பிரிட்டனில் 5 வருட காலம் எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் வசிக்கும் எவருக்கும் தன்னிச்சையாகவே குடியுரிமை வழங்குவதற்கான சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமிக்ஞையை அந்நாடு விடுத்துள்ளது. தற்போது முன் மொழியப்பட்டுள்ள உத்தேச சட்ட விதிகளின் பிரகாரம் பிரித்தானிய குடியேற்றவாசிகள் அங்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு அவர்களின் திறமை, தொழில் மற்றும் தகுதியடிப்படையிலான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்புள்ளிகளைத் தன்னார்வப் பணிகள் மற்றும் சமூக சார் நடவடிக்கைகளில் பங்களிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை, அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்கள் குறிப்பாக பிரித்தானிய இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட சர்ச்சைக்குரியதும் சட்டவிரோதமானதுமான நடவடிக்கையில் ஈடுபட்டால் புள்ளிகள் கழிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் குடியேற்றவாசிகளின் தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியான இப்புதிய புள்ளித்திட்டம் அண்மையில் அந்நாட்டு உள்விவகார அமைச்சர் அலன் ஜோன்சனால் முன்மொழியப்பட்டது. கடுமையான தகுதிகளுக்கான விதிகளினால் வெளிநாட்டவர்கள் பிரித்தானிய குடியுரிமையைப் பெற 10 வருடங்களாகலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களின் தற்காலிக வேலைகள் நிரந்தரமாக்கப்படுவதற்கான இடைவெளி அதிகமில்லை எனத் தெரிவித்த ஜோன்சன் தவறான நடத்தைகள் தண்டனைக்குரியவை எனவும் எச்சரித்துள்ளார்.
வழமைக்கு மாறான போராட்டங்களில் பங்குபற்றுவோரின் புள்ளிகளும் கழிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குடியேற்ற ஆலோசனைச் சேவைகளின் தலைமை நிறைவேற்றதிகாரி கீத் பெஸ்ட் தெரிவித்துள்ளார். இத் திட்டத்தை ஆதரித்துள்ள குடிவரவுத்துறை அமைச்சர் பில்வூல்ஸ், ஆனால், தவறான நடத்தையால் விண்ணப்பதாரிகள் புள்ளிகளை இழக்கும் விசேட திட்டம் தொடர்பாக கருத்துக்கூற மறுத்துள்ளார்.
இப்புள்ளித் திட்டத்தின் படி நாட்டின் சட்டவிதிகளை மீறாதவர்களுக்கே குடியுரிமை எனும் கொள்கை சிறப்பானதே. ஆனால், குடியுரிமைக்காக விண்ணப்பதாரிகள் சட்டவிதிகளை மீறாதிருப்பது மட்டும் போதியதல்ல. நமது நாட்டிற்குப் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏனைய நாடுகளும் இதையே எதிர்பார்க்கின்றன. நாமும் அதையே செய்கின்றோமென வூல்ஸ் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.