2010

2010

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

Wells_Lack_of_Waterமுல்லைத்தீவு,  முள்ளியவளை பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பிரதேசங்களில் கடும் வரட்சி காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதோடு, பல கிணறுகள் மாசடைந்து துப்புரவாக்கப்படாமலும் காணப்படுகின்றன. இதனால் அங்கு மீள் குடியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் குறிப்பிட்ட சில கிணறுகளையே பயன்படுத்தி வருகிறனர் குடிநீரை இக்கிணறுகளில் எடுத்து வர நீண்ட தூரத்திற்கு செல்ல வேண்டிய சிரமமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் குடிநீரை பணம்கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதையும் காணமுடிகிறது.

இதேபோல் கிளிநொச்சிப் பகுதிகளிலும் பல கிணறுகள் துப்புரவாக்கப்படாமல் உள்ளதால் மக்கள் குடிநீருக்கு வேறு இடங்களில் உள்ள கிணறுகளைத் தேடிச் செல்ல வேண்டி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வன்னியில் உள்ள பொதுமக்களின் கிணறுகள் பல மண் கிணறுகளாக காணப்படுவதால் அவை மாசடைந்து காணப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளில் நீர் இறைத்துக் கொடுக்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் கட்டுக்கிணறுகளை மட்டுமே இறைத்துகொடுப்பதாகவும் மண்கிணறுகளை இறைத்துக் கொடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். குடாக்கடலில் தடைசெய்யப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களால் தொல்லை.

Net_Fishingயாழ். குடாக்கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி வருவதால் சிறுவலைகள் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாங்கள் இதனால் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

தடை செய்யப்பட்டுள்ள இழுவை டித்தொழில், தங்கூசி வலைத்தொழில், ‘டைனமைற்’ மூலம் மீன்பிடித்தல் ஆகியவற்றில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக குருநகர், பாசையூர், நாவாந்துறை, சாவல்கட்டு, பகுதி மீனவர்கள் இதனால் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த 19ம் திகதி மண்கும்பான கடற்பகுதியில் ‘டைனமைற்’ பயனபடுத்தி மீன்பிடித்த குருநகர் மீனவர்கள் சிலர் அவ்வழியில் ரோந்து வந்த கடற்படையினரல் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கையில் கைத்தொலைபேசி வைத்திருக்கும் ஒருவர் ஐந்து ‘சிம்கார்டு’களை மட்டுமே வைத்திருக்க முடியும்.

Mobile_Simஇலங்கையில் கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கும் ஒருவர் ஐந்து ‘சிம் கார்டு’களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்கிற நடைமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமுலுக்ககு வரவுள்ளதாக தொலைபேசித் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்லிட்ட தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு விதிகளை கருத்தில் கொண்டே இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் பத்துக்கும் மேற்பட்ட ‘சிம்’களை வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் டிசெம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் தாம் பயன்படுத்தும் ‘சிம்’களை தங்களது பெயரில் பதிவு செய்து கொள்ளவேண்டும் எனவும் அவ்வாறு பதிவு கொள்ளப்படாதவர்களின் ‘சிம்’கள் டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதியில் சிசுக் கொலை; ரிஸான நபீக்கு தண்டனை உறுதி

naaa.jpg2005 ஆம் ஆண்டில் இலங்கை வீட்டுப்பணிப் பெண் ஒருவர் சவூதியில் சிசுவினை கொலை செய்தார் என்பதனை விசாரணையின் பின் ரியாத் உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  ரிஸான நபீக் என அழைக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண், நைப் ஜிஷியன் ஹலாப் அல் ஒடபீ என்பவரின் 4 மாத குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அப்துல்லா அல் ரொசாமி தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட டவடாமி உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

நபீக்கிற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நபீக் செய்ததாக கூறப்படும் கொலையினை மறுத்து நபீக் மனு தாக்கல் செய்யலாம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு மேலும் வேலை வாய்ப்புக்கள் – அவுஸ்திரேலியாவுடன் இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழில் அமைப்புகளுடன் நேற்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் காமினி லொக்குகே, வடபகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேலும் பல தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெறுவதில் வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும். இதற்காக வவுனியாவில் தற்பொழுது நடமாடும் சேவையொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் ஜகத் பாலசூரியவும் கலந்து கொண்டிருந்தார்.

யாழ். வசாவிளான் கல்லூரி ரூ. 50 இலட்சத்தில் புனரமைப்பு – ஜனவரியில் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

யாழ். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் உடனடியாக புனரமைக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளினதும் மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தப் பாடசாலை கடந்த மாதம் 29ம் திகதி பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்பட்ட இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்தல், புனரமைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேல் மாகாண தமிழ் சாகித்திய விழா இன்று

மேல் மாகாணத் தமிழ் சாகித்திய விழா பிரதான நிகழ்வுகள் இன்று மாலை மூன்று மணிக்கு கொழும்பு- 10 மருதானை- எல்பின்ஸ்ரன் மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப்பினரும் சாகித்திய விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எஸ். இராஜேந்திரன் தலைமைதாங்குவார்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண கலாசார அமைச்சர் உபாலி கொடிகார, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், முன்னாள் எம். பீ. மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ந. குமரகுருபரன், முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பீ. பீ. தேவராஜ், மேல் மாகாண பிரதம செயலாளர் விக்டர் சமரவீர, மேல் மாகாண கலாசார அமைச்சின் செயலாளர் ஏ. ராமநாயக்க ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் சோ. சந்திரசேகரன், லேக் ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத், தொழில் அதிபர்கள் சுந்தரம் பழனியாண்டி, ஜே.பி. ஜெயராம் ஜே.பி. ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.

மேல் மாகாணத்தின் தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன், 25 பேர் சாகித்திய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். நம் நாட்டு கலைப் படைப்புகளைப் பிரதிபலிக்கும் இசை நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் விழாவைச் சிறப்பிக்கும். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் இராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வருடம் விருது பெற்றவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப் படுகிறது.

புனர்வாழ்வு நிலையங்களின் பராமரிப்புக்கு ரூ. 100 மில். செலவு

புனர்வாழ்வு நிலையங்களில் பராமரிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உணவுக்காக மட்டும் நாளொன்றுக்கு நூறு மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறதென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை 306 முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மார்ச் மாதம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்குரிய தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்தத் தேர்தலில் நீங்களும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும். அதன் வழியாக அரசியல் பலமும் அரச பலமும் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐயாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து கொண்டுள் ளனர்.

வளர்முகநாடுகளின் நிலைக்கு சமனான முறையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போரின்போது வெற்றிகொண்ட இராணுவத்தினர் சரண் அடைந்த போராளிகளையும் மனித நேய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றது. புனர்வாழ்வு நிலையங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 306 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 200 பெண்களும், 106 ஆண்களும் அடங்கியிருந்தனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவர்களை பொறுப்பேற்றனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் எஸ். சதீஸ்குமார், செயலாளர் எம். திசாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

பாரிஸ் மாநாடு ஓர் திருப்புமுனையாக அமையட்டும்! : தி ஸ்ரீதரன் (EPRLF)

EPRLF_Conference_23Oct10தோழர்களே, எமது சர்வதேச கிளைகளின் மாநாட்டிற்காக நீங்கள் பிரான்சின் தலைநகர் பாரிசில் கூடியிருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். சமூக தார்மீக நெறிமுறைகளுக்காக போராடுபவர்களை உலகின் எந்த தீய சக்திகளாலும் அழித்துவிட முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. கடந்து வந்த கால் நூற்றாண்டுக்கு மேலான எமது பாதையில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இழப்புக்களையும் துன்பங்களையும் சந்தித்து வந்திருக்கின்றோம்.

இப்படியும் நடக்குமா என கற்பனை செய்ய முடியாதவற்றை எல்லாம் நாம் அனுபவித்திருக்கிறோம் பார்த்திருக்கிறோம். நாமும் எமது தாயகத்தின் மக்களும் இழப்புக்கள் போக எஞ்சி நிற்கிறோம்.
இக்கட்டத்தில் முக்கியமான தவிர்க்க முடியாத கேள்வி ஒன்று எழுகின்றது. நாம் எமது சமூக இலக்குகளை அடைந்திருக்கின்றோமா? எமது சமூக வாழ்வு சமூகத்தில் ஜனநாயக மயப்பட்டிருக்கின்றதா? சமூக ஏணிப்படிகளில் அடித்தட்டில் வாழும் மக்களின் சமூக வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டிருக்கிறதா? சமூக தளைகள் அறுந்திருக்கிறதா? அல்லது சிறிதளவேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?

இங்கு யதார்த்தமாகவும் உண்மையாகவும் அப்படி எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எமது போராட்டத்தின் ஆரம்ப நிலையிலேயே பாசிசத்தின் நிழல் கவிந்து அது எமது சமூகத்தினுள் ஊடறுத்து போராட்டத்தின் சகல தார்மீக நெறி முறைகளையும் அழித்தொழித்து ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்டக் காரர்களையும் தலைவர்களையும் கல்வியாளர்களையும் துவம்சம் செய்ததோடு எமது இரண்டு தலைமுறையினரில் கணிசமானோரை இராணுவ மயப்படுத்தியும், இராணுவ மனோபாவத்திற்கு உள்ளாக்கியும் சமூகக் கருவூலங்களான கலாச்சார பொருளாதார விழுமியங்கள் எல்லாவற்றையும் நிர்மூலம் செய்தது. சிந்திப்பதை நிறுத்திவிடுமாறு சமூகத்தை நிர்ப்பந்தித்தது. தனக்கு அடி பணந்து நிற்குமாறு தொழுதேற்றுமாறு அது அச்சுறுத்தியது தமக்கு எதிரானவர்கள் அல்லது அவ்வாறென தாம் சந்தேகப்படுபவர்கள் எல்லோரையும் மரணப்பொறிக்குள் வீழ்த்தியது.

திட்டவட்டமாக 1980 களின் நடுப்பகுதியில் குரூர முகம் காட்டிய பாசிசம் 2009 நடுப்பகுதியில் பலத்த ஆரவாரத்துடன் வீழ்ச்சியுற்றது.

அதற்குப்பிந்திய சூழலில் நாம் பேசுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான சூழல் உருவாகியிருக்கின்றது என்பது உண்மையே அது தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் உண்மையே.

ஆனால் தமிழ் மக்களுக்கும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தேசிய இனங்களுக்கும் உரிமைகளை அங்கீகரிப்பதில் கடுமையான நிலை உருவாகியுள்ளது. 1980 களில் இருந்ததை விட நிலைமை கடுமையாகியுள்ளது. இத்தகைய சிக்கலான இக்கட்டான நிலைக்கு தமிழ் மக்களை இட்டு வந்தது எம்மத்தியில் இருந்த பாசிசமே என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழர்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்றவாறு இலங்கையின் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளை சேர்ந்தவர்களும் சொல்ல முற்படுகின்றார்கள்.
தமிழர்களின் பிரச்சினை பயங்கரவாததத்திற்கு முற்பட்டது 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவுவது என்பதை உணர்ந்தும் உணராதவர்கள் போல் இவர்கள் நடக்க முற்படுகின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் 2009 வெற்றியின் பெருமித உணர்வுகள் பரவலாக இருந்தாலும் அவர்கள் இன்று தாம் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளும் காவுகொள்ளப்பட்டு விடுமோ என அச்சமுறுகின்றார்கள் இலங்கையில் இன சமூகங்களின் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியாக தீர்வு காணாத வரை இலங்கையின் பெரும்பான்மை இன மக்களும் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடியாதென்பதே நிஜம்.

தென்னிலங்கையில் முற்போக்கு அரசியலும் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. கெடுபிடி யுத்தத்திற்கு பின்னரான உலகம் 1990இருந்து தீவிர மாற்றமடைந்து வந்திருக்கிறது. அது தென்னாசியாவையும் பாதித்தது.

இந்தியா, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் சாரம்சத்தை அதன் அதிகாரப் பரவலாக்கத்திட்டத்தை நடைமுறையில் முழுமையாக சாத்தியமாக்குமாறு இலங்கையிடம் பல தடைவை நயந்து கேட்டிருக்கிறது. இலங்கையின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டிருக்கிறது. நட்பான அயல்நாடு என்ற வகையில் பல்வேறு தடைவைகள் இலங்கையின் தலைவர்களிடம் பல தடைவைகள் இதனை வலியுறுத்தி வந்திருக்கிறது.

ஆனால் இந்த விடயம் எதிர்நிலையிலேயே பயணப்பட்டிருக்கிறது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. முறையாக இணைப்பதற்கு மனசாரச்செயற்படுவதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளுக்கும் மனமொருப்படவில்லை.

இந்தியாவின் அனுசரணையுடனான அதிகாரப்பரவலாக்கத்திட்டம் சந்திரிக்காவின் சமஸ்டி ஒஸ்லோவின் கூட்டாச்சி மகிந்தவின் அனைத்துக்கட்சிக்கூட்டம் எல்லாமே கடந்து போய் விட்டன தற்போதும் வடக்கு கிழக்கின் இரண்டு மாகாணங்களுக்கும் பொருள் பொதிந்த அதிகாரப்பகிர்விற்காக உணர்ச்சிவேசப்படாமல் நிதானமாக செயற்படவேண்டியிருக்கிறது.

யுத்தத்தின் இறுதியில் பணயம் வைக்கப்பட்டு பின்னர் பிரலயமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் முட்கம்பி வேலிகளைத் தாண்டி வன்னியில் நிகழ்கிறது. ஆனால் அவர்களின் வாழ்க்கையினை உறுதியான அடித்தளத்தில் நிர்மாணிப்பதற்கு உள்ளகக்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

உயிரிழப்பு, ஊனமற்ற நிலை பொருளாதார இழப்பு பேதலித்த மனமென வன்னியில் மக்களின் இழப்புக்கள் பிரமாண்டமானவை. இவர்களின் தேவைகளை நிவர்த்திக்க ஊழலற்ற மனிதப்பண்புடனான அர்ப்பணிப்புத்தேவை இந்தியா மற்றும் ஐநா ஸ்தாபனங்கள் உலக நாடுகள் கணிசமான அளவில் உதவிகளை வழங்கிவருகின்றன.

அகதிகளான மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் வடக்கு கிழக்கை மீள் கட்டியெழுப்பவும் சர்வதேச சமூகம் உதவி வழங்க முன்வந்திருக்கிறது. இவற்றை வினைத்திறனுடன் கையாழ்வதற்கான தமிழர் பங்குபற்றலுடனான அரசமுறைமையொன்று இன்னும் இங்கு ஸ்தாபிக்கப்படவில்லை.

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நாங்கள் நழுவவிட்டுள்ளோம். தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் தீர்க்க தரிசனமற்ற அரசியலே இதற்கு காரணம் என்றால் மிகையல்ல. ஆனால் இந்த திரும்பத்திரும்ப நிகழ்த்தப்பட்டு வருகின்ற வரலாற்றுப்பிழைக்கு முடிவு கட்டவேண்டும் அப்போதுதான் பன்முகத்தன்மை வாய்ந்ததும் சமத்துவமானதும், ஐக்கியமானதுமான வாழ்வொன்றை இங்கு கட்டியெழுப்ப முடியும்.
 
எமது மக்கள் இழந்த இழப்புக்களுக்கும் சந்தித்தத்த பேரழிவுகளுக்கும் ஈடாக தீர்வொன்று எட்டப்படவேண்டும். எத்தனை அவமானங்கள் இழிவுகள் உதாசீனம், மரணங்கள் மத்தியில் நாம் வாழ்ந்திருக்கிறோம். இது இலங்கையில் வாழும் தோழர்களுக்கு மாத்திரமல்ல புலம்பெயர்ந்து வாழும் தோழர்களுக்கும் பொருந்தும்.

எமது மக்களின் சார்பில் எம்மை ஸ்தாபிப்பதற்கு பாரதப்போரில் அவிமன்யு சிக்கியது போல் ஒரு சக்கர வியூகத்தினுள் அல்லவா நாம் சிக்கியிருந்தோம் இறுதியாக அது எமது மக்களுக்கும் நேர்ந்தது.

இவற்றையெல்லாம் தாண்டி பேரழிவுகளுக்குப் பின்னால் எஞ்சியிருப்பவை எமது கொள்கைளும், கனவுகளும், இலட்சியங்களும்தான். சமகாலச சூழ்நிலைக்கு ஏற்ப இவற்றை வென்றெடுப்பதற்காக நாம் இயங்க வேண்டியிருக்கிறது, செயற்பட வேண்டியிருக்கிறது,

EPRLF_Conference_23Oct10இன்று எமது ஸ்தாபனம் என்பது உலகளாவியதாக அமைந்திருக்கிறது. எமது பிரச்சினைகள் எம்மை அவ்வாறு ஆக்கியிருக்கிறது தாயகத்திலுள்ள தோழர்கள் மக்களை ஊக்கப்படுத்துவத்தில், தென்பூட்டுவதில் புலம்பெயர் தளத்திலுள்ள தோழர்கள் நண்பர்கள் ஆதரவாழர்கள் வழங்கிய பங்களிப்பை உரிமையுடனும் நன்றியுடனும் நினைவுகூர கடமைப்பட்டவர்கள்.

புலம்பெயர்த்தளத்தில் இயங்கிய மாற்று ஊடகங்கள் வழங்கிய பங்களிப்பு வானொலி, இணையங்கள் இங்கு வழங்கிய பங்களிப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. புலம்பெயர்த் தளத்தில் செயற்பட்ட தோழர்களின் அர்ப்பணம், நேர்மை தாயகத்திலுள்ளவர்கள் பற்றிய அவர்களின் உள்உணர்வு என்பன இங்கு எமக்கு பல நண்பர்களை உருவாக்கி தந்திருக்கிறது.

நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் இலங்கையினை அரசியல் அரங்கை ஜனநாயகப்படுத்துவதற்கும் சமூக அபிவிருத்திப் பணிகளை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கும் எமது நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கும் பரந்த அளவிலான ஐக்கியம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

பாரிய அளவில் வெகுஜனங்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. 1980களின் முற்பகுதியில் அல்லது 70களில் வேலை செய்தமை போன்ற முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் அப்போதிருந்த அரசியல் சமூக சவால்கள் தற்போது உள்ளதுடன் ஒப்பிடுகையில் தலைகீழ் வித்தியாசமானவை. ஓரளவு எளிமையானவை எனவே புதிய நிலவரங்களுக்கு ஏற்ப புதிய வெளிச்சத்தில் நாங்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

சர்வதேச அளவில் எங்களைப் போன்று மனித குலத்தில் நல்வாழ்விற்காக போராடும் சக்திகளுடன் கரங்கோர்த்து செயற்படும் அந்த இயல்பை என்றைக்கும் நாம் கைவிட்டுவிடக்கூடாது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அடையாளமே எமது அடையாளம் நாம் அவர்களைப் பிரதிபலிப்பவர்கள் மாத்திரமல்ல அந்த மக்களின் விடிவிற்காக செயற்படுவர்கள் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.

பாரிஸ் மாநாடு நடைபெறும் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது.
பாரிஸ் மாநாட்டின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தி. ஸ்ரீதரன்

இலங்கைக் கிடைத்த ஒரே ஒரு தங்கமும் பறிபோகுமோ?

manju.gifஇந்தியாவில் நடைபெற்ற 19ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 56 கிரோ கிராம் எடைப் பிரிவு குத்துச் சண்டைப் பிரிவில் வெற்றிபெற்று இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மஞ்சு வன்னியாராச்சி தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தற்போது கருத்துக் கூற முடியாதென இலங்கை விளையாட்டுப் பிரிவின் வைத்திய பொது முகாமையாளர் வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

மஞ்சு வன்னியாராச்சி தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ள போதும் உத்தியோகப் பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முறையான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் கூறியுள்ளார். எனினும் மஞ்சு வன்னியாராச்சி போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் அவரிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பிரயோகித்துள்ளமை உறுதியாவதாகவும், பொதுநலவாய விளையாட்டுக் குழு இந்திய டில்லியில் இருந்து இலங்கைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் இலங்கை அதிகாரிகள் மஞ்சு வன்னியாராச்சியிடம் வினவியபோது, தான் அப்படியொரு ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தான் நோய் ஒன்றுக்காய் சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டதாக மஞ்சு வன்னியாராச்சி கூறியுள்ளார். இந்நிலையில் மஞ்சு வன்னியாராச்சியிடம் இலங்கை ஒலிம்பிக் குழு எதிர்வரும் 14 நாட்களுக்குள் உரிய விளக்கமளிக்குமாறி கோரியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.