07

07

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

he_the_president.jpgஇலங் கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐ. நா. செயலாளர் நாயகம் நியமிக்கத் தீர்மானித்துள்ளதை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நேற்று முன்தினம் (வெள்ளி) தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசினார். அதன்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சேபனையைத் தெரிவித்தாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழுவை நியமிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இது விரும்பத்தகாத நடவடிக்கையென ஜனாதிபதி, ஐ. நா. செயலருக்கு எடுத்துக் கூறியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை மூலம் பெருமளவிலான மக்கள் ஏனைய சில நாடுகளில் கொல்லப்படுவதோடு, பாரிய மனித உரிமை மீறல்களும் நடந்த வண்ணமுள்ளன. அத்தகைய நாடுகள் மீது இப்படியான நடவடிக்கைகளை ஐ. நா. எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ. நா. அலுவலகம் எந்தவிதமான கருத்தையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.

இலங்கையில் நடைபெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யும் விடயங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கவேண்டியுள்ளதாக ஐநாவின் தலைமைச் செயலர் இலங்கை அரசிடம் கூறியுள்ளதாக பான்கீமூனின் பேச்சாளர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.  இது பற்றி அறிவிக்கப்பட்டவுடனயே தாமதமின்றி கருத்து வெளியிட்டுள்ளது
 

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு

sarath_fonseka-02.jpgஇராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் இந்தவாரம் கையளிக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்தும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்ப ட்டுள்ளன. அத்துடன் (டெக்னிகல் எவிடன்ஸ்) தொழில் நுட்ப சாட்சியங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி சாட்சியங்களின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

இதேபோன்று சமகாலத்தில் சரத் பொன்சேகாவுக்கும் அவருடன் தொடர்புடைய தனுன, அசோக்கா ஆகியோருக்கு எதிராகவும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்கள், வாக்கு மூலங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். இராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன் சேகாவின் விசாரணைகள் நடைபெறும் போது ஊடகங்களை அனு மதிப்பீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது?

அவ்வாறான ஒரு நடைமுறை உலகில் வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. எனினும், விசாரணைகளின் முடிவுகள் குறித்து இராணுவப் பேச்சாளர் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்றார். அத்துடன், சரத் பொன்சேகா, மருமகன் தனுன, அவரது தாயார் அசோக்கா ஆகியோர் மீதான பண பரிமாற்று மோசடி தொடர்பான விசாரணைகள் யாவும் வெளிப்படைத் தன்மையாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்க கொலை விசாரணை: 6 இராணுவ வீரர்கள் தடுப்புக் காவலில்; வாக்கு மூலங்கள் 18ம் திகதி நீதிமன்றில்

lasantha.jpgஊடக வியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக இதுவரை பதியப்பட்ட வாக்கு மூலங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

லசந்தவின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 17 பேருள் 11 பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீண்டும் இராணுவ சேவைக்கு உள்வாங்கப்பட்டும் உள்ளனர். எஞ்சியுள்ள 6 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் மேலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த 4ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் லசந்தவின் படுகொலை தொடர்பான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 18ஆம் திகதியும் இதே போன்று சாட்சியங்கள் சமர்ப்பிக்கப் படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகளின் ஊடாக குற்றவாளி யார் என்பதை கண்டறிவதற்கு சான்றுகள் ஏதேனும் கிடைத்துள்ளனவா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,

இதுவரை கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டறிவதற்குரிய சரியான விசாரணைகளையே பொலிஸார் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை

cargo-ship.jpgசோமாலியா கடற்பரப்பில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 13 இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக கடத்தப்பட்ட கப்பல் கொம்பனி அறிவித்துள்ளது.

ஜப்பானிலிருந்து மசகு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சவூதி சென்று கொண்டிருந்த கப்பல் சோமாலியக் கடற்பரப்பில் கடத்தப்பட்டது. இந்தக் கப்பலின் கப்டன் உட்பட 14 சிப்பந்திகள் இருந்தனர். கப்டன் கிரேக் நாட்டைச் சேர்ந்தவர். ஏனைய 13 பேரும் இலங்கையர்கள். அவர்களின் பெயரை கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாக்கூப் சேவியர், வீனஸ் ரொபின்சன், ஹேவா பதகே ரங்கா ஜயசிங்க, விஜயமுனி எல்மோ அன்சலாம் சொய்சா, செல்வராசா ராஜவேல், பால கிருஷ்ணன் ஜயரஞ்சன், ரொபேட் ஜோசப், கனகசபாபதி துஷ்யந்தன், அருமைசேகரம் பசில்ராஜா, லக்ஷ்மிகாந்தன் கஜேந்திரன், ஆரோக்கியசாமி பிள்ளை பிரிட்டோ லோரன்ஸ், சவரிமுத்து அற்புதராஜா, ராஜகோபால் ஜெயக்குமார் ஆகியோரே கப்பலில் உள்ளவர்களாவர்.

இவர்களை மீட்டெடுப்பதற்காக கடத்தல்காரர்களுடன், கப்பல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.

பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை வெளிநாடு பயணமானார்.

mrs-veluppillai.jpgவிடு தலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை வெளிநாட்டுக் நேற்று பயணமானார். பனாகொடை இராணுவ முகாமில் அவரது கணவனுடன் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கணவர் வேலுப்பிள்ளை மரணமானதை அடுத்து அவர் இறுதிக்கிரியைகளுக்காக வல்வெட்டித்துறைக்க வந்திருந்தார். சுகவீனமுற்றிருந்த பார்வதி அம்மையார் சிறிது காலம் அங்கு தங்கி யிருந்தார். யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தால் அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். சிவாஜிலிங்கம் செய்த பயண ஒழுங்குகளை அடுத்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டுச் சென்றார்.