இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பெற்ற வெற்றி அவருக்குக் கிடைத்த இரண்டாவது மாபெரும் வெற்றியாகும். இரத்தம் சிந்திய அரசியல் யுத்தத்தில் கிடைத்ததுதான் அவரின் முதலாவாது வெற்றியாகும். இது மே மாதம் 18ஆம் தேதியாகும். ஜனவரி மாதம் 29ஆம் தேதி இரத்தம் சிந்தா யுத்ததில் கிடைத்ததுதான் இரண்டாவது வெற்றியாகும். முதலாவது களத்தில் தோற்கடிக்கப்பட்டது மேற்குலக நாடுகளாலும், இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய ஆசிய நாடுகளாலும் பயங்கரவாதம் என நாமம் சூட்டப்பட்டு தத்தமது நாடுகளில் தடைசெய்யப்பட்ட “புலிகள்” இயக்கமாகும். இவ்வெற்றிக்காக மேற்குலக முகாமும், ஆசிய முலதன முகாமும் “பயங்கரவாதத்தை” ஒழிப்பதற்காக இதய சுத்தியுடன் ஐக்கியமானார்கள். இது ஒரு முறைசார் அமைப்பிலை. இதனால் இவ்விரு சாரார்களுக்கும் ஒரு பொதுவான வேலைத்திட்டம் இருக்கவில்லை, ஆனால் “புலிகளை” வெல்வது என்ற விடயத்தில் ஒரு ஒற்றுமை இருந்தது. இதற்காக போட்டி போட்டுக்கொண்டு இரு சாராரும் இலங்கை அரசுக்கு உதவி செய்தார்கள்.
“புலிகளின்” தனித்து நிற்கும் ஆற்றலை நீத்துப் போகச்செய்து அவர்களை வளர்ப்பு விலங்காக (பூனைகளாக) மாற்றுவதுவே மேற்குலகத்தின் வேலைத்திட்டமாக இருந்தது. அது அத்துடன் நிற்கவில்லை. மகிந்த உட்பட அனைத்து தேசியவாதிகளினதும் வீரியத்தைக் குறைத்து அனைவரையும் தாம் செல்லமுடன் வளர்க்கும் சண்டைச் சேவல்களாக்கி, அவர்களை சண்டைபிடிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதுவே அவர்களின் நோக்கமாக இருந்தது. இதைத்தான தமது உள்ளூர் முகவர்களின் மூலம் இவர்கள் செய்து வந்தார்கள். இதனால் தாமும் அடிக்கடி குழம்பியதுடன் பிறரையும் குழப்பினார்கள். பெரும் சதிநாச வேலிகளிலும் ஈடுபட்டார்கள். கருணாவும் சரத் பொன்சேகராவும் இச் சதியின் குழந்தைகளே.
ஆனால் ஆசிய மூலதன முகாமோ, தமது கொள்கையில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருந்தது. அதனது பாதை முன்னைய முகாமினுடையதையும்விட வேறுபட்டதாக இருந்தது. எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு, எப்படி எப்படியெல்லாம் முடியுமோ அப்படி அப்படியெல்லாம் மகிந்தவின் அதிகாரத்தை வளர்த்து விடுவதே இவர்களின் வேலைத் திட்டமாக இருந்தது. அடுத்த பக்கத்தில் பிற தேசியவாத இயக்கங்களை வேரும் வேரடி மண்ணோடும் அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். பௌத்த சிங்களப் பேரினவாததுடன் பரிபூரண சமரசத்தைப் பேணியும் வருகிறார்கள். இதில் ஒழிவு மறைவோ ஊசலாட்டமோ இருக்கவில்லை. 2004 இல் இருந்து இன்றுவரை இதே கொள்கையைத்தான் பின்பற்றி வருகிறார்கள்.
ஆசிய மூலதனத்தின் பாதையே வெற்றிகண்டது. இலங்கையை சண்டைக்கார சேவல்களின் சமர்க்களமாக மாற்றும் மேற்க்குலக மூலதனத்தின் பாதை தோல்விகண்டது.
இவ்விதமாக இரத்தம் சிந்திய அரசியலில் தோல்வி கண்ட மேற்குலக மூலதனம், “ஜனநாயகக் காவலன்” என்ற போர்வையில் “ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான விசாரணை” என்ற பெயரில், அதிகார மமதையால் காட்டு எருதாக வலம் வரும் மகிந்தவை மஞ்சு விரட்டுக்காக வளர்க்கும் காளையாக மாற்ற முற்படுகிறது. நீண்ட காலக் கடன், வரிவிலக்குச் சந்தை ஆகிய தீவனங்கள் கொடுத்துப் பார்த்தும் காளையை அடக்க முடியவில்லை. மகிந்தவைப் பாதுகாக்க ஆசிய மூலதனம் உலக வங்கிக்கு வெளிப்படையாகவே சவால் விட்டது. இதனால் அச்சம் தவிர்த்தார் மகிந்த. தோல்வி கண்டது மேற்க்குலகம். விளைவு ஜனாதிபதித் தேர்தல் என்ற அரசியல் களம்வரை பொறுத்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டது மேற்குலகம்.
ஆசிய மூலதனம் இந்தத் தேர்தல்களத்தில் நேரடியாகப் பங்களிக்கவில்லை. ஆனால் இலங்கையின் “தேசியப் பொருளாதாரத்தை” (மகிந்த சிந்தனை) கட்டி வளர்க்க நம்பகரமான உத்தரவாதங்களை வளங்கியது. இராணுவச் சதிகள் எதுவும் நடந்தால் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருந்தது. ஆனால் மேற்குலக மூலதனமோ மிக வெளிப்படையாகவே களம் இறங்கியது. தாம் படிப்படியாக பற்பல அடுக்குகளாக உருவாக்கி வைத்துள்ள மனிதநேய அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள் ஆகிய அனைத்தையும் தேர்தல் களத்தில் இறக்கியது. தற்போது இப்படை அணியில் ஒருவராக உள்ள சந்திரிகா குமாரதுங்காவும் தனது முத்திரை மோதிரத்தைக் காட்டினார். சிங்களவர்கள் அல்லாதோரின் வாக்குகளைப் பெறுவதற்காக இவர்கள் அதிகப் பிரயத்தனங்கள் மேற்கொண்டார்கள். இன மோதல்களற்ற இலங்கையைப் பற்றிப் பேசினார்கள். மலையைக் குடைந்து எலியைப் பிடித்ததைப் போல் சில வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார்கள். இவ் வெற்றி பாராளுமன்றத் தேர்தலில் சில ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள உதவலாம்.
மேற்குலகின் இரண்டாவது தந்திரோபாயம்; கருணாவைக் கொண்டு பிரபாகரன் தலைமையை வீழ்த்தியது போல், மகிந்த அணியில் ஒரு கருணாவை உருவாக்குவதாகும்; அதில் வெற்றியும் பெற்றார்கள். ஒரு சரத் பொன்சேகர உருவாக்கப்பட்டார். கருணாவை பிரித்தெடுத்தது மேற்குலகமே. ஆனால் கருணாவால் பலன் அடைந்ததோ ஆசிய மூலதனமேயாகும். புலியை பூனையாக்கத்தான் மேற்குலகம் விரும்பியது, ஆனால் கருணாவைப் பயன்படுத்தி ஆசிய மூலதனம் புலியை “அழித்தே?”விட்டது. (மே18 தான் மகிந்த, சரத் பொன்சேகராவை இனங்கண்ட நாளாக இருக்கலாம்.) ஆண்ட பரம்பரை மேற்குலகம் சரத் பொன்சேகவை உருவாக்குவதில் வெற்றி பெற்றாலும், அவரைப் பயன்படுத்துவதில் தோல்வி கண்டுவிட்டது. மேற்குலகின் “மனிதநேயக் காவல்”, “ஜனநாயகக் காப்பு” மற்றும் “இனச் சமத்துவ இலங்கை”ப் பரிவாரங்களும் அவற்றின் மிகப்படித்த அறிவாழிகளும் நிலைதடுமாறி அவசர முடிவெடுத்து விட்டாரகள்.
2002இல் அதிகாரத்துக்கு வருவதற்காகவும், அதிகாரத்திற்கு வந்ததன் பின்பும், புலிகளுக்கு எதிரான போர் காலம்புராகவும் மகிந்த மற்றும் சரத் ஆகிய இவ்விருவராலும் முன்வைக்கப்பட்ட “இலங்கைத் தேசியவாதம்” மூன்று வகையான அரசியல் உள்ளடக்கங்களைக் கொண்டதாக இருந்தது.
1) பயங்கரவாததிற்கும் பிரிவினை வாதத்திற்கும் எதிரானது. இது,அனைத்துச் சிங்கள மக்களாலும், தமிழ்பேசும் மக்களில் கணிசமான பகுதியினராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது.
2) இலங்கையில் யு.என். பி யால் பின்பற்றப்பட்டு வந்த நவகாலனியல் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானது.
3) இலங்கைத் தீவின் மூலை முடுக்கெல்லாம் பௌத்த சிங்களவர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த பேரகங்காரவாதம். சிங்கள மேற்த்தட்டு வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் இக்கொள்கையை ஆதரிக்கின்றது. நிலப் பஞ்சம் மிகுந்த மலைநாட்டு விவசாயிகளுக்கும் இந்தக் கொள்கை ஏற்புடையதாகவே உள்ளது.
இந்த மூன்றினதும் சேர்வைதான் “மகிந்த சிந்தனை” யாகும். முதலாவது உள்ளடக்கத்தை நிறைவேற்றுவதில் மகிந்த, தமிழர்களில் சிறுபகுதி உட்பட அனைவராலும் பாராட்டப்படக்கூடிய வெற்றிபெற்றுவிட்டார். மகிந்தவால் உலகளவில் அமைக்கப்பட்ட அரசியல் வியூகமும், ஆசிய மூலதனத்துடன் அவர் உருவாக்கிய் முறையான உறவுகளும்தான் அவரின் வெற்றிக்கான அடிப்படைக் காரணங்ககளாகும். இராணுவ நடவடிக்கை பிரதான காரணம். அதுவும் யுத்தம் வரையுமான பிரதான காரணம்.
யுத்தம் முடிவடைந்த சூட்டோடு சூடாக மகிந்த தனது சிந்தனையின் இரண்டாவது உள்ளடக்கத்தை நிறைவேற்றும் முயற்கியில் துரிதமாக இறங்கிவிட்டார். யுத்தத்தின் போது பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத எதிர்ப்பை உள்ளடக்கமாகக் கொண்டிருந்த “இலங்கைத் தேசியம்” மேற்குலகின் சட்டாம்பித்தன எதிர்ப்பை தனது உள்ளடக்கமாக்கிக் கொண்டது. இதனால் இதற்கும் தனது மட்டற்ற அதிகாரப் பிரயோகத்திற்கும் தடையாக இருந்த சரத் பொன்சேகராவை களட்டி விடவேண்டிய அவசியம் மகிந்தவுக்கு இருந்தது.
மேற்குலகின் தாசர்களாக சிங்கள மக்களால் இனங்காணப்பட்டிருந்த யு.என்.பி, இந்தத் தேசிய அலையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தன்னை உருமறைப்புச் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. தேசிய வீரனாகப் பெயரெடுத்திருந்த சரத் பொன்சேகவை உருமறைப்புக் கவசமாகத் தெரிவு செய்தது. மகிந்த எண்ணியிருந்ததை இவர்கள் சுலபமாகச் செய்து முடித்தார்கள். கருணாவின் உடைவால் பிரபாகரனின் படிமம் உயர்ந்தது போல் சரத்தின் பிரிவால் மகிந்தவின் படிமமும் பலமடங்கு உயர்ந்தது.
மக்கியவல்லி சிறந்த “இராஜதந்திரி”தான், ஆனால் சாணக்கியன் அதைவிடத் திறமையானவன் என்பது நிரூபணமாகின்றதா? கீழைக்காற்று மேலைக்காற்றை மேவுகிறதா? எப்படியோ மேற்குலகின் பருப்பு இனியும் இலங்கையில் அவியாது என்பது உண்மையாகி வருகின்றது.
அதற்கான காரணங்கள் சில:
1) இலங்கையின் அரசிய – புவிவிய காரணங்களால் மேற்க்குலகின் இராணுவத் தலையீடு மிகக் கடினமானதொன்றானதாக இருத்தல், அத்துடன் இலங்கை அனைத்து வளமுமிக்க ஒரு சிறிய நாடாக இருத்தல்.
2) இலங்கையின் பண்பாட்டுப் பாரம்பரியம் ஆசியவகைப்பட்டதாக இருத்தல்.
3) இரண்டாவது IMF, குட்டி NATO என்று கூறப்படும்,BRIC க்கின் உருவாக்கத்துடன் மேற்குலகிற்கு எதிரான, உலகளாவிய பொருளாதார வல்லமையும் அரசியல் வல்லமையும் மிகத் தனியான அணியாக வளரத் தொடங்கி விட்டது. அதாவது மீண்டும் பனிப்போர் ஆரம்பமாகிவிட்டது. இப் பனிப்போரில் ஆசிய மூலதனம் (BRIC) தாக்குதல் நிலையிலும், அமெரிக்கப் பொருளாதரம் தற்காப்பு நிலையிலும் உள்ளது. சீனா, இந்தியா மற்றும் இலங்கை தமது அந்நியச் செலவாணியை தங்கமாக சேமிக்கத் தொடங்கியுள்ளன. இது அமெரிக்க றிசேர்வ் வங்கிக்கும் டொலர் சாம்ராஜ்யத்திற்கும் எதிரானதோர் பொருளாதாரப் போராகும். மற்றோர் தகவல், BRIC நாடுகள் 2010 ஜனவரி மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 670 கோடி டொலர் (30, 820 கோடி இந்திய ரூபாய்க்கள்) நிதி திரட்டியுள்ளன. இது உலக அளவில் புதிய பங்குவாயிலாக திரட்டப்பட்ட நிதியில் 76 சதவீத்மாகும்.
4)ருஷ்யா மீண்டும் அமெரிக்காவை நேரடியாக எதிர்கொள்ளும் ஒரு இராணுவ வல்லரசாக மாறப்போவதாக அறிவித்து அதற்கான தயாரிப்புகளிலும் ஈடுபட ஆரம்பித்திருத்தல்.
5) அமெரிக்காவின் கீழ்நிலைச் சகபாடியாக இருந்த ஐரோப்பிய யூனியன்(EU) மெரிக்காவின் சமநிலைப் பங்காளியாக வளர்ந்து வரல். இதனால் மேற்குலகில் பங்காளிச் சண்டைகள் தொலைதூரத்தில் இல்லை.
6) அமெரிக்கக் கொல்லைப்புறமாக இருந்துவந்த இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஆசிய மூலதனத்தின் சமபங்காளிகள் என்ற நிலைக்கு உயர்ந்துவரல்.(ex-பிரேசில், வென்சுலா)
அமெரிக்காவின் ஏகபோகத் தலைமையின் கீழிருந்த ஒரு முனை உலகம் பல்முனை உலகமாக துரிதகதியில் பரிமாணம் பெற்றுவருகின்றது. US–EU–BRIC என்ற மும்முனை ஏற்கனவே தோன்றிவிட்டது. இனியும் பல முனைகள் தோன்றுவதற்கான வாய்புகள் உண்டு. தோன்றவேண்டிய அவசியமும் உள்ளது.
ஆகவே இலங்கை மக்கள் இனியும் மேற்குலகில் தங்கிற்பதை தொடரக்கூடாது. தொடர்வோம் எனத் தொடர்ந்த பிரபாகரனும், சரத் பொன்சேகராவும் தோற்றுப்போயினர். தொடரமாட்டோம் எனச் செயல்பட்ட மகிந்த வெற்றி பெற்றுவருகிறார். உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற இந்த சமகால வரலாற்றை காணத் தவறுபவர்களை கபோதிகள் என்று அழைக்கலாமா?
மேற்குலகம் என்று இங்கு சொல்லப்படுவது, மேற்குலகை ஆழும் அதிகார அடுக்குகளையேயாகும், மேற்குலகின் மக்களையல்ல. தமது ஜனநாயக சிந்தனையை மிகத்துரிதமாக வளர்த்துவரும் மேற்குலக மக்கள் இலங்கை மக்களின் ஜனநாயகப் போராட்டங்களுக்கான முதல் வரிசை நம்பகரமான நண்பர்களாகும் .
ஆசிய மூலதனத்தின் அங்கத்துவ நாடுகளின் ஆளும் அதிகார அடுக்குகளோ ஒன்று பாக்கியில்லாமல் அனைத்துமே மகிந்த வகையறாக்கள்தான். மேற்குலக மூலதனத்தை மிகத்துரிதமாக மேவ வேண்டும் என்பதற்காக துரித கதியில் தமது சொந்த நாட்டை தாமே மறுகாலனியாக்கம் செய்துவருகிறார்கள். உலகம் ஒருமுனை ஆதிக்கத்தின் கீழ் இருக்கக்கூடாது என ஜனநாயகக் குரல்கொடுக்கும் இந்த அதிகார அடுக்குகள் தத்தமது சொந்த நாடுகளில் துரிதமான ஒருமுனைச் சேர்க்கையை நடத்திவருகிறார்கள். விழிம்புநிலை மக்கள், விழிம்புநிலை தேசியங்கள், விழிம்புநிலை மொழிகள், விழிம்புநிலை மதங்கள், விழிம்புநிலை சாதிகள் எனப் பல்வேறுவிதமான விழிம்புநிலை ஆக்கங்கள் துரித கதியில் நடைபெற்று வருகிறன. இதற்காக இந்நாடுகள் தத்தமது நாடுகளில் ஒரு உள்நாட்டு யுத்தத்தை முறையாக நடாத்தி வருகின்றன.
நாடுகளுக்கிடையேயான யுத்தம் ஆசிய மூலதனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் உலகளாவிய யுத்தத்திற்கு எதிராக காந்தியவாதிகளாகவும் அசோகச் சக்கரவத்திகளாகவும் நடந்துகொள்ளும் இவர்கள் தத்தமது உள்நாடுகளில் அரச பயங்கரவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். ஆசிய மூலதனத்தின் வளர்ச்சி முன்றாம் உலக யுத்ததைத் தடுத்துவருகிறது என்பது உண்மை. இதற்காக உலகம் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடைமைப்பட்டது, அதே நேரத்தில், இவ் யுத்தம் மேற்குமுகாம் நாடுகள் தவிர்ந்த அனைத்து நாடுகளிலும் உள்ளூர்மயப்படுத்தப் பட்டுவிட்டது. ஆசிய மூலதனதின் வள்ர்ச்சிக்காக பலிக்கிடாய்கள் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் இலங்கையரகளும் சேர்க்கப்படுள்ளனர்.
இந் நிலமையால் இலங்கை மக்களுக்கு மாத்திரமல்ல ஆசிய மூலதனத்தின் ஆட்சியின் கீழுள்ள அனைத்து நாடுகளின் மக்களுக்கும் தமது ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களுக்காக எந்த அரசையும் நம்ப முடியாத நிலையே உள்ளது. உலக மக்களைத்தவிர நம்பகரமான நண்பர்கள் வேறு எவருமேயில்லை.
நட்பைக் கொடுப்போம் நட்பைப் பெறுவோம், உள்ளூரமயப்படுத்தப்பட்ட மூன்றாம் உலக யுத்தத்தில் வெற்றி பெறுவோம்.