ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மூன்று மாவட்டங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன. மக்கள் விடுதலை முன்னணி ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை நேற்று சமர்ப்பித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கப்படும் இறுதி தினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவிருக்கின்றது. அதேநேரம், இம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவுற்றது.
இம்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வரையும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆறு அரசியல் கட்சிகளும், இரண்டு சுயேச்சை குழுக்களும், மாத்தறை மாவட்டத்தில் பத்து அரசியல் கட்சிகளும், இரண்டு சுயேச்சைக் குழுக்களும், காலி மாவட்டத்தில் எட்டு அரசியல் கட்சிகளும், இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
அதேவேளை, இம்மாகாண சபைத் தேர்தலுக்காக இன்றும் சில கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.