ஈரானில் நேற்று விபத்துக்குள்ளான விமானத்தின் மூன்று கருப்புப் பெட்டிகளில் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றதைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டின் வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
மீட்கப்பட்ட இரு கருப்புப் பெட்டிகளும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளன. எனினும் அவற்றிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அனர்த்த செயற்பாட்டுக் குழுத் தலைவர் அஹ்மத் மாஜித் தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தில் பயணம் செய்த 15 விமான ஊழியர்கள் உட்பட 168 பேரும் பலியாகியுள்ளனர். அவர்களுள் 7 பேர் வெளிநாட்டவர்கள். ஏனைய அனைவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலிருந்து ஆர்மேனியாவின் தலைநகரான யேரேவான் நகருக்குப் பயணித்துக்கொண்டிருந்த இவ்விமானம் நேற்று அந்நாட்டின் வடமேற்குப் பிரதேசத்திலுள்ள குவாஸ்வின் நகர பகுதியில் வைத்து விபத்துள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் சில காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இவ்விபத்து காரணமாக நிலத்தில் ஒரு பாரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதையும், விமானத்தின் சிதறிய பகுதிகளிலிருந்து புகை வந்து கொண்டிருப்பதையும் ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் உலகில் நிகழ்ந்த மிகப்பெரிய 5ஆவது விமான விபத்தாக ஈரான் விமான விபத்து கருதப்படுவதாக சீ.என்.என். சர்வதேச செய்திச் சேவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.