2009

2009

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

எரிபொ ருட்களின் விலைகள் நேற்று (01) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பெற்றோல் (90 ஒக்டேன்) லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் பெற்றோல் (95 ஒக்டேன்) லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாவாலும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டதையடுத்தே இலங்கையில் எரிபொருட்களின் விலைகளிலும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலையதிகரிப்புகள் செய்யப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தின் உயர் மட்ட குழு இலங்கை வர ஏற்பாடு நாடு திரும்பிய அமைச்சர் ஆறுமுகன் தகவல்

தமிழக தூதுக்குழுவொன்று கூடியவிரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் இதற்கான உறுதிமொழியை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தன்னிடம் கூறியதாக இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், இ. தொ. கா.வின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக் கமைய, கடந்த 29ஆம் திகதி தமிழகம் சென்று கலைஞர் கருணாநிதி, அவரது மகளும் இலங்கை தொடர்பான கலைஞரின் ஆலோசகருமான கனிமொழி எம். பி. ஆகிய இருவரையும் சந்தித்த போதே கலைஞர் இந்த உறுதி மொழியை வழக்கினார்.

இலங்கைக்கு வருகை தரும் தமிழகத் தூதுக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் யார்? வரும் திகதி, அதற்கு தலைமை வகிப்பவர் யார்? என்பது குறித்து கூடிய விரைவில் தமிழக அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் வெளியிடப்படும்.

தமிழக அரசாங்கம் இலங்கைக்கு குறிப்பாக வடக்கிலுள்ள அகதி முகாம்களில் வசிப்பவர்களின் நலன் கருதி வழங்கப்படும் 500 கோடி ரூபா குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது என தெரிவித்த அமைச்சர் தொண்டமான் தமிழக அரசாங்கம் மலையக பகுதிகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவது குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக மலையக வீதி அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி மற்றும் மலையக மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இலங்கைவாழ் இந்திய வம்சாவளியினர் பயனளிக்கும் வகையில் மலையகத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் தனியான வைத்தியசாலை யொன்றும் தனியான பல்கலைக்கழகம் ஒன்றும் அமைப்பது குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன் மலையக மக்களின் நலன் கருதி தோட்டப்பகுதியில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த தேவையான பஸ்களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதென கூறினார்.

மலையகத்தில் நேற்றும் 24 மணி நேர எச்சரிக்கை

images.jpgமலையத் திலுள்ள நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று இரண்டாவது நாளாகவும் 24 மணி நேர முன்னெச்சரிக்கையை விடுத்தது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களினதும் வெவ்வேறு பிரதேசங்களில் இந்த அபாயம் உருவாகி இருப்பதாக நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த நான்கு மாவட்டங்களிலும் 100 மி.மீட்டருக்கும் மேலாகத் தொடராக மழை பெய்திருப்பதுடன் தொடர்ந்தும் மழை பெய்யு மென வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது.

அதனால் இம்மாவட்டங்களில் மணிசரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டி ருக்கும் பிரதேசங்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. அதனால் மண்சரிவு அபாயம் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியாகொட, கலவான, கஹவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்ட த்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோப்பிட்டிய, தெரணியா கல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளிலும், நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பகுதியிலும், கினிக்கத்தேன, நோட்டன் பிரிட்ஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலியா பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் மிக்க பல இடங்கள் உள்ளன. அவை ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

வலப்பனைத் தோட்டத்தில் 4 லயன்கள் எரிந்து நாசம்

வலப்பனை ‘பெப் ஸ்பேல்’ தோட்டத்தின் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள லயன் ஒன்றில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் நான்கு லயன் அறைகள் எரிந்து சாம் பராகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார்.

இச்சம்பவத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் நிர்க்கதியான நிலையில் அங்குள்ள விகாரையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும், இச் சம்பவம் காரணமாக உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.இத் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சமைத்த உணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; தியனில்ல கீழ் பிரிவிலுள்ள 17ம் இலக்க லயனிலேயே இத் தீவிபத்து நேற்றுக் காலை 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இத் தீவிபத்தினால் அங்கிருந்த நான்கு லயன் அறைகள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவத்திற்கு லயன் அறையொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கியிருந்து தீ பரவியதே காரணம் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமையல் பாத்தரங்களையும் உடுதுணிகளையும் வழங்க நுவரெலிய மாவட்ட செயலகமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன. அத்தோடு செஞ்சிலுவைச் சங்கம் இவர்களுக்குப் பாய்களையும் உடுதுணிகளையும் மட்டுமல்லாமல் இவர்களது குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

டெங்கு: 13,692 பேர் பாதிப்பு 156 பேர் உயிரிழப்பு – உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் கட்டுப்படுத்தும் நடவடிக்கை துரிதம்

aedes_aegypti.jpgஉலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கை களை அரசாங்கம் மேலும் துரிதப்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவென 25 இரசாயனப் புகை விசிறும் இயந்திரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை இவ்வருடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் அதிகளவு இனம்காணப்பட்ட மாத மாக ஜூன் விளங்குவதா கவும் இம்மாதத்தில் மாத்திரம் 5,357 பேர் இக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச் சின் நோய் பரவுகை தடுப்பு பிரிவு மருத்துவ அதிகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் காரணமாக இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலும் 156 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் இக்காலப்பகுதியில் இக்காய்ச்சலுக்கு 13692 பேர் உள் ளாகியுள்ளனர் எனவும் அந்த மருத்துவ அதிகாரி கூறினார்.

இந்த நாட்களில் எவருக்காவது இரண்டொரு நாட்களுக்குக் கடும் காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுவது அவசியம் என்று வலியுறுத்திய அம்மருத்துவ அதிகாரி, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை முற்றாக ஒழித்து சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்திருப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அந்த மருத்துவ அதிகாரி மேலும் குறிப்பிடுகையில்; டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இருந்தும் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. ஆகவே, டெங்கு காய்ச் சலைப் பரப்பக் கூடிய நுளம்புகளை ஒழித்துக்கட்டுவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக கம்பஹா, கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, கேகாலை, மட்டக்களப்பு களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. என்றாலும் ஏனைய மாவட்டங்களிலும் இக்காய்ச்சல் காரணமாகப் பலர் உயிரிழந்திருப்பதையும் மறந்துவிட முடியாது என்றார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெட்டிக் கொலை ஹொரணையில் கொடூரம்

ஹொரணை போருவதள்ட பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப் பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

களுத்துறை மாவ ட்டத்தைச் சேர்ந்த ஹொரணை பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை (30) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் தகப்பன், தாய், மகள் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். மரணமானவர்கள் ஆர். பீ. விமலசிறி – 55 (தகப்பன்), சிறியா மல்காந்தி – 55 (தாய்), இனோகா – 25 (மகள்).

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பேரில் சம்பவம் நடந்த ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கொலை செய்யப் பட்டிருப்பதை தெரிவித்தனர்.மேற்படி கொலைச் சம்பவம் தனிப்பட்ட பகைமையின் காரணமாக இடம்பெற்றிருக்கலாமென நம்பப்படுகிது. ஹொரணைப் பொலிஸார் புலன்விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

நிவாரண கிராமங்களுக்கு தடுப்பூசி வழங்க பிரிட்டன் 5 இலட்சம் பவுண்

vaccine.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள சிறுவர்களுக்கு அம்மை மற்றும் போலியோ அவசர தடுப்பூசிகளை வழங்குவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு மேலதிகமாக 5 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் யுனிசெப் அமைப்புக்கு இந்நிதி கடந்த 29ஆம் திகதி கையளிக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டாக்டர் பீட்டர் ஹேயிஸ் தெரிவித்துள்ளார். நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்கியிருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் இத்தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கடந்த மாதம் நிவாரணக் கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ முகாமில் அன்றி இத்தடுப்பூசிகள் வழங்கும் செயற்திட்டம் வேறாக முன்னெடுக்கப்படுமெனவும் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை யில் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் 12.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனங்களுக்காக இலங்கையில் பிரத்தியேக வலயம்

ஆசியாவின் மிகப்பெரும் பொருளாதாரமான, சீனாவிடமிருந்து மேலும் முதலீட்டை கவரும் ஒரு முயற்சியில், இலங்கைத் சீன நிறுவனங்களுக்கு பிரத்தியேக வலயம் ஒன்றை அளித்திருக்கிறது.

தலைநகர் கொழும்புக்கு சுமார் 55 கிமீ தூரத்தில் இருக்கும் மீரிகமவில் , ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஹுய்ச்சென் இன்வெஸ்ட்மன்ட் ஹொல்டிங்க்ஸ் என்ற நிறுவனம் இந்த பொருளாதார வலயத்தை உருவாக்கும் என்று இலங்கையின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் கூறியது.

தயாரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்கள் இந்த வலயத்தில் தமது உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் ஒரு வெளிநாடு இத்தகைய வசதியைப் பெறுவது என்பது இதுவே முதல் முறை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

அமைச்சர் ரோஹித்த சீனாவுக்குப் பயணம்

18rohitha_bogollagama_.jpgவெளி விவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சீனாவுக்கான நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று பயணமானார். சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜெச்சியின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் அமைச்சர் சீனாவின் உதவிப் பிரதமர் வின்சட் சீவ்வைச் சந்தித்து இரு நாடுகளினதும் சம கால விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவார்.

”இலங்கையின் கடந்த கால நெருக்கடியும் எதிர்கால நடவடிக்கைகளும்” என்ற தலைப்பில் சீனாவின் சர்வதேச கல்விக்கூடத்தில் அமைச்சர் உரையாற்றுவார். சீனாவின் வர்த்தக சமூகத்தினரையும் சீனாவில் வாழும் இலங்கையர்களையும் அமைச்சர் போகொல்லாகம் சந்தித்து உரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

உதயன் தடையின்றி வெளிவருவதற்கு ஆசிரியரிடம் ஜனாதிபதி உத்தரவாதம்

uthayan_logo“எந்தவித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் “உதயன்” நிறுவனம் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கருத்து வெளியிடும் சுதந்திரம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை நசுக்குவதற்கு இடமளிக்க முடியாது. அத்தகைய முயற்சிகளில் ஈடுபடும் சக்திகளைத் தேடிக் கண்டுபிடித்து அடியோடு அடக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்படும். ஆரோக்கியமான ஊடகப்பண்பு நிலவுவதையே அரசுவிரும்புகின்றது. அந்த வகையில் “உதயன்” பத்திரிகையும் தனது பணியைத் தொடர்வதையே நாம் விரும்புகின்றோம்.

உதயன் பணியாளர்களும், நிறுவனமும் தமது கடமையை அச்சமின்றித் தொடரலாம். அத்தகைய அச்சமற்ற சூழ் நிலையை நாம் உறுதி செய்வோம்” இவ்வாறு “உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியர் என்.வித்தியாதரனிடம் உறுதி தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

யாழ்ப்பாணத்தில் “உதயன்” நிறுவனத்துக்கு சில அநாமதேய சக்திகள் அச்சுறுத்தல் விடுத்திருப்பது பற்றிய செய்திகள் வெளியானதை அடுத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இவ்விடயத்தை உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இவ்வியடம் குறித்து “உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் உரையாடல் ஒன்றை அமைச்சர் தொண்டமான் ஒழுங்குசெய்தார். இந்த உரையாடலின்போது “உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியரிடம் ஜனாதிபதி தெரிவித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

“எதிரணியைச் சேர்ந்த சில சக்திகளே அரசின்மீதும் என்மீதும் கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக இப்படித் தொலைபேசி மூலமும் பிறவழிகளிலும் ஒளிந்துகொண்டு இருந்து அச்சுறுத்தல் விடுக்க முயல்கின்றன. அத்தகைய சக்திகளை உரியமுறையில் ஒட்ட அடக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவை தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டாது.

“முடிந்தவை முடிந்துவிட்டன. இனிப் புது அத்தியாயத்தைத் தொடங்குவோம். பிரிவினைவாதத்தைக் கைவிட்டு நாடு ஐக்கியத்துடன் அபிவிருத்தியை நோக்கி முன்னேறுவதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு எனக்கு அவசியம்.

“ஊடகப் பணிக்குக் கெட்ட பெயர் ஏற்படாமல் அது நேர்சீராக நடப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசுஎடுக்கும். இதற்காகத் தேவைப்பட்டால் ஊடக அமைச்சை நேரடியாக எனக்குக் கீழ் கொண்டு வரலாமா என்றும் கூட சிந்திக்கின்றேன்.

“உங்கள் ஊழியர்களை உற்சாகமாகப் பணியாற்றச் சொல்லுங்கள். எதிரணியின் வலைக்குள் வீழ்ந்து எமது அரசுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்துவிடாதீர்கள்.

“இந்த விடயத்தை உடனடியாக எனது கவனத்துக்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கைகளுக்குத் தூண்டிய அமைச்சர் தொண்டமானுக்கும் எனது நன்றிகள். உங் கள் நன்றியையும் தெரியப்படுத்துங்கள்.

“அரசுடன் நெருங்கிய தொடர்பாடல்களைப் பேணி தமிழ் மக்களுக்கு அரசின் செய்தியை “உதயன்”, “சுடர் ஒளி” ஊடகங்கள் எடுத்துச் செல்லவேண்டும். நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுவோம். வாருங்கள்” என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.