2009

2009

நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர் மக்களே தூண்களாக தாங்கி நிற்க வேண்டும்: உருத்திரகுமாரன்

02-rudrakumaran.jpgநாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்துள்ள மக்கள்தான் தூண்களாக தாங்கி நிற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாடு கடந்த அரசு குறித்த சிறிய விளக்கத்தை தெரிவிக்க முடியுமா?

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை சரித்திரப் பின்னணியோடு நாங்கள் பார்க்க வேண்டும். சிறிலங்கா தீவு சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்த் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மூலமும் சாத்வீகப் போராட்டத்தின் மூலமும் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முனைந்தனர். ஆனால் அந்தப் போராட்டங்கள் படையினரால் முறியடிக்கப்பட்டதோடு,  இனவாதம் தலைதூக்கியதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மூலமூம் அந்த உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் போனது. இதன் விளைவாகவே தமிழ்மக்களின் இந்தப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்மக்களின் இந்த பிரச்சினை அனைத்துலக அரங்கில் முன்வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது, அங்கு ஒரு கட்டுமானமும் இருந்தது. சிறிலங்கா அரசு இன்று மாறிவரும் பூகோள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக வைத்து அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக அந்த இராணுவப் போராட்டங்களை முறியடித்து விட்டது. எனவே அடுத்த கட்டமாக தமிழர்களின் போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசு என்ற வகையில் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

“போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் ஒன்றுதான்” என்று சுதுமலையில் இடம்பெற்ற பிரகடனத்தில் தலைவர் கூறினார். அதே போன்றுதான் போராட்ட வடிவங்கள் மாறினாலும் எமது இலட்சியம் ஒன்றுதான். அனைத்துலக சட்டங்களுக்கும் அனைத்துலக ஒழுங்குகளுக்கும் இணைவாக தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைக் காண்பதற்காகத்தான் இது அமைக்கப்படவுள்ளது.

பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காண்பதற்கு சமபலநிலை அத்தியாவசியமானது. நோர்வேயின் அனுசரணையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது சமபலநிலை எங்களுடைய இராணுவ பலத்தை மையப்படுத்தியிருந்தது. இன்று சமபலமற்ற நிலையில் இருக்கின்றோம். எனினும் சமபலநிலை என்பது இராணுவ பலத்தை மட்டும் கொண்டதல்ல. சமபலநிலை என்பதற்கு பல்வெறு வடிவங்கள், பரிமாணங்கள் உண்டு.

தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு அந்த சமபல நிலையை – தற்போதுள்ள சமபல இடைவெளியை – நிரப்பும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இதனடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலம் சுயநிர்ணய அடிப்படையில் ஒருதீர்வைக் காண்பதற்கு இது அடிப்படையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

நாடு கடந்த அரசு குறித்து கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வந்தன. புறநிலை அரசுக்கும் (Government in Exile) நாடு கடந்த அரசுக்கும் (Transnational Government) பல ஒற்றுமைகள் இருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. புறநிலை அரசு (என்பது ஒரு நாட்டில் ஆட்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் அனைத்துலக சமூகத்தில் இன்னொரு நாட்டின் அனுசரணையுடன் புறநிலை அரசு (Government in Exile) அமைத்துக் கொள்வார்கள். உதாரணமாக ஏஎன்சி, பலஸ்தீனர்கள், இந்தியாவில் தலாய்லாமா அப்படிச் செய்தார்கள்.

மேற்படி இரண்டு விடயங்களிலும் அதாவது நாடு கடந்த அரசிலும் புறநிலை அரசிலும் அரசியல் இடைவெளி என்பது இல்லை. ஒரு நாட்டில் இதற்குரிய இடமளிப்புக்கள் இல்லாத காரணத்தினால்தான் அனைத்துலகில் இதனை அமைக்க வேண்டியுள்ளது.

அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தாயகத்தில் உள்ள மக்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்துள்ள மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நலன்களையும் பேணும். எனவே, புலம்பெயர் தமிழ்மக்கள் ஒரு குழுவாக இருந்தால்தான் அந்த பலத்தின் மூலம் நாங்கள் எமது மக்களின் விடிவிற்கு உதவ முடியும்.

தமிழர்களின் இராணுவ பலம் சமநிலையில் இருந்தபோது அனைத்துலக சமூகத்தால் எமக்கு ஒரு தீர்வையும் வழங்க முடியவில்லை. இன்றைய நிலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடாக எவ்வாறு இலக்கினை அடைய முடியும் எனக் கருதுகின்றீர்கள்?

தமிழர்களின் தேசியப் பிரச்சினையானது பூகோள அரசியலுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. தென்னாசியாவில் எப்படி அரசியல் மாற்றமடைகிறதோ அதன் மையத்தில்தான் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வும் இருக்கின்றது. எமக்கு என ஒரு இராணுவ பலம் இல்லாவிட்டாலும் இன்று மாறிவரும் பூகோளஅரசியல் நிலையில் – நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு அதிகார மையமாக திகழ்ந்து, அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் அங்கு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் கருதுகிறேன்.

கடல் கடந்த தமிழீழ அரசுக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கின்றதா?

நாடு கடந்த தமிழீழ அரசு இன்னும் அமைக்கப்படவில்லை. தற்போது அதனை அமைப்பதற்கான செயற்குழுவே அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைப்பது தொடர்பாக பல்வேறு இராஜதந்திரிகளுடனும், அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் உட்பட பல தரப்புகளுடனும் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றோம். நாங்கள் தயாரித்த அறிக்கையை இராஜதந்திரிகளுக்கும், தொண்டு நிறுவன பிரிதிநிதிகளுக்கும் அனுப்பி அவர்களுடன் கருத்து பரிமாறுவதற்கு கோரியுள்ளோம். அவர்கள் அத்தகைய கருத்து பரிமாறலுக்கு இணங்கியுள்ளனர். அவர்களுடனான சந்திப்புக்கும் ஏற்பாடாகியுள்ளது. விரைவில் ஒரு ஆலோசனைக்குழுவையும் அமைப்போம்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது எந்தவொரு தொண்டு நிறுவனமோ இந்த கடல் கடந்த தமிழீழ அரசு குறித்த அறிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக இதைப்பற்றி முக்கியமெடுத்து கலந்துரையாட வேண்டும் என்று கூறியுள்ளனர். தனிப்பட்ட முறையில் இத்தகைய கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. விரைவில் முறையான ஒரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஆலோசனைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறீர்கள்?

செயற்குழு அமைப்பது தொடர்பாக கலந்துரையாடி வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளுக்குமான செயற்குழுக்களையும் அமைக்கவிருக்கிறோம். அத்துடன் எமது செயற்குழுவில் மேலும் சிலரையும் சேர்க்கவிருக்கிறோம். குறிப்பாக சிறிலங்காவைச் சேர்ந்த முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் தற்போது உள்ளார். அவர் எமக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். இது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் என்றும் இதில் தானும் இணைந்து தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு சரியான தீர்வைக் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல இந்தியாவிலிருந்தும் சிலர் தொடர்பு கொண்டு எதற்காக இந்தியாவிலிருந்து எவரையும் செயற்குழுவில் இணைக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு செயற்குழுவை விரிவுபடுத்தவிருக்கிறோம். அதன்பின்னர் இந்த குழுக்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தவிருக்கிறோம்.

தமிழ்மக்களுக்கான தீர்வு விடயத்தில் சிறிலங்கா மற்றும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செல்வது குறித்த உங்களது கருத்து என்ன?

தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கை கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்கள் எமக்கு தெட்டத்தெளிவாக காட்டியது. தமிழ்த்தேசியப் பிரச்சினையில் இந்தியா முக்கிய வகிக்கின்றது. அது நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். எதுஎப்படியிருப்பினும் இந்தியாவுடனும் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

சிறிலங்காவிற்கான கதவுகளையும் நாங்கள் இன்னமும் மூடவில்லை. பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வை எட்டுவதென்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

அந்தவகையில் சிறிலங்கா அரசுக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கின்றோம். இந்தியாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றோம். இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கோ அல்லது இந்தியாவின் பூகோள நலன்களுக்கோ எமது செயற்பாடுகள் பாதிப்பாக அமையாது என்பதை வலியுறுத்தி இந்தியாவுடனான எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவிருக்கின்றோம்.

இரண்டு விடயங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கவிருக்கிறோம். ஒன்று – சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் (Relevant Stake Holders) தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்துவது. இரண்டாவது நிறுவனமயப்படுத்தலையும் (Institution Building) முன்னெடுத்துச் செல்வது.

கடல் கடந்த தமிழீழ அரசு பற்றிய விளக்கத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளது. அதனை நீங்கள் எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்?

மக்களை இந்த தகவல் சென்றடைய வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் எடுத்திருக்கின்றோம். செயற்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் எமது நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவார்கள்.

நாடு கடந்த அரசு என்பது எமது மக்களுக்கு புதிய விடயம். எனவே இதனை எமது மக்களுக்கு எவ்வாறு தெரிவிப்பதென்பது குறித்து நாங்கள் கவனமெடுத்து வருகிறோம். குறிப்பாக கேள்வி பதில் வடிவில் புத்தகமாக இந்த விளக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவிருக்கிறோம். ஓரிரு மாதங்களில் இந்த புத்தகம் வெளியாகும்.

நடந்து முடிந்த துயரச் சம்பவங்களிலிருந்து மீண்டெழுந்து மக்கள் எவ்வளவு விரைவாக அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த அறிவிப்பு வெளியாகியதும் அதனை அவசரப்பட்டு மெற்கொண்ட முடிவாக சிலர் கருதினர். மே மாதம் 15, 17 ஆம் திகதிகளில் முள்ளிவாய்க்காலில் நடந்த இராணுவத் தாக்குதல்களின் கொடூரம் எங்களுக்கு தெரியும். அந்த ஒருமாத காலத்தில் சிறிலங்கா அரசிற்கு நாங்கள் ஒரு செய்தியை அனுப்ப விரும்பினோம். இராணுவ ரீதியில் போரியல் சட்டங்களுக்கு மாறாக எங்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழித்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் அழியவில்லை, அழிக்கவும் முடியாது என்ற செய்தியை சிறிலங்கா அரசிற்கு தெரியப்படுத்தவே காலங் கடந்த தமிழீழ அரசை நாங்கள் அறிவித்தோம்.

அத்துடன், அடுத்து என்ன என்று இருந்த மக்களுக்கு ஒரு வழியைக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் அவசரப்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டோம்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் தற்போது செய்யவேண்டிய பணிகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

நாடு கடந்த தமிழீழ அரசிற்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. புலம்பெயர்ந்துள்ள மக்களின் அமைப்புகள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி நிற்க வேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice) வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

எந்தவொரு குழுவையோ அல்லது எந்தவொரு நபரையோ இது முன்னுரிமைப்படுத்தவில்லை. நாங்கள் தேர்தல் நடத்த இருக்கின்றோம். அது ஜனநாயக முறைப்படி நடக்கும். அதில் எவரும் பங்குகொள்ளலாம். அப்படி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ள எமது அரசு தான் அனைத்துலகில் தமிழ் மக்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரலாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

அதற்கு முன்னர் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே முக்கியமாக ஒவ்வொரு தமிழனும் இதில் ஒன்றுபட்டு இது எனது அரசு என்ற நோக்கில் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஜுலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை – சர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day) – புன்னியாமீன்

co-op-day.jpgசர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day) ஒவ்வொரு ஆண்டும்  ஜுலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை ‘கூட்டுறவே நாடுயர்வு” எனும் கருப்பொருளின் கீழ் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறை நாட்டின் சமூக,  பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. இருந்தபோதிலும் முதலாளித்துவ சமூக வளர்ச்சியுடன் கூட்டுறவு பலதுறைகளிலும் தனது முக்கியத்துவத்தை படிப்படியாக இழந்தே வந்துள்ளது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலகட்டங்களில் கூட்டுறவுத்துறையில் ஏற்பட்ட எழுச்சியுடன் ஒப்பநோக்கும்போது தற்போதைய நிலையில் மேற்குறிப்பிட்ட கருத்து பொருந்தும். நவீன காலத்தில் ‘உலகமயமாக்கல்”  சிந்தனையுன் மேலும் இதன் வளர்ச்சிப்போக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாயினும்,  கூட்டுறவு என்பது இன்றியமையாத ஒன்று என்று கூறுவதில் தவறாகாது. எவ்வாறாயினும் இன்றைய உலகம் சமூக,  பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவை உணர்ந்தே உள்ளது. நாடுகளிடையே கூட்டுறவு, மக்களிடையே கூட்டுறவு,  கூட்டுணர்வு போன்ற எண்ணக்கருக்கள் சர்வதேச மட்டத்தில் கூட்டுறவு தினத்தை நினைவுகூர வாய்ப்பளித்துள்ளன. சர்வதேச மாநாடு இத்தினத்தை அனுஸ்டிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.

கூட்டுறவு அமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகி வளர்ந்து வந்துள்ளது. பிரான்சின் சோசலிஸவாதி சார்ள்ஸ் பூரியர்,  இங்கிலாந்தைச் சேர்ந்த றொபர்ட் ஓவன் (1771-1858),  டாக்டர் வில்லியம்கிங் போன்ற இலட்சியவாதிகளின் சிந்தனையில் உதித்த இத்தத்துவம்,  1844 இல் றொக்டேல் நகர தொழிலாளர்களால் செயல்வடிவம் பெற்றது. கூட்டுறவின் வரைவிலக்கணம் பின்வருமாறு: கூட்டுறவு என்பது சனநாயக அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் சுயேச்சையான தொழில்முயற்சி ஒழுங்கமைப்பொன்றாகும். இதன் குறிக்கோள் தன்னிச்சையாக ஒன்றுகூடும் தனியாட்களின் பொதுவான பொருளாதார, சமூக,  கலாசார தேவைகளை எய்துவதாகும். இத்தனியாட்கள் கூட்டாக சொத்துவத்தை அனுபவிக்கின்றனர்.
‘மனிதன் ஒரு சமூகப்பிராணி. சமூகத்தோடு எந்தவித உறவுமின்றி அவன் பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர முடியாது. ‘நான்’ எனும் அகம்பாவத்தை அகற்றிவிட இயலாது. அவனுடைய சமுதாயச் சார்பு அவனுடைய நம்பிக்கையை சோதனை செய்து கொள்வதற்கும் உண்மை உரைக்கல்லால் தன்னையே அளந்து கொள்வதற்கும் உதவுகிறது’ இந்த அடிப்படையில் கூட்டுறவுத் தத்துவத்தின் பொது இயல்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

01. சேர்ந்து செயலாற்றுதல் (Associated Action)
02. சகலருக்கும் பொவுதான தன்மை  (Universality)
03. தனிநபர் சுதந்திர விருப்பு (Free Will of the individual)
04. சமத்துவம்  (Equality)
05. சனநாயகம்  (Democracy)
06. சேவை நோக்கு (Service)
07. தனிநபர் சுதந்திரம் (Individual Freedom)
08. நடுநிலையும் சமூக நீதியும் (Equity and Social Justice)
09. கூட்டுணர்வு (Spirit of Solidarity)
10. புதிய சமூக ஒழுங்கு (New Social Order)
11. மனிதரின் அந்தஸ்தினை மதித்தல் (Rocognition of dignity of men)
12. உயர் ஒழுக்க நிலை (High moral standard)

இங்கிலாந்தில் நுகர்வோர் சங்கமாக உருவெடுத்த கூட்டுறவு அமைப்பு ஜேர்மனியில் கடன்சுமையைப் போக்கும் இயக்கமாக மாறி கடன் வழங்கும் சங்கங்களைத் தோற்றுவித்தது. உலகின் பல நாடுகளிலும் அவ்வந்நாட்டுத் தேவைக்கேற்ப உருவாகின. இவ்வாறு சர்வதேச ரீதியில் உருவான சங்கங்களை தொடர்புபடுத்தும் அமைப்பாகவும் வளர்ச்சியின் சின்னமாகவும் 1895இல் சர்வதேச கூட்டுறவு இணைப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளினதும் தேசிய மட்டக்; கூட்டுறவு நிறுவனங்களின் இணைப்பாக இது விளங்குகின்றது. இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது.

சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் எல்லாம் வானவில்லின் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக யுத்தம் காரணமாக உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. நாடுகளின் உணவு உற்பத்தி, விநியோகம்  என்பவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன். பொருளாதார அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. மக்களின் வருமானம் அதிகரித்தது. இத்தகைய மாற்றங்கள் கூட்டுறவு அமைப்பிலும்,  சமூக பொருளாதார,  கலாசார அமைப்புக்களிலும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. இதற்கமைய கூட்டுறவு கொள்கைகளும் மறுசீரமைக்கப்பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சிபரிசுக்கமைய 1966 இல் அனைத்துலக கூட்டுறவு மகாநாட்டில் பின்வரும் ஐந்து அம்சங்களும் கூட்டுறவுக் கொள்கைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. அவை,

01. தன் விருப்புடனான தடையற்ற அங்கத்தவர்
02. ஜனநாயக முறைக் கட்டுப்பாடும், நிர்வாகமும்
03. முதலுக்கு ஏற்ப வட்டி வீதம்
04. இலாபம் அங்கத்தவரிடையே சமமாகப் பங்கிடப்படல்
05. கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியன.

நவீன காலத்தில் கூட்டுறவு விவசாயத்தால்  விந்தை புரியும் இரு நாடுகளை உதாரணப்படுத்துவர். கியுபா பல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் சிஐஏ (CIA) பலமுறை அவரை கொலை செய்ய முயன்றும் தோற்றது. இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு. 1991 ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல், இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டது. ஆனால் விரைவாக இயற்கை விவசாயத்திற்கு மாறி பின் நகர விவசாயத்தை ஊக்கப்படுத்தி இன்று தன்னிறைவு பெற்று மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.

அடுத்தது 1948 ஆண்டு தோன்றிய இஸ்ரேல். தோன்றிய நாள் முதல் இன்று வரை அண்டைநாடுகளுடன் சண்டையிட்டுக் கொண்டே விவசாயத்தில் விந்தை புரியும் நாடு இஸ்ரேல். இயற்கை வளம், நீர் பற்றாக்குறையுள்ள நாடு. இருக்கின்ற வளத்தை சிறப்பாக பயன்படுத்தி குளிர் பிரதேசத்தில் வளரும் “டுலிப்” (Tulip) மலர்களயே ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. சொட்டு நீர் பாசனம், பசுமை கூடம்,  மூடாக்கு (sheet mulching) என அதிக உற்பத்தியை தரும் தொழில் நுட்பங்கள் இவர்களது சிறப்பு. மற்றொரு சிறப்பு கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. கிப்புட்ஸ் (Kibbutz),இமோஷாவ் (Moshav) என அந்த கூட்டுறவு முறைகளுக்கு பெயர்கள்.

இலங்கையில் கூட்டுறவு முறை பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
இலங்கை ஆங்கிலேயராட்சியில் இருந்தவேளை கிராமிய விவசாயம் புறக்கணிப்பட்டது. பெருந்தோட்டச் செய்கையில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்காக கிராமிய விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. இயற்கையின் வரட்சி கிராமிய விவசாயிகளைப் பெருமளவு பாதித்து அவர்களை வறுமைக்குட்படுத்தியது. இதனால் அவர்கள் வட்டிக்குப் பணம் வழங்கும் முதலாளிகளிடம் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கூட்டுறவுப் பண்புகளையுடைய சங்கங்களை அமைத்து செயல்பட்டபோதும் அதற்கு சட்டவரையறை இன்மையால் நிலைத்து நிற்கவில்லை. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை ஆளுநர் நாட்டிலிருந்த விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட விவசாய வங்கித் தொழிற் குழுவின் விதப்புரையின்மீது அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்றாக 1911ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் நியதிகளின்படி கூட்டுறவுக் கடன் சங்கங்களைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1911ஆம் ஆண்டின் கூட்டுறவுச் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் நியதிகளின்படி பதிவாளருக்கு கூட்டுறவுச் சங்சங்களைப் பதிவுசெய்வதற்கும் எவையேனும் வைபவங்களுக்குத் தலைமை தாங்குவுதற்கும் தத்துவமளிக்கப்பட்டது. எனினும் ஒரு முழுநேரப் பதிவாளர் அவசியமில்லை என அரசாங்கம் உணர்ந்தமையால் ஆரம்பத்தில் மேற்படி கட்டளைச் சட்டத்தின்கீழ் பதிவாளருக்குப் பொறுப்பிக்கப்பட்ட ஒருசில கடமைகளையும் பணிகளையும் அரசாங்க அதிபருக்குக் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இவற்றுள் கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் கடமையும் அடங்கும்.
1904ஆம் ஆண்டில் கிராமிய சமுதாயத்தின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இலங்கை விவசாயச் சங்கம் எனப்படும் சங்கமொன்று இலங்கை ஆளுநரின்கீழ் தாபிக்கப்பட்டது. பிரசாரமும் கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்தும் செயற்பாடுகளும் இச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன. 1911ஆம் ஆண்டில் இலங்கை விவசாயச் சங்கங்களுக்குப் பதிலாக விவசாயத் திணைக்களம் தாபிக்கப்பட்டது. 1911ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஒரு குறுகிய தவணை நடைமுறையாகும். பதிவுசெய்யும் வழமையான பணிகளுக்கு மேலதிகமாக இன்னும் பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தமையால் விவசாயத்துறை பணிப்பாளரை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகவும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அதே ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டுச் சபையொன்றையும் தாபித்தது.

ஆரம்பத்தில் நாணய சங்கங்களே பதியப்பட்டன. 1913/14ம் ஆண்டில் 35ஆக இருந்த சங்கங்கள் 1920/21இல் 154ஆக உயர்ந்தது. உறுப்பினர் தொகை முறையே 1820லிருந்து 17876 ஆகவும் அதிகரித்தது. 1921ம் ஆண்டின் 35ம் இலக்க சட்டத்திருத்தத்தின்படி ஏனைய வகைச் சங்கங்களும் பதிவு செய்ய வகை செய்யப்பட்டன. இதனால் நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாய உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் என்பன பதிவு செய்யப்பட்டன. 1939இல் இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு பங்கீட்டு அடிப்படையில் உணவு விநியோகிக்கும் பொறுப்பு கூட்டுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து நெல் உத்தரவாத விலைத்திட்டம்,  நெற்களஞ்சியங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன. 1942 – 1945க் கிடையில் 4000க்கும் மேற்பட்ட நுகர்வோர் சங்கங்கள் இருந்தன. 1946இலிருந்து கூட்டுறவு விளைபொருள் உற்பத்தி விற்பனை சங்கங்கள் பதியப்பட்டன. 1949ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டத்திருத்தத்தின் மூலம் நாணய உதவி வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குடிசைக் கைத்தொழில்களிலும், பாரம்பரிய சீவனோபாய தொழில்களிலும் ஈடுபட்டவருக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. (உ+ம்) கூட்டுறவுப் பாற்பண்ணை சங்கங்கள், கடற்றொழிலாளர் சங்கங்கள், தெங்கு உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கங்கள், நெசவுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள். தும்புத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தச்சுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், செங்கல், ஓடு உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள், அச்சிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள், பாதரட்சை செய்வோர் கூட்டுறவுச் சங்கங்கள், புகையிலை பயிரிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள் போன்றன.

1957இலிருந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தாபிக்கப்பட்டன. 1958 முடிவில் இலங்கையில் இயங்கிய பல வகைக் கூட்டுறவுச் சங்கத்தினது எண்ணிக்கை 12852ஆகும். இவற்றைத் தவிர இரண்டாம்படிச் சங்கங்களாக கூட்டுறவுச் சங்கங்களும் இயங்கின. தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் பல்வேறு சேவை தொழிற்துறையினரிடையேயும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சிக்கன கடனுதவிச் சங்கங்களும் (சணச) விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வளர்ச்சிக்கு கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்திய விடுதலைக்கு முன்பே, 1904 ஆம் ஆண்டு தற்பொழுதுள்ள திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவு சங்கம் இந்தியாவிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. சர். டி. ராசகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராக பொறுப்பேற்றார்.

இந்தியாவில் ஒரு விவசாய புரட்சியை உண்டாக்க வேண்டும் என்பதற்காக காந்திஜி சொன்ன விடயம் கூட்டுறவுப் பண்ணை முறையாகும். ஒரு நிலத்தை நூறு துண்டுகளாக போட்டு விவசாயம் செய்து நிறைய கொள் முதலை எதிர்ப்பார்ப்பதை விட ஒரு கிராமத்திலிருக்கும் நூறு குடும்பங்கள் கூட்டாக விவசாயத்தில் ஈடுபடுட்டால் தனித்தனியாக கிடைக்கும் பலன்களை விட நிறையவே அதிகமாக இருக்கும் என்பது. நிலம் அனைத்தையும் ஒன்றாக உழுது விவசாயம் பார்ப்பதால் உழைப்பு,  மூலதனம்,  கருவிகள் போன்றவை மிச்சமாகும். காந்திஜி இதையே விவசாய வேலைகள் என்றில்லாமல் ஆடு,  மாடு வளர்ப்பு, காய்கறிகள் பயிரிடுவது என அனைத்து தொழில்களுக்குமே விரிவுபடுத்த நினைத்தார். காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் இதையே செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார். நாடு சுதந்திரமடைந்தவுடன் காந்திஜியின் சிந்தனை பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் திட்டங்களாக தீட்டப்பட்டன.

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவர் கூட்டுறவு தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார். ஏழைகள் தன்னந்தனியாக தங்களின் நலனுக்காக காரியத்தை செய்ய இயலாது. அவர்களோ கூட்டு முயற்சியை செய்தால்தான் வெற்றி பெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவு முறை வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள்,  பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டு வசதி, கதர், கிராமம் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்கு தாங்களே கூட்டாக, உறவாக அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.

1904 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவு சட்டம் 1961, 1963, 1983 என பல முறைகள் முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்து இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு ஆரோக்கியத்தோடு செயல்பட காரணமாக பலர் திகழ்ந்தனர். தூத்துக்குடியில் தொழிற் சங்கத்தைத் துவக்கிய வ.உ.சிதம்பரனார் கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார்.

கிட்டத்தட்ட 30,000 கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் திறம்பட செயல்பட்டால் பொருளாதாரம்,  மக்களின் நலன், ஜனநாயகம் பேணப்படும். அரசியல் தலையீடு இல்லாமல் கூட்டுறவு உறுப்பினர்களுடைய விருப்பத்தின் பேரில் இந்த இயக்கங்கள் செயல்பட வேண்டும். கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அமைப்பு மட்டுமல்லாமல், கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை உள்ள பல ஆயிரம் அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பாலபாடத்தைப் போதிக்கும் போதி மரமாகும்.

சர்வதேச கூட்டுறவுதினம் மிலேனியத்திலிருந்து பின்வரும் கருப்பொருட்களுக்கமைய கொண்டாடப்படுகிறது.

2000: “Co-operatives and Employment Promotion”
2001: “The Co-operative Advantage in the Third Millennium”
2002: “Society and Co-operatives: Concern for Community”
2003: “Co-operatives Make Development Happen!: The contribution of co-operatives to the United Nations Millennium Development Goals”
2004: “Co-operatives for Fair Globalisation: Creating Opportunities for All”
2005: “Microfinance is OUR business! Cooperating out of poverty”
2006 “Peace-building through Co-operatives.”
2007 “Co-operative Values and Principles for Corporate Social responsibility.”
2008: “Confronting Climate Change through Co-operative Enterprise”
2009: “Driving global recovery  through co-operatives”

புதிய அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்

நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக மிலிந்த மொரகொட நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இச் சத்தியப்பிரமாண நிகழ்¡வு அலரிமாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்றதுடன், தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நந்தன குணதிலக்க, பியசிறி விஜேநாயக்க ஆகியோரும் நேற்று அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்படி; நந்தன குணதிலக்க எம். பி. சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா பயணத்துறை ஊக்குவிப்பு (அமைச்சரவை அந்தஸ்துள்ள) அமைச்சராகவும் பியசிறி விஜேநாயக்க எம். பி. கலாசார, மரபுரிமை (அமைச்சரவை அந்தஸ்தற்ற) அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வு நேற்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

ஏற்கனவே, சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்த மிலிந்த மொரகொட எம். பி. நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த அமரசிறிதொடங்கொடவின் மறைவுக்குப் பின்னரான வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மிலிந்த மொரகொட அப்பதவியைப் பொறுப்பேற்றபின் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே நந்தன குணதிலக்க எம். பி. சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுற்றுலாத்துறை பிரதியமைச்சராகப் பதவி வகித்த பைசர் முஸ்தபா எம். பி. நேற்று சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தேசியப் பிரச்சினை சமாதான ரீதியில் தீர்த்து வைக்கப்படும் – இந்தோனேஷியாவில் பசில் ராஜபக்ஷ

basil.jpgஇலங் கையின் தேசிய பிரச்சினை சமாதான ரீதியில் தீர்த்து வைக்கப்படுமென ஆசே சென்றிருக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஆசேயில் சமாதானம் எட்டப்பட்டமை தொடர்பாக நேரடியான விடயங்களை அறிந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தற்பொழுது இந்தோனேஷியா சென்றுள்ளார்.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேஷியாவின் ஆசே மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமான பணிகளுக்காக ஆசே போராளிகளுக்கும், இந்தோனேஷிய அரசாங்கத்துக்குமிடையில் நடைபெற்றுவந்த மோதல்கள் முடிவுக்கு வந்ததுடன், அங்கு சமாதானம் ஏற்படுத்தப்பட்டது.  ஆசேக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு இலங்கை இனப்பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டுமென அரசியல் ஆர்வலர்களும், பல்வேறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தன.

எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களிலும், பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டிவந்த இலங்கை அரசாங்கம் ஆசேயின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்குச் செல்ல விரும்பவில்லை.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இராணுவ ரீதியாக வெற்றிபெற்றிருக்கும் இலங்கை அரசாங்கம், ஆசேயில் ஏற்பட்ட சமாதான முயற்சிகளின் அனுபவத்தை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியுள்ளது.

இது தொடர்பில் இந்தோனேஷிய அரசியல் தலைவர்களுடன் பசில் ராஜபக்ஷ ஆலோசனை நடத்தியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருர் பசில் ராஜபக்ஷ, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஹசன் விராஜுடாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். 29ம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருவரும் இலங்கையின் நிலை தொடர்பாகவும் இந்தோனேசியாவில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் தூதுவர் நந்தா மல்லவராய்ச்சியும், கலந்துகொண்டார்.

இலங்கையில் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட வடக்கில் எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகள் தொடர்பாக பசில் ராஜபக்ஷ எம். பி. இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சிரிடம் எடுத்துக் கூறினார். இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும் இருவரும் பேசும் போது; இருநாட்டு மக்களின் நன்மை கருதிய உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டுமென கருத்துகள் பரிமாறப்பட்டன.

பயங்கரவாதத்தை இலங்கையில் முற்றாக முறியடித்து நாட்டில் ஸ்திரத் தனிமையை ஏற்படுத்தியமைக்காக பசில் ராஜபக்ஷவுக்கும், இலங்கை அரசுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார் இந்தோனேஷிய அமைச்சர்.

ஆசே சமாதான முன்னெடுப்பு வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்துள்ளது. ஆசேயின் சமாதான மாதிரியை அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக பசில் ராஜபக்ஷ கூறினார்.  ஆசே சமாதான ஒருமைப்பாட்டு திட்டம், பொருளாதார அதிகாரங்கள், கைதிகளுக்கான பொதுமன்னிப்பு, மற்றும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் அறிய ஆர்வமாக உள்ளதாகவும் பசில் எம். பி. சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஆசே தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரும்பு தொழிற்சாலையொன்றையும் பசில் எம். பி. பார்வையிட்டார். இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர், பசில் எம். பி. க்கு இராப் போசன விருந்தளித்துக் கெளரவித்தார்.

ஈரானில் கைதான ஏழு இலங்கையருக்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல்

ஈரானில் வைத்துக் கைதான ஏழு இலங்கைப் பிரஜைகளையும் விடுதலை செய்வதற்கு பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

இவர்களுக்கு எதிராக இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஈரான் நாட்டு கடல் எல்லைக்கு சட்ட விரோதமாக நுழைந்த டுபாய் நாட்டுக் கப்பல் கடந்த வாரம் ஈரான் படையினரால் கைப்பற்றப்பட்டது. கப்பல் சிப்பந்திகளுக்கு எதிராக சட்ட விரோதமாக எரிபொருள் போக்குவரத்து செய்தது மற்றும் சட்டவிரோதமாக ஈரான் கடல் எல்லைக்குள் நுழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடல் எல்லைக்கு சட்ட விரோதமாக நுழைந்தது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு 50 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வாரம் விசாரிக்கப்பட உள்ளது. இவர்களை விடுதலை செய்வது குறித்து ஈரான் தூதரகத்தினூடாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதோடு டுபாய் நாட்டு தூதரகத்தினூடாகவும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது டுபாய் நாட்டு கப்பல் கம்பனியுடனும் இவர்களை விடுவிப்பது தொடர்பாக பேசி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

யாழ். வவுனியா தேர்தல்கள் – சகல முன்னோடி நடவடிக்கைகளும் தங்கு தடையின்றி முன்னெடுப்பு

images-elc.jpgயாழ். மாநகர சபை, வவுனியா நகர சபை உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான சகல முன்னோடி நடவடிக்கைகளும் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வுகள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை; வாக்குப் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் வாக்காளர் அட்டைகள் விநியோக நடவக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கருணாநிதி தெரிவிக்கையில்,

வவுனியா நகர சபைத் தேர்தல் தொடர்பான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக 500 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 7 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்புச் சான்றுப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வும் 8 ஆம் திகதி சிரேஷ்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வும் 9 ஆம் திகதி சிரேஷ்ட கணக்காளர்கள் உள்ளிட்ட இதர உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கென 1,000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான பயிற்சிச் செயலமர்வுகள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. அத்துடன் வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்படவுள்ளன எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் தொடர்பான முன்னோடி நடவடிக்கைகள் எவ்வித தங்கு தடையுமின்றி இடம்பெற்று வருவதாகவும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் தொகை 235ஆக உயர்வு

மாத்தளை மாவட்டத்தில் எலி நோயினால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது என மாத்தளை சுகாதார சேவைப் பணிப்பாளர் அநுர திஸாநாயக தெரிவிக்கி ன்றார். கடந்த வாரம் 223ஆக இருந்த இந்நோயாளிகளின் எண்ணிக்கை இவ் வாரம் 235ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் இதுவரை எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இருவர் மரண மடைந்துள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை, யட்டவத்த, முவன்தெனிய, பண்டாரபொல, மஹவெல, மடவள உல்பத்த தம்புள்ள ஆகிய பகுதிகளிலே இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது எனவும் பணிப்பாளர் அநுர திஸாநாயக மேலும் தெரிவித்தார்.

சிறுபோகத்தில் 70,000 மெ.தொ. நெல் கொள்வனவு -அரசு முடிவு

anura_priyadarshana_yapa_1806_press.jpgசிறுபோ கத்தின் போது 70 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 28 ரூபா முதல் 30 ரூபா வரையான நிர்ணய விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (2) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இங்கு அவர் மேலும் கூறியதாவது, இதன்படி உர நிவாரணம் பெற்ற சகல விவசாயிகளும் 10 வீதமான நெல்லை அரசாங்கத்திற்கு நிர்ணய விலையில் வழங்க வேண்டும்.

நெல் கொள்வனவு செய்ய 230 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய இடங்களிலிருந்தும், கிழக்கு, தென்மற்றும் வடமேல் மாகாணங்களில் இருந்தும் இம்முறை நெல் கொள்வனவு செய்யப்படும்.கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் மலைகளில் காடு வளர்க்கும் திட்டத்துக்கம் அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி பெருந்தோட்டப் பகுதியில் இடங்கள் அரசுக்கு பொறுப்பேற்கப்படும்.

“புலிகளின் குரல்” வானொலி ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பம்

“புலிகளின் குரல்” வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் யூலை 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1990ம் ஆண்டு  யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட “புலிகளின் குரல்” வானொலிச் சேவை உலக வரலாற்றில் எந்தவொரு வானொலியும் சந்திக்காத இன்னல்களைச் சந்தித்த போதிலும் துவண்டு விடாது நிமிர்ந்து நின்றது.

“புலிகளின் குரல்” வானொலியை இலக்கு வைத்து 23 தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த போதிலும் தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில் அந்த வானொலிச் சேவை மீண்டும் வானலைகளில் தவழ்ந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்னியில் மிக மோசமானதாக்குதல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போதும், தனது ஒலிபரப்பை தொடர்ந்து நடத்தி வந்த இந்த வானொலி கடந்த மே மாதம் 16ம் திகதி  தனது   ஒலிபரப்பையும் நிறுத்திக்கொண்டது. தற்பொழுது இணையத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சேவை, பின்னர் செய்கோள் ஒலிபரப்பாக விரிவாக்கம் பெறும் என, “புலிகளின் குரல்” வானொலி நிலைய கலையகத்தினர் தெரிவித்துள்ளனர்.

“வட இலங்கை முகாம் அகதிகளை மீளக் குடியேற்ற கால அட்டவணை வேண்டும்”

rg-camp.jpgஇலங்கை யின் வடக்கே அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளை, அங்கிருந்து விடுவிப்பதற்கு ஒரு கால அட்டவணையை அறிவிக்குமாறு தமிழர்களின் முக்கியஸ்தர்கள் குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தை கேட்டிருக்கிறது.

தம்மை சுற்றவரவுள்ள முட்கம்பி வேலிகளை விட்டு வெளியே வர தமிழ் மக்கள் மிகவும் ஏக்கத்துடன் இருப்பதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான ஒரு கால எல்லையை அறிவிப்பது, காலவரையற்று அங்கே முகாம்களில் தடுத்து வைக்கப்படுவோம் என்ற அச்சத்தை அவர்களது மனதில் இருந்து அகற்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரினால் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் இந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் முன்னர் உறுதி கூறப்பட்டதற்கு இணங்க, இவ்வருட இறுதிக்குள் முகாம்களில் இருந்து வெளியே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.