2009

2009

கிளிநொச்சி அரச அதிபர் வேதநாயகனை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுங்கள்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகனை துரிதமாக விடுதலை செய்வதற்கான சகல பொருத்தமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவரும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமுமான பி.விஜயரட்ணவிடம் இச்சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கே.தெய்வேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகத்தின் நெக்டெப் பிரிவின் விலாசமிடப்பட்ட கடிதமொன்றை தெய்வேந்திரன் திங்கட்கிழமை விஜயரட்ணவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; வவுனியாவில் 30-07-2009 இல் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரும் எமது சகாக்களில் ஒருவருமான என்.வேதநாயகன் சிஐடி அதிகாரியால் கைது செய்யப்பட்டிருப்பதைக் கேள்வியுற்று நாம் மிகவும் கவலையடைந்திருக்கிறோம். அவருடைய விடுதலை தொடர்பாக உங்களின் அனுதாபமான பரிசீலனைக்காக கீழ் வரும் விடயங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

வேதநாயகன் 20 வருடங்களுக்கும் மேலாக அரச அதிபராக சேவையாற்றி வருகிறார். இலங்கை நிர்வாக சேவையில் 18 வருடங்களாக சேவையாற்றியுள்ளார். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக பதவியேற்ற அவர் வறிய மக்களின் மேம்பாட்டுக்காக அற்புதமான சேவைகளை வழங்கியுள்ளதுடன் பிரஜைகளின் நலன்களுக்காக சேவையாற்றியிருக்கிறார்.

கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் கட்டுப்பாடற்ற பகுதிக்கும் இடையில் தனது சேவைக்காலத்தில் இணைப்புப் பாலமாக செயற்பட்டவராகும். பொலிஸாரோ, இராணுவமோ சட்டம்,ஒழுங்கை அமுல்படுத்தியிராத கட்டுப்பாடற்ற பகுதியில் இந்த மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இவர் சேவையாற்றி வந்தார். அரச அதிபராக பணியாற்றிய காலத்தில் நிர்வாக சேவைக்கு இடையூறு இல்லாமல் அவர் செயலாற்ற வேண்டியிருந்தது. ஆயினும் அவர் தந்திரோபாயமாக அவற்றை சமாளித்து செயற்பட்டவராகும். எப்போதுமே எளிமையான சுபாவத்தைக் கொண்ட அவர் மக்களுக்குச் சேவையாற்றுவதில் எப்போதுமே சாதகமான மனப்பாங்கைக் கொண்டிருந்தவராகும்.

தனது சொந்த நலனுக்கான வசதிகள் இருந்தபோதும் கூட அவர் கிளிநொச்சியில் தங்கியிருந்து நெருக்கடியான சூழ்நிலைகளின் போது மக்களுக்குத் திறமையுடன் சேவையாற்றியிருந்தார். நம்பிக்கைக்குரிய நேர்மையான அதிகாரியான அவர் மிகவும் மதிப்புக்குரிய நன்கு கல்வி கற்ற குடும்பத்தைச் சேர்ந்தவராகும். கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக அவரை அரசாங்கம் நியமித்தபோது எந்தவித ஆட்சேபனையும் இன்றி அவர் அதனை ஏற்றுக்கொண்டு யுத்த சூழ்நிலையிலும் கிளிநொச்சி மக்களின் நலனுக்காகத் திறமையான பணிகளைச் செய்திருந்தார்.

கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அவர் இடம்பெயர்ந்த போது வவுனியாவுக்குச் செல்லுமாறு அரசாங்கம் அவருக்குப் பணித்திருந்தது. வவுனியாவில் அவருக்கு உப அலுவலகம் வழங்கப்பட்டது. கிளிநொச்சி அரச அதிபராக அவர் தனது கடமையை மேற்கொள்ள உப அலுவலகம் வவுனியாவில் வழங்கப்பட்டிருந்தது. வவுனியாவுக்கு அவர் சென்ற பொழுது சம்பந்தப்பட்ட அரச ஆவணங்கள் சகலவற்றையும் அவர் கொண்டு செல்வதற்கு ஒருபோதும் தவறிவிடவில்லை. அத்துடன், தமது உதவியாளர்களின் தனிப்பட்ட கோவைகளையும் அவர் கொண்டு செல்லத் தவறவில்லை.

குடும்பத்தினர் முழுமையாக வேதநாயகனிலேயே தங்கியுள்ளனர். அவருக்குப் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகள் உள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் எதிர்காலம் குறித்து எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் துன்பப்படுகின்றனர். ஆதலால் சாத்தியமான அளவுக்கு அவரின் விடுதலைக்கு வேண்டிய சகல பொருத்தமான வழி முறைகளையும் எடுக்குமாறு நாங்கள் தங்களை விநயமாக வேண்டுகிறோம்.

இன்று நள்ளிரவுடன் பிரசாரப் பணிகள் நிறைவு

election000.jpgஊவா மாகாண சபை யாழ். மாநகரசபை,  மற்றும்  வவுனியா நகரசபை, ஆகியவற்றுக்கான இந்தத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றன.

நள்ளிரவுக்குப் பின்னர் கட்சிகளோ,  சுயேச்சைக் குழுக்களோ பிரசாரங்களில் ஈடுபடக்கூடாதென்றும், இதனை மீறிச்செயற்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

ஊவாவில் ஊவா மாகாண சபைக்காக பதுளை மாவட்டத்தில் இருந்து 21 உறுப்பினர்களையும் அதேபோல் மொனராகலையில் இருந்து 11 உறுப்பினர்களும் என மொத்தமாக 32 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கென 23 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயேச்சைக் குழுக்களில் இருந்து 600 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களில் இருந்து 32 பேரை தெரிவுசெய்வதற்கு 8 இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக இரண்டு மாவட்டங்களிலும் 814 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ன.

யாழ். மாநகரசபை

இங்கு போட்டியிடுகின்ற 4 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேச்சைக் குழுக் களில் 23 பேரை தெரிவு செய்வதற்கென 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு ஒரு இலட்சத்து 417 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு இதற்காக 67 வாக்களிப்பு நிலையங்களும் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா நகரசபை

வவுனியா நகரசபையைப் பொறுத்தட்டில் இங்கு 11 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 5 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயேச்சைக் குழுக்களில் இருந்து 135 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை,  இங்கு 24 ஆயிரத்து 626 பேர் வாக்களிப்பதற்காகத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 18 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

அமெரிக்கர்கள் மூவரும் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்- ஈரான்

iran_composite.jpgஈராக் கிலிருந்து தமது நாட்டின் நிலப்பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்த மூன்று அமெரிக்கர்களை தடுத்து வைத்துள்ளதை இரான் உறுதி செய்துள்ளது.

தமது அண்டை நாடான இராக்கிலிருந்து இரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் வடக்கு எல்லை நகரமான மரிவானுக்கு அருகில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் பிராந்திய அதிகாரி தெரிவித்தார்.

அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு்ள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளா என்பது அறியப்படவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராக்கின் குர்டிஸ்டான் பகுதியில் மலையேறிக்கொண்டிருந்த போது தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைப்பகுதியில் இவர்கள் மூவரும் தற்செயலாக வழிதவறிச் சென்றுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களை கூடிய விரைவில் திருப்பியனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலரி கிளிண்டன் இரானைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதியாக நிஜாத் இன்று பதியேற்பு – இரண்டு வாரத்தில் புதிய அமைச்சரவை

ஈரான் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹ்மூத் அகமது நிஜாத்,  இன்று தமது பதவியைப் பொறுப்பேற்கின்றார்.

ஈரானில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதித்  தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அகமதி நிஜாத் அமோக வெற்றி பெற்றார். மிதவாத தலைவரான மிர் ஹசைன் மவுசாவி தோல்வியடைந்தார்.

அதிபர் தேர்தலில் தில்லுமுல்லு செய்து அகமதி நிஜாத் வெற்றி பெற்றதாக கூறி,  எதிர்க்கட்சித் தலைவர் மிர் ஹசைன் மவுசாவியின் ஆதரவாளர்கள் ஈரானில்,  போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டம் வன்முறையாக மாறியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மவுசாவி,  முன்னாள் அதிபர் முகமது கடாமி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

இந்நிலையில்,  அகமது நிஜாத்தை ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி,  அதிபராக அங்கீகரித்துள்ளார். பாராளுமன்றத்தில்  இன்று அதிபராக நிஜாத் பதவி ஏற்கிறார். இதை தொடர்ந்து இரண்டு வாரத்தில் அவர் தனது அமைச்சரவையை அமைக்க உள்ளார்.

பொம்மை! : நோர்வே நக்கீரா

பொம்மை

Valentine’s Day Barbie
அங்கமெல்லாம் தங்கம் பூட்டி
சருகைச்சேலைகள் சரசரக்க
அழகு காட்டி
கோவில்சப்பறம்போல்
பெண்டிர் எங்கு போகினம்?

கண்ட நிண்ட கலர்களில்
கோட்டும் சூட்டும்
மாறிச்சாறிப்போட்டுக் கொண்டு
ஜொகிங் ஷூ(ஒடுகாலணி)வும் மாட்டிக்கொண்டு
ஆண்கள் எங்கு போகினம்?

மகிழுந்து காட்ட
மணவறைக்கோ போகினம்?

கமராக்கள் கண்ணடிக்கும்
சந்தையொன்றில்
பிள்ளையென்று சொல்லி
ஒருபொம்மை கொண்டுவந்தார்
தந்தை சிந்தை போலே
ஆடவேண்டும் என்று
பிள்ளையது பொம்மையாய்
என்றுமாக்கப்பட்டது.

வீடியோ எடுக்கவென்றே
பிறந்தநாள் நடக்குது.
காணத இடமெல்லாம்
கண்டு கழித்துப்போகுது.
வடிவான பெண்கண்டால்
நின்று அங்கு மேயுது.

பெற்றோர்கள் கேக்கு வெட்ட
பிள்ளை போஸ் கொடுக்குது.
பிறந்தநாள் பிள்ளைக்கா? பெற்றோருக்கா?
இது பிள்ளையா? பொம்மையா?

பொன் பொன்னாய் பரிசுகள்
போட்டியாய் வந்தது.
போட்டுப்பார்த்து பெற்றோரே இரசிக்கினம்
வளர்ந்து பிள்ளை விரும்பிக்கேட்டால்
சீதனம் எனச் சொல்லினம்.
பெற்றோரின் விருப்புப்படி
பேருக்கும் புகழுக்குமாய் வாழுமிந்த பிள்ளைகள்
பிள்ளைகளா? பொம்மைகளா?

எம்மண்ணில் எம்மக்கள்
அகதியாய் அலைகிறார்கள்
பேரன் பேத்தியும் பசியுடனே
படுக்கிறார்கள்
இங்கேயோ!!!
ஆனைமுதல் பூனைமுதல்
சாப்பாட்டுக் கோப்பையிலே விழுகுது
மூக்கு முட்ட திண்ட சனம்
ஊர்க்கதைகள் கதைக்கினம்.

வீட்டுக்குள்
கருமுகில் கூட்டுக்குள்
சிகரெட்டு நட்சத்திரங்கள்.
புகையடித்தே பிள்ளைகளை
பழுக்க வைக்கிறார்கள் பெற்றோர்.
பிஞ்சில் பழுத்த பழங்களோ இவைகள்!!

அப்பருக்கு சிகரெட்டு
பிள்ளைக்கு சிகரெட்பெட்டி

தண்ணியடித்துத் தவழுகிறார்
பிள்ளையுடன் தந்தை.
தந்தையடித்த குடித்த தண்ணீரில்
குளிக்கிறது பிள்ளை
பாட்டி பிள்ளைக்கா? பெற்றோருக்கா? ஊருக்கா?

கொடுத்த பிறசென்ட்டுக்கு சமனனாய்
தின்று சிலர் தீர்த்தனர்.
தம் வண்டியைத் தள்ளிக் கொண்டு
கார்வண்டிக்குள் போயினர்.

பத்து வயதிலேயே பிள்ளை
பட்டம் பெறவேண்டுமாம்- அதனால்
ஐந்துநாளும் பிள்ளை பாடசாலை போகுது
வந்து பின்னேரம் பாட்டுப்படிக்கப் போகுது.
சனியெங்கும் தனியாகத் தமிழ்படிக்கப் போகுது
ஞாயிறு தோறும் டான்ஸ் பழகப்போகுது.
பிள்ளையா? பொம்மையா?
தொல்லையதற்கு இல்லையா?

கல்யாணச் சந்தையிலே
பிள்ளை விலைபோகுது.
ரூபாயில் சீதனம்
பவுண் டொலராய் ஆகுது.
போட்டோவில் பார்த்தே
மாப்பிளைத் தேர்வும் நடக்குது
பொன்னும், பொருளும் பணமும் கொடுத்து
பெண்ணையும் சும்மா தள்ளிவிடும்போது.
இதைவிட மலிவாக
பொம்மை எங்கு வாங்கலாம்?

பிறப்பு முதல் இறப்புவரை
தன் விருப்புவிட்டு
பேருக்கும் புகழுக்கும் ஊருக்குமாய் வாழும்
இத்தியாகிகளை
பிள்ளையென்பதா? பொம்மையென்பதா

கவிமலர்கள் – கொச்சைவழக்குக் கவிதை

‘வாடா’ விதிமுறைகள் – ஏற்குமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு சானியா கோரிக்கை

sania-mirza.jpgஉலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின் (வாடா) புதிய விதிமுறையை ஏற்க இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்வர வேண்டும் என டென்னிஸ் நட்சத்திரங்களான சானியா மிர்ஸாவும், மகேஷ் பூபதியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடா அமைப்பின் புதிய விதிமுறைக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்கள் மறுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியமும், வீர்ரகளுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐசிசிக்கும் இடையே மோதல் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சானியாவும், மகேஷ் பூபதியும், இந்திய வீரர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில், வாடா அமைப்பின் நடவடிக்கையால், விளையாட்டுத் துறையிலிருந்து ஊக்க மருந்து பிரச்சினை அறவே ஒழிக்கப்படும் நிலை உருவாகும்.

ஊக்க மருந்து இல்லாத விளையாட்டு உலகை உருவாக்க வேண்டியது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் கடமையாகும்.

இந்த ஆண்டு முழுவதும் நான் (பூபதி) எங்கே இருக்கிறேன் என்பதை தொடர்ந்து வாடா அமைப்புக்கு தெரிவித்தவண்ணம் உள்ளேன். இந்த முறையால், தவறுகள் செய்வோரின் எண்ணிக்கை அறவே குறையும்.

பல டென்னிஸ் பிரபலங்களுக்கு இந்த வாடா விதிமுறை அவுசகரியமாக இருந்தாலும் கூட விளையாட்டு உலகின் நன்மையைக் கருத்தில் கொண்டு இதை ஏற்றுள்ளனர்.

அதேபோல நமது கிரிக்கெட் வீரர்களும் இந்த விதிமுறைக்குப் பயப்படாமல், தயங்காமல் அதை ஏற்றுக் கையெழுத்திட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பஸ்யாலயில் பஸ்கள் மோதி விபத்து: மாணவர் உட்பட 44 பேர் காயம்

accident.jpgபஸ்யால பிரதேசத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 44 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டியும், தனியார் பயணிகள் பஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித்குணசேகர தெரிவித்தார்.

இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவர். இவர்களில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:- கம்பஹா தக்ஷிலா வித்தியாலய மாணவர்கள் கண்டி நோக்கி சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த பஸ் வண்டி கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையின் பஸ்ஸியால பிரதேசத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த போது மாவனல்லை பிரதேசத்திலிருந்து வேகமாக வந்த தனியார் பஸ் வண்டி நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வரக்காபொல மற்றும் வத்துபிட்டிவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 24 பேர் வரக்காபொல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட மருத்துவ அதிகாரி டொக்டர் யு. டபிள்யூ. ஏ. பிரேமஜயதிலக்க, இவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ள தாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டவர்களுக்கு அவசரசிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துச் சம்பவத்துக்கு சாரதிகளின் அலட்சியமே காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

பரீட்சை வினாத்தாள் குளறுபடிகள் கல்விப் பணிப்பாளர்களின் கவனயீனமே தவறுக்கு காரணம்

0309susil-premajayantha_.jpgநாட்டின் பல்வேறு பாகங்களிலும் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிப்பது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்விப் பணிப்பாளர்களின் கவனயீனம் மற்றும் பொறுப்பற்ற தன்மை காரணமாகவே இத்தகைய தவறுகள் நிகழ்ந்துள்ளன.  சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

பல்வேறு வலயங்களில் தவணைப் பரீட்சை வினாத்தாள் களில் தவறுகள், தாமதம் மற்றும் பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளன. இதனால் மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கு கல்விப் பணிப்பாளர்களே பொறுப்புக்கூற வேண்டும். தகுதியான நபர்களே பொருத்தமான பதவிகளுக்கு நிறுத்தப்பட வேண்டும். தகுதியற்றவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதாலேயே இவ்வாறு பிரச்சினைகள் எழுகின்றன.

வட மாகாணத்தில் முதலமைச்சரோ மாகாணசபையோ இல்லாத நிலையில் அங்கு தவணைப் பரீட்சைகள் குளப்பமின்றி நடைபெறுகிறது. அங்குள்ள கல்விப் பணிப்பாளர்கள் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்படுவதன் காரணமாகவே வடக்கில் பிரச்சினை எதுவுமின்றி தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.

தவணைப் பரீட்சைகளின்போது இடம்பெற்ற குளறுபடிகள் குறித்த விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி அமைச்சினூடாகவும் மாகாண அமைச்சுக்களினூடாகவும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.

ஊவா மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, வளக்குறைபாடு, அடிப்படை வசதியின்மை என்பன காரணமாக கல்வித் துறை பின்னடைந்திருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் ஊவா மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பு 30 வீதமான மக்களுக்கே மின்சார வசதி அளிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது 80 வீதமான மக்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. 3 1/2 வருடகாலத்தில் 5644 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 3719 தோட்ட ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டது. இதில் 600 ஆசிரியர்கள் ஊவாவில் நியமிக்கப்பட்டனர் என்றார்

5 வருடங்களில் சுயமாக வழங்கப்படும் பிரஜாவுரிமை பிரிட்டனில் இனி இல்லை

பிரிட்டனில் 5 வருட காலம் எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் வசிக்கும் எவருக்கும் தன்னிச்சையாகவே குடியுரிமை வழங்குவதற்கான சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமிக்ஞையை அந்நாடு விடுத்துள்ளது.  தற்போது முன் மொழியப்பட்டுள்ள உத்தேச சட்ட விதிகளின் பிரகாரம் பிரித்தானிய குடியேற்றவாசிகள் அங்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு அவர்களின் திறமை, தொழில் மற்றும் தகுதியடிப்படையிலான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்புள்ளிகளைத் தன்னார்வப் பணிகள் மற்றும் சமூக சார் நடவடிக்கைகளில் பங்களிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை, அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்கள் குறிப்பாக பிரித்தானிய இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட சர்ச்சைக்குரியதும் சட்டவிரோதமானதுமான நடவடிக்கையில் ஈடுபட்டால் புள்ளிகள் கழிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் குடியேற்றவாசிகளின் தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியான இப்புதிய புள்ளித்திட்டம் அண்மையில் அந்நாட்டு உள்விவகார அமைச்சர் அலன் ஜோன்சனால் முன்மொழியப்பட்டது. கடுமையான தகுதிகளுக்கான விதிகளினால் வெளிநாட்டவர்கள் பிரித்தானிய குடியுரிமையைப் பெற 10 வருடங்களாகலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களின் தற்காலிக வேலைகள் நிரந்தரமாக்கப்படுவதற்கான இடைவெளி அதிகமில்லை எனத் தெரிவித்த ஜோன்சன் தவறான நடத்தைகள் தண்டனைக்குரியவை எனவும் எச்சரித்துள்ளார்.

வழமைக்கு மாறான போராட்டங்களில் பங்குபற்றுவோரின் புள்ளிகளும் கழிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குடியேற்ற ஆலோசனைச் சேவைகளின் தலைமை நிறைவேற்றதிகாரி கீத் பெஸ்ட் தெரிவித்துள்ளார். இத் திட்டத்தை ஆதரித்துள்ள குடிவரவுத்துறை அமைச்சர் பில்வூல்ஸ், ஆனால், தவறான நடத்தையால் விண்ணப்பதாரிகள் புள்ளிகளை இழக்கும் விசேட திட்டம் தொடர்பாக கருத்துக்கூற மறுத்துள்ளார்.

இப்புள்ளித் திட்டத்தின் படி நாட்டின் சட்டவிதிகளை மீறாதவர்களுக்கே குடியுரிமை எனும் கொள்கை சிறப்பானதே. ஆனால், குடியுரிமைக்காக விண்ணப்பதாரிகள் சட்டவிதிகளை மீறாதிருப்பது மட்டும் போதியதல்ல. நமது நாட்டிற்குப் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏனைய நாடுகளும் இதையே எதிர்பார்க்கின்றன. நாமும் அதையே செய்கின்றோமென வூல்ஸ் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

பயிரிடக்கூடிய நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் உச்ச பயனை பெறவேண்டும் – ஜனாதிபதி

mahi2222.jpgஉணவுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளக் கூடிய ஒவ்வொரு அங்குல நிலத்திலும் விவசாயம் செய்வது தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்வதாக அமையும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் தேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக கட்சி, அரசியல் மற்றும் பிரதேச பேதங்கள் பாராமல் ஒன்றுபட்டு பங்களிப்பு செய்ய வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பு என்றும் ஜனாதிபதி கூறினார். ‘ரன்பிம’ (தங்க பூமி) காணி உறுதி வழங்கும் நாலாம் கட்ட வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் சுமார் இரண்டாயிரம் பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், மஹிந்த சிந்தனையின் கீழ் காணியற்றோருக்கு காணிக்கான உரிமை ‘ரன்பிம’ காணி உறுதி மூலம் பெற்றுக் கொடுக்கப்படுவதையிட்டு நான் பெரிதும் சந்தோஷப்படுகின்றேன். இருப்பினும் கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டின் மூன்றிலிரண்டு பங்கு நிலத்தின் உரிமை அரசின் கீழிலிருக்கவில்லை. இக்காலப் பகுதியில் உடன்படிக்கை மூலம் அப்பிரதேசங்கள் பயங் கரவாதிகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தன. இது பெரும் கவலையான நிலையாகும்.

இவ்வாறான நிலையில் எமது பாதுகாப்பு படையினர் தான் பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் முற்றாக ஒழித்துக் கட்டி இப்பிரதேசங்களுக்கான உரிமையை மீண்டும் அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் நிறையவே அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளார்கள்.

அவர்கள் ஒரு அங்குலம் நிலம் கூட இல்லாத நிலையில்தான் இந்த மகத்தான பணியைச் செய்தார்கள். நாட்டை ஐக்கியப்படுத்தினார்கள்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நாட்டை பாதுகாப்பதும், அபிவிருத்தி செய்வதும் இந்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். இதற்காக சகலரும் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதும் அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதும் தனியே ஒரு கட்சியின் பொறுப்பல்ல. இதற்குச் சகலரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். இந்நாட்டில் பயிரிடப்படக்கூடிய நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நாட்டில் நிலம் அதிகரிக்காது. ஆனால் சனத்தொகையே பெருகும். அதன் காரணத்தினால் நிலத்தின் பெறுமதி அதிகரிக்கும். நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் உச்ச பயனைப் பெறும் நடவடிக்கையில் ஜப்பானியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை நான் அங்கு சென்றிருந்த சமயம் அவதானித்தேன்.

ஆகவே தேசியக் கொடியின் கீழ் சகலரும் ஒன்றுபட்டு வாழவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றார்.