31

31

வடக்கு மக்களின் நீர்தட்டுப்பாட்டை நீக்க தெற்கிலிருந்து நதி திசை திருப்பும் திட்டம் – ஜனாதிபதி

president.jpgவட பகுதி மக்கள் முகம் கொடுத்துள்ள தண்ணீரிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் நதி திசை திருப்பும் திட்டம் முன்னெடுக்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்கிரிகலவில் தெரிவித்தார். அதேநேரம் அடுத்த வருடம் முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் இலங்கையின் வரலாறு உள்ளடக்கப்பட்டு, பாடசாலைகள் தோறும் போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

‘வேர்ல்ட் விஷன்’ நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் ‘முத்துகா’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முல்கிரிகல, பாலங்கட வெவயில் நிர்மாணித்துள்ள பொது நூலகத்தைத் திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை யாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமக்கு 2500 வருட கால கெளரவமான வரலாறு உள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக துண்டாடப்பட்டிருந்த நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தியுள்ளோம். இவ்வாறு சிறப்புமிக்க வரலாற்றை இந்நாடு கொண்டிருக்கின்றது.  இருந்தும் அதனைப் பாடசாலைகளில் போதிப்பது ஏற்கனவே சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அடுத்த வருடம் முதல் இலங்கை வரலாறு பாடசாலைப் பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு போதிக்கப்படும்.

நில்வள கங்கை ஹம்பாந்தோட்டைக்குத் திசை திருப்பப்பட்டு இங்கு வாழும் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். அதே நேரம் வட பகுதியிலுள்ள நீர் நிலைகளைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் வரையும் புதிதாக கங்கை யொன்று அமைக்கப்படும்.

சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகளுக்கு புதிய குழு நியமனம்

sarath_fonseka-02.jpgஇராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள புதிதாக மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குழுவின் தலைவராக பணியாற்றுவார் எனவும் தென்பிராந்திய பாதுகாப்பு தலைமையாளர் மேஜர் ஜெனரல் லலித் தோலகல மற்றும் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள் எனவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டு வழக்குகளுக்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு விரோதமானது எனச் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கண்ணிகள் அகற்றும் பணியில் வடக்கில் இராணுவம் தீவிரம் – 1100 இராணுவ பொறியியலாளர், 7 அரச சார்பற்ற நிறுவனங்கள் முழுமையாக ஈடுபாடு

வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளை இராணுவத்தினர் துரிதமாக மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடனேயே கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை இராணுவத்தினர் துரிதப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கென கண்ணிவெடிகளை அகற்றும் துறையில் நிபுணத்துவம் பெற்ற 1100 இராணுவ பொறியியலாளர்களும், 7 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் ஏ-32 வீதியின் இரண்டு பக்கமும் காரைநகர் ஜெட்டி வரையும், ஏ-9 வீதியின் இரண்டு பக்கமும் சுன்னதீவு முதல் ஆனையிறவு வரையான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சியில் ஆனையிறவு முதல் ஓமந்தை வரையான ஏ-9 வீதியின் இருபக்கமும் ஏ-35 வீதியின் இரு பக்கமும், பி- 69 வீதியின் இருபக்கமும் அகற்றப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள 25 கிராமங்கள் கண்ணிவெடி அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது முல்லைத்தீவின் ஒன்பது கிராமசேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் மாந்தை மேற்கின் 15 கிராம சேவகர் பிரிவுகள், மாந்தை கிழக்கின் 13 கிராம சேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியிலுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் அகற்றும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் சேமமடு கிராம சேவகர் பிரிவில் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சுமார் 80 ஆயிரத்துக்கு உட்பட்ட எண்ணிக்கையிலானவர்களே மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் நோக்குடன் படைவீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இடியுடன் கூடிய மழை சில தினங்களுக்கு நீடிக்கும்

lightning.jpgநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாலைவேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் இந்தக் காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அவதான நிலையம் பொது மக்களை கேட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மின்னல் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டதோடு 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இடி மின்னல் வேளைகளில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இடி, மின்னல் வேளையில் கையடக்கத் தொலைபேசியுடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த நபர் ஒருவரை மின்னல் தாக்கியதில் நால்வர் மாத்தளை பகுதியில் காயமடைந்தனர். மின்னல் தாக்கியதில் நேற்று முன்தினம் புசல்லாவ பகுதியில் ஒருவர் இறந்ததோடு மற்றொருவர் காயமடைந்தார்.