தாயக மக்களின் பெயரில் அரசியலும் வியாபாரமும் புலம்பெயர்ந்த நாடுகளில் வெகு அமோகமாக நடைபெறுகின்றது. குறிப்பாக தாயக மக்களுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்களும் பொது ஸ்தாபனங்களும் தங்கள் கணக்கியல் கோவைகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதில்லை.
என்பீலட் நாகபூசணி அம்மன் ஆலயம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்படுகின்றது என்ற பெயரிலேயே ஒன்பது பேர் இணைந்து இந்த ஆலயத்தை உருவாக்கினர். வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயமும் அதே நோக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆர் ஜெயதேவனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை நழுவிச் சென்றது.
என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் 2002 யூலையில் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான தற்போது ஆலயம் அமைந்தள்ள கட்டிடம் 2003ல் 370 000 பவுண்களுக்கு வாங்கப்பட்டது. நவரட்ணம் சண்முகநாதன், அந்தோணிப்பிள்ளை காந்தரூபன், கதிரவேற்பிள்ளை சிவசின்மியநாதன், பொன்னையா கைலாயபதிவாகன் ஆகியவர்களின் பெயரில் தற்போதைய ஆலயக் கட்டிடம் அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவுவதை தங்கள் நீண்டகாலத் திட்டமாக அறிவித்து இருந்த ஆலய நிர்வாகம் இந்த ஆலயத்தை பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் Charity Commission கீழ் பதிவு செய்யவில்லை. இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் கட்டிடங்கள் வாங்கும் போது நன்கொடைகள் பெறப்படும் போதும் வரி விலக்குச் சலுகைகள் இருந்தும் இவர்கள் தங்களைப் பதிவு செய்வதைத் தவிர்த்துள்ளனர். பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்வது என்பது ஒரு பொது அமைப்பினது நல்லநடைமுறை. கணக்கு விபரங்கள் பொதுநல அமைப்புகளின் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படும். ஆனால் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயம் அதனை பல ஆண்டுகளாகச் செய்யவில்லை.
ஆயினும் தாயக மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் பல்வேறு ஆலயப் பூஜை முறைகளை அறிமுகப்படுத்தி நிதி வசூலில் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. வன்னி யுத்தம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் 2009 ஜனவரி முதல் மார்ச் வரை தாயக மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் கோடி அர்ச்சனை என்ற பூஜையை அறிமுகப்படுத்தி ஒரு நாளுக்கு ஆயிரம் பவுண்கள் என்ற அடிப்படையில் 100 நாட்களுக்கு 100,000 பவுண்கள் திரட்டி இருந்தனர்.
தற்போது மாசி மகத்தை முன்னிட்டு 1008 குடம்பால் அபிசேகம் மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த நிதி தாயகத்தில் முதியோர் இல்லம் அமைக்க வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஒரு பால் குடம் 10 பவுண்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒன்பது பேர்ரை அழைத்துவந்து பால்குடம் எடுத்தால் 10வது குடம் இலவசமாக வழங்கப்படுவதாக அவ்வாலயத்திற்குச் சென்றுவரும் பக்தர் ஒருவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.
என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு ஒரு இணையத்தளம் இருந்த போதும் அவ்விணையத் தளத்தில் ஆலய நிர்வாகம் பற்றியோ அல்லது ஆலயம் மேற்கொள்ளும் உதவித்திட்டங்கள் பற்றியோ எவ்வித தகவலும் அதில் காணப்படவில்லை.
லண்டனில் உள்ள ஆலயங்களில் பொருளாதாரரீதியாகக் கூடுதல் லாபமீட்டும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் அதன் கணக்கு விபரங்களையோ அதன் உதவி நடவடிக்கைகளையோ இணையத்தில் வெளியிடத் தயக்கம் காட்டி வருகின்றது.
இது பற்றி ஆலயத்தின் தனாதிகாரி பசுபதி அவர்களிடம் கேட்டபோது ஆலயத்திற்கு நேரில் வந்து அவற்றைப் பார்வையிட முடியும் என்றும் தொலைபேசியில் அவற்றை தெரிவிப்;பது சிரமம் என்றும் தெரிவித்தார். ஆலயத்திற்கு வரும் அனைத்து வருமானங்களிலும் செலவு போக மிகுதியை தாயகத்திற்கு அனுப்பி வருவதாகவும் அவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். எதற்காக இதுவரை பொதுநல அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யவில்லை எனக் கேட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுக்கே தாங்கள் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் எனஉதவி கேட்பவர்களுக்கு உதவி வருவதாகத் தெரிவித்த அவர் நேரில் வரும்பட்சத்தில் அவற்றைப் பார்வையிடலாம் எனவும் தெரிவித்தார். பல்கலைக் கழகங்களில் கற்கும் 15 வன்னி மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய்களை வழங்கி வருவதாகவும் சென் ஜோன்ஸ் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னி மாணவர்களுக்கு உதவி வருவதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
லண்டன் குரலின் அடுத்த இதழில் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்துடனான சந்திப்பின் விபரங்களை வெளியிடுவோம்.
என்பீலட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பூஜைமுறைக்கு ஒத்த பூஜைமுறைகள் கனடாவில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்திலேயே இடம்பெற்றது. இவ்வாலயம் ஸ்பாபறோவில் விக்ரொரியா பார்க் லோறன்ஸ் சந்திப்பில் அமைந்தள்ளது. இங்கு லட்ச தீப அர்ச்சனை என்ற முறையை அறிமுகப்படுத்திய குருக்கள் ஒரு சுட்டி தீபத்தை 2 கனடிய டொலருக்கு விற்பனை செய்தார். ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எத்தினை தீபச்சுட்டிகளையும் வாங்கி ஏற்றலாம். ஆனால் லட்ச தீபங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்றப்பட வேண்டும். இது வெற்றியளிக்கவே குருக்கள் கோடி தீப அர்ச்சனையை அறிமுகப்படுத்தினார். இவற்றின் தொடர்ச்சியே என்பீல்ட் கோடி அர்ச்சனையும் பால்குடமும்.
தாயகத்திற்கு என்ற பெயரில் பெரும் எடுப்புகளில் நிதி வசூலிப்புகள் நடைபெறுகின்றது. ஆனால் இவ்வாறு பெரும் எடுப்புகளில் சேகரிக்கப்படும் நிதிக்கு என்ன நடந்தது என்பதனை நிதி சேகரிப்பில் முன்னிள்றவர்கள் வெளியிடுவதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு வணங்கா மண். பலநூறாயிரம் செலவில் அனுப்பப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் பாவணைக்கு உதவாதி நிலையை அடைந்தன. சுண்டக்காய் கால்ப் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றளவில் புலம்பெயர்ந்த மக்கள் வழங்கிய நிதி விரயமானது.
தற்போது நிதி சேகரிப்பில் ஈடுபடும் ஒரு சில அமைப்புகள் மட்டுமே தமது கணக்குக் கோர்வைகளில் வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் நீண்டகாலமாகவே பெருமளவு உதவித் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. அத்துடன் அதன் கணக்கு விபரங்களையும் இணையத்தில் வெளிப்படையாகவே வெளியிட்டும் வருகின்றது. அதனால் அடியார்களது நன்மதிப்பையும் பெற்றுள்ளது.
புலம்பெயந்த நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் முடிந்தவரை தாயக மக்களுக்கு உதவமுன்வர வேண்டும் அதே சம்யம் தங்கள் கணக்குக் கோவைகளை வெளிப்படையாகப் பேணவும் முன்வர வேண்டும். அது மட்டுமே அவர்களுடைய நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உள்ள ஒரே வழி.