ஈரான் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹ்மூத் அகமது நிஜாத், இன்று தமது பதவியைப் பொறுப்பேற்கின்றார்.
ஈரானில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அகமதி நிஜாத் அமோக வெற்றி பெற்றார். மிதவாத தலைவரான மிர் ஹசைன் மவுசாவி தோல்வியடைந்தார்.
அதிபர் தேர்தலில் தில்லுமுல்லு செய்து அகமதி நிஜாத் வெற்றி பெற்றதாக கூறி, எதிர்க்கட்சித் தலைவர் மிர் ஹசைன் மவுசாவியின் ஆதரவாளர்கள் ஈரானில், போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டம் வன்முறையாக மாறியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மவுசாவி, முன்னாள் அதிபர் முகமது கடாமி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், அகமது நிஜாத்தை ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி, அதிபராக அங்கீகரித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று அதிபராக நிஜாத் பதவி ஏற்கிறார். இதை தொடர்ந்து இரண்டு வாரத்தில் அவர் தனது அமைச்சரவையை அமைக்க உள்ளார்.