முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதிக்கு 1200 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் மேர்க் டப்ளின் சரக்குக் கப்பல் நாளை திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்படுகிறது.
17,500 பக்கற் குழந்தைகள் பால் மா, அரிசி, சீனி, கோதுமை, சோயா இறைச்சி, மிளகாய், மல்லி உட்பட சமையலுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ன தெரிவித்தார். தற்போது கொண்டு செல்லப்படும் 1200 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களுடன் புதுமாத்தளனுக்கு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2600 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் ஓமந்தை ஊடாக முல்லைத்தீவு புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு சென்றதை விட அதிகளவு தற்போது கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது எனக் குறிப்பிட்ட ஆணையாளர் புதுமாத்தளனில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்த விதத்திலும் சந்தர்ப்பம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஏப்ரல் முதல் வாரம் புதுவருடத்திற்கு முன்னதாக 1400 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண குறிப்பிட்டார்.