சிறீ லங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் பதிலாகச் சமஷ்டி முறைக் கட்டமைப்பையே விரும்புகின்றது. அதில் பகிரப்பட்ட இறையாண்மை கோரப்பட்டுள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்றும் அவர்கள் சுயநிருணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப் பங்கீடானது இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஓர் அலகில் சமஷ்டி முறைக் கட்டமைப்பின் அடிப்படையில், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக நிறுவப்பட வேண்டும். அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டமும் ஒழுங்கும்இ கல்வி, சுகாதாரம் உட்படச் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேற்கூறியவற்றைப் பின்வரும் நிலைமைகளிற் பார்த்தல் வேண்டும்:
“எனினும், பல ஆண்டு காலம் நீடித்து ஏழு மாதங்களுக் முன்னர் முடிவடைந்த போர்க் காலத்தில் அழிந்த தங்கள் சொந்த வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பக்கூட இன்னமும் தொடங்காத இந்த நேரத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கத் தமிழர் விரும்பவில்லை. அவர்கள் இராணுவத்தினதும் ஒட்டுப்படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் மனித உரிமைமீறல்கள் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓரு கூறென ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பொதுவாக அச்சத்துடன் வாழ்கின்றனர்.” (http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes).
சனவரி 26, 2010 இல் நடைபெறவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி நான் சனவரி 8, 2010இல் மேலே தரப்பட்டுள்ளதை எழுதியிருந்தேன். சிறிலங்காவில் வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழருக்கு அக்கறை குறைவு.: சுரேன் சுரேந்திரன்அத் தேர்தலில் வாக்களித்தோரின் தேசிய சராசரி 75%ஆக இருந்தும் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் பங்குபற்றியோர் தொகை (அஞ்சல் வாக்குகள் உட்பட) 25% ஆகவே இருந்தது என்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. (http://www.slelections.gov.lk/presidential2010/AIVOT.html).
இந்நிலையில் சிறீ லங்காவில் நிலைமைகள் மோசமடைகின்றன என மனிதவுரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் 2009ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பற்றிய அறிக்கை சிறீலங்கா அரசைக் கடுமையாகக் குறைகூறியுள்ளது. சிறீலங்கா அரசோ அல்லது அதனுடன் நெருக்கமாவுள்ள ஒட்டுப்படைகளோ கேள்விமுறையற்ற கொலைகளுடனும் ஆட்காணாமற்போதலுடனும் தொடர்புடையன எனவும் சட்டத்தரணிகளும் ஊடகவியலாளரும் தொந்தரவு செய்யப்பட்டுப் பழிவாங்கப்படுகின்றனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் போரினால் பாதிப்புற்ற பகுதிகளிலேயே ஆட்காணாமற்போதல் மிகக்கூடிய தொகையில் உள்ளதென்றும் நூற்றுக் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர் எனக் கணிக்கப்பட்டுள்ளதென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு சில கிழமைகளுக்கு முன்தான் சீறீலங்காவில் நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் பெறுபேறுகள் பற்றிய வரைபடமானது இலங்கைத் தீவு இனவாரியாக இரு துருவங்களாகப் பிளவுபட்டிருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது (http://en.wikipedia.org/wiki/Sri_lankan_presidential_election_2010).
வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியனவும் மத்திய மாகாணத்தில் தமிழர் பல தலைமுறையாக வாழ்ந்துவரும் நுவரேலியா மாவட்டமும் பொன்சோகாவிற்கு வாக்களித்தன. பெரும்பான்மையான மற்றைய மாகாணங்கள் இராசபக்சவிற்கு வாக்களித்தன. இரு கொடியவர்களில் பொன்சேகா சற்றுக் குறைந்த கொடியவர் எனத் தமிழர் பொதுவாகக் கருதினாலும் பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மேல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் நம்பிக்கை இழந்துவிட்டதென்பதையும் தேசியப் பிரச்சனையைத் தீர்க்கும் ஆற்றலோ நேர்மையோ அவருக்கில்லை என்பதையும் இது தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. அதேபோன்று பெரும்பான்மைச் சிங்களச் சமூகமும் இரு கொடியவர்களில் எவர் தாம் விரும்புகின்ற அதிதீவிர தேசியவாதி என்பதையும் இனத்துவேசம் கொண்டவர் என்பதையும் இத்தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.
சிறீ லங்காவின் பொது ஆட்சிமுறையானது கருத்து வேற்றுமையை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் அப்படியானவர்களைக் கொடூரமாகத் தண்டிக்கும் என்பதையும் பல ஊடகவியலாளரும் அரசியல்வாதிகளும் கடத்தப்பட்டமையும் கொலை செய்யப்பட்டமையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை இராசபக்ச சிறையிலடைக்கத் தீர்மானித்துவிட்டார் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாகி விட்டது. தனி ஒருவரோ சமூகமோ கட்சியோ பிரிவினையை ஆதரிப்பதை நாட்டின் அரசியல் யாப்பே தடைசெய்கின்றது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டில் அதாவது தாயகம், தமிழர் தேசம், தமிழர் இறையாண்மை மற்றும் தமிழர் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை ஆணித்தரமாக ஆதாரமாகக்கொண்டு அம்முன்னணி அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
1977 ஆம் ஆண்டில் (பிரிவினைனயை எடுத்தியம்புவதைத் தடைசெய்கின்ற அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் செய்யப்படுமுன்) இலங்கையிலுள்ள தமிழர் இலங்கைத் தீவில் தமெக்கென்ற ஒரு தனிநாடு வேண்டும் என்ற தம் வேட்கையை எவ்வளவு வலுவாக எடுத்துக் காட்டினரோ அதேபோன்று வலுவுடன் உலகெங்குமுள்ள புலம்பெயர்ந்த தமிழர் தாம் குடிகொண்ட நாடுகளில் பக்கசார்பற்ற மேற்பார்வையுடன்கூடிய கருத்துக் கணிப்புகளை நடத்தி அதே வேட்கையை எடுத்துக் காட்டி வருகின்றனர்.
உலகத் தமிழர் பேரவையின் தலைவரான வண. எஸ்.ஜெ. இமானுவேல் அடிகளார் அவர்கள் பரிகாரமாக அல்லாது ஒரு தந்தையின் வழிகாட்டலாகத் தமிழ் உடன்பிறப்புகளுக்கு அண்மையில் எழுதிய மடலின் ( http://globaltamilforum.org/userfiles/file/GTF_Letter_from_President_to_Tamils_10_March_2010__-_Tamil_Version_-_Final.pdf ) ஒரு பகுதியைக் இங்கே மேற்கோள் காட்டுகின்றேன்:
“பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம் வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் பொழுது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.”