தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பாவிக்கப்பட்டதாக கருதப்படும் ஆளில்லா வேவு விமானம் ஒன்றின் உதிரிப் பாகங்களை மீட்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசம், வெள்ளாமுள்ளிவாய்க்கால், ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27.09.2009) படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பாவிக்கப்பட்டதாக கருதப்படும் ஆளில்லா வேவு விமானம் ஒன்றின் உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆளில்லா வேவு விமானத்தின் இரண்டு உடைந்த சிறகுகள், விமானத்திற்கான ஒளிப்பதிவுக் கருவி, விமான இயந்திரம் ஆகியவையும், அவற்றுக்கான மூன்று சக்கரங்களும், பயிற்சி விமானம் ஒன்றின் இயந்திரமுமே கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போது இலங்கைப் படையினரால் மீடகப்பட்டுள்ள ஆளில்லா வேவு விமானத்தின் பாகங்கள், கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான வேவு விமானத்தின் பாகங்கள் எனவும், இது இலங்கை அரசினால் திட்டமிட்டு சர்வதேச நாடுகளுக்கு பரப்பப்படும் பிரசாரத்தின் ஓர் அங்கம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.