2009

2009

கியூபா தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

raaul-castroooo.jpgஎகிப்தில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கியூபாவின் ஜனாதிபதி ராஉல் கஸ்ட்ரோவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான இந்த சினேகபூர்வ சந்திப்பு, மாநாடு நடைபெறும் ஷார்ம் அல் ஷெய்க்கிலுள்ள ரோயல் சுய்ட் சர்வதேச ஹோட்டலில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி,  இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறார்.

இம்மாநாட்டுக்கு வருகை தந்திருந்த லிபியத் தலைவர் கேர்ணல் முஅம்மர் அல்கடாபியை ஜனாதிபதி நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். 

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படும் புதிய இலங்கைக்கு நேசக் கரம் நீட்ட தமது அரசாங்கம் தயாராக உள்ளதாக இச்சந்திப்பின்போது லிபியத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடல்கோள் ஏற்படுமென அஞ்சத் தேவையில்லை

tsunami111.jpgஎதிர் வரும் 22 ஆம் திகதி கடல்கோள் ஏற்படுமென மக்கள் மத்தியில் பரவி வரும் செய்தியில் உண்மையில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  அத்துடன், கடல்கோள் அல்லது பூகம்பம் குறித்து பல நாட்களுக்கு முன்னரே அறிவிக்கும் முறை செயன்முறையில் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இவ்வாறு பரவிவரும் செய்திகளில் விஞ்ஞான ரீதியிலான உண்மை கிடையாதென கடற்கோள் முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஜப்பானுக்கு அருகில் ஏற்படும் பூகம்பத்தால் இலங்கைக்கு நேரடித் தாக்கமெதுவும் கிடையாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வதந்திகளால் மக்கள் பதற்றமடைய வேண்டாமெனவும் அரச நிறுவனங்களின் எச்சரிக்கைகளையே நம்புமாறும் கடற்கோள் எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடையும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

bill-gates.jpgவரும் காலத்தில் இலங்கை மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடையும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க கணிப்பொறியின் இயக்க மென்பொருளை முழுமையாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் மைக்ரோசாப்ட் வடிவமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில்  இலங்கை அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது. இதற்கான நிகழ்ச்சி அதிபர் ராஜபக்சேவின் அலரிமாளிகையில் நடந்தது.

விழாவில் பேசிய ராஜபக்சே, ‘பிராந்திய மொழிகளில் கம்ப்யூட்டர்களை இயக்கும் முறை வந்துவிட்டால் இலங்கையின் கிராமப்புற மக்கள் பெரும் முன்னேற்றம் அடைவார்கள்’ என்றார். இந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

அதில், இலங்கை இப்போது நல்ல வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதாகவும், எதிர்காலத்தில் மிகச் சிறந்த வளர்ச்சியை அந்நாடு எட்டும் என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஐடி துறையில் சாதனைகள் படைக்க இலங்கை தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் 450 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

வவுனியா யாழ்ப்பாணம் தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அசம்பாவிதங்களோ இல்லை.

election.gifவவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அல்லது அசம்பாவித சம்பவங்களோ இல்லை என வடபிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.

வவுனியா நகர சபையில் போட்டியிடும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்தி்ப்பின் பின்னர் அந்தப் பிரதிநிதிகளின் முன்னிலையில் செய்தியளார்களிடம் அவர் கருத்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாகிய இந்தத் தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெறுவதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.

வவுனியாவிலோ, யாழ்ப்பாணத்திலோ தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், இது தொடர்பில் ஒரு முறைப்பாடு கூட செய்யப்படவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம்.

maical-jak.jpgபாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மறைவைத் தாங்க முடியாமல், இதுவரை உலகம் முழுவதும் 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம். மேலும், ஏராளமான ரசிகர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிவர உதவுமாறு அதற்கான ஹாட்லைன் வசதியைத் தொடர்பு கொண்டபடி உள்ளனராம். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உதவி கோரி தொடர்பு கொண்டுள்ளதாக மன நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டனைச் சேர்ந்த ஜாக்சனின் ரசிகரான கேரி டெய்லர் என்பவர் ஜாக்சனுக்கான இன்டர்நெட் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். அவர் கூறுகையில், இதுவரை 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மிகவும் கவலைகரமானது. மைக்கேல் ஜாக்சன் இதுபோன்ற மரணத்தை விரும்ப மாட்டார். அதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே ஜாக்சனின் விருப்பம் என்றார்.

ஜாக்சனின் மரணத்தால் அவரது பல ரசிகர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனராம். இதுபோன்ற பிரபலங்கள் மரணமடையும்போது அது மனதளவில் பலரையும் வெகுவாக பாதித்து விடுகிறது என்கிறார் லைப்லைன் என்கிற மன நல ஆலோசனை அமைப்பின் தலைமை செயலதிகாரி டான் ஓ நீல்.

இதற்கிடையே, ஜாக்சனின் குடும்ப நண்பரான ஜெசி ஜாக்சன் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், யாரும் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளக் கூடாது. இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.

ஜாக்சனின் மரணம் பெரும் வலிதான். ஆனால் ஜாக்சனின் வாழ்க்கையை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அதுதான் ஜாக்சனுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்றார்.

மரண தண்டனையை மீண்டும் அமுலாக்க அரசாங்கம் ஆலோசனை – நீதியமைச்சின் செயலாளர் தகவல்

gallow.jpgமரண தண்டனையை இலங்கையில் மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக  நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எகிப்திலிருந்து நாடுதிரும்பியதும் மரணதண்டனையை இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம்  எடுக்கப்படும்  என்றும் அவர் கூறினார்

நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்ää

மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 200 கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். மரண தண்டனையை நிறைவேற்றிக்கொள்வதில் சமூக மற்றும் சட்டப்பிரச்சினைகள் உள்ளன.

மரண தண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தலாம் என்றும் கட்டுப்படுத்த முடியாது என்ற விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. எனினும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பதில் நீதியமைச்சு கூடுதலான அக்கறை செலுத்திவருக்கின்றது.

ஜனாதிபதி எகிப்திலிருந்து நாடு திரும்பியதும் இது தொடர்பில் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

ஈரானில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகள் மீட்பு

iran-plane.jpgஈரானில் நேற்று விபத்துக்குள்ளான விமானத்தின் மூன்று கருப்புப் பெட்டிகளில் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றதைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டின் வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இரு கருப்புப் பெட்டிகளும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளன. எனினும் அவற்றிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அனர்த்த செயற்பாட்டுக் குழுத் தலைவர் அஹ்மத் மாஜித் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் பயணம் செய்த 15 விமான ஊழியர்கள் உட்பட 168 பேரும் பலியாகியுள்ளனர். அவர்களுள் 7 பேர் வெளிநாட்டவர்கள். ஏனைய அனைவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலிருந்து ஆர்மேனியாவின் தலைநகரான யேரேவான் நகருக்குப் பயணித்துக்கொண்டிருந்த இவ்விமானம் நேற்று அந்நாட்டின் வடமேற்குப் பிரதேசத்திலுள்ள குவாஸ்வின் நகர பகுதியில் வைத்து விபத்துள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் சில காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இவ்விபத்து காரணமாக நிலத்தில் ஒரு பாரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதையும்,  விமானத்தின் சிதறிய பகுதிகளிலிருந்து புகை வந்து கொண்டிருப்பதையும் ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் உலகில் நிகழ்ந்த மிகப்பெரிய 5ஆவது விமான விபத்தாக ஈரான் விமான விபத்து கருதப்படுவதாக சீ.என்.என். சர்வதேச செய்திச் சேவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்தி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்துவதே எமது நோக்கம் – ஜனாதிபதி

mahinda.jpg“வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அணிசேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு நேற்று எகிப்து, சார்ம் எல்ஷேக் நகரத்திலுள்ள மெரிரைம் மண் டபத்தில் நேற்று ஆரம்பமாகியது. 118 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைவர்கள் நேற்றைய மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இங்கு, இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது :-

உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பொன்றை வேருடன் பிடுங்கி எறிவதற்கு எமது நாட்டால் முடிந்துள்ளது என்பதை முதலில் கூறிக்கொள்வதையிட்டு நான் பெருமையடைகிறேன். அது எவ்வகையிலும் விடுதலை அமைப்பு ஒன்று அல்ல.

வன்முறைகளை அடிப்படையாகக் கொண்ட தேச விரோதம் உக்கிரமடைந்த பிரிவினைவாத குழுவாகும். எனினும், இவ்வாறான பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பை சில நாடுகள் பிரசாரம் பண்ணுவதற்கு முனைந்திருப்பது கவலைக்குரிய விடயமாகும். அவ்வாறு செய்வதற்கு அவர்களால் முடிந்துள்ளமைக்கு காரணம் அசாதாரணமான அரசியல் நிலைமைதான் என்பது தெளிவாகிறது. ஏனெனில் அந்த நாடுகளுக்கு பயங்கரவாதம் சவாலாக இல்லையென்பதையே தெளிவாகக் காட்டுகிது.

பயங்கரவாதம் எம்மை அச்சமடையச் செய்வதுடன் பலவீனப்படுத்திவிடும். அதற்கு முகம் கொடுத்த சந்தர்ப்பங்களில் எமக்கு நிரந்தரமாக ஒத்துழைப்பு வழங்கிய அணிசேரா நாடுகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எவ்வாறான பயங்கரவாதமாக இருந்தாலும் இலங்கை அதனை எதிர்ப்பு தெரிவித்த நாடாகும். எமது நாட்டின் பயங்கரவாதத்தை அடியுடன் தோல்வியுறச் செய்யக் கிடைத்தமை மகிழ்ச்சிகுரிய விடயமாகும்.

எமது நாட்டு மக்கள் கடந்த 27 வருடங்களாக மரணபயத்துடன் வாழ்ந்தார்கள். இறுதியாக பயங்கரவாதத்திலிருந்து விடுபட்ட பின் இன்று எமது நாடு முழுமையாக நிம்மதியடைந்துள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் எதிர்காலம் தொடர்பில் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

எங்களுக்கு உதவிகள் தேவைப்பட்ட இக்கட்டான நிலைமைகளின் போது எங்களுடன் இணைந்து சினேகபூர்வமாக செயற்பட்டவர்கள் எதிர்காலத்திலும் அவ்வாறு செய்வார்களென்றும் இலங்கை மக்களின் நலன் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் உதவுவார்களென்பது எமது பாரிய நம்பிக்கையாகும்.

இடம்பெயர்ந்துள்ளவர்களை உடனடியாக அவர்களது வீடுகளில் மீளக்குடியேற்றி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும். இடம் பெயர்ந்தவர்களது தேவைகள் மிகவும் முக்கியமானதாகும். அவர்களின் நலனுக்காக எங்களுக்கு உதவிய சர்வதேச பிரஜைகளுக்கு இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவ்வாறு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் விசேடமாக இலங்கைக்கு சமுகமளித்த ஐக்கிய நாட்டுப் பிரஜைகளுக்காகவும் எமக்கு உதவிய அதன் செயலாளர் நாயகத்துக்கும் எனது விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது நாட்டு மக்கள் ஏனைய மக்களுக்கு உதவுவதற்கு பழக்கப்பட்டவர்கள். அதனாலேயே இக்கட்டான நிலைமைகளின் போது எமது நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்காக உதவ முன்வந்தனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு கூடிய விரைவில் அவர்களின் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எனது அரசாங்கம் மேற்கொண்டுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வேலைத் திட்டத்துக்கு அவர்களது பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கும் எங்களது அரசுக்கு முடியுமென நான் நம்புகின்றேன்.

வேறு விடயங்களுள் பாதிக்கப்பட்ட நாடுகள் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்காக தேவையான குறுகியகால கடனை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்துவதை கவனத்திற்கொள்ளுமாறு நான் மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பல்வேறு நாடுகளைக் கொண்ட சிறிய அமைப்பாக சார்க் அமைப்பு விளங்குகின்றது. இந்த சார்க் அமைப்புக்கு நிரந்தர செயலகம் ஒன்று உள்ளது. துரதிஷ்டவசமாக அணிசேரா அமைப்புக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நிரந்தரமான செயலகமொன்றை ஸ்தாபித்துக் கொள்வதற்கு முடியாமல் போயுள்ளது. எமது அமைப்புக்காக செயலகமொன்றை ஸ்தாபிப்பதற்கு அணிசேரா அமைப்பின் தலைவர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோமென்று நான் ஆலோசனை வழங்குகிறேன்.

தாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே பயங்கரவாதத்திற்கு எப்பொழுதும் தலைதூக்க முடியாத படி சமூகத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக ஒற்றுமையாக செயற்படுவதற்கும் எமது இனங்களின் ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்தி பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பொறுப்புடன் செயற்பட ஒன்றுபடுவோம் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தயாமோகன் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் – அமைச்சர் முரளீதரன் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான தயாமோகன் மலேசியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) கூறியுள்ளார். கடந்த மே மாதம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு புலி உறுப்பினர்கள் சரணடைய முயற்சிப்பதாகவும் அல்லது வெளியேற விரும்புவதாகவும் முன்னர் அமைச்சர் முரளீதரன் கூறியிருந்தார்.

பி.பி.சி.யின் சந்தேசிய சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் முரளீதரன் அம்பாறைக் காட்டுக்குள் இருந்த தயாமோகனும் கேணல் ராமும் தப்பிச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், இந்த தகவல் தொடர்பான தமது வட்டாரம் குறித்த விபரத்தை அவர் வழங்கியிருக்கவில்லை என்று பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் பி.பி.சி. தமிழ்ச் சேவைக்கு கிழக்கிலுள்ள உறுப்பினர்கள் சரணடைவது குறித்துச் சிந்திக்கவில்லை என்று தயாமோகன் கூறியிருந்தார். இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைதல் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் முரளீதரன் கண்ணிவெடி அகற்றப்பட்ட பின்பு 300 குடும்பங்கள் மன்னார் பகுதியின் இரு கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் படையணியை இலங்கை இராணுவம் உருவாக்குவது தொடர்பாக முன்னர் குறிப்பிட்டிருந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர்; ஆயுதப் படைகளில் தமிழ் இளைஞர்கள் இணைவதற்கு அரசாங்கம் ஊக்குவிப்பதாக கூறியுள்ளார்.

இதுவரை அவரின் 600 ஆதரவாளர்கள் இராணுவத்திலும் பொலிஸிலும் இணைந்துள்ளனர். மட்டக்களப்பில் பொலிஸ் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

200 மில். டொலர் கனரக ஆயுத ரவை கொள்வனவு நிறுத்தம்

sarath-pon-eka.jpgபுலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பயன்படுத்தவென சீனாவிடமிருந்து தருவிக்கப்படவிருந்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனரக ஆயுத ரவைகள் நிறுத்தப்பட்டதாக புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக பதவியேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த காலத்திற்குள் முடிவுற்றமையினாலும், புலிகளிடமிருந்து பெருந்தொகையான கன ரக ஆயுதங்கள், குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டமையிலுமே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதன் பின்னர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு இராணுவத் தலைமையகத்திலுள்ள கூட்டுப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில்:

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான ரவைகள் பாவிக்கப்பட்டன. அதே சமயம் நாளுக்கு நாள் புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்த பிரதேசங்களை கைப்பற்றிய படையினர் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள் மற்றும் பல்வேறு யுத்த உபகரணங்களை மீட்டெடுத்தனர்.

மீட்டெடுக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களில் சில அந்த சமயமே யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன.

எஞ்சியுள்ள ஆயுதங்களையும், உபகரணங்களையும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதுடன் மேலதிக களஞ்சியமாகவும் வைக்கவுள்ளோம். ஜெனரல் பொன்சேகா கடமைகளை பொறுப்பேற்க முன்னர் முப்படைகளினால் வழங்கப்பட்ட மரியாதை அணி வகுப்புக் களையும் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரி, விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, புதிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் திஸர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்