09

09

சவூதியில் நிர்க்கதியான பணிப்பெண்களை உடன் அழைத்துவர ஏற்பாடு

sri-lankan-maids.jpgசவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்துவர விசேட விமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளர் எல். கே. ருகுணுகே தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக இன்று 44 பணிப்பெண்களும் நாளை மறுதினம் (11) 100 பணிப்பெண்களும் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை அழைத்து வர ஏற்பாடாகியுள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் இலங்கைப் பணிப்பெண்களை அழைத்து வருவதற்காக விசேடமாக மிஹின் லங்கா விமானம் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையைச் சேர்ந்த 250 பணிப்பெண்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமது வேலையைக் கை விட்டுவிட்டு சவூதி அரசாங்கத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் சவூதியில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளையும் முன் னெடுக்கவில்லையெனவும் பல ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. உண்மையில், அவர்கள் அங்கு சிறைவைக்கப்படவில்லை. சகல வசதிகளுடனுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். விமான இருக்கை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கால தாமதமே அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பணியகத்தின் முயற்சியாலும் அரசாங்கத்தின் ஏற்பாட்டினாலும் மிஹின் லங்கா விமானம் மூலம் ஒரே தடவையில் நாளை மறுதினம் 100 பேர் அழைத்து வரப்படவிருப்பதாகவும் எல். கே. ருகுணுகே கூறினார்.

இன்று காலை 2.30 மணிக்கு 44 பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய ஏற்பாடாகியிருப்பதாகவும் அவர் நேற்றுத் தெரிவித்தார்.

ஒஸ்லோவில் இரு தமிழ் குழுக்களுக்கிடையே மோதல்

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இரு தமிழ் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இந்துமத நிகழ்வென்றின் போது ஏற்பட்ட தகராறின் போது கைது செய்யப்பட்ட இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. உ/த பரீட்சை இன்று முதல் ஆரம்பம் – நாடுபூராவும் 1931 பரீட்சை நிலையங்கள்

exam.jpgக.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. செப்டம்பர் 3ம் திகதி வரை பரீட்சை நடைபெறும். நாடளாவிய ரீதியில் 1931 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 69 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களுள் 64 ஆயிரம் பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்று ஆணையாளர் கூறினார்.

இதேவேளை, மோதல்களின் போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் 400 பேரும் இன்று ஆரம்பமாகவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாகவும் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வழமை போலவே பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மோசமான நிலைமையில் இலங்கையர் உட்பட 76 குடியேற்றவாசிகள் மெக்ஸிக்கோவில் மீட்பு

மெக்ஸிக்கோவில் பெட்டி இணைக்கப்பட்ட வாகனமொன்றில் உடலில் நீர்வரட்சியேற்பட்ட மோசமான நிலைமையில் இலங்கையர்கள் உட்பட 76 குடியேற்றவாசிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.மெக்ஸிக்கோவின் தென் கிழக்கு மாநிலமான சியாபாஸில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பெட்டி இணைக்கப்பட்ட வாகனத்திலேயே இலங்கை மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் 76 பேர் மீட்கப்பட்டனர்.

இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லையென உத்தியோகபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி லத்தீன் அமெரிக்கா ஹெல்ட் ரிபியூன் தெரிவித்தது. இந்த வாகனம் நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

28 அடி நீளமும் 10 அடி அகலமுள்ள இந்த வாகனத்திற்குள் இருந்த 76 குடியேற்றவாசிகளின் நிலைமை தொடர்பாக இனந்தெரியாத செய்தியொன்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது. உடலில் நீர் வரட்சியுடன் அவர்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியாக தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென நிரூபிக்கும் அத்தாட்சி எதனையும் அந்தக் குடியேற்றவாசிகள் கொண்டிருக்கவில்லை. குவாட்டமாலா, ஸிசல்வடோர்,ஹொன்ரோஸ், இலங்கை ஆகிய நாடுகளைத் தாங்கள் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஒவ்வொரு நாடுகளையும் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, எத்தனை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.