2010

2010

என்னைப் போன்ற இளைஞன் யாருமில்லை -கருணாநிதி

karunanidhi.jpg87 வயது முதியவன் என்று நீங்கள் என்னை அழைத்தாலும், தமிழையும், தன்மானத்தையும், திமுகவையும் காப்பதில் என்னைப் போன்ற இளைஞன் யாரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

முதல்வரின் 87வது பிறந்த நாளையொட்டி நேற்று இரவு சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசியதாவது:

ஒரு இயக்கம் ஒரு வீடு குடும்பம் போல். பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால், இடையிடையே சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட மாறுபாடுகள் கழகத்தை அழித்துவிடாமல் அந்த மாறுபாடு உண்டாக்குகிறவர்கள் திருந்தும் வகையில் கழகத்தின் வலிமை பயன்படுத்தப்பட்டு அதன் காரணமாக கூரேற்றப்பட்ட ஈட்டி முனையை போல் கனையின் முனைபோல் தி.மு.க. விளங்கி வருகிறது.

அதனால்தான், இடையிடையே யார் யாரோ எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் கூட இந்த இயக்கத்தை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இந்த இயக்கம் இருக்கக் கூடாது என்று தந்திரோபாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களை தாண்டி எப்படி இந்த இயக்கத்தை காப்பாற்றுவது, வீம்பு அல்லது தேவையற்ற வீரபிரதாபம் இவைகளால் இந்த இயக்கத்தை காத்து விடமுடியுமா என்ற கேள்விக்கு அண்ணா அளித்த பதில்-லட்சக்கணக்கான தம்பிமார்களை விழிப்படைய செய்து, ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு இந்த இயக்கத்தை பலி கொடுத்துவிடக்கூடாது என்று எண்ணிய காரணத்தால் இன்று தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், டெல்லியை ஆளும் கட்சிக்கு தோழமை கட்சியாக இருக்க முடிகிறது.

அப்படிப்பட்ட இயக்கத்தை நடத்திச்செல்லும் பெரும் பொறுப்பு தலைவர் என்னுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அகம்பாவத்தோடு கர்வத்தோடும், திமிரோடும் எண்ணிப் பார்த்து பெருமிதம் கொள்பவன் அல்ல நான். நீங்கள் எல்லாம் என் ஒருவனுடைய சக்தி, அறிவுக் கூர்மையால், சாதுரியத்தால் கிடைத்த வலிமை என்று எண்ணும் அளவுக்கு பைத்தியக்காரன் அல்ல. என்னுடைய வலிமை இந்த இயக்கத்தை நடத்தி செல்வதற்கு எனக்கு ஏற்பட்ட நெஞ்சுரம் எல்லாம் என் எதிரே வீற்றிருக்கும் லட்சோப லட்ச உடன்பிறப்புகளாகிய நீங்கள் வழங்கியது. நானாக உருவாக்கிக் கொண்டவை அல்ல.

நாங்கள் உங்களைவிட பெரியவர்கள் அல்ல. 87 வயது என்ற காரணத்தால் முதியவன், பெரியவன் என்று என்னை அழைக்கலாம். ஆனால், தமிழை, தன்மானத்தை, தி.மு.க.வை காப்பதில் என்னை போல் இளைஞன் இருக்க முடியாது. அந்த உறுதியை நிறைவேற்றுவேன். இந்த இனிய விழாவில் புதிய வரவாக நமது இயக்கத்துக்கு வந்திருக்கும் குஷ்புவை உங்கள் ஆதரவோடு வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.

டாக்காவில் பயங்கர தீவிபத்து – 100க்கும் மேற்பட்டோர் பலி

04-dakka-fire.jpgவங்கதேச தலைநகர் டாக்காவின் மையப் பகுதியில் உள்ள பல நூறாண்டு பழமை வாய்ந்த கயதுலி பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். டாக்காவின் மையப் பகுதியில் உள்ள கயதுலி பகுதி மிகவும் பழமை வாய்ந்த ஒன்று. இங்கு நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள்,வணிக அலுவலகங்கள், ரசாயாணப் பொருள் தயாரிப்பு ஆலைகள் உள்ளன.

இங்கு நேற்று இரவு டிரான்ஸ்பார்மர் ஒன்றிலிருந்து கிளம்பிய தீப்பொறியால் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. ரசாயாணப் பொருள் நிறுவனங்கள் நிரம்பிய பகுதி என்பதால் தீ படு வேகமாக பரவியது. விடிய விடிய எரிந்த தீயால் அந்தப் பகுதியே சுடுகாடு போலானது. உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் இறங்கினர். மிகவும் குறுகலான பல சந்துகள் அங்கு உள்ளன என்பதால் அந்தப் பகுதிகளுக்குள் மீட்புப் படையினரால் போக முடியவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையே நடந்த மீட்பு நடவடிக்கையில் 100 பேரின் உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 150ஐத் தாண்டும் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். தீயணைப்பு படையினர் மிகுந்த போராட்டத்திற்கிடையே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதும் பொசுங்கிப் போய்க்கிடக்கிறது. பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கலாம் எனத்தெரிகிறது. காயமடைந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 1971ம் ஆண்டு டாக்காவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக டாக்காவாசிகள் தெரிவிக்கின்றனர். டாக்காவை புரட்டிப் போட்டுள்ள இந்த சம்பவத்திற்கு வங்கதேச அரசு பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை அவர்நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பேகம்கலீதா ஜியாவும் மருத்துவமனைக்குச் சென்று காயம் பட்டவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.இந்த பயங்கர தீ விபத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் இறந்துள்ளதால் தீவிபத்துக்குள்ளான மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ராஜபக்ச வருகையை எதிர்த்து மதிமுக ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை

vaiko.jpgஇலங்கை ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதை எதிர்த்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை, உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசியும், அணு ஆயுத வல்லரசு நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியும், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த கொடிய குற்றவாளியான இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்ச அனைத்து உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்.

போரில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்களை, வயது முதிர்ந்தவர்கள், தாய்மார்கள், சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர் சிறுமியரை, குண்டுகள் வீசிக் கொன்றும், பீரங்கித் தாக்குதல் நடத்தியும், உணவுக்கே வழி இன்றிப் பட்டினி போட்டும், காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சைக்கு, வழி இன்றிச் செய்தும் சாகடித்தவர் ராஜபக்ச. அவர் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று, அயர்லாந்து நாட்டிலே கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பு ஆயம் அறிவித்தது.

மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் புரிந்த ராஜபக்ச  நடத்திய அக்கிரமங்கள் குறித்து விசாரணை மன்றம் அமைக்க, ஐநா சபை அறிவித்தது. தமிழ் ஈழ மண்ணில், தமிழ் இனத்தையே கரு அறுக்கும் ரத்த வேட்டை ஆடிய ராஜபக்ச, ‘ஈழத்தமிழர்களுக்குத் தாயகம் கிடையாது; தமிழ் இனம் தனித் தேசிய இனம் அல்ல என்றும்; தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியுள்ளார்.

இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்களின் வீடுகளை, இடித்து நொறுக்கித் தரைமட்டம் ஆக்கிவிட்டு, தமிழர் தாயகத்தில் சிங்களர்களைக் குடியேற்றும் வேலையைத் தீவிரப்படுத்திவிட்டு, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களையும் அழித்துவிட்டு, சிங்கள பௌத்த விஹாரைகளைக் கட்டும் வேலையைச் செய்துகொண்டே, தாயக விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களின் கல்லறைகளை எல்லாம் இடித்துத் தகர்த்து, அவ்வீரர்களின் எலும்புகளைக் குப்பையில் வீசிவிட்டு, கோர வெறியாட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்ற இலங்கை ஜனாதிபதி தமிழ்க்குலத்தின் ஜென்மப் பகைவன் மட்டும் அல்ல; மனிதநேயம் உள்ள மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி.

எண்ணற்ற தமிழ்ப்பெண்கள், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதும், தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி, சிங்களச் சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும், நினைக்கும்போதே நம் நெஞ்சில் கண்ணீரையும், ரத்தத்தையும் கொட்டச் செய்கிறது.

வேதனையால் வெந்து போன தமிழர் இதயத்தில், சூட்டுக்கோலை நுழைக்கும் வகையில், ராஜபக்சவுக்கு, இந்திய அரசு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.

ஜூன் 8 ஆம் தேதி, இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேச, ராஜபக்ச  தில்லி வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், வரவேற்பு அளிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், ஜூன் 8 ஆம் தேதி, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்துக்கு எதிரே, காலை 10 மணி அளவில், கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதே நாளில், மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறிவித்து இருக்கிறோம்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கென வவுனியாவில் பாடசாலை அமைக்க இந்திய நடிகர் ஒபரோய் முடிவு

viv-ob.jpgஇலங்கை யில் யுத்தத்தால் தமது இள¨மைப் பருவம் சூறையாடப்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கென வவுனியாவில் பாடசாலையொன்றை அமைக்கவுள்ளதாக பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் தெரிவித்தார்.

சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நிறைவுபெற்றதும் வவுனியாவுக்குச் சென்று இப்பாடசாலையை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது.

முதலாம் நாளான நேற்றுக் காலை கொழும்பு, கொள்ளுப்பிட்டி சினமன்கார்டன் ஹோட்டலில் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விவேக் ஒபரோய் இதனைத் தெரிவித்தார். தமிழ் நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காய் தனது தந்தையின் ஒபரோய் பவுண்டேஷன் மூலம் உதவக்கிடைத்ததை நினைவு கூர்ந்த விவேக் ஒபரோய், அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கும் தனக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவுக்கு நான் இலங்கை செல்வதை அறிந்த இலங்கையில் உள்ள எனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகத்தினர் என்னை இலங்கை செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். இலங்கையில் தமிழர்களின் கஷ்டங்கள் தீர்க்கப்பட சர்வதேச இந்திய திரைப்பட அகடமி வழிசெய்ய வேண்டும் என்று என்னை வேண்டினர்.

அன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சிரார்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதயமானது. அதனை சர்வதேச இந்திய திரைப்பட அகடமியிடம் சொன்னேன் அவர்களும் அதற்குக் சம்மதித்தார்கள். அதன்படி வவுனியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான பாடசாலையொன்றை சர்வதேச இந்திய திரைப்பட அகடமி இலங்கை கிரிக்கெட் சபை என்பவற்றின் உதவியோடு நிறுவத் திட்டமிட்டிருக்கிறேன்.

இது கல்வி புகட்டும் நிலையமாக மாத்திரம் அல்லாது பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சுகாதார, போஷாக்கு நலனோம்புகை நிலையமாகவும் இருக்கும்.  இது பின்னர் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப் படும் என்றார்.

வெளிநாட்டு நாணயங்கள் மீதான சகல வரிகளும் ரத்து

dollar.jpgஇலங்கைக்கு எடுத்துவரப்படும் வெளிநாட்டு நாணயங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சகல வரிகளையும் ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதன் படி, வெளிநாட்டு நாணயங்கள் மீதான துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேசத்தை கட்டயெழுப்பும் வரி, வற்வரி, அடங்கலான 22% வீத வரிகள் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் ரத்துச் செல்லப்ப ட்டுள்ளன. அதிக வரி காரணமாக வர்த்தக வங்கிகள் வெளிநாட்டு நாணயங் களை கொண்டு வருவதை மட்டுப்படுத்தியு ள்ளன. இதனால் சட்டவிரோதமாக நாயணங்களை தருவிப்பது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனாலே குறித்த வரிகளை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சட்டங்கள் திருத்தப்படவுள்ளன. நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி இந்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தாரென அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகத்துடன் ஒருங்கிணைக்க இஃபா கிரிக்கெட் போட்டி உதவும் யுனிசெப் வதிவிட பிரதிநிதி

கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமி விருது  வழங்கும் விழாவுடன் இணைந்து நடத்தப்படும் கிரிக்கெட் காட்சிப் போட்டி மூலம் கிடைக்கும் பணம் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, குறிப்பாக முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகங்களுடன் மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கைக்கே பயன்படுத்தப்படுமென யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப் டியூவல் தெரிவித்தார்.

இந்தியத் திரையுலக நட்சத்திரங்களும் இலங்கைக் கிரிக்கெட் அணியினரும் கலந்துகொள்ளும் கிரிக்கெட் காட்சிப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை எஸ்.எஸ்.சி.மைதானத்தில் நடைபெறவுள்ளது.இப்போட்டி குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கைக் கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில்  புதன்கிழமை நடைபெற்றபோதே யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப் டியூவல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; இந்திய திரையுலகினரும் இலங்கைக் கிரிக்கெட் அணியினரும் இணைந்து கிரிக்கெட் காட்சிப்போட்டி இலங்கைக் கிரிக்கெட் சபை, ஐ.சி.சி.மற்றும் யுனிசெப்பின் அனுசரணையில் நடைபெறுகின்றது.குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகத்துடன் மீள ஒருங்கிணைக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த காட்சிப்போட்டி நடைபெறுகின்றது.

இப்போட்டி மூலம் கிடைக்கும் வருமானமானது இச்சிறுவர்களின் நலத்திட்டத்திற்காகவே பயன்படுகின்றதென்பதைத் தெரியப்படுத்துகின்றோம். போரினால் உடல் மற்றும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை நெறிப்படுத்தவேண்டிய தேவை எம் அனைவருக்கும் உள்ளது.அந்த ரீதியில் இச்சிறுவர் போராளிகளும் ஏனைய பாதிக்கப்பட்ட சிறுவர்களும் புதியதொரு பயணத்தை அல்லது யுகத்தை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்காக இச்சிறுவர்களை சமூகங்களுடன் மீள ஒருங்கிணைக்கப்படவேண்டிய அவசியம் உள்ளதெனத் தெரிவித்தார்.

இந்தியாவுடன் மூன்று இருதரப்பு ஒப்பந்தங்கள். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கைச்சாத்து; ‘சீபா’ பற்றிய முடிவு பின்னர்

kahiliya.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்தவாரம் இந்தியாவுக்கு மேற்கொள்ள வுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது மூன்று இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன. ஊடகத் துறை, சுற்றுலாத் துறை, கலாசாரத் துறை தொடர்பான ஒப்பந்தங்கள் இதில் அடங்குவதாகவும் ‘சீபா’ வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும்அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (3) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :- இரு நாடுகளுக்குமிடையில் ஊடகத்துறை தொடர்பான பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும். இரு நாட்டுக்கு மிடையில் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பரிமாறுதல், அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குதல் உட்பட பல விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

தனியார் துறையினர் தாம் விரும்பியபடி இந்தியாவில் இருந்து படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தருவித்து ஒலி, ஒளிபரப்பு செய்கின்றன. இதற்காக வரி விதிக்கப்பட்டாலும் கூட அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. புதிய ஒப்பந்தம் மூலம் இதனை முறையாக முன்னெடுக்க முடியும்.

‘சீபா’ வர்த்தக ஒப்பந்தம் குறித்து சகல தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சு நடத்தியே இறுதி முடிவு எடுக்கும். சிலர் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். ஆனால் ‘சீபா’ ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. இந்த வருட இறுதியில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இது குறித்து முக்கியமாக ஆராயப்படும். இது தவிர பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்.

இதேவேளை, சார்க் நாடுகளுக்கிடையில் சேவைத்துறை பரிமாற்றம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 29ஆம் திகதி பூட்டானில் நடைபெற்ற 16ஆவது சார்க் மாநாட்டில் இது குறித்து ஆராயப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் கைச்சாத்திட்டார். இதன்மூலம் சார்க் நாடுகளிடையே சுற்றுலா, கல்வி, கலாசாரம் தொடர்பான சேவை பரிமாற்றங்கள் இடம்பெறும் என்றார்.

இலங்கையின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு சீனக்குடியரசின் ஒத்துழைப்பு பெற்றுத்தரப்படும் – தூதுவர் யாங் க்ஷியூபிங்

பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டு இலங்கை அரசு அதன் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளுக்கு மக்கள் சீனக்குடியரசின் பூரண ஒத்துழைப்பு பெற்றுத்தரப்படுமென்று இலங்கைக்கான சீனத்தூதுவர் யாங் க்ஷியூபிங் தெரிவித்துள்ளார். இலங்கையின் தீர்க்கதரிசனமிக்க செயற்பாடுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள சீனத் தூதுவர், அதற்காக தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவைச் சந்தித்த போதே சீனத் தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள அமைச்சிலேயே இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. “கடந்த காலங் களில் அழிவுகரமான சம்பவங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டது.

எனினும் அரசாங்கம் தெளிவான செயற்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றமை பாராட்டத்தக்கது. இது தொடர்பில் சீன அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது” என்று தெரிவித்த சீனத் தூதுவர், இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிய அபிவிருத்திப் பணிகளுக்கு இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுத்தர சீனா தயாராக உள்ள தாகவும் கூறினார். சீன அரசின் முக்கியஸ்தர்கள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். அதன்போது இந் நாட்டு முக்கியஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அபிவிருத்திப் பணிகளுக்கு உதவுவது பற்றி ஆராயப்படும் என்றும் அவர் குறிப் பிட்டார்.

தற்போதைய அமைச்சரவை தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட சீனத் தூதுவர், அரச முகாமைத்துவ அமைச்சின் பொறுப்புகள் பற்றியும் கேட்டறிந்துகொண்டார். இதுபற்றி விளக்கமளித்த அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, இலங்கையை ஆசியாவின் அற்புத நாடாக மாற்றும் ஜனாதிபதியின் செயற்திட்டத்திற்குப் பூரணமான பங்களிப்பைச் செய்வதாகத் தெரிவித்தார்.

IIFA: சர்வதேச இந்திய திரைப்பட விழா ஆரம்பம்:

iifa-colombo.jpgசர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கொண்டாட்டங்கள் கொழும்பில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்தன. சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற சர்வதேச பத்திரிகையாளர் விழாவுடன் இது ஆரம்பமானது.

இந்தியத் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முன்னணி நடிக, நடிகையர்கள் இயக்குனர்கள் உட்பட திரைத் துறையைச்சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் இலங்கை வந்து சேர்ந்துள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடிகர் சல்மான் கான் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விபாஷாபாஷ¤, சஞ்சய் தத், தியா மிர்ஸா, லாரா தத்தா, அனில்கபூர், ரித்ரிஷ் தேஷ்முக் மற்றும் இன்னும் பல இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் இலங்கை வந்துசேர்ந்துள்ளனர்.

சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் ஆரம்ப விழா நேற்று சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டுடன் கோலாகலமாக ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து ‘லமா’ மற்றும் ‘ஹெல்ப்’ திரைப்படங்கள் தொடர்பான பத்திரிகையாளர் மாநாடுகள் சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றன.

உலகைப் பசுமைப்படுத்துவதற்கு சர்வதேச இந்தியத் திரைப்பட அகதமி அதிமுக்கியத்துவம் வழங்கி வருவதால் அதனடிப்படையில் செங்கம்பளத்துக்குப் பதிலாக அது பச்சைக் கம்பளங்களைப் பயன்படுத்துகின்றது.

நேற்று மாலை, ஐபா ரொக்ஸ் எனும் தொனிப் பொருளிலான நவநாகரிக ஆடை அலங்காரக் காட்சி (பஷன் ஷோ) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையின் டைமகஸ் காமன்ஸின் ‘அவராத்ரி’ படைப்புகள் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

இந்தியத் திரை நட்சத்திரங்களான தியா மிரிஸா மற்றும் விவேக் ஒபரோய் ஆகியோர் இந்த பஷன் ஷோவைத் தொகுத்து வழங்கினர். முன்னதாக சினமன்ட் கிராண்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் சர்வதேச திரைப்பட விழாவென்பது ஒரு உலகு ஒரே மக்கள் என்பதை தொடர்ந்தும் நிரூபித்து வருவதாக தியா மிர்ஸா குறிப்பிட்டிருந்தார்.

இன்று காலை சர்வதேச திரைப்பட அகதமியின் சர்வதேச வர்த்தக சங்க மாநாடு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை ஆரம்பித்து வைக்கின்றார். மதியம் 1 மணிக்கு, இந்தியத் திரை நட்சத்திரங்களுக்கும், இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு மிடையிலான குழந்தைகளுகான கிரிக்கெட் என்ற தொனிப்பொருளிலான கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். ஸி மைதானத்தில் இடம்பெறவிருக்கிறது.

இன்று மாலை சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் மற்றுமொரு பாஷன் ஷோ இடம்பெறவுள்ளது. நாளை மாலை 6.30க்கு சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் விழா ஆரம்பமாகின்றது.

ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பம் – ஜீ.எல். தலைமையிலான குழு பங்கேற்பு

gl.jpgஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு இன்று 4ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாடுக்கு செல்லும் இலங்கை தூதுக்குழுவுக்கு வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமைதாங்குகிறார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படை தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரும் இலங்கை தூதுக்குழுவில் இடம் பெறுகின்றனர்.

லண்டனில் உள்ள சர்வதேச தந்திரோபாய கற்கை நிறுவனம் வருடாந்தம் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் சிங்கப்பூரில் இன்று ஆரம்பமாவது 9 ஆவது உச்சி மாநாடாகும். 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் இந்த உச்சி மாநாடு இடம்பெறுகிறது.

ஆசிய பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இந்த உச்சி மாநாட்டில் ஒன்றுகூடி நம்பிக்கையை கட்டியெழுப்பும் மற்றும் தமக்கிடையிலான பாதுகாப்பு கூட்டுறவு செயற்பாடுகளை வளர்த்துக்கொ ள்ள ஒரு அமைப்பாக இது உரு வாக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழுவுக்கு தலைமைதாங்கும் வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அங்கு ‘கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆளுமையை வலுப்படுத்தல்- புலி பயங்கரவாதிகள் முன்னர் தம்வசம் வைத்திருந்த பிரதேசங்களின் கட்டுப்பாட்டை மீள் உறுதிப்படுத்தும் சவால் மற்றும் ஆளுமைபற்றிய இலங்கை அனுபவம்’ என்ற பொருளில் உரையாற்றுவார்.

உச்ச மாநாட்டின் பின்னர் அமைச்சர் பீரிஸ் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை பற்றி விளக்குவார் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர், பாதுகாப்புக்கான இரண்டாவது அமைச்சர் மற்றும் சிங்கப்பூரின பதில் சட்டமா அதிபர் ஆகியோரையும் அமைச்சர் பீரிஸ் சந்தித்து பேசவுள்ளார்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான், லாகோஸ், மலேஷியா, மொஸ்கோலியா, மியன்மார், நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, திமோர் லெஸ்ட், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் வியட்னாம் ஆசிய நாடுகளில் இருந்து பாதுகாப்பு துறைக்கு பொறுப்பானவர்கள் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.