2009

2009

புலிகளின் உலக வலையமைப்பின் முக்கிய தகவல்கள் அம்பலம் – கே.பி மீதான விசாரணை குறித்து பாதுகாப்பு செயலர் கூறுகிறார்

pathmanathan.jpgநீண்ட காலமாக அரும்பாடுபட்டு பொருத்தமான பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டதாலேயே கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி (சிங்கள ஒலிபரப்பு) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் புலனாய்வுத் துறை உட்பட பாதுகாப்புப் படையினர் பத்மநாதன் பற்றிய தகவல்களை ஏற்கனவே அறிந்திருந்தனர் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலிகளின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அந்த அமைப்பின் சர்வதேச பலத்தை ஒழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இருந்தது. கே.பி.யை விசாரணை செய்வதன் மூலம் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் முக்கியமான தகவல்களைப் பெறமுடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அந்த இயக்கத்தின் தலைவராக தன்னைத் தானே கே.பி. அடையாளப்படுத்தி உலகிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முப்பது வருடகாலமாக இயங்கி வந்துள்ள புலிகள் இயக்கம் உலகிலுள்ள வல்லரசு நாடுகளுக்குக் கூட அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வலுவடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பமானது. இதனையடுத்து சர்வதேச ரீதியாக பாரிய அழுத்தங்கள் விடுக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ஜனாதிபதியின் நேரடியான தலைமைத்துவம் காரணமாக இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் உட்பட பல குழுக்கள் ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ வெளிநாட்டுத் தொடர்புகள் கிடையாதென விமர்சனம் செய்து வந்துள்ளன.

ஆனால் தற்போது இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்குமிடையில் உயர்மட்டத்திலான நல்லுறவு பேணப்படுகிறது. கே.பி.யைக் கைது செய் வதற்கும் இந்த சர்வதேச நல்லுறவுகள் துணைபுரிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மெனிக்பாம் முகாமுக்கு 500 கழிவறைகள்!

rajitha_senarathna.jpg செட்டிக் குளம் மெனிக் பாம் முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை வசதி கருதி 500 கழிவறைகளை உடனடியாக அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிர்மானத்துறை மற்றும் பொறியியல் சேவைத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

இத்திட்டத்துக்கு 2 கோடியே 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று வாரங்களில் நிர்மானப் பணிகளைப் பூர்த்திசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை 23ம் திகதி: நிவாரண கிராமங்களிலிருந்து 6000 மாணவர் தோற்றுவர்; பதிவு நடவடிக்கை ஆரம்பம்

examination_departmentsss.jpgநிவா ரணக் கிராமங்களிலுள்ள 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குரிய சுட்டிலக்கங்கள் வழங்குதல், பதிவு செய்தல் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு நிவாரணக் கிராமங்களிலிருந்து சுமார் 6000 மாணவ, மாணவிகள் தோற்றவுள்ளனர்.

இவர்களுக்கென நிவாரணக் கிராமங்களுக்குள்ளேயே சுமார் 48 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தவும் வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சில நிவாரணக் கிராமங்களிலிருந்து வேறு இடைத்தங்கல் முகாம்களுக்கு மக்களை இடமாற்றும் நட வடிக்கைகள் செய்யப்பட்டு வருவதால் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை கண்டறியும் வேலைகளில் கல்வித் திணை க்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி பரீட்சைக்குத் தோற்றும் மாண வர்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவு னியா, மன்னார் என மாவட்ட ரீதியாக பிரித்து மாவட்ட ரீதியாகவே பரீட்சை நிலை யங்களை ஏற்படுத்துவதும், பதிவுகளை மேற் கொள்வதும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

இதேவேளை நிவா ரணக் கிராமங்களில் அல்லாத வவுனியா மாவட்ட பாடசாலைகளில் 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்காக சுமார் 2200 மாணவர்களும் தோற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிவெனா கல்வி நிலையங்களில் இலத்திரனியல் கல்வி

susil_premajayant000.jpg
பிரிவெனாக்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவற்றில் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

இத்திடத்திற்கு சீன அரசாங்கம் நிதியுதவியாக 10 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குகிறது. நாட்டிலுள்ள 691 பிரிவெனாக்களில் கல்வி பயிலும் 56,170 பிக்கு மாணவர்கள் இதன் மூலம் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரவரிசையில் சானியா முன்னேற்றம்

sania-mirza.jpgலெக் சின்டன் டென்னிஸ் பட்டம், வான்கூவர் டென்னிஸ் தொடரில் இறுதி வரை வந்தது ஆகியவற்றால் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 74-வது இடம் பிடித்துள்ளார்.

மகளிர் இரட்டையர் உலக தரவரிசைகளில் சானியா மிர்சா 49-வது இடத்தில் நீடிக்கிறார்.

ஆடவர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் 13 இடங்கள் முன்னேற்றம் கண்டு 140-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

லெக் மேசன் டென்னிஸ் தொடரில் உயர் தரவரிசையில் உள்ள மாரின் சிலிச்சை வென்றதன் மூலம் சோம்தேவ் தேவ்வர்மன் இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளார்.

கம்பஹா ஆயுர்வேத நிறுவனத்துக்கு நூலகக் கட்டிடம்

wiswa_warnapala_00.jpgகம்ப ஹாவில் உள்ள விக்கிரம ஆரச்சி ஆயுர்வேத நிறுவனத்துக்கு நூலகக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இம்மூன்று மாடிக் கட்டடத்தை அமைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால சமர்பித்திருந்தார். இரண்டு வருடங்களில் 85 மில்லியன் ரூபா செலவில் 990 சதுர மீட்டர் நிலப்பரப்பில் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் மூலம் இதனை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பேர்க்’ நிறுவனம் ரத்து செய்யப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

‘பேர்க்’ எனப்படும் பொது நிறுவன மறுசீராக்கல் ஆணைக்குழு ரத்துச் செய்யப் படவுள்ளது. இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆணைக்குழு ரத்துச் செய்யப்பட்டவுடன் இந்நிறுவனத்தின் சொத்துக்களும் பொறுப்புக்களும் நிதியமைச்சின் பொறுப்பில் இயங்கும் பொதுநிறுவன திணைக்களத்துக்கு மாற்றப்படும்.

பொது நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டவுடன் இடம்பெறும் விவகாரங்களை கையாளவென பேர்க் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதென அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், மஹிந்த சிந்தனை கோட்பாட்டின் கீழ் அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டா. எனவே ‘பேர்க்’ அமைப்பின் அவ சியம் அற்றுப்போய்விட்டதாக அவர் தெரிவித்தார்.

எனது அமைச்சு சம்பந்தப்பட்ட விடயத்தில் மற்றொருவர் தலையிடுவது விரும்பத் தக்கதல்ல – தகவல் ஊடகத்துறை அமைச்சர் கவலை

anura_priyadarshana_yapa00.jpgதம்முடன் கலந்தாலோசிக்காமல் தொலைக்காட்சி தொடர் மற்றும் விளம்பரங்கள் தொடர்பாக வர்த்தமாணி மூலம் மற்றுமொரு அமைச்சர் கட்டுப்பாடு விதிப்பது கவலைக்குரிய விடயம் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் கேள்வி நேரத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

திரைப்படம்,  தொலைக்காட்சி நாடகம் மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிப்பதோ கட்டுப்பாடு விதிப்பதோ தமது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாக இருக்கின்ற போதிலும் மற்றுமொரு அமைச்சர்  அவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதை தம்மால் வரவேற்க முடியாது. தமக்கு சம்பந்தமில்லாத அமைச்சின் விடயம் ஒன்றை சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடிய பின்னரே மேற்கொள்ள வேண்டும் என்ற ஞானம் பிறந்த பின்னராவது அவர் என்னுடன் கதைப்பார் என நம்புகிறேன்.

அவரின் இந்த செயற்பாட்டை என்னால் அங்கீகரிக்க முடியாது என்றும் இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலை அரசு நவம்பருக்கு பின்பே வெளியிடும்

அரசியல் தீர்வு யோசனை அடங்கலான அரசாங்கத்தின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் எதிர்வு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு அமையவே அரசாங்கத்தின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலும் அந்தத் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது தேசிய மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் அரசாங்கத்தின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படுமென்றும் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு யோசனையும் அதில் உள்ளடக்கப்படுமென்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும், சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு நவம்பர் மாதம் 15 ஆம் திகதியே நடைபெறுமென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதற்கமையவே, அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சி நிரலும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியே வெளியிடப்படவுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து படகு இயந்திரங்கள ஆயூதங்கள் மீட்பு – இராணுவப் பேச்சாளர் தகவல

udaya_nanayakkara_brigediars.jpgநான்கு படகு இயந்திரங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு,  அம்பகாமம் பிரதேசங்களில் இராணுவத்தின் விஷேட அதிரடிப்படைப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல்களின் போதே மேற்படி ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் புதுக்குடியிருப்பின் ஐந்து பிரதேசங்களில்; தேடுதல்களை மேற்கொண்ட போது,  ரி- 56 ரக துப்பாக்கி ரவைகள் 6 பெட்டிகள்,  தேசிய அடையாள அட்டைகள்- 29, ரெலோ அடையாள அட்டை- 01, புலிகளின் அடையாள அட்டை – 02,  பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள்-1.700,  கையடக்க தொலைபேசிகள்- 07,  இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள்,  கைக்குண்டுகள்- 04 மற்றும் படகுகளுக்கும் பொருத்தப்படும் வெளிஇணைப்பு இயந்திரங்கள்- 04 என்பவற்றை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை அம்பகாமம் பிரதேசத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கி ரவைகள்- 1.042, கைக்குண்டுகள்- 10 மற்றும் பெருந்தொகையான மோட்டார் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.