அரசியல் தீர்வு யோசனை அடங்கலான அரசாங்கத்தின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் எதிர்வு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு அமையவே அரசாங்கத்தின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலும் அந்தத் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது தேசிய மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் அரசாங்கத்தின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படுமென்றும் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு யோசனையும் அதில் உள்ளடக்கப்படுமென்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
எனினும், சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு நவம்பர் மாதம் 15 ஆம் திகதியே நடைபெறுமென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதற்கமையவே, அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சி நிரலும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியே வெளியிடப்படவுள்ளது.