மீனவர் வலைகளிலிருந்து தப்பிச் செல்லும் உடல் அமைப்பு கொண்ட பல்லி மீன்கள் மன்னார் வளைகுடா பகுதியில் அரிதாகக் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்களில் பல்லி மீனும் ஒன்று.
பல்லியைப் போன்று உடல் அமைப்பு கொண்ட இவை, மற்ற மீன்களைப் போல் உடலமைப்பை ஒத்திருந்தாலும், செயலில் வித்தியாசமானவை. இந்த மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை. நெருங்கிவரும் ஆபத்தை உணரும் தன்மை இதற்கு உண்டு. எனவே வலைகளில் அகப்படாது இது தப்பித்துக் கொள்ளும். கடலின் ஆழ் பகுதியில் காணப்படும் பல்லி மீன்களை, மன்னார் வளைகுடா பகுதியில் காண்பது தற்போது அரிதாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.
எனினும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் வேளை, அவ்வப்போது இவை பிடிபடுகின்றன. வெளிநாடுகளில் அதிகமாகக் காணப்படும் இவ்வகை மீன்கள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்பவை. இந்த மீனைத் தேடிக் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்குப் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சும்.
மீன்களை உண்டு வாழும் சில கடல் வாழ் உயிரினங்களே, இவற்றின் அழிவுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வகை மீன்களைக் காக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதனால பெரிய அளவில் பயன் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.