2009

2009

இடம்பெயர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் மீண்டும் அதே பதவியில் – அமைச்சர் ரிஷார்ட் நடவடிக்கை

rizad_baduradeen1.jpgபாதுகாப்பு வலயத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள கிராம சேவை உத்தியோகத்தர்களை மீண்டும் அதே பதவியில் நியமிப்பதற்கு அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹாலிடீன் தெரிவித்தார்.

இவ்வாறு நியமனம் பெறும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடி நீர் மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

இறப்பு பிறப்பு தொடர்பான விடயங்களைப் பதிவு செய்வதற்கு உதவும் அதேவேளை நலன்புரி நிலையங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக முகாமைத்துவத்துக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெற்றிபெறும் – அமைச்சர் சமரசிங்க நம்பிக்கை

mahinda_samarasinghe_.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் இலங்கை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அனர்த்;த முகாமைத்துவ மற்றும்  மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாகக் கூட்டப்பட்டிருக்கும் விசேட அமர்வில் இலங்கைக்குப் போதியளவு ஆதரவு இருப்பதாகவும், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என்பது நிரூபிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எம்மீது விசாரணை நடத்தப்படவேண்டிய தேவை இல்லை. பல்வேறு தரப்பினரால் அரசியல் அறிக்கைகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லையென நான் கருதுகிறேன் என அமைச்சர் ஜெனீவாவில் ஊடகங்களுக்குத்  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை கூறியிருந்தார். எனினும், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் தேவையென மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் கூறவில்லையென அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எமக்கு எதிராகப் போர் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசா வழங்கவில்லையென்ற கேள்விகள் எதுவும் எழாது. ஏனெனில், உள்ளூர் விவகாரங்களை அரசாங்கம் சட்டரீதியாகக் கையாழும் என்றார் அமைச்சர். மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கமும் பதிலறிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான அறிக்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் உறுப்பு நாடுகள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா, பஹ்ரெய்ன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவுதி அரேபியா, எகிப்து, நிக்கரகோவா, பொலிவியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றன.

இலங்கைக்கு முன்னர் ஆதரவு வழங்கிய ஈராக் தனது நிலைப்பாட்டை மாற்றியதுடன், இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் இந்திய எண்ணெய் நிறுவன எரிபொருள் நிரப்பும் நிலையம்

loc_logo.jpgவடக்கு கிழக்கில்; புதிதாக தமது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்கவுள்ளதாக இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது  உள்ளன. மேலும் 300 நிலையங்களை புதிதாகத் திறப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி ஒவ்வொரு நிலையத்துக்கும் 20 மில்லியன் ரூபா வீதம் இத்திட்டத்துக்கு 6 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

லாஹூர் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி!

பாகிஸ்தானின் லாஹூர் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் மீட்பு பணியாளர்களும் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் முக்கிய நகரங்களிலும் வெளியிடங்களிலும் தொடர்ச்சியான குண்டு வெடிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள்  இடம்பெற்றுவருவதன் காரணமாக பெருந்தொகையான சிவிலியன்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இரண்டாவது அமர்வு இன்று

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது அமர்வு இன்று நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களை மறுத்து ரஷ்யா மற்றும் சீனப் பிரதிநிதிகள் நேற்றைய அமர்வில் உரையாற்றினர். ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இன்று உரையாற்றவுள்ளனர் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் உறவினரை காணவில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் செயலாளரான தவராஐசிங்கம் சுபாஸ் (23 வயது) என்பவர் நேற்று அதிகாலை முதல் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளார். சென்னையிலிருந்து கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்த இவர் அங்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் , இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தியின் சகோதரியின் மகனான இவர் தனது பெற்றோருடன் கொழும்பிலேயே வசித்து வருகின்றார்.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்த சமயம் அங்கு வைத்து கைது செய்யப்பட்டடதாக தகவலறிந்த தாயார் இக்கைது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் ஊடாக பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டதாகவும், இதன் பிரகாரம் நேரடியாக வந்து அழைத்துச் செல்லுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரியினால் பதிலளிக்கப்பட்டதாகவும் இது தொடர்பாகக கூறப்படுகின்றது.

கொழும்பிலுள்ள கனேடிய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

canada-2.jpgகொழும்பிலுள்ள கனேடிய தூதரகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கனேடிய அரசங்கம் விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கோஷங்களை எழுப்பியதுடன் பாதாதைகளையும் ஏந்தியிருந்தனர்

மட்டு. மாவட்டத்தில் மேலும் மூன்று இடங்களில் அனர்த்த முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள்

kalmunai.jpgஅனர்த்தங்கள் பற்றி முன்னெச்சரிக்கை செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் மூன்று கோபுரங்கள் நிறுவப்படவுள்ளன.

இக்கோபுரங்களின் செயற்பாடுகளை விளக்குவதற்கான ஒரு கூட்டம் கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம சேவையாளர்கள் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். கலாநிதி புத்திக வீரங்சிக தலைமையிலான குழுவினரால் கருத்துரையும் விளக்கமும் அளிக்கப்பட்டன

1 இலட்சம் படையினரை மேலும் திரட்டுவதற்கு இராணுவம் தீர்மானம் -ஜெனரல் சரத் பொன்சேகா

fonseka-000.jpgஉள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், விடுதலைப்புலிகளின் மற்றொரு கிளர்ச்சி ஏதாவது மீண்டும் இடம்பெறுவதை தடுப்பதற்காக மேலும் 1 இலட்சம் படையினரை திரட்டவுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்திருக்கிறது.

வெளிநாடுகளிலுள்ள புலி உறுப்பினர்கள் புதிய தலைமைத்துவத்தின் கீழ் மீண்டும் முயற்சிப்பர் என்பதால், படையினரை கட்டியெழுப்பவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்ததாக ஏ.பி. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களிலும் நோர்வேயின் ஒஸ்லோ நகரிலும் வணக்க நிகழ்வுகள்

வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய இனப்படுகொலையில் பலியான மக்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களிலும் நோர்வேயின் ஒஸ்லோ நகரிலும் துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன