நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் சக்தியினால் கட்டியெழுப்பப்பட்ட பாராளுமன்றம் அவசியமாகிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். லுனுகம் வெஹேரயில் நேற்று (14) கடலோர கிராமமொன்றில் புதிய கலாசார நிலையமொன்றை திறந்து வைத்து பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது, கோபத்துடனும் குரோதத்துடனும் அரசியல் செய்த யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வருவோம். நாட்டைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவோம். சக்திமிக்க பாராளுமன்றை கட்டியெழுப்புவதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.
அபிவிருத்தி இன்று கிராமத்துக்கு வந்துள்ளது. பாதைகள், பாலங்கள் மட்டுமன்றி எமது சிறுவர்களின் மனநிலையும் குணநலன்களும் கூட வளர்ச்சியடைந்துள்ளன. எந்த ஒருவரும் எம்மை விமர்சிக்க முடியும். ஆனால், நாட்டின் எதிர்காலத்தையோ அல்லது எமது சிறுவர்களின் எதிர்காலத்தையோ காட்டிக் கொடுக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. நாம் இன்று இந்த கிராமத்தை அபிவிருத்தி செய்துள்ளோம். அது இந்த சிறுவர்களுக்காக அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக. இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த அபிவிருத்தி இன்று நாடு முழுவதற்கும் வியாபித்துள்ளது.
பாரிய துறைமுகங்கள் நிர்மாணிக் கப்படுகின்றன. விமான நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு துறைமுகங்கள் அமைந்துள்ள ஒரே பிரதேசம் திஸ்ஸ மகாராம பிரதேசமாகும். இந்த அபிவிருத்தியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இன்று எமது கல்வி முறையாகட்டும், தொழில் பயிற்சி துறையாகட்டும் உயர்ந்த மட்டத்தில் உள்ளன. இன்று எமக்கு பாரிய தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இன்று இப்பிரதேசம் உல்லாசப் பயணிகளின் வருகையை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் அபிவிருத்தியை இதனுடன் நிறுத்திவிடப் போவதில்லை. இது மொனராகலை, பிபில, மஹியங்கனை வரை கொண்டு செல்லப்படும். இன்று சிறந்த வீதிக் கட்டமைப்பு எமக்கு இருக்கிறது. இன்றைய நிலையை எதிர்பார்த்து இவற்றை நாம் செய்ய வில்லை. நாளைய நிலையை நினைத்த நாம் அவற்றை மேற்கொண்டோம். நீண்ட எதிர்காலத்தை எதிர்பார்த்து நாம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
இன்று இந்த நாட்டை கட்டியெழுப்ப புதிய இளைய சமுதாயமொன்று முன்வந்துள்ளது.
அவர்களது கரங்களை பலப்படுத்தி எதிர்கால உலகத்தை வெற்றிக் கொள்ளக் கூடிய சிறுவர் பரம்பரையை கட்டியெழுப்புவதன் மூலம் அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.