முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்ச்சியாக தேசத் துரோகமான அறிக்கைகளை விடுத்து வருகிறார். அவருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதித்துறையினரின் பொறுப்பாகுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
பி. பி. ஸியின் ‘ஹார்ட்டோக்’ நிகழ்ச்சிக்கு இரகசியமாக தொலைபேசியில் பேட்டி கொடுத்த பொன்சேகா, ‘புலிகளுக்கெதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவ அதிகாரிகள் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார். பி.பி. ஸி ‘ஹார்ட்டோக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்ரீபன் ஸக்கூர் இதனை இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்’.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த லக்ஷ்மன் ஹுலுகல்ல மேலும் கூறியதாவது; ‘பி.பி.ஸியுடன் இரகசியமாக செய்து கொண்டதாக கூறப்படும் தொலைபேசி பேட்டியின் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனாதிபதியையும், பாதுகாப்பு செயலாளரையும், பாதுகாப்பு படையினரையும் மட்டுமன்றி முழு நாட்டையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுத்துவிட்டார்’ என்றார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு சுதந்திர விசாரணையின் போதும் தான் இது பற்றி சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக ஜெனரல் பொன்சேகா தனது இரகசிய தொலைபேசி பேட்டியில் மேலும் கூறியிருந்ததாக தொகுப்பாளர் ஸ்டீபன் ஸக்கூர் மேலும் கூறியிருக்கிறார்.
“இவ்வாறான தேசத்துரோகத்தனமானதும், ஆத்திரமூட்டும் வகையிலானதுமான கூற்றை ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருப்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் காட்டிக்கொடுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார்” என்றும் ஹுலுகல்ல சுட்டிக்காட்டினார். மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படைகளில் இருந்த அதிகாரிகளும் ஏனையவர்களும் மிகுந்த கடமையுணர்வுடனும் தியாக சிந்தையுடனும் செயற்பட்டனர் என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகிறார்.
அவர்கள் மேற்கொண்ட தியாகங்களினால் இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடிந்தது. அதற்கான தலைமைத்துவமும் வழிகாட்டலும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
அவர்கள் மீது பொறாமை கொண்டிருந்த ஜெனரல் பொன்சேகா அவர்களை சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் வஞ்சம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவ்வாறான அறிக்கைகள் அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் கடுமையான செயற்பாடுகளின் மூலம் பெறப்பட்டயுத்த வெற்றியை குறைத்து மதிப்பிடவைக்கும்.
தனது முன்னைய கூற்றுக்களை ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ள போதிலும் இறுதியாக பி.பி.ஸிக்கு வழங்கிய இறுதியான தொலைபேசி பேட்டியை அவர் எந்த வகையிலும் மறுக்க முடியாது. ஏனெனில் அது அவரது சொந்த குரலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெனரல் பொன்சேகா முன்னர் உண்மையான இராணுவத் தளபதியாக நடந்துகொண்ட போதிலும் அதன் பின்னர் அவர் தேசத்துரோகமாக நடந்துகொண்டதால் இலங்கை சமூகத்திடம் இருந்த நன்மதிப்பை இழந்ததுடன் கெட்ட பெயரையும் சம்பாதித் துக்கொண்டுள்ளார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின்டயசிரி கூறியுள்ளார்.
நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் தனிப்பட்ட ரீதியில் லாபம் பெற ஜெனரல் சரத் பொன்சேகா முயற்சி செய்வதாகவும் கோமின் டயசிரி மேலும் கூறினார்.
இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ”அவர் தூக்கிலிடப்படுவார்” – கோட்டாபாய ராஜபக்ஷ
இலங்கையில் கடந்த வருடம் நடந்த இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ”அவர் தூக்கிலிடப்படுவார்” என்று இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். பிபிசியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கான செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கின்ற சரத் பொன்சேகா அவர்கள், ”தான் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காகவே இந்த சிரமங்களை எதிர்கொள்வதாக” தன்னிடம் கூறியதாக தெரிவித்த பிபிசியின் செய்தியாளர், ”ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடக்குமாயின் அதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் இந்த விடயங்களை அங்கு கூறுவேன்” என்றும் பொன்சேகா கூறியிருக்கிறாரே என்று கோட்டபாய ராஜபக்ஷவிடம் கூறினார்.
அதற்கு பதிலளித்த கோட்டாபாய அவர்கள், ”அவர் அதனை செய்ய முடியாது. அவர் இராணுவத்தின் தளபதியாக இருந்திருக்கிறார். அவர் பொறுப்பு மிக்கவார இருந்திருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம். அது ஒரு துரோகம் . எவ்வாறு அவர் பொய் சொல்ல முடியும். அவர் எவ்வாறு நாட்டை காட்டிக்கொடுக்க முடியும்.” என்று கூறீனார்.
“உண்மைகளை கூறுவது தனது கடமை” என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த “உண்மைகளை கூறுவது தனது கடமை” என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்
அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, ” பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.” என்று கூறியிருந்தார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது பிபிசியின் சிங்கள சேவையின் சந்தன கீர்த்தி பண்டாரா, அவரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலர் பிபிசியிடம் தெரிவித்திருந்த விடயங்கள் குறித்துக் கேட்டபோது மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.
தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தார் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.