12

12

பான் கீ மூனின் செயற்பாட்டுக்கு அணிசேரா இயக்கம் கண்டனம்

un-secretary-general.jpgஇலங் கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக தமக்கு அறிவுறுத்துவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கையை அணிசாரா இயக்கம் கண்டித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள அணிசேரா இயக்க கூட்டிணைப்பு பணியகத்தின் தலைமைத்துவம் இந்த விடயம் தொடர்பாக கடிதம் ஒன்றை ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த கடிதத்திலேயே தனது கண்டனத்தை அணிசேரா இயக்கம் தெரிவித்துள்ளது அவ்வாறான நிபுணர்கள் குழுவை நியமிக்கும் விடயம் இலங்கையில் உள்ள நிலையை கருத்திற் கொள்ளாமலும் இலங்கை அரசுடன் கலந்தாலோசிக்காமலும் எடுக்கப்படுவதாக அணி சாரா இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட விடயம் தன்னிச்சையாக விசாரிப்பதற்காக உள்நாட்டிலேயே குழுவொன்றை நியமிக்கும் தனது நோக்கத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட உரிமையில்லை என்று அணி சாரா இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில குறிப்பிட்ட நாடுகளை மட்டும் இலக்கு வைத்து செயற்படுவது ஐ.நா. அமைப்பின் ஸ்தாபக கொள்கை மற்றும் அதன் சாசனத்துக்கு முரணானது என்று அணிசாரா இயக்கத்தின் கூட்டிணைப்பு பணியகம் கூறியுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கையில் தற்போது இடம்பெறும் ஒருங்கிணைப்பை பலப்படுத்தும் முயற்சிகள் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு நன்மையை விட தீமையையே ஏற்படுத்தக் கூடும். எனவே இலங்கை அதன் உள்நாட்டு நடைமுறையை பூரணப்படுத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அணி சாரா இயக்கம் கூறியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் கட்சி தலைவர்களுடன் இன்று சந்திப்பு

election_cast_ballots.jpgபாராளு மன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையிலான முதலாவது கூட்டம் இன்று பிற்பகல் தேர்தல் திணைக்களத்தில் நடைபெற உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் 24 அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கு பற்ற உள்ளனர். தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள் தேர்தல் முறைகேடுகளை தடுப்பது, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தருவிப்பது உட்பட பல விடயங்கள் ஆராயப்படும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பகுதியில் 12 கிராமங்களில் 19ம் திகதி மீள்குடியேற்றம்

Buses_on_Election_Duty_25thJan10கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இம்மாதம் 19ஆம் திகதி மீளக் குடியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான சகல ஒழுங்குகளையும் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி நா. கேதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.

கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கனகபுரம், உதய நகர் கிழக்கு, மேற்கு, உருத்திரபுரம் கிழக்கு, திருநகர் வடக்கு, தெற்கு, பெரிய பரந்தன், ஜெயந்தி நகர், ஆனந்தபுரம், விவேகானந்த நகர், கணேச புரம், கிளிநகரம் மேற்குப் பகுதி ஆகிய கிரா மங்களைச் சேர்ந்தவர்கள் இம்மாதம் 19ஆம் திகதி மீள் குடியமர்த்தப்பட உள்ளார்கள்.

பொன்சேகாவுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க இரு இராணுவ நீதிமன்றங்கள்

sarath_fonseka-02.jpgமுன்னாள் இராணுவ தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவென மூவர் கொண்ட இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கு அமைய முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இரு இராணுவ நீதிமன்றங்களை நியமித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். எதிர்வரும் 16ம், 17ம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் இந்த நீதிமன்றங்களின் ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த ஏழு குற்றச்சாட்டுகளும் இரண்டு வகைகளில் இரு நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இராணுவ சட்டதிட்டங்களுக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்றங்கள் இரண்டிற்கும் மேஜர் ஜெனரல் தரங்களைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கடற்படையின் ரியர் அட்மிரல் தரத்தை சேர்ந்த ஒருவர் நீதிபதி, அட்வகேட் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் விபரிக்கையில்,

சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சாட்சியங்களின் தொகுப்பு இராணுவத் தளபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த அவர் இராணுவ நீதிமன்றத்தை நியமிக்குமாறு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியிடம் பரிந்துரைத்தார்.

இதற்கமைய, இரண்டு இராணுவ நீதிமன்றங்களை நியமித்த ஜனாதிபதி மூவர் அடங்கிய குழுமத்தை நியமித்துள்ளார். இதன்படி, இந்த குழுமத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எச்.எல் வீரதுங்கவும், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ.பி. ஜயதிலக்க ஆகியோரும், இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே.எஸ். பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

ஒரே குழுமமே இரண்டு நீதிமன்றங்களிலும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி பின்வரும் இரு பிரதான வகைகளில் விசாரிக்கப்படும்

(1) சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை;

(2) இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை;

மேற்படி இரண்டு வகையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது வகையின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் இரண்டாவது வகையின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 16ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள முதலாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின் போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளது.

இராணுவ சட்டத்தின் 124 வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டு, 102/1வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின் இராணுவ சட்டத்திட்டங்களை மீறியும், ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமலும் கொள்வனவு செய்த நடவடிக்கையில் ஈடுபடல் என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

இராணுவ சட்டத்தின் 109 (ரி) பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இங்கு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுமத்திற்கே ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் நியமிக்கவென மேலதிகமாக மேலும் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சகல நீதிமன்ற அமர்வுகளும் ஒலி, ஒளி பதிவுகள் செய்யப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஐ.ம.சு.மு அரசின் அமைச்சரவையில் பாரிய மாற்றம்: எண்ணிக்கையும் குறையும் – சுசில் பிரேம் ஜயந்த

spj.jpgதேர்தலின் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் உருவாக்கப்படும் ஐ.ம.சு. முன்னணி அரசின் கீழ் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் செய்யப்படுவதுடன் அமைச்சுக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது 80 அமைச்சுக்களாக இருக்கும் அனைத்து அமைச்சுக்களும் ஒருங்கிணை க்கப்பட்டு சுமார் 35 அமைச்சுக்களாகக் குறைக்கப்படும்.

உதாரணமாக கல்வித் துறையில் மூன்று அமைச்சுக்கள் வெவ்வேறு துறை களுக்கு உண்டு. இனிவரும் அரசின் கீழ் பலம்வாய்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே அமைச்சின் கீழ் கல்வித் துறை சார்ந்த அனைத்து பிரிவுகளும் உள்ளடங்கும் விதத்தில் நியமிக்கப்படுவதுடன் மூன்று பிரதி அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படலாம் என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரை சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

“நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நிச்சயமாக வெற்றிபெறும். இது பற்றி எமக்கு எவ் வித சந்தேகமும் இல்லை. எமது நோக்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே. எதிர்க்கட்சியினர் இப்போதே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொடுக்க வேண்டாம் எனக் கூறுகிறார். அதாவது 150 ஆசனங்களைக் கொடுக் வேண்டாம் என்கிறார். அதாவது 149 ஆசனங்களை வழங்குமாறு தானே கூறுகிறார். இதனூடாக எதிர்க்கட்சித் தலைவர் தோல்வியை இப்போதே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மூண்றிலிரண்டு பெரும்பான்மை ஏன் தேவைப்படுகிறது? என்பது பற்றியும் அமைச்சர் விளக்கமளித்தார்.

அடுத்த மாதம் முதல் ஓமந்தை வரை ரயில் சேவை

sri-lanka-railway.jpgயாழ் தேவி ரயில் சேவை அடுத்த மாதம் முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையை மீளமைக்கும் பணிகள் பெருமளவு முடிவடைந்துள்ளதாக பதில் ரயில்வே பொது முகாமையாளர் சந்ரதிலக கூறினார். 200 மீட்டர் நீளமான ஓமந்தை ரயில் நிலையத்தின் முதலாம் கட்டப் பணிகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்த சூழ்நிலை காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் பல வருடங்களாக தடைப்பட்டன.

ஜனாதிபதியின் பணிப்புரையையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையான ரயில்பாதை துரிதமாக மீளமைக்கப்பட்டதோடு அடுத்த மாதம் முதல் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதைகள் மீளமைக்கப்பட்டு வருவதோடு ஓமந்தை ரயில் பாதையை மீளமைக்க 3.6 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி மன்றம் ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணியை பொறுப்பேற்றுள்ளது.