும் 1200 மெ.தொ. உணவுப் பொருட்கள். திருமலையிலிருந்து நாளை கப்பல் புறப்படுகிறது

p-devaaratna.jpg முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதிக்கு 1200 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் மேர்க் டப்ளின் சரக்குக் கப்பல் நாளை திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்படுகிறது.

17,500 பக்கற் குழந்தைகள் பால் மா, அரிசி, சீனி, கோதுமை, சோயா இறைச்சி, மிளகாய், மல்லி உட்பட சமையலுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ன தெரிவித்தார். தற்போது கொண்டு செல்லப்படும் 1200 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களுடன் புதுமாத்தளனுக்கு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2600 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் ஓமந்தை ஊடாக முல்லைத்தீவு புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு சென்றதை விட அதிகளவு தற்போது கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது எனக் குறிப்பிட்ட ஆணையாளர் புதுமாத்தளனில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்த விதத்திலும் சந்தர்ப்பம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஏப்ரல் முதல் வாரம் புதுவருடத்திற்கு முன்னதாக 1400 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண குறிப்பிட்டார்.

மாலைதீவில் 10 ஆயிரம் வீடுகள் இலங்கையர்களால் நிர்மானிக்கப்படும் – அமைச்சர் ராஜித தகவல்

rajitha.jpg மாலைதீவில் பாரிய வீடமைப்புத் திட்டமொன்று அமைக்கும் பணியை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசாங்கம் முன்வந்துள்ளதாக தேசநிர்மான மற்றும் பொறியியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அண்மையில் மாலைதீவுக்கு தான் மேற்கொண்ட விஜயத்தின் பலனாகவே இந்த நன்மை இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இத்திட்டத்தின்படி மாலைதீவின் தலைநகரில் பாதி சொகுசு வசதிகளுடன் கூடிய 10 ஆயிரம் வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன. இந்த வீடமைப்புத் திட்டத்தை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைக் கட்டிடக் கலைஞர்களின் உதவியுடன் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு

badurdeen.jpgபுத்தளம் நகரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக கற்கை நிலைய பணிக்கென வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் 20 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். கால்நடை வளத்துறை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்த நிதியினை அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம். இர்சாத் தெரிவித்தார்.

இப்புனரமைப்புப் பணிக்கான நிதி புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கற்ற சமூகத்தை உருவாக்க எடுக்கப்படும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இத்திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நெறி புத்தளத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற போது புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் மாணவர்கள் பல்துறைகளில் முன்னேற்றம் காணுவார்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளதாக, பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம். இர்சாத் மேலும் கூறினார்

கிண்ணியாவில் அல்-அக்ஸா கல்லூரிகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட அல் அக்ஸா கல்லூரியையும் அல் அக்ஸா கணிஷ்ட வித்தியாலயத்தையும் ஒன்றாக இணைத்து, ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமெனக் கோரி கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மாணவர் அமைப்பு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்களுடன் இயங்கிக் கொண்டி ருக்கும் அல்-அக்ஸா கல்லூரியையும் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் அல்-அக்ஸா கனிஷ்ட பாடசாலையையும் ஒன்றாக இணைப்பதனால் ஏற்படும் அனுகூலங்களையும் அவை பிரிந்து செயல்படுவதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் அம்மாணவர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

1700 மாணவர்களைக் கொண்ட அல்-அக்ஸா கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் இல்லை.4 அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறையே இல்ல விளையாட்டுப் போட்டி பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு கிலோ மீற்றர் தொலைவிற்கு அப்பால் உள்ள கரடுமுரடான எழிலரங்கு மைதானத்தில் நடத்தப்படும். அத்தோடு கல்லூரியில் காலை தேகப் பயிற்சியையும் உடற்கல்வி பாடத்துக்கு தேவையான செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

ஒரே காணிக்குள் இயங்கும் இரண்டு பாடசாலைகளும் ஒன்றாக இணைவதன் மூலம் 40 மீற்றர் நீளமும் 60 மீற்றர் அகலமும் கொண்ட ஒரு பயிற்சி மைதானத்தை உருவாக்க முடியும்.

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவி

pakis-japan.jpg பாகிஸ் தானின் அபிவிருத்திக்கேன சர்வதேச கொடையாளி நாடுகள் 5 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உதவியை வழங்க முன்வந்துள்ளார்கள். உலக வங்கி மற்றும் ஜப்பான் ஆகியவற்றினால், டோக்கியோவில் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இதற்கான மாநாட்டில் 30க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டன.

இதனைவிட பாகிஸ்தானிய பொருளாதார பிரச்சினையை தவிர்க்க சர்வதேச நாணய நிதியமும் 7 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது.

அமெரிக்காவும், ஜப்பானும் தலா ஒரு பில்லியன் டாலர்களை வழங்க முன்வந்துள்ளன. உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய திட்டங்களின் மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்த உதவிகளின் நோக்கம் என்று கொடையாளிகள் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி சபை திருத்தச் சட்டம் தொடர்பில் கால அவகாசம்

இலங்கையில் மத்திய அரசினால் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் விசேட திருத்தச் சட்டமூலம் தொடர்பாக மாகாண சபைகள் தமது கருத்துக்களை தெரிவிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை ஜனாதிபதி மேலும் ஒரு மாத காலம் நீடித்தள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் கிழக்கு மாகாண ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச திருத்த சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படவிருந்த வேளையில் வெள்ளிகிழமையன்று கிழக்கு மாகாண சபையில் விவாதிக்கப்பட்ட போதிலும், இது தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், எதிர்வரும் திங்கள்கிழமைக்கு கிழக்கு மாகாண சபையின் அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட இந்த அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மாகாண ஆளுனருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.