2009

2009

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் இஸ்ரேல் இராணுவத்தால் முற்றுகை

இஸ்ரேலியப் படைகளுக்கும், பலஸ்தீனர்களுக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில் நான்கு பலஸ்தீனர்கள் காயமடைந்ததுடன் இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களும் காயத்துக்குள்ளாகினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு ஜெரூஸத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலடியில் இச் சம்பவம் இடம் பெற்றது.

முஸ்லிம்களின் புனிதத் தலங்களுள் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேலியர்களைத் தடுத்து நிறுத்த பலஸ்தீனர்கள் முயன்றபோதே இச் சம்பவம் ஏற்பட்டது.

இக் கலகத்தை அடக்க மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கி மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இறப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம் கைக்குண்டுகளையும் வீசியது.

இஸ்ரேல் குடியேற்றங்களை நிறுவும் பொருட்டு கிழக்கு ஜெரூஸலத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டட வேலைகளைத் தடுத்து நிறுத்தவே பலஸ்தீனர்கள் திரண்டு வந்தனர். நான்கு பலஸ்தீனர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். நிலைமைகள் சீரடையும் வரை இப்பகுதியை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

பதில் பிரதம நீதியரசராக கலாநிதி சிராணி பண்டாரநாயக்க நியமனம் – ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதிபதியான கலாநிதி சிராணி பண்டாரநாயக்க பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தையடுத்து நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலளார் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டு. கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவையின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பிரதம புகையிரத நிலைய அதிபர் அ. சிவநேசராசா தெரிவித்தார்.

மீனகாயா கடுகதி ரயில் மாலை 7.15 க்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். இந்த ரயில் இரவு 8.15 க்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 க்கு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும். உதயதேவி ரயில் காலை 8.45 க்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.40 க்கு மட்டக்களப்பை சென்றடையும். இப்புகையிரதம் காலை 7.45 க்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு மாலை 4.10 க்கு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.  

22 நாடுகளைச் சேர்ந்த 17,000 பேரை நாடு கடத்த குவைத் முடிவு

குவைத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 22 நாடுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேரை அந்த நாட்டின் உள் துறை அமைச்சு நாடு கடத்த திட்டமிட்டு ள்ளதாக குவைத் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளவர்களுக்கான விமான சீட்டுக்களை நாடு கடத்தல் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய மத்திய முகவர் சமூகம் கொள்வனவு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் உள்துறை அமைச்சின் அறிக்கையின்படி சுமார் ஆயிரம் இலங்கையர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், சுமார் 4000 பங்களாதேசியர்களும் 3500 இந்தியர்களும் நாடு கடத்தப்படவிருப்பதுடன், ஆப்கானிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் சட்டவிரோத குடியேற்றவாசிகளும் நாடு கடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்னொளி பாய்ச்சி மீன்பிடிப்புக்கு எதிர்ப்பு மக்கொனை, பயாகலையில் ஆர்ப்பாட்டம்

பேருவளை, மக்கொனை, பயாகலைப் பகுதிகளைச் சேர்ந்த சிறிய அளவில் கடற்றொழில் துறையில் ஈடுபடும் மீனவர்கள் நேற்று (28) காலை மக்கொனையில் காலி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்னொளி பாய்ச்சி கடலில் மீன்பிடிப் பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காலி வீதியில் மக்கொன நகருக்கு சமீபமாக படகுகளை வீதிக்கு கொண்டு வந்து மீனவர்கள் சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி வீதியில் 20 – 30 இடைப்பட்ட படகுகளை வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் போது படகு ஒன்றும் தீவைக்கப்பட்டுள்ளது.

இதனால் காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பெருமளவிலான பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கலகத் தடுப்புப் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். ஒரு மணி நேரமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பின்னர் அமைதியாக முடிவுற்றது  

ஈரான் ஜனாதிபதியூடன் பிரதமர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 64ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அங்கு ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நஜாத்தைச் சந்தித்துக் கலந்துரயாடியுள்ளார். இரு தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பு கடந்த 25ஆம் திகதி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்ற ஐ.நா. சபையின் 64ஆவது அமர்வில் இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட பிரதமர் நேற்று முன்தினம் அங்கு உரையாற்றினார். இதன்போது பிரதமர் சிங்கள மொழியிலும் உரையாற்றியமை விசேட அம்சமாகும

கனகராயன்குளத்தில் புதிய பொலிஸ் நிலையம் திறப்பு!

கனகராயன்குளம் மற்றும் மாங்குளத்தில் பொலிஸ் திணைக்களத்தின் புதிய கட்டடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டன. இதன் ஓர் அங்கமாக கனகராயன்குளத்தில் புதிய பொலிஸ் நிலையத்தை பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண ஞாயிறன்று  திறந்து வைத்தார்.
 
இதேவேளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் ஒன்றையும்  அவர் வைபவரீதியாக மாங்குளத்தில் திறந்து வைத்தார்.

வான்புலிகளின் ஆளில்லா வேவு விமானப் பாகங்கள் மீட்பு: பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள்  பாவிக்கப்பட்டதாக கருதப்படும் ஆளில்லா வேவு விமானம் ஒன்றின் உதிரிப் பாகங்களை மீட்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
 
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசம், வெள்ளாமுள்ளிவாய்க்கால், ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27.09.2009)  படையினரால் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பாவிக்கப்பட்டதாக கருதப்படும் ஆளில்லா வேவு விமானம் ஒன்றின்  உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆளில்லா வேவு விமானத்தின் இரண்டு உடைந்த சிறகுகள், விமானத்திற்கான ஒளிப்பதிவுக் கருவி, விமான இயந்திரம் ஆகியவையும், அவற்றுக்கான மூன்று சக்கரங்களும், பயிற்சி விமானம் ஒன்றின் இயந்திரமுமே கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது இலங்கைப் படையினரால் மீடகப்பட்டுள்ள ஆளில்லா வேவு விமானத்தின் பாகங்கள், கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான வேவு விமானத்தின் பாகங்கள் எனவும், இது இலங்கை அரசினால் திட்டமிட்டு சர்வதேச நாடுகளுக்கு பரப்பப்படும் பிரசாரத்தின் ஓர் அங்கம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

இராணுவத்தின் வெள்ளி விழா நிகழ்வூகள் ஒக்டோபர் 02ஆம் திகதி ஆரம்பம் – இராணுவக் கண்காட்சிக்கும் ஏற்பாடு

இலங்கை இராணுவத்தின் 60 வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெள்ளி விழா நிகழ்வுகள் அடுத்த மாதம் 02ஆம் திகதி முதல் வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளன.

1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் வெள்ளி விழா நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக மாபெரும் இராணுவக் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின்போது இராணுவத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றிய தகவல்கள்,  புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உட்பட போர்த் தளபாடங்கள் மற்றும் இராணுவத்திடமுள்ள யுத்த உபகரணங்கள் போன்றன காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

இக்கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07ஆம் திகதி முடிவடையவுள்ளது. இக்கண்காட்சிக்கு 50 ரூபா கட்டணமாக அறிவிடப்படவுள்ளதோடு கண்காட்சி நடைபெறும் தினங்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிட முடியும்.
ஒக்டோபர் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள வெள்ளி விழா நிகழ்வுகள் அடுத்த மாதம் 02ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சமயக் கிரியைகளையடுத்து ஆரம்பமாகவுள்ளன.

பௌத்த சமயக் கிரியைகள் ஒக்டோபர் 02ஆம் திகதி அநுராதபுரம்,  ஜய ஸ்ரீ மகா போதி விகாரையிலும், இஸ்லாமிய சமயக் கிரியைகள் ஒக்டோபர் 05ஆம் திகதி கொழும்பு, தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளியிலும்,  இந்துசமயக் கிரியைகள் ஒக்டோபர் 06ஆம் திகதி மருதானை,  ஸ்ரீ பாலா செல்வநாயகம் மூர்த்தி கோயிலிலும், கிறிஸ்தவ சமயக் கிரியைகள் ஒக்டோபர் 07ஆம் திகதி கொழும்பு,  கத்தோலிக்க தேவாலயத்திலும் நடைபெறவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மீனவர் தாக்குதல் : விஜய்காந்த் இன்று டில்லியில் உண்ணாவிரதம்

இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரம், கடந்த இரு வாரங்களாக தலைநகர் டில்லியை சூடேற்றி வருகிறது. இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மீண்டும் அவரவர் இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரைச் சந்தித்து முறையிட்டனர்.

நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்போது வலியுறுத்தியும், இந்த கோரிக்கை குறித்து இதுவரை, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

மேலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், இந்தக் குழு வலியுறுத்தியது. ஆனால், இந்தச் சந்திப்புக்கு பிறகு தான், தமிழக மீனவர்கள் மீது மேலும் தாக்குதல்கள் அதிகமாக தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மீனவர்கள் பிரச்சினையை முன்னிறுத்தி, விஜய்காந்த்தின் உண்ணாவிரதம் இன்று டில்லியில் நடைபெறுகிறது. டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், காலை 9.00 மணி முதல் மாலை வரை நடக்கும் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் பங்கேற்க, விஜய்காந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் டில்லி வந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை மற்றவர்கள் எல்லாம் கையில் எடுத்த நிலையில், சற்று மாற்றமாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை, விஜய்காந்த் கையில் எடுத்து டில்லியில் உண்ணாவிரதம் இருக்கவுள்ளார்.

குஜராத் அருகே கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்குப் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்குதல் ஏதும் நடந்துவிடாமல் இந்திய கடற்படை பாதுகாப்பு தருகிறது.

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.அப்போது மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை இந்திய கடற்படை தருவதில்லை.

இந்திய கடற்படை தமிழக மீனவர்களுக்கு ஏன் உரிய பாதுகாப்பைத் தருவதில்லை என்ற கேள்வியை, இதுவரை எந்தக் கட்சியும் எழுப்பாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.