கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமி விருது வழங்கும் விழாவுடன் இணைந்து நடத்தப்படும் கிரிக்கெட் காட்சிப் போட்டி மூலம் கிடைக்கும் பணம் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, குறிப்பாக முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகங்களுடன் மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கைக்கே பயன்படுத்தப்படுமென யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப் டியூவல் தெரிவித்தார்.
இந்தியத் திரையுலக நட்சத்திரங்களும் இலங்கைக் கிரிக்கெட் அணியினரும் கலந்துகொள்ளும் கிரிக்கெட் காட்சிப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை எஸ்.எஸ்.சி.மைதானத்தில் நடைபெறவுள்ளது.இப்போட்டி குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கைக் கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றபோதே யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப் டியூவல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; இந்திய திரையுலகினரும் இலங்கைக் கிரிக்கெட் அணியினரும் இணைந்து கிரிக்கெட் காட்சிப்போட்டி இலங்கைக் கிரிக்கெட் சபை, ஐ.சி.சி.மற்றும் யுனிசெப்பின் அனுசரணையில் நடைபெறுகின்றது.குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகத்துடன் மீள ஒருங்கிணைக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த காட்சிப்போட்டி நடைபெறுகின்றது.
இப்போட்டி மூலம் கிடைக்கும் வருமானமானது இச்சிறுவர்களின் நலத்திட்டத்திற்காகவே பயன்படுகின்றதென்பதைத் தெரியப்படுத்துகின்றோம். போரினால் உடல் மற்றும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை நெறிப்படுத்தவேண்டிய தேவை எம் அனைவருக்கும் உள்ளது.அந்த ரீதியில் இச்சிறுவர் போராளிகளும் ஏனைய பாதிக்கப்பட்ட சிறுவர்களும் புதியதொரு பயணத்தை அல்லது யுகத்தை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்காக இச்சிறுவர்களை சமூகங்களுடன் மீள ஒருங்கிணைக்கப்படவேண்டிய அவசியம் உள்ளதெனத் தெரிவித்தார்.