2010

2010

யுத்த சூனிய வலயமாக வன்னியில் எந்தவொரு இடமும் இருந்ததில்லை – தயா மாஸ்டர் சாட்சியம்

thayamaster.jpgவன்னி யில் யுத்த சூனிய வலயம் என்று எந்தவொரு இடமும் இருந்திருக்கவில்லையென நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டிய தயா மாஸ்டர், மோதல் வன்னியில் உக்கிரமடைந்திருந்தபோது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்களை இராணுவத்தினர் எவ்வாறு நடத்தினர் என்பது குறித்துக் கருத்துக் கூற முடியாதெனவும் தெரிவித்தார். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்றபோது சாட்சியமளிக்கையிலேயே முன்னாள் விடுதலைப்புலிகளின் ஊடகத்துறை பேச்சாளரான தயா மாஸ்டர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆணைக்குழு முன் தயாமாஸ்டர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை ஊடகப்பிரிவிற்குப் பொறுப்பாளராக நான் கடமையாற்றியுள்ளேன். விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்த நிலையில், நான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற முயற்சித்துள்ளேன். சமாதான உடன்படிக்கையின் முறிவும் புறக்கணிப்பும் துன்பப்படும் மக்களின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்தமை போன்றவற்றாலேயே நான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகத் தீர்மானித்தேன். போர் மிகவும் உக்கிரமடைந்திருந்த நிலையில் பல பொதுமக்கள் கொல்லப் பட்டிருந்தனர். இருதரப்புக்கும் இடையில் மக்கள் சிக்கியிருந்தனர். இவ்வாறிருந்த மக்களைப் போலவே நானும் எனது குடும்பமும் மரணத்தின் விளிம்புவரை சென்றிருந்தோம்.குறித்த சில பகுதிகளில் தான் போர் நடைபெற்றன. வரையறுத்துக் கூற முடியாது. போரின் பரிமாணங்கள் பரந்தவையாக இருந்தன.என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திணறிக் கொண்டிருந்தனர்.நாளுக்கு நாள் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், பொருத்தமான முறையில் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறையையே ஒவ்வொருவரும் தேடிச் சென்றனர் என்பதுதான் உண்மை.

அன்றைய காலகட்டத்தை என்னால் மறக்க முடியாது. யுத்தத்தால் கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான உயிர்களுக்காக நானும் வருந்துகின்றேன். இந்த உயிரிழப்புகள் தேவையற்றவை. யுத்தம் தீவிரமடைந்தபோது சமாதானத்தை விரும்பிய விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் புலமையாளர்கள் சிலரும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி விடுதலைப்புலிகளின் ஆலோசகர் பாலகுமாரன் ஊடாக தலைவர் வே.பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம். ஆனால், அதற்கு ஏமாற்றமே கிடைத்த நிலையில் போர் மிகவும் உச்ச நிலைக்கு அடைந்துவிட்டது. இவ்வாறான நிலையில், உயிரிழப்புகளும் கட்டுமான சேதங்களும் அதிகரித்த நிலையில் அரசுடன் இணைவதால் சமாதானமாக வாழலாம் என எண்ணிய பலரில் நானும் ஒருவன்.

 இந்நிலையில்தான் 2009 ஏப்ரல் 28 ஆம் திகதி நானும் ஜோர்ஜ் மாஸ்டரும் சரணடைந்தோம். மக்களுடன் மக்களாக நாமும் இராணுவத்திடம் சரணடையும்போது எம்மை மக்களிடமிருந்து வேறாக்கிய இராணுவத்தினர் எம்மை நன்றாகவே நடத்தினர். ஆனால், சரணடைந்த மக்களை இராணுவத்தினர் எவ்வாறு நடத்தினர் என்று கருத்துக்கூற முடியாது. தற்போது நான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளேன். மோதலின் போது அதிக இரத்தம் உயிர் சொத்துக்கள் இழக்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவன்மாரின் உறவினர்களின் தகவல் அறியாமல் உள்ளனர். அங்கலாய்ப்பும் போரின் வடுக்களும்தான் இன்று மிச்சமாய் இருக்கின்றன. பரஸ்பரம், நம்பிக்கை இன்மையும் மற்றவர்களை அவர்களின் நிலையிலிருந்து புரிந்து கொள்ளாமையுமே இவ்வளவு அழிவுக்கும் காரணமாகும்.

இந்த சமாதானச்சூழல் சாத்தியமற்றுப்போனது. நீண்டதும் அதிக இழப்புமிக்கதுமான போர் முடிவுக்கு வந்துள்ளது. இன்று பல முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்துள்ளனர். எஞ்சியவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நான் நம்புகின்றேன்.முன்னாள் போராளிகள் தொடர்பாக சமூகத்தில் ஒரு தவறான கண்ணோட்டம் இருந்து வருகின்றது. வேலைவாய்ப்பு வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டப்படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ புலிகள் இயக்கத்தில் இணைந்தும் ஆதரவு வழங்கியும் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும், யுத்த காலத்திலும் யுத்தத்தின் முன்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு அதிக அக்கறை காட்ட வேண்டும்.இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்து வரும் வன்னி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும். மீள்கட்டுமானங்களை இழந்தவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.

போர் நடைபெற்ற பிரதேசங்களில் இயல்பு நிலையை மீட்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுக்கள். இவற்றின் அடிப்படையில் நீண்டகால நிலையான சமாதானத்துக்கான பரிந்துரையை ஆணைக்குழு இறுதி அறிக்கையில் வலியுறுத்த வேண்டும். 1987,1990,1995,2000 ஆகிய ஆண்டுகளில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் கிடைத்த சந்தர்ப்பங்களை புலிகள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வாறான அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம். முன்னர் நடைபெற்ற ஆணைக்குழுக்கள் தொடர்பாக மக்களிடம் தவறான அபிப்பிராயம் இருந்து வருகின்றது. அது மீண்டும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், ஆணைக்குழு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தயாமாஸ்டர்;

1972 தொடக்கம் இறுதிக்கட்டப் போர் (2009 மே) வரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பதிவு உண்டு. புதுமாத்தளன், பொக்கணை ஆகிய இரு சிறு இடங்களுக்குள் பெருமளவான மக்கள் அடங்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் புலிகளும் அங்கிருந்து தாக்குதல் மேற்கொண்டனர். இராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. ஆனால், புலிகள் மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதித்திருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். அத்துடன், மோதல் தவிர்ப்பு பகுதி என்று எந்தவொரு இடமும் வன்னியில் அமுலில் இருக்கவில்லை. அத்துடன், இராணுவத்தினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயத்தினை யுத்தத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளும் இராணுவத்தினரும் மதிக்கவில்லை.

போர் நிறைவடைந்து முன்னாள் புலிகள்,ஆதரவு வழங்கியோர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும். போராட்டம் உருவாவதற்கு அரசியல் பிரச்சினையே காரணமாக இருந்தது. அத்துடன், வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி தனிநாட்டுக் கோரிக்கையை தந்தை செல்வா தரப்பினர் தொடராத நிலையிலேயே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக வே.பிரபாகரன் என்னிடம் பல தடவை கூறினார். அத்துடன், அடிப்படைப் பிரச்சினைகளுக்கு சமாதான முறையில் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினக்குரல் 15.11.2010

11 இலட்சம் மரக்கன்றுகள் 11 நிமிடங்களில் இன்று நடுகை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு ‘தேசத்துக்கு நிழல்’ எனும் தேசிய மரம் நடுகைத் திட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள அரசாங்கத் திணைக்களங்கள், பாடசாலைகள், உள்ளூராட்சி சபைகள் உட்பட அனைத்து இடங்களிலும் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரங்கள் நடப்படவுள்ளன. இன்று முற்பகல் 10.07 மணியிலிருந்து 10.18 மணி வரையிலான 11 நிமிடங்களிலேயே 11 இலட்சம் மரங்களும் நடப்படவுள்ளன.

எனினும், இத் தேசிய திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் இன்று 20 இலட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. வழமையான மரம் நடுகைத் திட்டங்களைப் போலல்லாது ‘தேசத்துக்கு நிழல்’ எனும் இந்தத் தேசிய மரம் நடுகைத் திட்டத்தைக் கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்வதற்கும் சுற்றாடல் வளத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அலுவலகங்களில் மாத்திரமன்றி வீடுகளிலும் குறைந்தது ஒரு மரத்தையாவது நடுவதற்கு முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐம்பது கோடி ரூபா செலவில் உள்ளூராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விரைவில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகளை புனரமைக்கும் திட்டத் திற்கு 393 மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளை நிர்மாணிப்பதற்கான ஒன்பது கட்டுமான பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாவும், ஏனைய நிர்மாண பணிகளுக்கு 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள் ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம், வட மாகாணத்துக்கான அவசர புனரமைப்பு திட்டம் ஆகியவற்றின் ஊடாக வட மாகாண சபை இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகள் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதுடன் புதுக்குடியிருப்பு, துணுக்காய், கரைத்துறைப்பற்றும் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான அலுவலகங்களும், செம்மாலை கொக்கிளாய் பிரதேசத்திற்கான உப பிரதேச சபை அலுவலகங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்.

K Thevathasanசினிமாத் துறையில் மிகுந்த ஆர்வம் உடையவரும் இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்தவருமான கனகசபை தேவதாசன் இன்று (நவம்பர் 15 2010 முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். நியூ மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் 2008 யூனில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களுக்கு மோலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தேவதாசன் தனக்கு விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் இல்லையேல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றார். இதே கோரிக்கைகளுக்காக முன்னரும் உண்ணாவிரதம் இருந்து உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். தற்போது அந்த உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில் தேவதாசன் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றார்.

இந்த உண்ணாவிரதம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

”2008யூன் மாதம் தொடக்கம் சுமார் 15 மாதகாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைத்தேன். தமிழீழ விடுலைப்புலிகள் இயக்கத்துடனான எனது தொடர்பை ஒத்துக்கொண்டு 26-08-2009ல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தேன். எனக்கு எதிரான வழக்கில் நான் எதிர்த்து வழக்காடப் போவதில்லை என்றும் இவ்வாக்கு மூலத்தில் உறுதியளித்தேன். அப்படி இருந்தும் என்மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதன் காரணம் என்ன?” எனக் கேட்டு நவம்பர் 21 2009ல் அப்போதைய நீதியமைச்சர் மகிந்த மொறகொடவுக்கு  தேவதாசன் கடிதம் எழுதி இருந்தார்.

தேவதாசன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித நீதி விசாரணையும் இன்றி காலவரையறையற்று தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் 20 வருடங்களாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொண்ட அரசு சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் புலிகளை நியாயமான முறையில் விடுதலை செய்து வருகின்றது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் அடங்குகின்றனர். ஆனால் விரும்பியோ விரும்பாமலோ தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டு இருந்த ஒருவரை தொடர்ந்தும் நீதி விசாரணையின்றி காலவரையறையின்றி தடுத்து வைத்திருப்பது எவ்வாறு நீதியாகும் என தமிழ் மக்களிடையே கேள்வி எழுகின்றது. தேவதாசன் மட்டுமல்ல பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பய்ங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறான நியாயமான நடவடிக்கைகள மட்டுமே தமிழ் மக்களிடம் அரச மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் என்பது தமிழ் அரசியல் ஆர்வலர்களுடைய கருத்தாக உள்ளது.

கனகசபை தேவதாசன் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது தொடர்பான முன்னைய பதிவு:

சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்!

காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாக நாளை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது.

Jaffna_Bus_Strandகாணாமற் போனோர் மற்றும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நாளை திங்கள் கிழமை நடத்தப்படவுள்ளது.

Jaffna_Bus_Strandகாணாமல் போனோர் தடுத்து வைக்கபட்டுள்ளோர் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு கோரி யாழ். பஸ் நிலையத்தில் அனைத்துலக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சக அமைப்பான ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பின் எற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

காணாமல் போனோரின் உறவினர்கள் அவர்களின் படங்களுடன் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பின் அமைப்பாளர் ருவான் போபகே கேட்டுக்கொண்டுள்ளார். இதில் மாணவர்கள் புத்திஜீவிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கு பற்றுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமது கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நாளை அவர் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியின் எஞ்சிய இடங்களை யாழ்.மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள குடும்பங்கள் குடியேறி கொட்டில்களை அமைத்துள்ள நிலையில், மிகுதியாகவுள்ள காணிகளில் யாழ்ப்பாண மக்கள் சென்று கைப்பற்றியுள்ளனர்.
நாவற்குழியிலுள்ள குறித்த காணியில் கடந்த 10ஆம் திகதி இரவோடிரவாக யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த 70 சிங்களக் குடும்பங்கள் குடியேறி கொட்டில்களையும் அமைத்துள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை சாவகச்சேரி மற்றும் குருநகர் பகுதி மக்கள் சென்று எஞ்சிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வேளையில் சிறிது பற்றம் நிலவிய போதும் சிங்கள மக்கள் பிடித்து வைத்திருக்கும் நிலங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களை தமிழ்மக்கள் பிடித்துக்கொண்டனர்.

தற்போது 50 வரையிலான கொட்டில்களை சிங்களக் குடும்பங்கள் அமைத்துள்ளன. ஆனால், 50 இற்கும் மேற்பட்ட கொட்டில்களை தமிழ்மக்கள் அமைத்துளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மீள்குடியேறச் சென்ற யாழ்.கொழும்புத்துறை வலன்புரம் மக்களை படையினர் அனுமதிக்கவில்லை.

யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த வலன்புரம் பகுதி மக்கள் நேற்று சனிக்கழமை தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறச் சென்ற போது படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக சென்ற குறித்த பகுதி மக்கள் அப்பகுதிகளில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் அப்பகுதிகளில் குடியேற படையினர் அனுமதிக்கவில்லை.

சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களில் குடியேறி வாழும் விருப்பத்துடன் அப்பகுதிகளில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். அப்பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அதன் பின்னர் மீள்குடியேற்றத்திற்கான ஒழங்குகளை ஏற்படுத்தித் தருவதாகவும் படைத்தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் திரும்பிச்சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளையில் மீள்குடியமர்ந்த மக்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவி.

பளைப் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருகின்றன. பளைப் பிரதேசத்தில மீளக்குடியமர்ந்த மக்களில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். வை.எம்.சி.ஏ நிறுவனம் உழைப்பாளிகளை இழந்த குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களையும், தீவக லயன்ஸ் கழகத்தினர் வறுமை நிலையிலுள்ள இரு குடும்பங்களுக்கு சைக்கிள்களையும், வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியின் செயலாளர் யாழ்.வருகை.

Lalith_Weerathunga_Secretaty_to_Presidentஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அவர் யாழப்பாணத்தில் காரைநகர் கசூரினா கடற்கரை, யாழ்.நூலகம் ஆகிய இடங்களுக்குச் சென்று
பார்வையிட்டார்.

யாழ். நூலகத்திற்குச் சென்ற ஜனாதிபதியின் செயலர் நூலகருடன் கலந்துரையாடி பல விடயங்களை கேட்டறிந்தார். ஜனாதிபதியின் செயலாளர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? : ஆதவன் (வன்னி)

Maaveerar_Thuyilum_Illam_2010இது கார்த்திகை மாதம். நம் இல்லங்கள் தோறும் சோகத்தின் வெளிச்சம். அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான். ஆனால் எல்லாமும் முடிந்துவிட்டது. சரிகளுடனும் பிழைகளுடன் முன்று தசாப்த கால அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. அது பல்லாயிரக் கணக்கான மக்களின், போராளிகளின் தியாகத்தால் உருப்பெற்ற ஒன்று. வெறும் வாய்ச் சொல் வீரத்தாலோ, விதண்டா வாதங்களாலோ நிலைபெற்ற ஒன்றல்ல. எனவே இனி அதனை நாம் காயப்படுத்தவும் தேவையில்லை. கொச்சைப்படுத்தவும் தேவையில்லை.

சமீப நாட்களாக நடந்தேறிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு போனால் என்ன என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு புறம், உணவுக்காவும், தங்கள் மானம் மறைப்பதற்கான உடு துணிக்காகவும் கையேந்தி நிற்கும் மக்கள். மறுபுறமோ எதுவுமே நடக்காதது போன்று நல்லூர் கோயில் திருவிழாவில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அடுத்து தமிழ்செல்வனுக்கு சிலை வைப்பதாகக் கூறி இன்னொரு கூட்டம். இப்போது மாவீரர் தினக் கொண்டாட்டத்திற்கான அழைப்பு விடும் பிறிதொரு கூட்டம். இது போதாதென்று தங்களை தாங்களே பிரதமர் என்றும் அமைச்சர்கள் என்றும் சொல்லிக் கொண்டும், அதற்காக பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு பிரிவு. கோமாளித்தனத்தின் எல்லை கூட எங்களுக்குத் தெரியவில்லை.

கடந்த முன்று தசாப்த கால போர் வாழ்வில் தன்னலமற்று தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவு கொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை ஆனால் இறந்தவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது இறந்து கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்கும் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கும் ஏன் எங்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் குறித்து ஏன் எங்களால் கசினை கொள்ள முடியவில்லை. அவர்கள் செய்த துரோகம்தான் என்ன?

இப்படி எத்னையோ கேள்விகள் மனதை வருத்தும் போது கூடவே இன்னொரு கேள்வியும் எழுவதுண்டு. உண்மையிலேயே நாங்கள் ஒரு விடுதலை அவாவிய சமுகம்தானா? நடப்பவற்றை பார்த்தால் அப்படி நம்ப மனம் ஏனோ மறுக்கிறது. எப்படி எங்களால் இவ்வளவு சாதாரணமாக எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சிந்திக்க முடிகின்றது. கடந்த மூன்று தசாப்பங்களாக போராட்டத்தின் பக்கபலமாக இருந்த உறவுகள்தான் இன்று நடு வீதியில் வாழ வழியின்றி இருக்கின்றனர். இந்த போராட்டத்தின் உயிர் மூச்சாக இருந்தவர்கள்தான் இன்று சரணடைந்து எதிகாலத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் விருப்பங்களுக்கு பலியான மக்கள் இன்று மரணத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் கனவிற்கு முகம் கொடுக்க போராடிவர்கள் இன்று தங்கள் சமூக-முகமிழந்து (social face) இருக்கின்றனர். இவர்களை காப்பாற்ற வேண்டிய பெறுப்பு ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் உண்டு. இதனை தட்டிக் கழிக்கும் எவருமே நிட்சமாக மனச்சாட்சியுள்ள மனிதர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் இன்று சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களது பேரால்தான். இன்று களத்திலும் புலத்திலும் நீங்கள் தூக்கி பிடிக்கும் அரசியல் சுலோகங்களில் இருப்பதெல்லாம் அவர்களின் குருதி தொட்டு எழுதிய வாசகங்களே!

இந்தச் சூழலில்தான் மாவீரர் தினத்திற்கான அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. உண்மையில் இது ஒரு கொச்சைப்படுத்தலுக்கான அழைப்புத்தான். இறந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வு மீது சிறிதளவு கூட அக்கறை கொள்ளாதவர்கள் இறந்து போன போராளிகளை நினைவு கொள்வதை எந்தவகையில் உண்மையானது என்று நம்புவது? தயவு செய்து அவர்களை உங்களது அற்ப பிழைப்புக்காக கொச்சைப்படுத்தாதீர்கள். பல்லாயிரக்க கணக்கான போராளிகளும் பல நூற்றுக் கணக்கான தளபதிகளும் தங்களை இழந்த இந்த போராட்டத்தில்; சு.ப.தமிழ்செல்வனுக்கு மட்டும் ஏன் ஒரு பிரத்தியேக சிலை வழிபாடு.  அந்த பணத்தில் பத்து குழந்தைகளுக்கான எதிகாலத்தை உவாக்க முடியும். முகம் சிதைந்து மற்றவர்கள் முன் தோன்றுவதற்கே அஞ்சி ஒழியும் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வை மீட்டெடுக்க முடியும்.

துரோகத்திற்கு உங்களிடம் ஏராளம் விளக்கங்கள் இருக்கலாம் நன்பர்களே! ஆனால் நம்மை நம்பிய ஏழை மக்களை வஞ்சிப்பதுதான் உண்மையான துரோகம். இன்று புலம்பெயர் சூழலில் வசதியாக இருந்து கொண்டு அரசியல் செய்வோரும், உதவி செய்ய முன்வருவோரைக் கூட தடுத்துக் கொண்டிருக்கும் கனவான்களும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உங்களால் பலிக்கடாவாக்கப்பட்ட அந்த ஏழை மக்களுக்கும், எங்கள் அண்ணன்மார் இருக்கின்றனர் அவர்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த போராளிகளுக்கும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த பச்சை துரோகத்தை வரலாறு நிட்சயம் பதிவு செய்யும்.

ஆயிரம் சாட்சிகளை விட பெரியது மனச்சாட்சி என்று ஒரு கருத்துண்டு. மனச்சாட்சி உறுத்தலுக்கு உட்பட்ட ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும் முன்னாள் போராளிகள் குறித்தும் ஏதோவொரு வகையில் குற்ற உணர்விற்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். கே.பி அண்ணருடன் கதைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் அவ்வாறானதொரு குற்ற உணர்விற்கு ஆட்பட்டவராகவே பேசுகின்றார். எல்லோரும் ஒன்றுபட்டு கண்ட கனவு, தொடங்கிய பயணம் ஆனால் அதன் வலிகளையும் வேதனைகளையும் ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் அனுபவிக்கச் சொல்லுவது என்ன நியாயம். இதுதான் அவரின் வாதம். மனச்சாட்சிக்கு அஞ்சும் ஒவ்வொரு மனிதனையும் இந்த கேள்வி அலைக்கழிக்கின்றது. கே.பி ஒரு மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் மனிதர். அவர் பாவப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களை விட்டுவிட்டு ஒதுங்கி வாழ விரும்பவில்லை. இந்த போராட்டத்தின் ஆதி அந்தம் வரை இருந்த ஒருவர் என்ற வகையில் அவர்களது இன்றைய துயர் வாழ்வில் தனக்கும் பங்குண்டு என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் துனிவு அவரிடமுண்டு. எனவே தனது இறுதிக் காலத்தில் தன்னால் இயன்றதை அந்த மக்களுக்காக செய்ய முயல்கின்றார். அவருடன் பேசிய சந்தாப்பங்களிலெல்லாம் நான் இதனையே புரிந்து கொண்டேன். இதுதான் அவரது பணியின் அடிப்படை. இதற்கு பலரும் பல்வேறு விளங்கங்களைச் சொல்லலாம். நாம் விளக்கங்களில் காலங்களை கடத்தியதுதானே அதிகம்.

கார்த்திகை மாதத்தை முன்வைத்து புதுவை அண்ணன் எழுதிய கவிதை வரிகள்  இவை. கேட்கிறதா மணி? கேட்கிறதா பாடல்? தெரிகிறதா நெய் விளக்கு? எங்களாலும் சில ஓலிகளை கேட்க முடிகிறது. எங்களாலும் சில காட்சிகளை கான முடிகின்றது நன்பர்களே! அது – எங்களை காப்பாற்றுங்கள் என்னும் பாதிக்ப்பட்ட மக்களின் கதறல்கள். இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் அங்கவீனமடைந்த அந்த போராளிகளின் இறுதிக் குரல்கள். வெள்ளத்தில் இடுப்பளவு தண்ணீரில் தனது கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் தாய்மாரின் காட்சிகள். இரவில் தான் தூங்கிவிட்டால் தன் குழந்தைகளை பாம்பு தீண்டிவிடுமோ, நட்டுவக்காலி குத்திவிடுமோ என்று அஞ்சி விழித்துக் கொண்டிருக்கும் உறவுகளின் காட்சிதான் எங்குமே தெரிகிறது. மணியும் இல்லை, பாடலும் இல்லை, எரியும் நெய்விளக்கும் இல்லை. நன்பர்களே கதறலும் கண்ணீரும் அவமானத்தில் கூனிக்குறுகிய முகங்களும்தான் இங்கு வாழ்வு. அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் பின்னர் இறந்து போகலாம். இறந்து கொண்டிருப்பர்களை காப்பாற்றுவதே எங்கள் முன்னுள்ள ஒரேயோரு கடமையாகும். மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் ஒரு கணம் இறந்து கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் குறித்து சிந்திக்குமாறு நாம் கோருகிறோம். இறந்த போராளிகள் குறித்து சிந்திக்க முற்படும் இவ் வேளையிலாவது இறந்து கொண்டு இருக்கும் மக்கள் குறித்தும் முன்னாள் போராளிகள் குறித்தும் ஒரு கணம் சிந்தியுங்கள்.