திறை சேரியின் முன்னாள் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை இல்லாமல் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்காக ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுமம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான நீதியரசர்கள் குழுவினர் நேற்று பீ. பி. ஜயசுந்தரவின் மனு தொடர்பாக ஆராய்ந்தனர். இந்த மனு தொடர்பாக ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமம் நியமிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
இந்த வழக்கின் பிரதிவாதியான வாசுதேவ நாணயக்கார சார்பில் ஆஜரான எம். ஏ. சுமந்திரன், ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தின் நியமனத்தை எதிர்த்து வாதிட்டதுடன் 05 பேர் கொண்ட குழுமத்தை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பீ. பி. ஜயசுந்தரவின் மனு தொடர்பாக ஆராய்வதற்காக ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தினை நியமித்திருந்தார்.
அவர் ஓய்வுபெற்றதையடுத்து வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட புதிய பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான குழுவினர், ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்திற்கு மேலதிகமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சிராணி திலக்கவர்தன மற்றும் பி. ஏ. இரத்நாயக்க ஆகியோரையும் இக்குழுமத்தில் நியமித்துள்ளனர்.