10

10

கிழக்கு மாகாண நீர்பாசனத் திட்டம்!

he_the_president.jpgகிழக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும்  திட்டத்தை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற ரீதியில் சமர்ப்பித்திருந்தார்.

இந்தத் திட்டத்துக்கு குறைந்த வட்டிக் கடனுதவியாக ஜப்பான் அரசாங்கம் 4904 மில்லியன் யென்களை வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் இரக்காமம், சம்மாந்துறை, பொத்துவில், தெஹிஅத்தகண்டிய, மஹஒய, உஹன, தமன, ஹிங்குரானை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநிர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.

மிலிபேண்ட்டின்; பிரதிநிதியாக சேர் பீட்டர் ரிக்கெட்ஸ் இன்று இலங்கை வருகை.

david-miliband.jpgபிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபேண்ட்டின்; பிரதிநிதியாக அந்த அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர்சேர் பீட்டர் ரிக்கெட்ஸ் இன்று இலங்கை வருகிறார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர் இன்று காலை 10:30 மணிக்கு வெளிவிவகார அமைச்சர்  ரோஹித்த போகொல்லகமவைச் சந்தித்து பேச்சு நடத்தவிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையில் இலங்கை தொடர்பில் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்த கருத்து பற்றியும் பேசப்படும்; என அறிவிக்கப்பட்டுள்ளது

வன்னியில் கைவிட்டு வந்த சொத்துகளை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை – கட்டளைத் தளபதியிடம் பதிவு செய்ய வேண்டுகோள்

kishor.jpg வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியில் வளங்களைக் கைவிட்டுவந்த மக்களுக்கு அவர்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

மக்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வன்னி கட்டளைத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா கக் கூறிய கிஷோர் எம்.பீ. வாகனங்களின் உரிமையாளர்கள் வன்னி கட்டளைத் தளபதியிடம் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

விபரங்கள் பதிவுசெய்யப்பட்டதும், குறித்த உரிமையாளர்களுடன் சென்று உரிய ஆதாரங்களைக் காண்பித்து வாகனங்களைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் கிஷோர் எம்.பீ. தெரிவித்தார்.

வன்னி மக்களின் வாழ்க்கையை பழைய நிலைக்குக்கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறிய அவர், அரசியல் கொள்கையில் உறுதியாக இருப்பதுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதே பொருத்தமான நடவடிக்கையாகுமென்றும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கு மூன்றரை இலட்சம் ரூபா வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்குவதுடன், முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை கட்டங்கட்டமாக மீளக்குடியமர்த்துவது அரசியல் கைதிகள் அனைவரையும் மூன்று கட்டங்களாக விடுவித்தல்.

அதாவது பிணையில் விடுவிப்பது, விடுதலை செய்வது, வழக்குத் தொடர்வது என இந்தக் கைதிகளை விடுவித்தல் புனர்வாழ்வளி க்கப்பட்டு வரும் பதினோராயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்களை சமூகமயப்படுத்துதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படு த்துவது தொடர்பில் அரச உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகக் கூறினார். வன்னி பல்கலைக்கழகம்

மேலும் வன்னிக்கெனத் தனியான ஒரு பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்ப டுகின்றது. நெலுக்குளத்தில் 150 ஏக்கர் காணியில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் முழுமையான ஒரு தனியான பல்கலைக்கழகமாகும்.

அதுபோல் தாதியர் பயிற்சிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என்பவற்றை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த சிவநாதன் கிஷோர் எம்.பீ, கடந்த 33 வருட காலமாக சொல்லொணாத் துக்கங்களை அனுபவித்த மக்கள் இன்று தெளிவை அடைந்துள்ளார்கள். எனவே, இனியும் வீராவேசம் பேசினால் மக்களின் நிலைமை மேலும் அதளபாதாளத்தைச் சென்றடைந்துவிடும். எமக்குக் கொள்கை உண்டு.

வடக்கு, கிழக்கிற்கு ஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் உறுதியாக உள்ளோம். அதற்கான முழு ஆதரவையும் பெற்றுக் கொடுப்பேன். போராட்டம் நடந்த காலத்தில் அதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தோம். இன்று நிலைமை மாறிவிட்டது. பசியில் வாடிக் கொண்டிருப்பவர்களுடன் தமிbழத்தைப் பற்றிப் பேச முடியாது என்றும் கிஷோர் மேலும் தெரிவித்தார்.

‘எந்தவொரு வெளிநாட்டிற்கும் நாம் அடிமை அல்ல’ – மக்களை வாட்டி வதைக்க எந்தச் சட்டத்தையும் அரசு அமுல்படுத்துவதில்லை

rathnasiri_wicremanayake.jpgஎமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல. அரசுக்கு எதிரான சக்திகளுக்கும், நாடுகளுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலி கட்ட வேண்டும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது.

பிரதி பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்காக பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார். பிரதமர் தொடர்ந்தும் பேசும் போது :- அவசரகாலச் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எந்தளவு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். பெரும் சுமையிலிருந்து விடுபட்டதைப் போன்று உணர்கிறார்கள். இவ்வாறான ஒரு சுமையை மீண்டும் மக்களின் தலையில் சுமத்த நாம் விரும்பவில்லை.

நாட்டையும், சமுதாயத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த புலிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளின் ‘உறுமல்கள்’ ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சற்று மாறுதலாக புலிகளின் புள்ளிகளின் நிறம் மட்டும் இன்று மாறியிருக்கிறது.

மனித உரிமைகள் பேணப்படுவது குறித்து எம்மிடம் கேள்விகள் கேட்பதன் ஊடாக எமது சுதந்திரத்தில் தலையீடு செய்கிறார்கள். நாம் எந்தவொரு நாட்டினதும் அடிமையல்ல. எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ நாடும் அல்ல. நிலைமை இவ்வாறு இல்லாவிடினும் சிலர் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கி றார்கள்.

நாட்டின் நன்மைக்காக, நாட்டு மக்களின் நன்மைக்காக எடுக்கப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் பொது இணக்கப்பாடு இல்லாதது பெரும் குறையாக உள்ளது. நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்றுள்ளவர்கள் என நீங்கள் நினைப்பீர்களா னால் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக இருப்பீர்களா? என்பதை கேட்க விரும்புகிறேன்.

இந்த நாட்டின் துரதிஷ்டம் என்னவெனில், கட்சி, நிறம், கொள்கை என்பவற்றால் நாட்டிற்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு பொது உடன்பாடு காண முடிவதில்லை. இவ்வாறான குறுகிய நோக்கங்களால் எமது நாட்டுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் பலமடைந்து வருகின்றன. எனினும், நாம் இன்னும் பிரிந்து நிற்கி றோம். இவைதான் நாம் முகம் கொடுத்து வரும் துரதிஷ்டவசமான நடவடிக்கைகள், எனினும், எமது புலனாய்வுப் பிரிவு இன்னும் தனது கடமையை செய்து வருகிறது.

மக்களை வாட்டி வதைப்பதற்காக அரசு எந்த சட்டத்தையும் நடைமுறைப்ப டுத்தவில்லை. ஊடக அடக்குமுறை, தொழிற்சங்க உரிமைகளை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை நாம் பயன்படுத்தியதில்லை. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன்.

நாட்டின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்திற்கும் எம்மால் அனுமதி வழங்க முடியாது. பொறுப்புள்ள ஒரு அரசு என்ற வகையில் இதனை அனுமதிக்க முடியாது.

அரச விரோத சக்திகளுக்குத் தேவையான விதத்தில் தகவல்களை வழங்கும் ஒரு சாராரும் இருக்கிறார்கள். இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பலம்வாய்ந்த நாடுகளும் அமைப்புகளும் இன்று எமது நாட்டுக்கு எதிராக வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உலக நாடுகளில் புலிகளை பலமடையச் செய்வதற்காக சில குழுக்கள் தொழிற்பட்டு வருகின்றன. ஜேர்மனியில் இவ்வாறான சிலர் கைது செய்யப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள். வருடக் கணக்காக பின்தள்ளப்பட்டுப் போன எமது நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கையை அரசு செய்து வருகிறது.

இவ்வாறான அபிவிருத்திகளுக்கு பலன் கிடைக்கப் போவது எதிர்காலத்திலேயே. வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அவர்களது பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.

மகா சிவராத்திரி தினம்; ஒலிபெருக்கியை பாவிக்க பொலிஸாரிடம் அனுமதி பெறலாம்

மகா சிவராத்திரி தினத்தன்று இரவில் ஒலிபெருக்கியைப் பாவிப்பதற்குப் பொலிஸாரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள முடியுமென்று அகில இலங்கை இந்து மாமன்றம் அறிவித்துள்ளது.

சகல இந்து ஆலயங்களும், அமைப்புகளும் தங்கள் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு விண்ணப்பித்து, ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியுமென மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போலவே இவ்வருட மஹா சிவராத்திரி தினமான 13 ம் திகதி சனிக்கிழமையன்று சகல இந்து ஆலயங்களிலும் இரவு முழுவதும் ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது.

இந்த வேண்டுகோளையடுத்து, மாமன்றம் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்ட போது, இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் சகல பொலிஸ் நிலையங்களுக் கும் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

எனவே, சகல இந்து ஆலயங்களும் தங்கள் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு, உரிய வகையில் விண்ணப்பம் செய்து இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம் என இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் கந் தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்

பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது.

இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு படைகளின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க இந்த அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண இந்த அலுவலகம் உதவும் அதேவேளை, இங்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையின் யாழ். தளபதியையும் சந்தித்து பேச முடியும். யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துடனேயே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் தீ

நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் இடம் பெறும் பகுதியில் நேற்றுத் தீ விபத்தொன்று இடம்பெற்றதுடன் சில மணித்தியாலங்களில் அதனைக் கட்டுப்படுத்த முடிந்ததாக மின்வலு எரிபொருள் அமைச்சு தெரிவித்தது.

மேற்படி நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியசாலையொன்றே தீப்பிடித்துள்ளதாகவும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புமில்லை யெனவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இத் தீவிபத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப் பட்டுவருவதுடன் தீ விபத்துக்கான காரணம் பற்றி ஆராய்வதற்காக சீன நிறுவனத்தின் குழுவொன்று விசாரணைக ளில் ஈடுபட்டு வருவதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் – 02 : போனஸ் ஆசன முறை சிறுபான்மையினருக்கான விமோசனம் அல்ல – புன்னியாமீன்

srilanka_parliament_02.jpgவிகிதாசார தேர்தல் முறையின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படும்போது தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்படுவதினால் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தினைவிட,  விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலமாக சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்தகவு அதிகமானது என்பதைக் கடந்த வாரம் நோக்கினோம்.

பெரும்பான்மை தேர்தல் முறையினையும்,  விகிதாசார தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராயக்கூடிய ஏனைய தலைப்புக்களை இன்று நோக்குவோம்.

நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும்முறை

முதலாம் குடியரசு அரசியலமைப்பின் 70ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவின்படி தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பான்மைக்கான தகுதியின்மை எனும் தலைப்பில் விபரிக்கப்பட்ட தகுதியீனங்களுக்கு உரித்தாகாத தேர்தல் யாப்பில் பெயர் பதிவாகியுள்ள எந்த ஆளுக்கும்,  நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் மூலமாகவோ, சுயேட்சை வேட்பாளராகவோ நேரடியாகத் தாக்கல் செய்ய முடியும்.
இந்த முறையின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் உரிமை இருந்தாலும் கூட,  மக்கள் மத்தியில் பிரபல்யமான அரசியல் கட்சியொன்றினூடாக சிறுபான்மை வேட்பாளர் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது கேள்விக் குறியே.

ஏனெனில்,  தேர்தல் தொகுதியொன்றிற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் ஒரு வேட்பாளரை மாத்திரமே அபேட்சகராக நிறுத்தமுடியும். எனவே,  சிறுபான்மை இனத்தவர்கள் செறிவாக வாழும் வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் அமைந்துள்ள தொகுதிகளில் – குறிப்பாக பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் தொகுதிகளில் பிரதான கட்சிகள் இச்சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டாது. (பல அங்கத்துவ,  இரட்டை அங்கத்துவ தொகுதிகள் நீங்கலாக)  இதனால் விகிதாசார தேர்தல் முறை அறிமுகமானதை அடுத்து இலங்கையில் தோற்றம் பெற்றுள்ள சிறுபான்மை அரசியல் கட்சிகளால் வடக்கு,  கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எந்தவொரு பிரதிநிதியையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும்.
யதார்த்த பூர்வமாக நோக்குமிடத்து வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களிலும் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியையும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சுற்றியே வாக்காளர்களின் விருப்புக்கள் அமைவதினால் சுயேட்சையாகவோ,  அன்றேல் ஒரு சிறுபான்மைக் கட்சியின் மூலமாகவோ போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமான காரியமே.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நியமனப் பத்திரம் தாக்கல் செய்தல்

1978 யாப்பின் கீழ் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் யாப்பின் 99ம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 ம் குடியரசு அரசியலமைப்பைப் போல இங்கு நேரடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் மாவட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஊடாக அல்லது சுயேட்சை குழுவாக ஒரு பட்டியலையே தாக்கல் செய்ய வேண்டும்.

யாப்பின்படி பட்டியலைத் தாக்கல் செய்கையில் தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றிலொரு பங்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படல் வேண்டும். யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கமைய பட்டியலைத் தயாரிக்கும்போது தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவாகவுள்ள அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றைக் கூட்ட வேண்டும்.

உதாரணமாக கண்டி தேர்தல் மாவட்டத்திற்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுமாயின் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் அல்லது சுயேட்சைக் குழுக்களும் பின்வரும் எண்ணிக்கைக்கமைய பட்டியலைத் தயாரித்தல் வேண்டும். 12+03 = 15 வேட்பாளர்கள் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்போது பிரதான கட்சிகள் அத்தேர்தல் மாவட்டத்திலுள்ள சிறுபான்மைச் சமூகங்களினது வாக்குகளையும் பெற்றுக் கொள்ள விழைவதினால் பட்டியலில் சிறுபான்மை சமூக வேட்பாளர்களுக்கும் இடம் வழங்குதல். எனவே,  பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறையில் கிடைக்காத வாய்ப்பு இங்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தினால் கிடைக்கிறது.

வாக்களிக்கும் முறை

1972ம் ஆண்டு குடியரசு யாப்பின் கீழ் வாக்களிப்பது நேரடி முறையாகும். வாக்குரிமை பெற்ற எவரும் தொகுதி ரீதியாக தான் விரும்பும் வேட்பாளருக்கு நேரடியாக புள்ளடி இடுவதன் மூலம் வாக்களிக்கலாம். எனவே,  பெரும்பான்மைச் சமூகத்தினர் அதிகமாக வாழும் தேர்தல் தொகுதிகளில் பெரும்பான்மைப் பிரதிநிதிகள் தெரிவாக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இங்கு அதிகமாக உள்ளன.

2ம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் போது வாக்களிப்பு 2 கட்டங்களாக நிகழ்த்தப்படும்.

1. தான் விரும்பும் கட்சிக்கு சுயேட்சைக் குழுவிற்கான வாக்கு.
2. விருப்புத் தெரிவு வாக்கு

விகிதாசார முறையின் கீழ் வாக்களிக்கும் விளக்கங்கள் 1981 இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்டியல் சிங்கள அகரவரிசைக்கமைய வரிசைப்படுத்தப்பட்டு,  அபேட்சகர்களுக்கு இலக்கங்கள் ஒதுக்கப்படும். இதில் கூடியது 3 அபேட்சகர்களுக்கு விருப்புத் தெரிவு வாக்குகளை வழங்குமாறு வாக்காளர் கோரப்படுவர்.

விருப்புத் தெரிவு வாக்குமுறை வேட்பாளர் மத்தியில் போட்டி நிலையையும்,  குரோதங்களையும் ஏற்படுத்துவதால்,  விருப்புத் தெரிவு முறை பற்றி பலத்த கண்டனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட சிறுபான்மையினத்தவர்களுக்கு தமது சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கும் நிலை சாத்தியப்படுவதை நிராகரித்து விடமுடியாது.

உதாரணமாக 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 2 முஸ்லிம் பிரதிநிதிகளும்,  தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியுமாக மொத்தம் 3 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்றால் விகிதாசார தேர்தல் முறையில் விருப்புத் தெரிவு வாக்குமுறையும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது.  மாறாக பெரும்பான்மைத் தேர்தல்முறை அமுல்படுத்தப்பட்டிருந்தால் 3 முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாக முடியுமா என்பது கேள்விக்குறியே.

ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யும்முறை

பெரும்பான்மைத் தேர்தல் முறையின் கீழ் தொகுதி ரீதியாக நடைபெறும் தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் நேரடியாக உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார். உதாரணமாக x எனும் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட A, B, C  ஆகிய வேட்பாளர்கள் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளனர் எனக் கொள்வோம்.

A – 18.332
B – 16.218
C – 573

இதில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் A ஆவார். இதன்படி X எனும் தேர்தல் தொகுதிக்கு A என்பவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல்.
1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் ஆசனங்களைப் பகிர்ந்தளிக்க பின்வரும் 6 படிமுறைகள் கையாளப்படும்.

1ம் படிமுறை : போனஸ் ஆசனத்தினை வழங்குதல்
2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள்
    குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்
3ம் படிமுறை : தொடர்புடைய வாக்குகளைக் கணித்தல்
4ம் படிமுறை : முடிவான எண்ணைக் கணித்தல்
5ம் படிமுறை : முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்
6ம் படிமுறை : மிகுதிப் பெரும்பான்மை முறைக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

மேற்குறித்த 6 படிமுறைகளுக்கமையவே தேர்தல் மாவட்டத்துக்கான பிரதிநிதிகளைத் தீர்மானிப்பர். இப்படிமுறைகளினால் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்புக்களும் உள்ளன. நன்மைகளும் உள்ளன. இதனைப் பின்வரும் உதாரணத்துக்கமைய ஆராய முடியும்.

உதாரண எடுகோள்

X எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும்,  இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A = 5,400 வாக்குகள்
கட்சி B = 3,600 வாக்குகள்
கட்சி C = 1,410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
மொத்தமாக செல்லுபடியான வாக்குகள் 11700

1 ம்படிமுறை – போனஸ் ஆசனத்தினை வழங்குதல்

விகிதாசார தேர்தல் முறையில் ஆசனங்களைப் பதிவு செய்யும்போது பேணப்படும் 1வது படிமுறை போனஸ் ஆசனத்தை வழங்குவதாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களுள் எந்தக் கட்சி அல்லது குழு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதோ, அந்தக் கட்சி அல்லது குழுவிற்கு வழங்கப்படும் அன்பளிப்பு ஆசனத்தையே போனஸ் பிரதிநிதித்துவ ஆசனம் என அழைக்கின்றோம்.

எனவே, எமது உதாரண எடுகோளின்படி அதிக வாக்குகளைப் பெற்றுள்ள கட்சி A ஆகும். எனவே A கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்படும்.
போனஸ் ஆசன முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாய்ப்புக்கள் உண்டு எனப்பொருள் கொள்ள முடியாது. பெரும்பாலும் இதன் மூலம் பிரதானக் கட்சிகளுக்கே வாய்ப்பு அதிகம். இலங்கையில் இதுகால வரை நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களில் போனஸ் ஆசனங்கள் பெற்ற கட்சிகளைப் பின்வரும் அட்டவணை மூலம் கண்டு கொள்ளலாம்.; வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே சிறுபான்மைக் கட்சிகள் நன்மை பெற்றுள்ளன.

1989/ 1994 /2000/ 2001/ 2004ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற அதிகமான வாக்குகளைக் கொண்டு போனஸ் ஆசனம் பகிரப்பட்ட முறை. மேற்குறிப்பிட்ட ஆண்டு ஒழுங்கில் மாவட்டத்தில் வெற்றியடைந்த கட்சிகள் தரப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டம் : 1989/1994/ 2000/ 2001 / 2004
1. கொழும்பு : ஐ.தே.க / பொ.ஜ.மு /ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.  
2. கம்பஹா:  ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
3. களுத்துறை: ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
4. கண்டி: ஐ.தே.க /ஐ.தே.க /பொ.ஜ.மு / ஐ.தே.க/ ஐ.தே.க.
5. மாத்தளை : ஐ.தே.க/பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
6. நுவரெலியா : ஐ.தே.க/ ஐ.தே.க / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
7. காலி : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
8. மாத்தறை : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
9. ஹம்பாந்தோட்டை:  ஐ.தே.க / பொ.ஜ.மு / ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஜ.மு. 
10. யாழ்ப்பாணம்: சுயேட்சை/ சுயேட்சை/ ஈ.பி.டி.பி/ த.ஐ.வி.மு/  இ.த.அ.க
11. வன்னி : த.வி.கூ/ புளொட் / டெலோ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
12. மட்டக்களப்பு:த.வி.கூ/ த.வி.கூ / த.வி.கூ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
13. திகாமடுல்லை: ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஐ.மு/ ஸ்ரீ.ல.மு.க /பொ.ஜ.மு. 
14. திருகோணமலை: ஸ்ரீ.சு.க/ ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க /  இ.த.அ.க
15. குருநாகலை : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு. 
16. புத்தளம்: ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
17. அநுராதபுரம்:  ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு
18. பொலன்னறுவை: ஐ.தே.க / பொ.ஜ.மு / ஜ.தே.க / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
19. பதுளை: ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.
20. மொனராகலை: ஐ.தே.க / பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / பொ.ஐ.மு /  பொ.ஜ.மு. 
21. இரத்தினபுரி : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு. 
22. கேகாலை: ஐ.தே.க / ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த போனஸ் ஆசன முறையால் ஆளும்கட்சிக்குத் தன் பலத்தை ஓரளவேனும் அதிகரித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடாகவே இம்முறை காணப்படுகின்றது என கூறப்படுகின்றது. மேலும், இலங்கையில் இதுவரை நடைபெற்ற 5 பாராளுமன்ற தேர்தல்களின் போதும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்கள் தவிர ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களிலும் ஐ.தே.க.கட்சியும், பொ.ஐ. முன்னணியுமே முன்னணியில் நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.

2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்

ஒரு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 1/20 பங்கு (5%) வாக்குகளைப் பெறாத கட்சிகளை அல்லது சுயேட்சைக் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல். வெட்டுப்புள்ளி வாக்குக் கணிப்பு, சிறுபான்மைக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் , சிறிய கட்சிகளின் வளர்ச்சிக்கும், பெரிதும் தடையாகும். விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் இந்த வெட்டுப்புள்ளி 1/8 பங்கு (அதாவது 12.5 % ஆகக் காணப்பட்டது. 1988ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பிரகாரமே 1/20 பங்காக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உதாரண எடுகோளை எடுத்து நோக்கும்போது வெட்டுப்புள்ளிக் கணிப்பு பின்வருமாறு அமையும். வெட்டுப்புள்ளி வாக்கு = செல்லுபடியான வாக்கு X 1/20 எமது உதாரணத்தின்படி =11700X1/20 =    585

எனவே 585 வெட்டுப்புள்ளி வாக்குகளைப் பெறாத கட்சிகள், குழுக்கள் நீக்குதல் வேண்டும். இதன்படி 540 வாக்குகளைப் பெற்ற சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்படும்.

இதே போல நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும்,  5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் போட்டியிலிருந்து நீக்கப்படும். எதிர்வரும் பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும், 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த கால அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து இம்முறை போட்டியிடக்கூடிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் 90 வீதத்துக்கும் அதிகமான கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் ஐந்து வீத வாக்குகளைப் பெறாமல் நீக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மாவட்டங்களுக்கு ஆசனங்கள் பகிர்ந்தளிக்கக் கூடிய முறைப்பற்றியும, சிறுபான்மைக்கு ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைப் பற்றியும் தொடர்ந்தும் இடம்பெறும்.

(தொடரும்…….)

69 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 69 மேலதிக வாக்குக ளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் கிடைத்தன.

பிரதி பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்புகள் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் நடை பெற்றது.

நேற்று சபையிலிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. க்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களுடன் ஜே. வி. பி. உறுப் பினர்களும்,  ஐ. தே. கவினரும் எதிர்த்தே வாக்களித்தனர்.

அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக தொடர்ந்தும் ஆதரவளித்து வாக்களித்து வந்த ஜே. வி. பி.யினர் முதல்முறையாக எதிர்த்து வாக்களித்தனர். சபைக்குள் மனோ கணேசனுடன் ஐ. தே. க. உறுப்பினர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.