ஊவா மாகாண சபை யாழ். மாநகரசபை, மற்றும் வவுனியா நகரசபை, ஆகியவற்றுக்கான இந்தத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றன.
நள்ளிரவுக்குப் பின்னர் கட்சிகளோ, சுயேச்சைக் குழுக்களோ பிரசாரங்களில் ஈடுபடக்கூடாதென்றும், இதனை மீறிச்செயற்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
ஊவாவில் ஊவா மாகாண சபைக்காக பதுளை மாவட்டத்தில் இருந்து 21 உறுப்பினர்களையும் அதேபோல் மொனராகலையில் இருந்து 11 உறுப்பினர்களும் என மொத்தமாக 32 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கென 23 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயேச்சைக் குழுக்களில் இருந்து 600 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
இவர்களில் இருந்து 32 பேரை தெரிவுசெய்வதற்கு 8 இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக இரண்டு மாவட்டங்களிலும் 814 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ன.
யாழ். மாநகரசபை
இங்கு போட்டியிடுகின்ற 4 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேச்சைக் குழுக் களில் 23 பேரை தெரிவு செய்வதற்கென 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு ஒரு இலட்சத்து 417 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு இதற்காக 67 வாக்களிப்பு நிலையங்களும் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளன.
வவுனியா நகரசபை
வவுனியா நகரசபையைப் பொறுத்தட்டில் இங்கு 11 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 5 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயேச்சைக் குழுக்களில் இருந்து 135 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை, இங்கு 24 ஆயிரத்து 626 பேர் வாக்களிப்பதற்காகத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 18 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.