19

19

மன்னார் பாலம், தாம்போதி ஜனாதிபதியால் நேற்று திறந்து வைப்பு

mannar.jpgபுதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பாலத்தையும் தாம்போதியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (18 ம் திகதி) வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். மன்னார் தீவையும், பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் இப்பாலமும், தாம்போதியும் 2460 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் 1836 மில்லியன் யென் நன்கொடையையும் 640 மில்லியன் ரூபா உள்ளூர் நிதியையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலத்திற்கு இலங்கை ஜப்பான் நட்புறவு பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப் பாலம் 157 மீட்டர் நீளமாகவும் 10.4 மீட்டர் அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரு வழிப் பாதை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலம் முதல் 3.14 கிலோ மீட்டர் வரை (தள்ளாடி சந்தி), தாம்போதியும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும், இலங்கையில் கடமையாற்றும் ஜப்பான் தூதுவர் குனியோ தகஹசி விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு இப் பாலத்தைத் திறந்து வைத்தனர். இவ் வைபவத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, முன்னாள் எம். பிக்களான சிவநாதன் கிஷோர், பி. சுமதிபால, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ. எச். எம். அஸ்வர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

மதவாச்சி, மன்னார், தலைமன்னார் வரையிலான ஏ-14 வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இப் பாலமும், தாம்போதியும் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இரு தசாப்தங்களுக்கு மேலாக அழிவுற்றிருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மேற் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக இப்பாலம் இரு வருட காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தையும் தாம்போதியையும் நிர்மாணிப்பதற்கும் பயங்கரவாதப் பிரச்சினை பெரும் சவாலாக இருந்தது. இதனால் நிர்மாணப் பணிகளை சுமார் நான்கு மாதங்கள் இடை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட் டிருந்தது.

பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் பயனாக இதன் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் பயனாக மன்னார் தீவுப் பகுதியில் வாழுகின்ற மக்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்த போக்கு வரத்துப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

பான் கீ மூனின் கூற்று ஐ.நா சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயல் இலங்கைக்கு எதிராக செயற்படுவது நியாயமற்றது – ஜீ.எல்.

gl-p.jpgஉலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கை தொடர்பில் நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருப்பது ஐ.நா. சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயலாகுமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சகல நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டுமென்பது ஐ.நா. சாசனத்தின் ஜீவநாடியாக உள்ளது. சிறிய நாடுகளின் பாதுகாப்புக்காகவே ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக செயற்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாதென்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு அவசியமில்லையென வலியுறுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொறுப்புகள்’ தொடர்பாக ஆராய்வதெனின், 118 நாடுகளின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாமல், நிராகரிக்க முடியாது. சில நாடுகளின் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கான சாட்சியங்கள் இருந்தும், அந்த நாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள வெற்றி இன்று சர்வதேச சவாலை எதிர்நோக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கும் இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக ‘நெருக்கடிகள் தொடர்பான சர்வதேச குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாகவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள் குழுவில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இன்னமும் தமிழீக் கோட்பாட்டைக் கைவிடவில்லை.

ஆனால், இலங்கையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்கும் நிலைப்பாடு முற்றிலும் மாறுபாடானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் இவர்கள் இங்கு அரசியல் கட்சிகள் மூலம் மாத்திரமன்றி சிறு அமைப்புகள் ஊடாகவும் முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

2 வது இராணுவ நீதிமன்றுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க முடிவு – இராணுவத் தளபதி தகவல்

jj.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய புதிய நீதிபதிகளின் பெயர்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று பரிந்துரைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகள் இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளனரென்றும் குறிப்பிட்டார். இராணுவ சட்டத்திற்கு அமைய இரு இராணுவ நீதிமன்றங்களுக்கு ஒரே நீதிபதியை நியமிக்க அனுமதி இருக்கின்ற போதிலும் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் அதி உயர் வெளிப்படை தன்மையையும், நியாயமும் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெட்டிக்கொன்று கைகளையும் எடுத்துச் சென்ற பயங்கரம் நூற்றுக்கணக்கானோர் பார்த்திருக்க சம்பவம்

நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒருவரை மீன்வெட்டும் கத்தியால் வெட்டிக்கொலை செய்த சிலர் கொலையுண்டவரின் இரு கைகளையும் எடுத்துச் சென்ற பயங்கரச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கண்டி மத்திய சந்தையின் முன்பாக இடம்பெற்றுள்ளது.கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பழவியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு வியாபாரியே இவ்வாறு பயங்கரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

நண்பகல் 12 மணியளவில் ஆட்டோவில் திடீரென அங்கு வந்த சிலர் அந்த வியாபாரியைப் பிடித்து இழுத்து கத்தியால் வெட்டி துடிக்க துடிக்க கொலை செய்தனர்.பின்னரும் ஆத்திரம் தாங்காமல் அவரின் இரு கைகளையும் இறைச்சிக் கடையில் விலங்கை வெட்டுவது போல வெட்டி எடுத்துச் சென்றனர். இதனை அங்கு கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கி.டீ.பிரேமந்திர (38 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டவராவார்.

கண்டி நீதிவான் சம்பவ இடத்துக்கு மாலை 3 மணியளவில் வந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்