இலங் கையின் தேசிய பிரச்சினை சமாதான ரீதியில் தீர்த்து வைக்கப்படுமென ஆசே சென்றிருக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஆசேயில் சமாதானம் எட்டப்பட்டமை தொடர்பாக நேரடியான விடயங்களை அறிந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தற்பொழுது இந்தோனேஷியா சென்றுள்ளார்.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேஷியாவின் ஆசே மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமான பணிகளுக்காக ஆசே போராளிகளுக்கும், இந்தோனேஷிய அரசாங்கத்துக்குமிடையில் நடைபெற்றுவந்த மோதல்கள் முடிவுக்கு வந்ததுடன், அங்கு சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. ஆசேக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு இலங்கை இனப்பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டுமென அரசியல் ஆர்வலர்களும், பல்வேறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தன.
எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களிலும், பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டிவந்த இலங்கை அரசாங்கம் ஆசேயின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்குச் செல்ல விரும்பவில்லை.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இராணுவ ரீதியாக வெற்றிபெற்றிருக்கும் இலங்கை அரசாங்கம், ஆசேயில் ஏற்பட்ட சமாதான முயற்சிகளின் அனுபவத்தை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியுள்ளது.
இது தொடர்பில் இந்தோனேஷிய அரசியல் தலைவர்களுடன் பசில் ராஜபக்ஷ ஆலோசனை நடத்தியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருர் பசில் ராஜபக்ஷ, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஹசன் விராஜுடாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். 29ம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருவரும் இலங்கையின் நிலை தொடர்பாகவும் இந்தோனேசியாவில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் தூதுவர் நந்தா மல்லவராய்ச்சியும், கலந்துகொண்டார்.
இலங்கையில் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட வடக்கில் எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகள் தொடர்பாக பசில் ராஜபக்ஷ எம். பி. இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சிரிடம் எடுத்துக் கூறினார். இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும் இருவரும் பேசும் போது; இருநாட்டு மக்களின் நன்மை கருதிய உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டுமென கருத்துகள் பரிமாறப்பட்டன.
பயங்கரவாதத்தை இலங்கையில் முற்றாக முறியடித்து நாட்டில் ஸ்திரத் தனிமையை ஏற்படுத்தியமைக்காக பசில் ராஜபக்ஷவுக்கும், இலங்கை அரசுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார் இந்தோனேஷிய அமைச்சர்.
ஆசே சமாதான முன்னெடுப்பு வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்துள்ளது. ஆசேயின் சமாதான மாதிரியை அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக பசில் ராஜபக்ஷ கூறினார். ஆசே சமாதான ஒருமைப்பாட்டு திட்டம், பொருளாதார அதிகாரங்கள், கைதிகளுக்கான பொதுமன்னிப்பு, மற்றும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் அறிய ஆர்வமாக உள்ளதாகவும் பசில் எம். பி. சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஆசே தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரும்பு தொழிற்சாலையொன்றையும் பசில் எம். பி. பார்வையிட்டார். இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர், பசில் எம். பி. க்கு இராப் போசன விருந்தளித்துக் கெளரவித்தார்.