20

20

போரினால் கால்களை இழந்தவர்களுக்கு இலவச செயற்கைக்கால் – நேரில் கண்டறிய டக்ளஸ், இந்திய தூதுவர் விஜயம்

devananda.jpgபோரினால் கால்களை இழந்தவர்களுக்கு இலவசமாக செயற்கைக் கால் பொருத்தும் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் காந்த் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.

வவுனியா ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்திலுள்ள இந்திய மருத்துவ மனையில் ஜெய்ப்பூர் செயற்கைக்கால் பொருத்தும் நிபுணர்கள் குழுவினர் தங்கியுள்ளனர். சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இங்கு விஜயம் செய்திருந்தார்.

19 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவினர் செயற்கைக்கால் பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1000 பேருக்கு இலவசமாக கால்களை பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. நேற்று வரை 32 பேருக்கு இலவசமாக கால்கள் பொருத்தப்பட்டுள்ளன என குழுவின் தலைவர் ஆனந்த சர்மா தெரிவித்தார். அத்துடன் இதுவரை தங்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமாநோருக்கு கால்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை-இந்திய நட்புறவு திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு நடைபெறுகிறது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தர்

மார்ச் 25க்கு அனோமா பொன்சேகாவின் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு

sarath_fonseka-02.jpgஇராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானதென அவரை விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி அவரது பாரியார் அனோமா பொன்சேகா தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இந்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது,  நீதியரசர்கள் குழாமிலிருந்து மேன்முறையீட்டு நீதியரசர் டி.எஸ்.சீ.லேகம் வசம் இந்த விசாரணைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததை அடுத்தே மனு விசாரணைகளின்றி அடுத்த திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதாக மனுதாரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரான நுவன் போபகே தெரிவித்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே நீதியரசர்கள் குழாமிலிருந்து விலகுவதாக நீதியரசர் லேகம்வசம் தெரிவித்துள்ளார். இதற்கமைய புதிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அனோமா பொன்சேகாவின் மனு எதிர்வரும் 25 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் சட்டத்தரணி போபகே கூறினார். அத்துடன், நீதியரசர்கள் குழாமில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதியரசர் அனில் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழாமின் தலைமை நீதியரசராக சத்ய ஹெட்டிகேயும் மற்றொரு உறுப்பினராக நீதியரசர் ரஞ்சித் சில்வாவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பணியகத்தில் பதிவு செய்தால் ரூ. ஒரு இலட்சம் என்பது வதந்தி – எச்சரிக்கையுடன் இருக்க கோருகிறார் கிங்ஸ்லி

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்று நாடு திரும்பியவர்கள் பணியகத்தில் தங்களை பதிவு செய்துகொண்டால் ஒரு இலட்சம் ரூபா தருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்று தற்போது நாடு திரும்பியுள்ளவர்களின் பங்களிப்பையும் நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக பணியகம் அவர்களது தரவுகளை சேகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் அவர்கள் சென்ற நாடு தொழில், பெற்ற சம்பளம், அனுபவம் உட்பட அனைத்து தரவுகளையும் பணியகத்துக்கு வழங்குவதன் ஊடாக அவர்களது தொழில் அனுபவம் குறித்து இலங்கையில் தனியார் துறையில் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்க முடியுமா? என்பது பற்றியும் பணியகம் ஆராயவுள்ளது.

நாட்டிலுள்ள பணியகத்தின் கிளை அலுவலகங்களில் தேவையான விண்ணப்பப் படிவங்களை பெற்று தரவுகளை வழங்குமாறும் பிரதேச செயலகங்களினூடாகவும் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளும் விதத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் குழு இன்று யாழ்.விஜயம்

பிரதம நீதியரசர் அசோக டீ சில்வா தலைமையிலான உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளது.நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்றக் கட்டிடத்தை பிரதம நீதியரசர் வைபவ ரீதியாக இன்று திறந்துவைப்பார்.

யாழ்.சட்டத்தரணிகள் சங்கம் நல்லூர் மதுரோவில் மண்டபத்தில் நடத்தும் கருத்தரங்கில் பிரதம அதிதியாகவும் கலந்துகொள்வார்.யாழ்ப்பாணத்தில் பணியாற்றி மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கனகரட்ணத்தின் உருவப்படத்தையும் பிரதம நீதியரசர் திறந்துவைப்பார்.

ஞாயிற்றுக்கிழமை காலை மல்லாகம் மற்றும் சாவகச்சேரி நீதிமன்றங்களுக்கான புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.மாலையில் யாழ்.மாவட்ட நீதிபதிகள் அளிக்கும் வரவேற்பு நிகழ்விலும் நீதியரசர்கள் குழு கலந்துகொள்வார்கள்.பிரதம நீதியரசருடன் நீதியரசர்களான பாலபிட்ட பென்டி,கே.ஸ்ரீபவன், எஸ்.அமரதுங்க ஆகியோரும் விஜயம் செய்கின்றனர்.

யாழ். குடாவில் 600 ஏக்கரில் தென்னை பயிர்ச் செய்கை – வருட இறுதிக்குள் 3 இலட்சம் கன்றுகள் விநியோகம்:

யாழ். குடாநாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 600 ஏக்கரில் தென்னை பயிரிடப்படவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் பளையில் ஆரம்பமாகுமென அமைச்சர் தி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று இலட்சம் தென்னங் கன்றுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த வருட இறுதிக்குள் இந்த 3 இலட்சம் தென்னங்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டுவிடும். இது தொடர்பான ஆரம்ப வைபவம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது.

அமைச்சர் தி. மு. ஜயரட்ன இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

இதேவேளை யாழ் குடாநாட்டிலுள்ள தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் அதிகார சபைக்குக் கையளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது. தென்னங்கன்றுகள் விநியோகத்தின் போது இடம்பெயர்ந்த 850 குடும்பங்களுக்கு மூவாயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தி. மு. ஜயரட்ன மேலும் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் அமைச்சர் வெற்றிலைக்கேணிப் பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். தென்னந்தோட்ட உரிமையாளர்களையும் சந்தித்துப் பேசவுள்ள அமைச்சர், தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆராய்வார்.

இதற்கிடையில், யாழ்ப்பாணத்திலும் அச்சுவேலியிலும் தென்னை நாற்று மேடைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இதற்கான ஆரம்பக் கட்டப்பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

435 கிலோ எடை கொண்ட பரல் குண்டுகள் கண்டுபிடிப்பு – புளியங்குளத்தில் அதிரடிப் படையினரால் மீட்பு

புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 435 கிலோ எடை கொண்ட பெரல் குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.  45 கலன் கொள்ளளவு கொண்ட இரண்டு பெரல்களில் தயாரிக்கப்பட்ட இவ்வெடி குண்டுகள் இரண்டும் புளியங்குளம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டன. முதலாவது குண்டு ரி. என். ரி. வெடிபொருட்கள், இரும்பு துண்டுகள், இரும்பு குண்டுகள் நிரப்பப்பட்டு சுமார் 261 கிலோ எடை கொண்டது என்றும் இரண்டாவது குண்டும் இதே போன்று ரி. என். ரி. வெடிமருந்து மற்றும் இரும்புத் துண்டுகள் நிரப்பப்பட்டு சுமார் 174 கிலோ எடை கொண்டவையாகவும் இருந்தன என விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

இக்குண்டுகள் வெடிக்கும் பட்சத்தில் 360 பாகைக்கு வெடித்துச் சிதறுவதுடன் பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும் எனவும் தெரிவித்தனர். இவ்விரு குண்டுகளுடன் ஜொனி பட்டா என்றழைக்கப்படும் 10 மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

சனல்4 தொலைக்காட்சிக்கு ஜெனரல் அனுப்பிய இரகசிய கடிதத்தின் பின்னணியில் ஜே.வி.பி. – அரசாங்கம் குற்றச்சாட்டு

இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பிரிட்டனின் “சனல்4” தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இரகசியமாக அனுப்பி வைத்த கடிதத்தின் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாக அரசாங்கம் பூடகமாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கம் குறித்து கடுமையாக விமர்சித்து ஜெனரல் பொன்சேகா சனல்4க்கு அனுப்பியிருக்கும் கடிதம் தொடர்பிலேயே அரசாங்கம் இந்த சந்தேகத்தை வெளியிட்டிருக்கிறது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விவகாரம் பற்றி கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும;

“முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு சவால் விடுத்து சரத் பொன்சேகா கடந்த பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பி.பி.சி.செய்திச் சேவைக்குப் பேட்டியொன்றை வழங்கியிருந்தார். இந்த நிலையில் மார்ச் மாதம் முதல் வார ஆரம்பத்தில் அவர் சனல்4  (தொலைக்காட்சிச் சேவை)க்கு இரகசிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு வெந்நீர் மற்றும் குளிரூட்டி வசதிகள் இல்லையென அவர் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல், சமூக விடயங்கள் முக்கியமானவையாகும்.

சனல்4 ஐ பார்க்கும் போது, அது கடந்த காலங்களில் புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஆங்கில ஒலிபரப்பாகச் செயற்பட்டுள்ளது என்பதே எமது நம்பிக்கை. அதுமட்டுமல்லாது, இலங்கைப் படையினரை அவமதிக்கும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியதும் அந்த நிறுவனமே. எனினும் அது போலியானதென அரசாங்கம் உறுதி செய்திருந்தது.

தமிழீழ யுத்த வீரனாக கருதப்படும் பிரபாகரனின் ஊடகமான சனல் 4, ஜே.வி.பி. கூறுவது போல் சிங்கள யுத்த வீரனான சரத்பொன்சேகாவின் ஊடகமாக முடிந்தது எப்படி என்பதே எமது கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாக சந்தேகம் இருக்கிறது. சனல்4 வீடியோவின் இயக்குநர் சரத்பொன்சேகா என்று சந்தேகத்தில் இருந்து கேட்கிறோம்.

சரத்பொன்சேகா கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் அந்த கடிதத்தில் சோவியத் வழக்கமொன்று இருக்கிறது. இதன் உருவாக்கத்தின் பின்னணி யார் என்பது எமக்கு தெரியும். அந்த கடிதத்தில் சோசலிசப் போக்கொன்று இருக்கிறது. அதில் சரத்பொன்சேகா தான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அமைப்பையும் வரைபடமாக வரைந்து அனுப்பியுள்ளார்.

ஜே.வி.பி.யினர் ஒன்றும் இல்லாத நிலையில் ஏனையவர்களை சுரண்டி பிழைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுபோல் இப்போது சரத்பொன்சேகாவையும் அனோமா பொன்சேகாவையும் வைத்து சுரண்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஏனையோரை சுரண்டி பிழைப்பு நடத்துவதற்கு எதிரானதே மார்க்சிஸ கொள்கை. அந்த கொள்கையை பின்பற்றுவதாக கூறும் ஜே.வி.பி.யினர் அதையே மீறிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தனக்கு வசதிகள் வழங்கப்படவில்லையென சனல்4 க்கு கூறியதன் மூலம் சரத்பொன்சேகா, அவருக்கு மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த கடிதத்தின் மூலம் அவரது ஒழுக்கம், சட்டம் பற்றி சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.