நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக மிலிந்த மொரகொட நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இச் சத்தியப்பிரமாண நிகழ்¡வு அலரிமாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்றதுடன், தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நந்தன குணதிலக்க, பியசிறி விஜேநாயக்க ஆகியோரும் நேற்று அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதன்படி; நந்தன குணதிலக்க எம். பி. சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா பயணத்துறை ஊக்குவிப்பு (அமைச்சரவை அந்தஸ்துள்ள) அமைச்சராகவும் பியசிறி விஜேநாயக்க எம். பி. கலாசார, மரபுரிமை (அமைச்சரவை அந்தஸ்தற்ற) அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிகழ்வு நேற்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
ஏற்கனவே, சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்த மிலிந்த மொரகொட எம். பி. நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த அமரசிறிதொடங்கொடவின் மறைவுக்குப் பின்னரான வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மிலிந்த மொரகொட அப்பதவியைப் பொறுப்பேற்றபின் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே நந்தன குணதிலக்க எம். பி. சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சுற்றுலாத்துறை பிரதியமைச்சராகப் பதவி வகித்த பைசர் முஸ்தபா எம். பி. நேற்று சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.