ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் படுத்தியுள்ளது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். இக்கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும், குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகளிர் தினத்தின் சுருக்க வரலாறு.
மகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட்டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!
ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னன் வாக்களித்தான். ஆனால், அது அவனால் இயலாமற்போகவே மன்னன் லூயிஸ் முடிதுறந்தான். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் ‘விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.
பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக்குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தான். அந்த நாள் மார்ச் 8. 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, “மகளிர் தின”மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!
1857ல் நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இப்போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலைகுலைந்தார். உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜெர்மனில் The Vote for Women மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னன் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8 ஐ, நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து. ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ந் திகதி ரஷ்யாவில் உள்ள சென்பீற்றர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஸ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தையடுத்து 1921 ம் ஆண்டு மார்ச் 8ந் திகதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுஸ்டிக்கப் பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.
ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சமத்துவ
கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், இலட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது..
1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.
இச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துக்கள் குறித்துச் சற்றுச் சிந்தித்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். பெண்ணியத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபுர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுந்தது. குடும்பம்இ உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம், தந்தை வழிக்கோட்பாட்டுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் என்பன பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை (Biological Foundation ) அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன. நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.
முதலாளித்துவ வாதத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியாளர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் அடிப்படை என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.
பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.
பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.
பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.
சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக கோட்பாட்டு, வரலாற்று விளக்கங்கள் மேற்குறித்தவாறு காணப்பட்டாலும் கூட பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா என்பது கேள்விக்குறியே. சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது, சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை… இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்…. வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.
பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.
இவ்விடத்தில் 2007ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில் ‘அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்ற அவர், அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அத்துடன், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார். இவ்வறிக்கையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்வது பயனுடையதாக இருக்கும்.