2009

2009

ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி தென் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல் செயலகம் இன்று அறிவிப்பு

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது.  இந்தத் தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால எல்லை இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினமும் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இத்தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ம.வி.முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய பிரதான கட்சிகள் தென் மாகாணத்திலுள்ள காலி, மாத்தறை மற்றும் ஹம்பந்தோட்டை ஆகிய 3 மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றன. இது தவிர அங்கீகரிக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பனவும் இத்தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தென் மாகாண சபைக்கு காலி மாவட்டத்திலிருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்திலிருந்து 18 பேரும் ஹம்பந்தோட்டை மாவட்டத்திலிருந்து 12 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மற்றுமொரு பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் உட்பட மூவர் சுட்டுக்கொலை

nimal_madiwaka.jpgமற்றுமொரு முக்கிய பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதவக்க தெரிவித்துள்ளார். பாஜி என்றழைக்கப்படும் நபரும் அவரது உதவியாளர்கள் இருவருமே  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தை பிரதேசத்தில் இந்த  பாதாள உலகக் கோஷ்டியினர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து விசேட அதிரடிப் பொலிஸார் தேடுதல் நடத்திய போது இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் இம்மூவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சபை தேர்தல் ஐ.ம.சு.மு., ஐ.தே.க. வேட்பு மனுத் தாக்கல்

election_fingercolur.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும்,  ஐக்கிய தேசியக் கட்சியும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மூன்று மாவட்டங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன. மக்கள் விடுதலை முன்னணி ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை நேற்று சமர்ப்பித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கப்படும் இறுதி தினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவிருக்கின்றது. அதேநேரம்,  இம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவுற்றது.

இம்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வரையும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆறு அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேச்சை குழுக்களும்,  மாத்தறை மாவட்டத்தில் பத்து அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேச்சைக் குழுக்களும், காலி மாவட்டத்தில் எட்டு அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

அதேவேளை,  இம்மாகாண சபைத் தேர்தலுக்காக இன்றும் சில கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லியாம் பொக்ஸ் இலங்கை வருகை

liyam_pox-111.jpgபிரித் தானிய கன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நிழல் வெளிவிவகார அமைச்சருமான லியாம் பொக்ஸ் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அமைச்சர் மிலிந்த மொரகொட பிரித்தானியாவுக்கு சென்று திரும்பியதன் பின்னர், இவர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் உண்மைக் காரணம் எவையும் வெளியாகவில்லை

வணங்காமண் நிவாரணம் : வெளியகற்ற மீண்டும் புதிய தடங்கல்

containers.jpgகொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணம் காலாவதியாகியோ அல்லது பழுதடைந்தோ கடலில் கொட்டப்படும் அபாயம் தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கையில்,

 கொலராடோ கப்பலில் எடுத்து வரப்பட்ட நிவாரணப் பொருட்களை அங்கிருந்து வெளியகற்றுவதற்காக சகலவித அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், துறைமுக அதிகார சபைக்கு 6.5 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் நிவாரண பொருட்களை விநியோகிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.

இத்தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு முன்வரும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர், இன்றைய தினத்திற்குள் அதற்கான இணக்கம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்நடவடிக்கை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் தகவல் தருகையில்,

நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் சுமார் ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன. எனவே இந்த பொருட்களில் சில காலாவதியாகி இருக்கக்கூடும் அல்லது பழுதடைந்திருக்கக்கூடும் என கருதப்படுகின்றபோதிலும் அதனை உறுதிப்படுத்த எம்மால் முடியவில்லை.

இவற்றை வவுனியாவுக்கு கொண்டு சென்று விநியோகிக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதிலும் புதிய புதிய தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்போது நிவாரணப் பொருட்களை கொண்டு சென்று விநியோகிப்பதற்கான சகலவிதமான அங்கீகாரங்களையும் நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். ஆயினும் கொலராடோ கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றமைக்கான தாமதக் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளது.

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

ecblogo.jpgஇலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவிக்கிறது.

இன்று 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மறு அறிவித்தல் வரை  விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் கே. ரணவீர அறிவித்துள்ளார். நாட்டினது அத்தியாவசிய சேவையாகக் கருதப்படும் மின்சார விநியோக சேவையை சீராகவும் தொடர்ச்சியாகவும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

எவ்விதத் தடையும் இன்றி ஊழியர்களுக்கு சேவையை மேற்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார். 

கிராமோதய நிதிச்சட்டத்தில் திருத்தம்!

janakabandarathennakoon.jpgகிராமோதய நிதிச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் வகையில் ஜனதிரிய நிதியத்தை ஏயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

இதன்மூலம் கிராமோதய சபைகளின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டவரைவை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு விடவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டு.- கொழும்பு கடுகதி ரயில் சேவையில் மாற்றம்

train0000.jpgமட்டக் களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான கடுகதி ரயில் சேவையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாற்றம் கொண்டு வரப்படவிருப்பதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகளின் நலன் கருதியே இம்மாற்றத்தைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் தற்போது காலை சேவையில் ஈடுபட்டுள்ள ‘உதயதேவி’ கடுகதி ரயில் சேவை இரவு ரயில் சேவையாக மாற்றப்படும்.

ஆனால் உறங்கல் வசதிகள் இதில் இருக்க மாட்டா. அப்பெட்டிகளுக்குப் பதிலாக இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கை ஆசன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

தற்போது இரவு நேர சேவையில் ஈடுபட்டுள்ள ரயில், காலை நேர சேவையாக, இதற்குப் பதிலாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள இம் மாற்றம் காரணமாக மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான ஆசன முன்பதிவுகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மின்சார சபை வேலை நிறுத்தத்திற்கு பொறியியலாளர், முக்கிய சங்கங்கள் எதிர்ப்பு

ecblogo.jpgஅரசாங் கம் ஒரு இலக்கை நோக்கி உத்வேகத்துடன் பயணிக்கும் இத்தருணத்தில் வேலை நிறுத்தத்தில் குதித்து அரசை அசெளகரியத்துக்கு உள்ளாக்க வேண்டாமென அமைச்சர் ஜோன் செனவிரத்ன மின்சார சபை ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள் இன்று சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளன.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; பொது மக்களின் நலனையும், மின்சார சபையின் கீர்த்தியையும் மதித்து வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு சகல ஊழியர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-

மின்சார சபைத் தொழிற்சங்கங்கள் இன்று மேற்கொள்ளத் தீர்மானித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதில்லையெனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் மின்சார சபை பொறியியலாளர் உட்பட பல முக்கிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்தொழிற்சங்கங்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது கடமைக்குச் சமுகமளிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 2009 ஆண்டுக்கான சம்பள உயர்வைப் பெற்றுத் தருமாறு கோரி மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று மேற்கொள்கின்றன. எனினும் பத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இதில் பங்கேற்கமாட்டார்களென மின் வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

கடந்த 30 வருட காலம் தொடர்ந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாத்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதில்லையென ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை சகல அரச ஊழியர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனத் தீர்மானித்துள்ள தொழிற்சங்கங்களுக்கு அரசாங்கம் தமது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‘ஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ணம்’ செப்டம்பா; 22 இல் தென்னாபிரிக்காவில் ஆரம்பம்

eng0000.jpgஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் சம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடர் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்தது.

எனினும் பாகிஸ்தானில் அப்போது ஏற்பட்ட உள்நாட்டு மோதல்கள் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்திற்கொண்டு இத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டதோடு அதனை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சீ.சீ.) தீர்மானித்தது. இதன்படி 14 நாட்களுக்குத் தொடராக நடைபெறவுள்ள இச்சுற்றுத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்துடன் முடிவடையவுள்ளது.

மினி உலகக் கிண்ணம் எனக் கருதப்படும் இத்தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளதோடு அவை ஏ மற்றும் பி  என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ குழுவில் அவுஸ்திரேலியா,  இந்தியா,  பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் பி குழுவில் தென்னாபிரிக்கா,  இலங்கை, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் அடங்குகின்றன. அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் பங்குபற்றவுள்ள 15 பேரடங்கிய இலங்கை அணி வீரர்களின் விபரம் வருமாறு:- குமார் சங்கக்கார (தலைவர்), முத்தையா முரளிதரன் (உப தலைவர்), சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான்,  சாமர கபுகெதர,  எஞ்சலோ மெத்திவ்ஸ்,  திலிண கண்டம்பி,  நுவன் குலசேகர,  திலிண துஷார,  அஜந்த மெண்டிஸ், லசித் மாலிங்க, திலான் சமரவீ, உபுல் தரங்க மற்றும் தம்மிக பிரசாத்.