2009

2009

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மானப்பணிகள் விரைவில் நிறைவு பெறும்

hambantota_harbour.jpgஹம்பாந் தோட்டை துறைமுக நிர்மானப்பணிகள் அடுத்த ஒன்றரை வருடத்தில்  நிறைவடையவுள்ளன. இது வரையில் அதன் நிர்மானப்பணிகளின் 40 வீதமான வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.

இத்துறைமுக கடற்பிரதேசத்தின் ஆழம் 17 மீற்றர்களாகும. இதன் வேலைத்திட்டம் பூர்த்தியானதன் பின்னர் தனியார் கைத்தொழிற்றுறையும் ஏனைய தொழிற்றுறைகளும் விருத்தியடையும்.  இத்துறைமுகத்தினால் தெற்கில் பெரியளவிலான வர்த்தக மேம்பாடு ஏற்படுவதுடன் எதிர்காலத்தில் அதிகமான வேலைவாய்ப்புக்கள்  உருவாவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஐ.பி.எல்.அணி வாங்கும் பொலிவூட் நாயகன் சல்மான் கான்

salman_khan.pngஐ.பி.எல்., அணியை வாங்க பொலிவுட் நாயகன் சல்மான் கான் ஆர்வமாக உள்ளார். இதையடுத்து சல்மான், ஷாருக்கான் அணிகளின் மோதலை ரசிகர்கள் காணலாம

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் ஏலம் மூலமாக கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் ஜுஹி சாவ்லா இணைந்து கொலகாத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கினர்.  நடிகை பிரித்தா ஜிந்தா (கிங்ஸ் இலவன் பஞ்சாப்), ஷில்பா ஷெட்டி(ராஜஸ்தான் ரோயல்ஸ்) என்ற வகையில் அணிகளை வாங்கினர்.

இவர்கள் வரிசையில் சல்மான் கானும் சேருகிறார். முதலாவது ஐ.பி.எல்.,  தொடரின் நிறைவு விழாவில் நடனம் ஆடி இரசிகர்களை கிறங்கடித்த இவர், சொந்தமாக ஒரு அணியை வாங்க முடிவு செய்துள்ளார்.

வரும் 2011ல் நடக்க உள்ள நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இவற்றில் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியை நேற்று மும்பையில் சந்தித்து பேசியுள்ளார்;.

2011ல் நடக்க உள்ள ஐ.பி.எல்., தொடரில் 2 அணிகளை அறிமுகப்படுத்த உளளதாகவும். அதற்கான ஏலம் 2010,  ஜனவரியில் நடக்க உள்ளது எனவும்  ஒரு அணியின் விலை  1000 கோடி ரூபா முதல் ஆயிரத்து 500 கோடி வரை இருக்கலாம என்றும் லலித் மோடி கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் வைத்திருக்க அரசுக்கு எவ்வித தேவையும் இல்லை

anurapriyadarsanayapa.jpgஇடம் பெயர்ந்த மக்களை முகாம்களில் தொடர்ந்து வைத்திருக்க அரசாங்கத்துக்கு எவ்வித தேவையும் இல்லை என்றும் அவர்களின் தேவைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருகிறது என்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அகதிகளின் வாக்குகளை சுறையாடி அரசாங்கம் தேர்தலை வெல்ல முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் வெளிவந்திருந்த செய்தியைச் சட்டிக்காட்டியே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் பலர் பல கருத்துக்களை கூறி வருகின்ற போதிலும் அவர்களால் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்க முடியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் பலதரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அண்மையில்கூட முகாம்களில் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதனை சீராக செய்து முடித்த பின்னரே அவர்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதுவரைக்கும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது என அமைச்சர் மேலும் கூறினார்.

விக்டோரியா அணியில் முரளி

murali.jpgஅவுஸ் திரேலிய முதல்தர இருபது20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விக்டோரியா அணியில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன்படி முரளி 2009-10 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் இருபது20 தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடவுள்ளார். ஏற்கனவே விக்டோரியா அணியில் மேற்கிந்திய சகலதுறை ஆட்டக்காரர் ட்வாயன் பிராவோ ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர, இலங்கை அணியின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் இந்த தொடரில் தெற்கு அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே விக்டேõரியா அணியில் இணைக்கப்பட்டது தனக்கு கிடைத்த கௌரவம் என்று முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டாவை – கடுவளை புறச் சுற்றுவட்டப்பாதை

pr-mahi.jpgநகர்ப்புற போக்குவரத்து அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொழும்பு நகருக்கான இலகு பிரவேச தென்பகுதி சுற்றுவட்டப்பாதை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி கொட்டாவையில் இருந்து கடுவளை வரையிலான சுற்றுவட்டப்பாதை அமைப்புக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தார்.

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி இதற்கு நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்துக்கு 2498 கோடியே 26 இலட்சத்து 1824 ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கெழும்புக்கு 10 முதல் 15 கிலோ மீட்டர் வெளிப்புறமாகச்; செல்லும் இச்சுற்றுவட்டப்பாதையின் முழு நீளம் 29.10 கிலோ மீட்டர் ஆகும். கடுவளைக்கும் கொட்டாவைக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள இதன் முதல் கட்டத்தின் நீளம் 11 கிலோ மீட்டராகும். இதன் நிர்மானப்பணிகள் சீன ஹாபர் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்பட்டுள்ளது.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது வீடமைப்புத் திட்டம்

home.jpgஅம்பாரை கரையோர மாவட்டத்தில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசப் பிரிவுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான விசேட வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசத்தைக் கட்டி எழுப்பும் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இரண்டாம் கட்டத்துக்கு நிதியுதவி வழங்க கொரியாவின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்கா இதற்கு 6.653 மில்லியன் டொலரை வழங்குகிறது.

இரண்டாம் கட்ட செயற்பாட்டுக்கு 63,45,604 டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பீ. பி. ஜயசுந்தரவின் மனுவை விசாரிக்க ஏழு பேர் கொண்ட நீதியரசர் குழுமம் – செப். 24 இல் விசாரணை

00000court.jpgதிறை சேரியின் முன்னாள் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை இல்லாமல் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்காக ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுமம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான நீதியரசர்கள் குழுவினர் நேற்று பீ. பி. ஜயசுந்தரவின் மனு தொடர்பாக ஆராய்ந்தனர். இந்த மனு தொடர்பாக ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமம் நியமிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இந்த வழக்கின் பிரதிவாதியான வாசுதேவ நாணயக்கார சார்பில் ஆஜரான எம். ஏ. சுமந்திரன், ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தின் நியமனத்தை எதிர்த்து வாதிட்டதுடன் 05 பேர் கொண்ட குழுமத்தை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பீ. பி. ஜயசுந்தரவின் மனு தொடர்பாக ஆராய்வதற்காக ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தினை நியமித்திருந்தார்.

அவர் ஓய்வுபெற்றதையடுத்து வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட புதிய பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான குழுவினர், ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்திற்கு மேலதிகமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சிராணி திலக்கவர்தன மற்றும் பி. ஏ. இரத்நாயக்க ஆகியோரையும் இக்குழுமத்தில் நியமித்துள்ளனர்.

‘இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை’- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

1111srilanka_army.jpgஇலங்கை படையினர் என்று கூறப்படுபவர்களால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற வீடியோ காட்சிகள், இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம் என்பதை கோடி காட்டுவதாக, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியிருக்கிறது.

கடந்த பல வருடங்களாக தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மீண்டும் மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட ”சானல் 4” நிறுவனத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்ப்போவதாக கூறியுள்ளது.

இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரிய தர்சன யாப்பா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழ். தென்மராட்சியில் ஏர்பூட்டு விழா – விவசாயிகளுடன் பசில் ராஜபக்ஷ பங்கேற்பு

யாழ். தென்மராட்சியில் தனங்கிளப்பு, மறவன்புலவு கிராமசேவகர் பிரிவுகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் செய்கை பண்ணப்படாமல் தரிசு நிலங்களாக இருந்த 1124 ஏக்கர் வயற்காணிகளில் செய்கை பண்ணப்படும் ஏர்பூட்டு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் ஒழுங்கமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ எம். பி. விவசாயிகளுடன் இணைந்து ஏர்பூட்டு விழாவில் கலந்து கொண்டார்.

மறவன் புலவு கிராம சேவகர் பிரிவிலிருந்து 560 விவசாயிகளும், தனங்கிளப்பு கிராமசேவகர் பிரிவிலிருந்து 540 விவசாயிகளும் கலந்துகொண்டனர். நேற்றைய ஏர்பூட்டு விழாவுக்காக 60 உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

1124 ஏக்கர் நிலத்தையும் உழுவதற்காக இவை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் உழுவதற்காக தலா 4000 ரூபா வீதம் வழங்கப்பட்டதுடன் தேவையான விதை நெல் மற்றும் உரம் இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பசுமை புரட்சி (வகா சங்கிராமய) வேலைத்திட்டத்திற்கமைவாக வடக்கில் தரிசு நிலங்களாகக் கிடக்கும் விவசாய நிலங்கள் யாவற்ற¨யும் கண்டறிந்து விளை நிலங்களாக மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு அங்கமாகவே தென்மராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி விவசாயிகள் மழையை நம்பி அடுத்த பெரும் போகத்திற்கான ஆரம்ப வேலைகளை நேற்று ஆரம்பித்தனர். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறியின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவைத் தொடர்ந்து யாழ். கச்சேரியில் நடைபெற்ற வடக்கின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திலும் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

மன்னார் வளைகுடாவில் அரிதாகும் பல்லி மீன்கள்

fish-2222.jpgமீனவர் வலைகளிலிருந்து தப்பிச் செல்லும் உடல் அமைப்பு கொண்ட பல்லி மீன்கள் மன்னார் வளைகுடா பகுதியில் அரிதாகக் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்களில் பல்லி மீனும் ஒன்று.

பல்லியைப் போன்று உடல் அமைப்பு கொண்ட இவை, மற்ற மீன்களைப் போல் உடலமைப்பை ஒத்திருந்தாலும், செயலில் வித்தியாசமானவை. இந்த மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை. நெருங்கிவரும் ஆபத்தை உணரும் தன்மை இதற்கு உண்டு. எனவே வலைகளில் அகப்படாது இது தப்பித்துக் கொள்ளும். கடலின் ஆழ் பகுதியில் காணப்படும் பல்லி மீன்களை, மன்னார் வளைகுடா பகுதியில் காண்பது தற்போது அரிதாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

எனினும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் வேளை, அவ்வப்போது இவை பிடிபடுகின்றன. வெளிநாடுகளில் அதிகமாகக் காணப்படும் இவ்வகை மீன்கள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்பவை. இந்த மீனைத் தேடிக் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்குப் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சும்.

மீன்களை உண்டு வாழும் சில கடல் வாழ் உயிரினங்களே, இவற்றின் அழிவுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வகை மீன்களைக் காக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதனால பெரிய அளவில் பயன் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.