2009

2009

மஸ்கெலியா யுவதிகளின் சடலங்களை தோண்டியெடுக்க மஜிஸ்திரேட் உத்தரவு

girl2222.gifகொழும்பில் மரணமான, மஸ்கெலியா தோட்ட யுவதிகள் இருவரின் சடலங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதவான் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய நாளை (27) வியாழக்கிழமை காலை சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சடலங்கள் தோண்டியெடுக்கப்படும்போது ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதவான் பிரசன்னமாகியிருப்பார்.

யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மலையக சமூக அமைப்புகள் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்தே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவான் நேற்று சடலத்தைத் தோண்டியெடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த மனுமீதான விசாரணைக்காக மலையகத்தைச் சேர்ந்த பத்து சட்டத்தரணிகள் கட்டணம் எதுவுமின்றி நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தைச் சேர்ந்த ஜீவராணி மற்றும் சுமதி என்ற இரு யுவதிகள் கொழும்பில் வீட்டுப் பணிப்பெண்களாகக் கடமையாற்றி வந்த நிலையில், கடந்த 16 ம் திகதி பெளத்தாலோக மாவத்தை கழிவு நீரோடைப் பகுதியிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இவர்களது சடலங்கள் மஸ்கெலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இந்த யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்தே கண்டி மனித உரிமைகள் அமைப்பின் நெறிப்படுத்தலில், மலையக சமூக அமைப்புகள் இந்த மனுவைத் தாக்கல் செய்தன.

இடம்பெயர்ந்தோரை அபிவிருத்தியில் பங்கேற்க செய்வதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி

pr-mahi.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை மிக விரைவில் மீளக் குடியமர்த்துவதுடன் அவர்களை நாட்டின் அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கம் அம்மக்களுக்கான உணவு, மருந்து உட்பட சகல தேவைகளையும் அன்றாடம் நிறைவேற்றி வருகிறது எனத் தெரிவித்த ஜனாதிபதி அம்மக்களை மீளக் குடியமர்த்தி அப்பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும் நிதிச்செலவு ஏற்படும் எனினும் இது நாம் செய்ய வேண்டிய செலவுகளே. இத்தகைய செலவுகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டிய தேவை எமக்குண்டு.

எவரிடமும் கடன்படாமல் எமது வருமானத்தைக் கொண்டே இத்தகைய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் எமக்குண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சுங்கத் திணைக்களத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

அரசாங்கத்தின் நிதிக்கொள்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்டே சர்வதேச நாணய நிதியம் எமக்குக் கடன் வழங்கியது. இதற்கு முன் இந்நாட்டை ஆட்சி செய்தவர்களைப் போன்று நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாம் கடன் பெறவில்லை. எம்மிடம் ஒரு காத்திரமான நிதிக்கொள்கை உண்டு. அதேவேளை, உலகிலேயே பாரிய நிவாரணங்களை வழங்குவது இலங்கை மட்டுமே. விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் உரம் வழங்கியது எமது அரசாங்கமே.

உலகின் பாராட்டைப் பெற்ற இலவச மருத்துவம், இலவசக் கல்வி ஆகியவற்றைத் தொடர்ந்தும் தடையின்றி வழங்குவதுடன் நாட்டில் 16 பேருக்கு ஒருவர் அரச ஊழியர் என்ற பெருமையைக் கொண்டவர்களும் நாமே.

இவையனைத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு நிதி அவசியம். முன்னர் தேசிய வளங்களை விற்றல், மது, புகையிலை வர்த்தகம் என்பன மூலம் வரு மானங்களைப் பெற்ற காலம் இருந்துள்ளது. நாட்டிற்கு எத்தகைய பாதிப்பு ஏற்படினும் அரசுக்கு இது போன்ற வருமானங்கள் ஈட்டப்பட்டன.

அத்துடன் நாட்டிற்குப் பொருத்தமற்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டே சர்வதேச கடன்கள் பெறப்பட்டன. எனினும் நாம் அபிவிருத்தியை மட்டுமன்றி தேசிய வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தியே செயற்படுகின்றோம். நாம் நாட்டைப் பாதுகாப்பது மட்டுமன்றி நாட்டைப் புதிய பாதையில் இட்டுச் செல்கிறோம்.

நாட்டின் வருமானத்தில் 50 வீதம் சுங்கத் துறையிலிருந்தே கிடைக்கின்றன. அது மட்டுமன்றி நாட்டைப் பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாப்பதிலும் மேலும் பல்வேறு துறை அபிவிருத்திகளிலும் சுங்கத்துறையின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியது.

கடந்த நான்கு வருடகாலத்தில் அரச வருமானம் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் நாட்டின் அபிவிருத்தியோடு நாம் கொண்டுள்ள நிதிக்கொள்கையும் தான். வரி மூலமான வருமானம் முக்கியமானது. அதுவே நாட்டின் பொருளாதாரத்திற்கான பலமாகும். இந்த வகையில் சுங்கத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்புடனான செயற்பாடு மிக முக்கியமாகும்.

சுங்கத் துறையினருக்கு வேறு எந்தத் துறையிலுமில்லாத வருமானம் கிடைக்கிறது. மோசடி ஒன்றைக் கண்டுபிடித்தால் அதன் 50 வீதம் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. வீடு, வாகனம் என சிறந்த நிலைமையில் அவர்கள் வாழ்கின்றனர். எனினும் எத்தகைய சொத்துக்கள் இருந்தாலும் நமக்கான நாடு ஒன்று முக்கியம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இந்நாட்டின் பொது வளர்ச்சியே தனிப்பட்டவர்களின் வளர்ச்சியாகிறது என்பதை சகலரும் உணர்ந்து செயற்படவேண்டும். சுங்கத் துறையில் சிலர் செயற்படும் விதமே முழு துறையையும் அபகீர்த்திக்குள்ளாக்கு கிறது. பொலிஸ் துறைக்கும் இது பொருந் தும். இத்துறைகளின் மீது மக்கள் கொண் டுள்ள அபிமானத்திற்கு இத்தகையோரின் செயற்பாடுகள் குந்தகத்தையே ஏற்படுத்தும்.

நாட்டில் அபிவிருத்திக்கு சுங்கத் துறையின் பங்களிப்பு மிக அவசியமானது. சுங்க அதிகாரிகளுக்கு இதற்கான பொறுப்புமுள்ளது.

வன்னிப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் போது பல கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன. இவை பொருட்களுடன் அங்கு கொண்டு செல்லப்பட்டனவா என்பது எமக்குத் தெரியாது. இவை தரைமார்க்கமாக கொண்டு செல்லப்பட்டதா அல்லது ஆகாய மார்க்கமாகக் கொண்டு செல்லப்பட்டனவா என்பதல்ல பிரச்சினை. அதற்குரிய ஆவணங்களையும் தேடிப் பிடிக்க முடியாது.

எனினும் நாம் கூறுவதெல்லாம் சுங்க அதிகாரிகள் தமக்குரிய சமூகப் பொறுப்பை சரிவர நிறைவேற்றினார்களா என்பதே. இது அவர்களை அவர்களே கேட்க வேண்டிய கேள்வி. நாம் எந்த யுகத்தில் உள்ளோம் என்பதைச் சிந்தித்து ஏனைய துறையினரை விட மேலான சேவையை வழங்குபவராக சுங்க அதிகாரிகள் செயற்பட வேண்டும்.

சுங்கம் இல்லாதொழிக்கப்பட கங்கணம் கட்டிய காலம் ஒன்றிருந்தது. அதற்காக சிலர் செயற்பட்டனர். நாட்டை நேசிக்கும் சிலராலேயே இது தடுக்கப்பட்டது. அதனால் தான் இன்று நாம் சுங்கத் துறையின் 200 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

தேசிய வருமானத்தைக் கருத்திற்கொண்டு நேர்மையுடனும் அர்ப் பணிப்புடனும் உழைக்க வேண்டியது சுங்கத் துறையினரின் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஆஷஸ் தோல்வியின் எதிரொலி

eng0000.jpgஆஷஸ் தொடரை இழந்ததற்காக கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்படமாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்சபை அறிவித்துள்ளது. 132 கால ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றில் ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் 2வது முறையாக இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்துள்ளது. இதற்கு முன்பு பில்லி முர்டோச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 1890ம் ஆண்டுகளில் 2 முறை ஆஷஸ் தொடரை இழந்துள்ளது.

ஆஷஸ் தொடரை இழந்ததன் மூலம் உலக டெஸ்ட் தர வரிசையிலும் அவுஸ்திரேலிய அணி முதல் இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

வோர்ன், மெக்ராத், கில்கிறிஸ்ட் ஆகியோர் ஓய்வுக்கு பின்னர் ஆட்டம் கண்டு வரும் அவுஸ்திரேலிய அணி இந்த ஆஷஸ் தொடரில் கடைசி டெஸ்டில் 197 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரை இழந்தது. கடைசி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் ஹவுரிட்சை களம் இறக்காததும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தோல்வி கண்ட அவுஸ்திரேலிய அணி கப்டன் ரிக்கி பொண்டிங்கிற்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெற்றி கண்ட இங்கிலாந்து அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. தோல்விக்காக கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்படுவார் என்ற சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறியதாவது, கப்டன் பொறுப்பில் இருந்து ரிக்கி பொண்டிங்கை நீக்க வேண்டும் என்று சொல்வது முற்றிலும் நியாயமற்றது. ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

அதற்காக சிறப்பாகவும் தயார் ஆனோம். வெல்லாவிட்டாலும் நமது வீரர்களை குறித்து பெருமைப்பட வேண்டும. அணி வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடினார்கள். தொடரை இழக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலையிலும் கப்டன் பொறுப்பில் பொண்டிங் சிறப்பாகவே செயல்பட்டார். எங்கள் அணியை குறித்து நாங்கள் எந்தவித மாய தோற்றத்தையும் சிந்திக்கவில்லை. மிகவும் சிறப்பான வீரர்களை இழந்த பிறகு அவுஸ்திரேலிய அணியை மறு கட்டமைப்பு செய்து வருகிறோம். இளம் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் பேர் அணியில் இருப்பதால் ஏற்றம் மற்றும் இறக்கங்கனை சந்தித்து வருகிறோம்.

அதில் ஒரு பகுதியை தான் ஆஷஸ் தொடரிலும் சந்தித்தோம். சுமார் 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். அப்படி இருக்கையில் அணியில் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்து இருந்தாலும் பலன் கிடைத்து இருக்காது. தோல்விக்கு தேர்வாளர்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். களத்தில் ஆடுவது வீரர்கள் தான். எங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள தான் வேண்டும். அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

வெற்றி குறித்து இங்கிலாந்து அணி கப்டன் ஸ்டிராஸ் கூறுகையில், ‘இந்த வெற்றி மிகவும் சிறப்பானதாகும். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாள். இந்த போட்டி தொடரில் உணர்ச்சிபூர்வம், நம்பிக்கை ஏமாற்றம் கவலை ஆகியவை நிறைந்து இருந்தது. வெற்றியின் பாதைக்கு வர முடியாத நிலையில் அந்த பாதையை எட்டிப்பிடிப்பது எப்படி என்ற கஷ்டத்தை இதில் உணர்ந்தோம். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கிடைத்த இந்த வெற்றியின் பெருமை அனைத்து வீரர்களுக்கும் சாரும். இந்த போட்டியில் எங்கள் வீரர்கள் போராட்ட குணத்துடன் செயல்பட்டனர். பொண்டிங்கை, பிளின்டொப் ரன்- அவுட் செய்த விதம் சிறப்பானதாகும் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக தோல்வி தழுவியவர் என்ற விதத்தில் ரிக்கி பொண்டிங் தன்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். பில்லி முர்டாக்கின் தலைமையின் கீழ் இங்கிலாந்தில் இரண்டு ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா இழந்த பிறகு தற்போது பொண்டிங் தலைமையில் இரண்டு முறை தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வி மூலம் நான் என்னை மேலும் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த தலைவராகவும் வளர்த்துக்கொள்ளும் உறுதி என்னிடம் இப்போது வலுவடைந்துள்ளது. எனக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் என்ன கேட்பார்கள் என்பது பற்றி கவலையில்லை. தற்போது பத்திரிகையாளர்களை சந்திப்பதுதான் எனக்கு கவலையளிக்கிறது.

கடந்த முறை ஓவலில் அடைந்த தோல்வி, தற்போது அடைந்துள்ள தோல்வி எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. நான் இப்போது ஏமாற்றம் அடைந்திருப்பது போல் யாரும் வேறு எந்த தருணத்திலும் ஏமாற்றம் அடைந்திருக்கமாட்டார்கள். அணியின் தலைவராக துடுப்பாட்ட வீரராக என்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள் முடியவில்லை. மற்ற வீரர்களுக்கும் அவ்வாறுதான் இருக்கும்.

இந்த தொடர் முழுவதும் இரண்டு மோசமான இரண்டு மணி நேர ஆட்டம் தொடரை இழக்கச் செய்துள்ளது. நாங்கள் நன்றாக விளையாடும்போது அபாரமாக திகழ்கிறோம். ஆனால் நன்றாக விளையாடியபோதும் மிகவும் மோசமாக இருந்துள்ளோம். நாம் சீராக விளையாட வேண்டும் என்றார். அவுஸ்திரேலியா கடந்த 16 டெஸ்ட்களில் 6 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது.

இதில் இந்தியாவிடமும் தென்னாபிரிக்காவிடமும் இங்கிலாந்திடமும் தொடரை இழந்துள்ளது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடத்தை இழந்து தென் ஆபிரிக்கா அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது.

அகதிமுகாம் செல்ல அனுமதிகோரும் எதிரணியின் மனு விசாரணைக்கு ஏற்பு

court222.jpgஅகதி முகாம்களை பார்வையிடுவதற்கு எதிர்க் கட்சியினருக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

எதிரணி எம்.பி.க்களான டாக்டர் ஜயலத் ஜயவர்தன,மனோ கணேசன்,லக்ஷ்மன் செனிவிரட்ண,மங்கள சமரவீர ஆகியோர் தாக்கல் செய்த மேற்படி மனுவை நேற்று திங்கட்கிழமை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கெடுப்பதென தீர்மானித்துள்ளதுடன் மனுமீதான விசாரணையை செப்டெம்பர் 29 ஆம் திகதிக்கு எடுப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்தை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததை தொடர்ந்து ஊடகவியலாளர்களிற்கு மனுதாரர்கள் சார்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கருத்துதெரிவிக்கையில்; இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களின் தேவையையறிந்து உதவுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அங்கு செல்வதற்கு இடமளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.அம்மக்களின் பிரச்சினை அரசின் தனிப்பட்ட பிரச்சினையல்ல.மாறாக இது தேசியப்பிரச்சினையாகும்.

நாம் அரசின் பங்காளிகள் அல்லவெனினும் நாட்டின் பங்காளிகள் என்ற வித்தியாசத்தை புரிந்துகொள்ளவேண்டும்.எங்களது மக்கள் சகோதர சகோதரிகளை பார்ப்பதற்கும் மழையினால் அவர்கள் பட்ட துன்பங்களை மற்றும் கண்ணீர் கதைகளை வெளிக்கொண்டுவர உதவுவதற்கே நாம் அங்கு செல்லகோருகின்றோமே தவிர அரசியலுக்காக அல்ல.இந்நிலையில் அரசாங்கம் சட்டமா அதிபர் ஊடாக நடவடிக்கை எதுவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டாமெனக் கோருகின்றேன் என்றார்.

ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன மற்றும் லக்ஷ்மன் செனிவிரட்ண, மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆகியோரும் உடன் சமுகமளித்திருந்தனர்.

கிழக்கில் பயிர்ச் செய்கையில் ஈடுபட பாதுகாப்பு தரப்பினர் அனுமதி!

sampoor_map.jpgதிரு கோணமலை மாவட்டத்தின் சம்பூர் கிழக்கு பிரதேசம் தவிர்ந்த ஏனைய இடங்களில் விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபட பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்குமாகாண முதலமைச்சரின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் திருமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக்கலந்துரையாடலில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திரியாய் பகுதியிலுள்ள நீலப்பனிக்கன் குளத்தை புனரமைப்பு செய்து அப்பிரதேச மக்களை விவசாயச் செய்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் திரியாய் பகுதியில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மத்தியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்பு மிகவும் தேவையாக உள்ளதாக அப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நேற்று  கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது. 

சீரற்ற காலநிலையினால் மீண்டும் டெங்கு அபாயம்

0000rain.jpgஇலங் கையில் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வந்த டெங்கு நோயின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ள போதும் தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் தலைதூக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மழை பெய்யும் காலங்களில் தமது வீட்டையும் சுற்றுச் சூழலையும் சுத்தமாகப் பேணுவதில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்

அபாயமான மயக்க மருந்தே ஜாக்ஸனின் மரணத்துக்குக் காரணம் : மருத்துவ தடயவியல் நிபுணர்

lakshmanan.jpgபொப் இசை மேதை மைக்கல் ஜாக்ஸன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜாக்ஸன் மரணம் ஒரு கொலை வழக்காக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் மாற்றவுள்ளனர்.

ஜாக்ஸன் உடலில் நடத்தப்பட்ட மருத்துவ தடயவியல் சோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் ஜாக்ஸன் மரணத்திற்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் ஜாக்ஸனின் டாக்டர் கான்ராட் முர்ரே கடைசியாகக் கொடுத்த அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால்தான் அவரது உயிரைக் குடித்ததாகச் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து முர்ரே வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. இதில் முர்ரேவுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முர்ரே எந்த நேரத்திலும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்படக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெளியிடப்படாமல் இருந்து வந்த மருத்துவ தடயவியல் அறிக்கையை லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்ரவன், ஹூஸ்டன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இதையடுத்து ஜாக்ஸனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றம் தேடுதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கல் ஜாக்ஸனின் மரணத்திற்கு அதிகளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ஜாக்ஸனின் மரணம் கொலை எனப் பதிவாகி வழக்குத் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.டாக்டர் கான்ராட் முர்ரேயும் கைது செய்யப்படவுள்ளார்.

ஜாக்ஸன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழராவார். கடந்த 1992ஆம் ஆண்டு அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு துணை மருத்துவ தடயவியல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

புகழ் பெற்ற ஓ.ஜே. சிம்ப்சன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இவர்தான் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 26ஆம் திகதி மைக்கல் ஜாக்ஸன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தார் டாக்டர் சத்யவாகீஸ்வரன். 

இரு சிறுமிகள் மரணம் தொடர்பாக அதிகார சபையின் விசாரணை ஆரம்பம்

girl2222.gifகொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் இரு சிறுமிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வயது குறைந்த சிறுவர், சிறுமியர் வேலைக்கு அமர்த்தப்படுவது சட்டவிரோதமான செயல் என்றும் அதனைமீறி இச்சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சிறுமிகளை வேலைக்காக சேர்த்த தரகர் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மலையகத்தைச் சேர்ந்த பல சிறுமிகள் குடும்பக்கஷ்டம் காரணமாக வீட்டு வேலைகளுக்கு தரகர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருவது தற்போது தெரியவந்துள்ளதாக அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவற்றைத் தடுப்பதற்கு அதிகார சபை உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். சிறுவர், சிறுமிகள் வேலை செய்வது தொடர்பாக அதிகாரசபைக்கு புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் மீள்குடியேறுவோருக்கு கூரைத்தகடுகள், 25,000 ரூபா பணம்

ga-vavuniya-222.jpgவவுனியா வடக்கில் மீளக்குடிய மரும் மக்கள் தமது வீடுகளைப் புனரமைத்துக் கொள்வதற்காக 12 கூரைத் தகடுகளும் 25 ஆயிரம் ரூபா நிதியும் மற்றும் ஏனைய உதவிகளும் வழங்கப்படவுள்ளன. மீள்குடியேற்றம் சம்பந்தமாக நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பியும் கலந்து கொண்டார். குறித்த 35 கிராமங்களில் புனரமைப்புப் பணி கள் 40% பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய கூட்ட த்தில் விபரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர் வவுனியா வடக்குப் பகுதியில் அடுத்த வாரம் புனரமைப் புப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.

நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வவுனியா பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதேவேளை, மீள்குடியமரும் மக்களின் நெற்காணி களை துப்புரவு செய்து கொடுக்க இராணுவத்தினர் உதவி வழங்குவார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வீடுகளைத் தாமாகவே புனரமைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக, கூரைத் தகடுகளும், பணமும் வழங்கப்படுகின்றன. அதேநேரம் ஏனைய உதவிகளையும் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர் வேலை நிறுத்தம்

electricity.jpgசம்பள அதிகரிப்பு உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதுமுள்ள மின்சார சபை ஊழியர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திலீடுபட விருக்கின்றனர். அரச்சாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைவதற்கு 10 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உடன்பாடுகண்டுள்ளன.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படும் சம்பள அதிகரிப்பைச் செய்யத் தவறியமை, மின்சார சபையை அழிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்ட மூலத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் மின்சார சபை ஊழியர்களின் ஊழியர் சேமலாபநிதியின் மூலம் கிடைக்கும் அனுகூலங்களை நீக்கும் முயற்சிகளை உடன்கைவிடுமாறும் மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளில் கைவைக்க வேண்டாம் என்று அரசை வலியுறுத்தும் நான்கு கோரிக்கைகளை இத்தொழிற் சங்கங்கள் முன்வைத்துள்ளன.