மார்ச் 8ம் திகதி சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராவும் விழிப்புணர்வூட்டும் வகையில் நடைபெற்று வருகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பெண் விடுதலையை பறைசாற்றும் இந்நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஆனால் கடந்த 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டமோ அல்லது மேற்கு நோக்கிய புலம்பெயர்வோ தமிழ் ஆணாதிக்கச் சிந்தனை முறையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை இப்பெண்ணுடைய பதிவு வெளிப்படுத்துகின்றது. சம்பந்தப்பட்ட நபர்களுடைய பெயர் மற்றும் விபரங்கள் நீக்கப்பட்டு உள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம் இன்னமும் தொடர்கின்றது. இப்பெண் இலங்கையில் இருந்த சமயம் ஐரோப்பிய பெண்ணிலைவாதி ஒருவர் இலங்கை சென்ற சமயம் அவரைச் சந்தித்து உதவி நாடியுள்ளார். அப்பெண்ணிலைவாதியுடன் தொடர்புகொண்டு லண்டன் குரல் இதனை உறுதிசெய்துள்ளது. தான் ஏதும் நடவடிக்கைகள் எடுத்தால் அது ஊரில் உள்ள பெண்ணுக்கும் அவரது உறவினர்களுக்கும் கூட ஆபத்தாக அமையும் என்பதால் எதனையும் மேற்கொண்டு செய்யவில்லையென அப்பெண்ணிலைவாதி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.
._._._._._.
”அடிக்கடி சண்டை போடுவார். அசிங்கமான வார்த்தைகளால் பேசி குட்டி அடிப்பார். கழுத்தை நெரித்து சித்திரவதை செய்வார். அவரது சகோதரங்கள் மலடி என்று அடிக்கடி திட்டுவார்கள். சித்திரவதைகளால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.”
._._._._._.
நான் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். எனக்கும் லண்டனில் வசிக்கும் என் மாமாவின் மகனுக்கும் 1994ல் அவரின் வீட்டாரின் அவரின் விருப்பத்தின் பேரில் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவரின் குடும்பத்தாரின் பல தொல்லைகள் இன்னல்களுக்கு மத்தியில் மூன்று வருடங்கள் கழித்து 11/6/1997ல் இந்தியாவில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு மூன்று வருடங்களுக்க முன்னரே வீடு கட்டச் சொன்னார்கள். தாலி கூறை பாஸ்போட் எடுக்கச் சொன்னார்கள். சீதனமாக ஜந்து லட்சம் வாங்கினார்கள். கலியாணச் செலவு போக்குவரத்துச் செலவையும் (அவரது அண்ணாவுக்கும் சேர்த்து) எடுக்கச் சொன்னார்கள். எனது அப்பா இறந்துவிட்டார். பல கஷ்டங்களுக்கு மத்தியில் கடன்பட்டு என்னுடைய அம்மா சகோதரங்கள் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.
திருமணம் நடந்த அன்று ஒருநாள் மட்டுமே என்னைத் தன்னுடன் தங்கவைத்தார். அவர் அவரது சகோதரருடன் தனி வீட்டிலும் என்னை என் சகோதரியுடன் வேறு ஒரு வீட்டிலும் தங்கச் செய்தார். திருமணம் முடித்த ஏழாவது நாள் 19/06/1997 அன்று என்னைக் கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பிவிட்டு அவரும் அவரது அண்ணாவும் 25ம் திகதிவரை தங்கியிருந்துவிட்டு லண்டன் திரும்பினார்.
லண்டன் திரும்பியதும் மன்னிப்புக் கேட்டு எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவசரப்பட்டு யோசிக்காமல் சில முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துவிட்டேன் நாங்கள் ஒரு மாதம் வரையாவது தங்கியிருக்கலாம் என்று போனிலும் மன்னிப்புக் கேட்டார். அதன்பின்னர் ஒரு வருடம்வரை ஒருசில கடிதங்கள் போட்டார். ஒரு சில தடவைகள் போனிலும் பேசினார். அத்தோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். அதனால் நான் பல வழிகளிலும் அவரது சகோதரங்களாலும் அவர்களது நண்பர்களாலும் அவமானங்களையும் பல துன்பங்களையும் அடைந்தேன்.
அதனால் 2000 ஆண்டு அவரிடம் விவாகரத்துக் கேட்டு கடிதம் போட்டேன். அதற்கு அவர் நாங்கள் இந்தியாவிற்குப் போய்ப் பேசித் தீர்ப்போம் என்றார். அதன் பின்னர் எதுவித தொடர்பும் இல்லை. 2002ல் தன்னை மன்னிக்கும்படியும் நான் திருந்திவிட்டேன் இனிமேல் இப்படியான பிழைகளைச் செய்ய மாட்டேன் நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்றார்.
அவரால் பல தடவைகள் ஏமாந்ததாலும் அவரின் சகோதரங்களால் துன்பங்களை அடைந்ததாலும் நான் மறுத்தேன். அதனால் லண்டனில் இருக்கும் அவரது சகோதரர் அண்ணி நண்பர்கள் மூலம் என் குடும்பத்தாருடன் பேசவைத்து எனக்கு பல வாக்குறுதிகளைத் தந்தார். உங்களை நான் கடைசிவரைக்கும் கைவிட மாட்டேன். சந்தோஷமாக வைத்திருப்பேன். ஊரில் என் குடும்பத்தாரால் நீங்கள் நேரடியாகவே நிறையவே பாதிக்கப் பட்டதனால் அவர்களுடன் நட்புக்கொள்ளத் தேவையில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்கவைத்து 21/06/2003ல் அவர் இலங்கை வந்து 05/07/2003 என்னை லண்டன் அழைத்து வந்தார்.
ஆனால் ஒரேயொரு வாரம்தான் நாங்கள் சந்தோசமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டோம். அதன் பின்னர் அவர் என்னைப் பலவழிகளிலும் புறக்கணித்து காயப்படுத்தி மட்டம் தட்டினார். என்னை எங்கும் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. அவரது சகோதரர் வீட்டுக்கு மட்டும் அழைத்துச் செல்வார். வேறு எங்கு செல்வதானாலும் அவர் தனியாக என்னை விட்டுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து செல்வார்.
நான் எனது நண்பர்கள் உறவினர்களுடன் போனிலும் பேச அனுமதியில்லை. அவரது அண்ணா வீட்டாருடன் மட்டுமே கதைக்க வேண்டும். போன் நம்பரையும் அடிக்கடி மாற்றுவார். நோர்வே, பிரான்ஸ், ஜேர்மன், கனடா, கொலண்ட், சிங்கப்பூர், துபாய் என்று பல நாடுகளிலும் உள்ள நண்பர்களைப் பார்க்க அடிக்கடி செல்வார். நானும் வருவதாகக் கேட்டால் எனக்கு விசா எடுப்பது கஷ்ரம் என்று ஒவ்வொரு தடவையும் மறுத்துவிடுவார். அதனால் நான் மிகவும் நொந்து போனேன். வீட்டிற்குள்ளேயே அநாதையான தனிமையான பயந்த சிறை வாழ்க்கையே வாழ்ந்தேன்.
நான் எங்கள் நாட்டு கலை கலாச்சாரப் பண்பாடுகள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்ததால் அவரை பூரணமாக நம்பி கடவுளாக மதித்து அவருக்காகவே வாழ்ந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை. அவரது அன்பு, ஆறுதல், ஆதரவு, அரவணைப்பு, பாதுகாப்பு எதுவுமே இல்லாது அநாதையாகவே வாழ்ந்தேன்.
அவர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்பவர். வெளியில் எல்லோரிடமும் நல்லவர் மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் வீட்டில் ஒரு ஊத்தைப் பெண்ணை பல வருடங்களாக வைத்திருந்தார். அவளை நான் சொல்லித்தான் அனுப்பினார். அதுமட்டுமல்ல மட்டமான கிளப்புகள் மட்டமான தொடர்புகளும் உள்ளவர். அப்படியெல்லாம் அவர் மோசமான ஆளாக இருந்தாலும் நான் அவரை அதிகமாக ஆழமாக நேசித்தேன்.
அதுமட்டுமல்ல அவர் என்னுடன் அதிகமாகப் பேசவும் மாட்டார். இரண்டொரு வார்த்தைகளே பேசுவார். சில சமயங்களில் அதுகூட பேசமாட்டார். ஆனால் நண்பர்கள் உறவினர்களுடன் மணிக்கணக்காகப் பேசுவார். எனக்கு அவர் விரும்பும் ஆடைகள் அணியவும் அவர் விரும்பும் சிலருடனேயே பேச வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிப்பார். ஆனால் நண்பர்களிடம் நான் அழகாக இல்லை. நாகரீகமாக இல்லை ஆங்கிலம் தெரியாது என்றெல்லாம் விமர்சிப்பார். என்னுடன் பெயரளவிற்கே வாழ்க்கை நடாத்தி எனக்கு எதுவுமே தெரியாமல் ஆக்கி புறக்கணித்து ஒதுக்கியே வைத்தார். நான் அவருக்காக என் குடும்பம், வேலை, என்னுடைய மேல்படிப்பு இப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன். எனக்கு லண்டனில் எதுவும் தெரியாது. அவரையே உலகமாக நினைத்து வாழ்ந்தேன். ஆனால் அவரும் அவரது சகோதரங்கள் நண்பர்களும் 16 வருடங்களாக என் வாழ்க்கையை நாசம் பண்ணி விட்டார்கள்.
25/12/2004ல் என்னை இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அவரின் நடவடிக்கைகளால் லண்டன் வர மறுத்தேன். இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது நாங்கள் ஒரு புதுவாழ்க்கை வாழலாம் என்று அவரின் தாயின் படத்தின்மீது சத்தியம் செய்து என்னை அழைத்து வந்தார். ஆனால் அவர் எள்ளளவும் திருந்தவில்லை. 2006 ஜனவரி அவரின் நண்பரின் கல்யாணம் என்று என்னை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சென்றதும் அவர் என்னை திருமணத்திற்கு அழைத்துப் போக செல்ல விரும்பவில்லை. அவரது கொழும்பிலுள்ள உறவினர் வீட்டிற்கு என்னை வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு அவரும் அவரது சகோதரங்கள் நண்பர்களும் சென்றனர்.
லண்டன் திரும்பியதும் காரணமே இல்லாமல் என்னுடன் அடிக்கடி சண்டை போடுவார். அசிங்கமான வார்த்தைகளால் பேசி குட்டி அடிப்பார். கழுத்தை நெரித்து சித்திரவதை செய்வார். செத்துத் தொலை என்று சொல்லுவார். எங்களுக்குப் பிள்ளைக்கான எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை. அவரது சகோதரங்கள் மலடி என்று அடிக்கடி திட்டுவார்கள். இப்படியான சித்திரவதைகளால் மனதளவில் பெரும் பாதிப்படைந்த நான் அவரது கொலை மிரட்டல்களுக்கும் பயந்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அவர் நீ செத்தால் சா ஆனால் எனக்குப் பாதுகாப்புத் தேவை என்று சொல்லி பொலிசாரை வரவழைத்தார். அவர்கள் வந்து எங்களைச் சமாதானம் செய்து தைரியம் சொல்லிவிட்டுச் சென்றனர்.
அவருக்கு உயிரணுக்கள் குறைபாடு இருந்தது. அதனை என்னிடமும் மற்றவர்களிடமும் மறைப்பதற்காகவும் என்னை இந்தியாவில் கைவிடுவதென்று அவரும் அவரது சகோதரர்களும் நண்பர்களும் முடிவெடுத்திருந்தனர். நானும் இது தெரியாமல் அவருடன் இந்தியா சென்றேன். இதெல்லாம் பின்னர்தான் தெரிய வந்தது.
அவருக்கு மருத்துவ விசா எனக்கு சுற்றுப்பயண விசாவும் எடுத்திருந்தார். ஏன் என்று கேட்டதற்கு அது தவறுதலாக நடந்தது என்றார். 21/06/2006ல் இந்தியா சென்று சிகிச்சை ஆரம்பித்தோம். சிகிச்சை கடினமானதாகவும் நீண்டகாலம் எடுக்கும் என்றும் கூறி என்னை இந்தியாவில் அவரது நோர்வேயில் வசிக்கும் நண்பரின் வீட்டில் தங்கவைத்தார். இந்தியாவில் ஒரு மாதத்திற்கு மேல் தங்குவதென்றால் பொலிஸ் பதிவு தேவை. 10 நாட்கள் தங்கிச் செல்லும் அவருக்கு எடுத்தார் ஆனால் தங்கியிருக்கும் எனக்கு எடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் உங்களுக்குத் தேவையில்லை என்ன செய்வதென்று எனக்குத் தெரியும் என்றார்.
பொலிஸ்பதிவு இல்லாததால் நான் பல சிரமங்களை அனுபவித்தேன். அவர் சிகிச்சைக்காக வரும்போதெல்லாம் என்னுடன் தங்குவதற்கோ மருத்துவமனைக்கு வருவதற்கோ விரும்புவதில்லை. வரச் சொன்னால் சண்டைபோட்டு அடிப்பார். கழுத்தை நெரிப்பார். அவரின் இவ்வாறான நடவடிக்கைகளாலும் கடுமையான தொடர்ச்சியான சிகிச்சை முறைகளாலும் உதவிக்கு ஆள் இல்லாததாலும் உடல் உள ரீதியாக அதிகமாகப் பாதிக்கப்பட்டேன். அதனால் சிகிச்சை 4 தடவைகள் தோல்வியாகவே முடிவடைந்தது. ஜந்தாவது தடவை சரிவந்தது. நான் உதவிக்காக எனது தாயை அழைக்கச் சொன்னேன். அவர் மறுத்தார். எனது சகோதரியே செலவுசெய்து எனது தாயை இந்தியா அனுப்பினார்.
அவர் சிகிச்சைக்கு வந்து லண்டன் திரும்பியவர் 5 மாதங்கள் கழித்து 03/12/2007ல் இந்தியா வந்தார். 05/12/2007 அன்று பிள்ளையை வெளியில் எடுத்தால்தான் நீங்கள் பிழைப்பீர்கள் என்று (பிள்ளை ஆரோக்கியமாக இருந்தது) வைத்தியர்கள் சொன்னார்கள். நான் இறந்தாலும் பரவாயில்லை பிள்ளை வேண்டும் என்றேன்.என் கணவர் மறுத்து விட்டார். என் கணவரால்தான் பின்னர் ஜந்தாவது மாதத்தில் பிள்ளையை சாகடிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. எல்லாம் முடிந்து 4 மாதத்திற்குப் பின்னரே அங்கு வேலை செய்பவர்கள் மூலம் அறிந்தேன்.
அவர் 16/12/2007 லண்டன் திரும்பிவிட்டார். என்னை 2 மாதங்கள் கழித்து கூட்டிப் போவதாகச் சொன்னார். ஆனால் போனவர் வரவேயில்லை. ஒவ்வொரு மாதமாக நேரம் இல்லை என்று நாட்களைக் கடத்திக் கொண்டே போனார். அவர் 8, 9 தடவைகள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், நோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, கொலன்ட் என்று அவரது நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்கச் சென்றார். 21/06/2008 இருந்து எனக்குப் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டார்.
எனது அம்மாதான் என்னுடன் இருந்தா. அவர் லண்டன் கூட்டிப்போக மாட்டார் என்று 16/06/2008ல் அம்மா இலங்கை சென்றுவிட்டார். அவரது நோர்வே நண்பன் (வீடு அவருடையது) சகோதரியை (இந்தியாவில் வசிப்பவர்) என்னுடன் தங்கவைத்து அவர்மூலம் என்னை பலமுறை கொலைசெய்ய முயற்சி செய்தார்கள். காஸ்சினை திறந்துவிடுவா. வெளியில்விட்டு கேற்றைப் பூட்டுவா. பின்னர் ஒரு மாதம் சாப்பாடு இல்லாமல் வீட்டில் அடைத்து வைத்திருந்தா. வெறும் பிஸ்கட் தண்ணியுடனேயே ஒரு மாதம் வாழ்ந்தேன். அதுவும் வேலைக்காரி வீட்டுக்காரிக்குத் தெரியாமல் வாங்கிவந்து தருவா.
20/09/2008 இரவு 7 மணியளவில் வீட்டைவிட்டுத் துரத்தினார்கள். எங்கு செல்வது என் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. கையில் பணமும் இல்லாது தவித்தேன். அந்த நேரம் இந்தியாவில் வசிக்கும் என்னுடன் படித்த நண்பி என்னை அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து அவர் போன் செய்வதையும் நிறுத்திவிட்டார். நான்தான் அவருக்குப் போன் செய்வேன். ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு கட்பண்ணி விடுவார். 27/10/2008 லண்டன் வரும்வரை நகைகளை விற்றே சாப்பிட்டேன்.
நான் இந்தியாவில் இருக்கும்போது சிங்கப்பூரில் அவரும் அவரது சகோதரரும் சேர்ந்து 06/06/2008 அவருக்கு மறுமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்தவிடயம் எனக்குத் தெரிந்ததும் நான் லண்டன் திரும்ப பணம் கேட்டேன் தர மறுத்துவிட்டார்.
அவரது லண்டனில் வசிக்கும் நணபர் ஒருவரும் எனது நண்பி என் சகோதரங்கள் அம்மா எல்லோரும் சேர்ந்தே எனக்கு பணஉதவி செய்துள்ளார்கள். பொலிஸ் பதிவு இல்லாததால் எனக்கு உடனே வர இரண்டரை லட்சம் இந்தியன் பணம் தேவைப்பட்டது. எனது PRஜ கான்சல் பண்ணுவதற்காகத்தான் அவர் 2 வருடங்கள் 4 மாதங்கள் வேண்டுமென்றே என்னை இந்தியாவில் தங்க வைத்தார்.
அத்தனை சிரமங்களையும் அனுபவித்து லண்டன் வந்த என்னை ஈவு இரக்கம் மனச்சாட்சி எதுவுமே இல்லாமல் கதவை திறக்காமல் அறைக்குள் இருந்துகொண்டு 2.30 தொடக்கம் இரவு 8.30 வரைக்கும் கதவடியிலேயே தங்க வைத்தார். உடல் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட நான் கௌரிவிரதத்தோடும் காச்சலோடும் மிகவும் சிரமப்பட்டேன். அவரது நண்பர் ஒருவரை (எனக்கு 3 வருடங்களாகத் தெரியும் 3 வருடங்கள் அவனுக்கு சாப்பாடு கொடுத்திருக்கன்றேன்.) தற்செயலாக சந்திக்க வைப்பதுபோல் சந்திக்க வைத்து என்னை அவனது வீட்டிற்கு போகச் செய்தார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நான் எனது கணவரின் லண்டனில் வசிக்கும் அண்ணாவிடம் உதவி கேட்டேன். காலையில் பார்க்கலாம் இப்போ அந்த நண்பருடன் செல்லுங்கள் என்றார். நானும் அவனுடன் சென்றேன். அவனிடம் என்னைக் கொலை செய்யச் சொல்லி இருக்கின்றார்கள். அவன் என்னை அடைத்து வைத்திருந்தான். நான் அங்கிருந்து தப்பி குயின்ஸ்வேய்க்கு வந்து பொலிசாரின் உதவியை நாடினேன். அவர்கள் உதவிசெய்ய மறுத்து விட்டார்கள். வுமன் சென்ரருக்கு போகச் சொன்னார்கள். காவல்காரனும் என்னை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. என் கணவர் அப்படி எழுதிக் கொடுத்திருக்கின்றார்.
நான் எனது கணவரின் அண்ணாவிடம் மறுபடியும் உதவி கேட்டேன். அவர் மறுத்து விட்டார். அவரது வீட்டிற்கு வரவேண்டாம் என்றார். ஊருக்குப் போங்கள் இல்லையென்றால் எங்காவது ஒரு மூலையில் போய் தங்குங்கோ என்றார். அழுதுகொண்டே வீதியில் 5 மணித்தியாலங்களாக குளிரில் உறைந்து போயிருந்தேன். அதன் பின்னர் எனது நண்பியின் அக்கா வந்து என்னை அழைத்துக்கொண்டு போனார்.
திட்டம் போட்டே என்னிடம் டிவோஸ் எடுத்து ஊருக்குப் போய் திருமணம் 09/2009ல் செய்துகொண்டு வந்து மனச்சாட்சி இல்லாமல் குடும்பம் நடத்துகின்றார். மில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கின்றார். (இயக்கக் காசுகளும் எக்கச்சக்கமாக அவரிடம் மாட்டியுள்ளது.) எல்லோரையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கின்றார். சொந்தமாக குயின்ஸ்வேயில் 2பெட்ரூம் 1 லிவிங் ரூம் பிளாட் இருக்கிறது. கொலின்டேலில் 4 பெட்ரூம் வீடு உள்ளது. (அதனை அண்ணாவின் மகளின் பெயருக்கு மாற்றியிருக்கின்றார்.). 6 மணி ரான்ஸ்பர் கடை 3 கார் வைத்திருக்கின்றார். ஒரு கார் அண்ணாவுக்கும் இன்னொரு நணபருக்கும் கொடுத்திருக்கின்றார்.
எனக்கு எதுவுமே தர மாட்டாராம் என்னைக் கொலை செய்தே தீருவாராம். அவர் பணத்தினால் எனது வக்கீல் உட்பட அனைவரையும் விலைகொடுத்து வாங்கி விட்டாராம். என்னால் எதுவுமே பண்ண முடியாதாம். எலும்புத் துண்டை நாய்க்கு வீசுவது போல வீசிக் கொண்டிருக்கிறாராம். அதனால் எல்லோரும் தன் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கின்றார்களாம்.