August

August

வட மாகாணத்திலிருந்து 4763 முறைப்பாடுகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த 2009 மே மாதத்திலிருந்து இதுவரை வட மாகாணத்திலிருந்து 4,763 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகங்களிலேயே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் காணாமல்போனமை பற்றியதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருத்தல், கைதுகள் தொடர்பாகவும் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை கண்டறிய விசேட நடவடிக்கை

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளையும் கண்டறியும் நடவடிக்கையை அதிகார சபை இம்மாதம் முதல் ஆரம்பித்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவங்சவின் அறிவுறுத்தலுக்கமைய நடைமுறைப்படுத்த ப்படவுள்ள இத்திட்டத்தின் நோக்கம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளையும் உரிய முறையில் இனங்கண்டு கொள்வதும், இனங்காணப்பட்ட காணிகளை மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒழுங்கான முறையில் வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுமாகும்.

இதன்போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ள, ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய, அத்துமீறிய குடியிருப்புக்களைக் கொண்டுள்ள மற்றும் ஏற்கனவே முறையாக விபரங்களை ஒன்று சேர்த்து வைக்காத காணிகளின் பட்டியலொன்றை மிகவும் குறுகிய காலத்திற்குள் சரியான முறையில் தயாரித்துக்கொள்ள காணி நடவடிக்கைக் குழு ஒழுங்குகளை மேற்கொள்ளும்

காணிகளின் சகல விபரங்களும் இம் மாத முடிவுக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இந் நடவடிக்கையானது கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படுவதுடன், அம் மாவட்டங்களின் குறைந்தது 500 ஏக்கர் அளவு காணி விபரங்கள் திரட்டப்பட்டு அக் காணியில் வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட உள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

பொன்சேகா மீதான தீர்ப்பு சபையில் பெரும் அமளிதுமளி

glp.jpgசரத் பொன்சேகாவுக்கு முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பும் எதிரணியும் கடுமையாகத் தர்க்கித்ததால் பெரும் அமளி துமளி ஏற்பட்டதையடுத்து சபை அலுவல்கள் 5 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டன.

பாராளுமன்றம் நேற்றுக்காலை செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்று அதன்பின்னர் குடியியல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது. நீதியமைச்சர் அதாவுடசெனவிரட்ன விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்தினார்.

ரணில் விக்கிரமசிங்க தனதுரையில், சரத்பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பாக தனது கருத்துகளையும விளக்கங்களையும் கண்டனங்களையும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி முடித்தவுடன் ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி.அநுரகுமார திசாநாயக்க ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார். இதற்கு அப்போது சபைக்குத் தலைமைதாங்கிய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அனுமதி வழங்கினார். இதையடுத்து அநுரகுமார திசாநாயக்க தனது பிரச்சினையை முன்வைத்தபோது அது ஒழுங்குப் பிரச்சினையல்லவெனக் கூறிய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அமைச்சர் பீரிஸை உரையாற்ற அழைத்தார். ஆனால் பீரிஸைப் பேச விடாது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர்.

அப்போது எழுந்த அரச தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தன சபாநாயகரின் தீர்ப்பு சரியோ பிழையோ அதனை விமர்சனத்துக்குள்ளாக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து பீரிஸ் தனது பேச்சைத் தொடர்ந்தார்.அரசியல் யாப்புக்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான வகையில் இராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிரணியினர் சபையில் விமர்சித்தனர் இராணுவ நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விமர்சிப்பதற்கு தனியான பிரேரணை சபைக்குக் கொண்டுவரப்படுவது அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இராணுவ நீதிமன்றம் மற்றும் அதன் நீதிபதிகள், தொடர்பாக சபையில் எதிரணியினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் யாப்புக்கும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணானது. இராணுவ நீதிமன்ற ஏற்பாடும் எமது அரசியல் யாப்பில் உள்ளதே. இராணுவ, கடற்படை கட்டமைப்புக்களின் சட்ட ஏற்பாடுகள் இன்று, நேற்று உருவாக்கப் பட்டவை அல்ல மாறாக அவை 1948ல் ஏற்படுத்தப்பட்டவை.

நாம் ஆளும் தரப்பில் இருந்தாலும், எதிர்தரப்பில் இருந்தாலும் அரசியல் யாப்புக்கும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் ஏற்ப செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம்.  நீதிபதிகளை விமர்சிக்க முடியாது என்று நான் கூறவில்லை. அதற்கும் ஒழுங்கு உள்ளது அந்த ஒழுங்கு இங்கு மீறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 78வது பிரிவு தனியே நீதிபதிகள் குறித்து பேசவில்லை, மாறாக நீதித்துறையோடு சம்பந்தப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய விரிவான விடயம் நீதிமன்றங்கள், தொழில் மன்றுகள் என்பன இலங்கை சட்டத்திற்குள் உட்பட்டவையே. அதனுள் இராணுவ நீதிமன்றமும் அடங்கும்.

இராணுவ நீதி மன்றத்திற்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற தீர்ப்புக்களை கூட வழங்க அதிகார முள்ளது. அதனால் அரசியல் யாப்புக்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான எதிரணியினரின் உரைகள் பாராளுமன்ற ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்படுவது அவசியம்.

கூட்டமைப்பு எம். பிக்கள் மூவருக்கு மட்டு. நீதிமன்றம் அழைப்பாணை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேந்திரன், எஸ். யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தின் தலைவர் கே. ஜெயராஜா ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் கடந்த புதன் கிழமைகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயகக் குடியரசு அரசுக்கு எதிராக வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பதாகைகளை ஏந்திய வாறு பொலிஸ் அனுமதி பெறாமல் வீதியில் ஊர்வலம் சென்றதாகவும் ஊர்வலத்தைக் கலைப்பதற்கு நீதி மன்ற உத்தரவைப் பெற நேரம் போதவில்லை என்றும் காத்தான்குடி பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

13வது அரசியல் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழ் கட்சிகளின் அரங்கம் அரசிடம் கோரிக்கை!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக அரசியல் அமைப்பின் 13வது திருத்தச்சட்ட மூலத்தை முழுமையாக நிறைவற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு முன்வைக்கவுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நேரடியாக இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக இக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழ் கட்சிகளின் அரங்கம் கடந்த 14ம் திகதி மட்டக்களப்பில் கூடியபோதே இவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐந்தாவது தடவையாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி,  ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த இரா.தரைரத்தினம்,  சிறிரெலோ கட்சியின் பி.உதயராசா மற்றும் எஸ்.சந்திரகாசன் ஆகியோர் கையெழுத்திட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் பல பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகள். தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விசாரணைகளுக்குட்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் பிரதேசங்களில் இராணுவக் குடியேற்றங்கள் தடுத்து நிறத்தப்பட்டு. அhத்தமுள்ள மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுதல். சிவில் நிர்வாகத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்தல், போரின் போது ஏற்பட்ட அழிவுகளுக்கு நட்டஈடு வழங்குதல்,  வடக்கு கிழக்கின் இனப்பரம்பலில் மாற்றத்தை எற்படுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாகவும், இவை தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கோரிக்கைள் தொடர்பான திட்டவரைவு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பை இணைத்துக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதுடன், அடுத்து நடைபெறும் சந்திப்புகளில் முஸ்லிம், மலையக கட்சிகளை இணைப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க. தமிழ் கட்சகிளின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு எதவும் விடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் இதில் கலந்து கொள்வது குறித்து கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பங்கு கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழ்த்தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.  இரா.சம்பந்தனின் கொழும்பு இல்ல முகவரிக்கு தபால் மூலம் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டதாகவும். அவர் இந்தியா சென்றிருப்பதால் அவ்வழைப்பிதழ் கிடைக்காமல் போயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பந்தர் நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் தூதுக்குழு கூட்டமைப்பை நேரில் சந்தித்து அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பினை விடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அடுத்த வருடத்திற்குள் வீடமைப்பு நிறைவு பெறும் என அரச அதிபர்

imalda.jpgயாழ்ப் பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் அடுத்த வருடத்திற்குள் முழுமையாக மீள்நிர்மானம் செய்யப்படும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 2010 தொடக்கம் 2011ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் 2171 வீடுகள் மீள்நிர்மானம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 14 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும். முன்னுரிமை அடிப்படையில், மீளக்குடியேறிய சகல குடியிருப்பாளர்களுக்கும் வீடு, சேத மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 3இலட்சத்து 25 ஆயிரம் ரூபா ஐந்து கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டும் மீள்குடியமர்த்தப்படாமலுள்ள வன்னி மக்களின் அவலம்!

Namal_Rajaparksa வவுனியா மனிக்பாம் அகதி முகாம்களிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் தங்களின் சொந்தக் காணிகளில் குடிறேமுடியாத நிலை எற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கிழக்கு எல்லைகளிலுள்ள மயில்வாகனபுரம், குமாரசாமிபரம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக மீள்குடியேற்றப்படாமல் இடைக்கால முகாம்களிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கபட்டுள்ளனர். மேற்படிக் கிராமங்களுக்கு அம்மக்கள் அதிகாரிகளால் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட போதும், அங்குள்ள படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக  தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் அடிக்கடி வன்னிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்சவிற்கும் அறிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தபுரம், இந்துபுரம், பொன்னகர் பகுதிகளிலும் மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாமல் இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

”அம்பாறை தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபான சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும்!” TNA MP பியசேன

jj.jpgஅம்பாறை தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபான சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும் எனக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

”அம்பாறை கரையோரத் தமிழ் பிரதேசங்களில் மட்டும் 15 இற்கும் மேற்பட்ட மதுபான சாலைகள் இருப்பதாகவும், சுனாமியினாலும் வன்முறைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மேலும் நலிவடையச் செய்ய இம் மதுபான சாலைகள் துணை போகின்றன எனவும், இவை மூடப்படவேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டங்களில் தமிழ் சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே மதுபான சாலைகள் அதிகமுள்ளன. தமிழ், சிங்கள தனவந்தர்கள் மட்டுமே இம் மதுபான சாலைகளை நடத்திவருகின்றனர். முஸலிம்கள் இவ்வாறான தொழிலில் ஈடுபடவில்லை. தமிழ் பிரதேசங்களை கருவறுப்பதற்காக அரசியல்வாதிகள் இதற்கான அனுமதியை வழங்கி வருகின்றனர்.

கல்முனையில் நகர மத்தியில் உயர்நீதிமன்றம். மாவட்ட நீதிமன்றம். ஆதார வைத்தியசாலை, உயர் கல்விநிலையம், ஆகியவற்றின் மத்தியில் மதுபான சாலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்துள்ளது. காரைதீவிலும் நாவிதன்வெளி, திருக்கோவில், ஆலையடிவேம்பு, ஆகிய பகுதிகளிலும் மதுபான சாலைகள் உள்ளன.

ஆனால், ஒரு முஸ்லிம் கிராமத்திலும் மதுபான சாலைகள் இல்லை எனபது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அம்பாறை கரையோரப் பகுதிகளில் ஒரு தொழிற்சாலை உள்ளதா? அதற்கு அனுமதி வழங்கப்பட்டதா? என்றால் இல்லை. காரைதீவு கிராமத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க அனுமதி கேட்டு வருடக் கணக்காகின்ற நிலையில் இன்னும் அனுமதி இல்லை. ஆனால் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்மதுபான சாலைகளால் தினமும் சண்டை சச்சரவுகள் இடம்பெறுகின்றன. பாடசாலை மாணவர்கள் கூட மதுப் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடிக்கடி வீதி விபத்துக்களும் எற்படுகின்றன. மதுவினால் பல குடும்பங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.”

இவ்வாறு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிந்த துறைமுகத்தில் படகு கவிழ்ந்து இருவர் பலி; மூவர் மாயம்

அம்பாந்தோட்டை கிரிந்த துறைமுகத் திற்குட்பட்ட கடற்பரப்பில் நேற்று மாலை படகொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்திருப்பதுடன் மூவர் காணாமற் போயிருப்பதாகவும் மூவர் காயமடைந்திருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.

கடற்படை அதிகாரியொருவர் மற்றும் அவரது குடும்பத்தார் கடற்படைக்குச் சொந்தமான டிங்கி படகில் சவாரி செய்கையிலேயே கடல் சீற்றம் காரணமாக படகு அலையில் சிக்கி இவ்விபத்து நேர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சம்பவத்தின்போது படகில் எண்மர் பயணித்துள்ளனர்.

இவர்களுள் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறு பிள்ளையொன்றும் உயிரிழந்துள்ளது. மேலும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூவர் காணாமற் போயுள்ளனர்.

காயமடைந்த மூவருள் ஒருவர் திஸ்ஸ மஹாராம வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். காணாமற்போனவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக விஜித ஹேரத், அஜித் குமார, அர்ஜுன உட்பட அறுவருக்கு அழைப்பாணை

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட 6 பேருக்கு அழைப்பாணை அனுப்புமாறு காலி மாஜிஸ்திரேட் காமர் தென்னக்கோன் உத்தரவு பிறப் பித்தார்.

விஜித ஹேரத், அஜித் குமார, அர்ஜுன ரணதுங்க ஆகிய பாராளுமன்ற உறுப் பினர்களுக்கும் மாகாண சபை அமைச்சர் நளித் ஹேவகே மற்றும் அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் ஆகிய அறுவருக்கே இவ்வாறு அழைப் பாணை அனுப்புமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.