சிறுபோ கத்தின் போது 70 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 28 ரூபா முதல் 30 ரூபா வரையான நிர்ணய விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (2) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இங்கு அவர் மேலும் கூறியதாவது, இதன்படி உர நிவாரணம் பெற்ற சகல விவசாயிகளும் 10 வீதமான நெல்லை அரசாங்கத்திற்கு நிர்ணய விலையில் வழங்க வேண்டும்.
நெல் கொள்வனவு செய்ய 230 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய இடங்களிலிருந்தும், கிழக்கு, தென்மற்றும் வடமேல் மாகாணங்களில் இருந்தும் இம்முறை நெல் கொள்வனவு செய்யப்படும்.கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் மலைகளில் காடு வளர்க்கும் திட்டத்துக்கம் அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி பெருந்தோட்டப் பகுதியில் இடங்கள் அரசுக்கு பொறுப்பேற்கப்படும்.