வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நடராஜா சேதுரூபன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசணை வழங்குபவருமான கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் காலப்பகுதியில் இலங்கை வரவுள்ள சேதுரூபன் இலங்கையில் உள்ள குறிப்பாக தமிழ் ஊடகங்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நேர்காணல்கள வழங்க இருப்பதாகவும் கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். இத்தகவல் உண்மையானது என்பதை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய சேதுரூபன் இன்னும் இரு வாரங்களுக்குள் தான் இலங்கை செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழு ஒன்று இலங்கையில் இருந்து நோர்வேக்கு வரவுள்ளதாகக் கூறிய அவர் இக்குழு சர்வதேச ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு திரட்டும் நோக்கில் வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் இலங்கை செல்லவுள்ள சேதுரூபன் மீண்டும் அக்குழுவுடன் நோர்வே வரலாம் எனவும் கூறினார்.
நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் அன்புக்குரியவருடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.
அதன் பின்னர் ரிபிசி வானொலியில் ரிபிசி 10வது ஆண்டு : கடந்து வந்த பாதை : த ஜெயபாலன் ஏற்பட்ட முரண்பாட்டுடன் அவ்வானொலியைவிட்டு வெளியேறி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டவர். குறிப்பாக ரிபிசி யில் இருந்த காலத்தில் நட்பான ஹரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதன் பின்புலத்தில் நின்றவர்களில் சேதுரூபன் குறிப்பிடத்தக்கவர். இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து விலகிய ஆர் ஜெயதேவனுக்கு எதிரான மிகக் கடுமையான பிரச்சாரங்கள் சேதுரூபனால் முன்னெடுக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஆர் ஜெயதேவன், ரிபிசி வானொலி என்பன தற்போது அரசுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்துகின்றன. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சேதுரூபன் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார்.
தற்போது சேதுரூபனுடன் தொடர்புடைய எதிரும் புதிருமான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவனின் மனைவியின் குடும்பத்தினர் தான் இலங்கை அரசுக்கு உளவு பார்த்து வழங்குவதாக ஒஸ்லோவிற்கு வெளியே உள்ள மோல்டே பொலிஸ் நிலையத்தில் குற்றப்பதிவு செய்துள்ளதாக சேதுரூபன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பொறுப்பாளரான முரளி என்பவரும் அதே குற்றச்சாட்டை ஸ்ரோனர் பொலிஸ் நிலையத்திலும் தன்மீது பதிவு செய்திரப்பதாகவும் தெரிவித்தார். நோர்வேயில் மற்றுமொரு அரசுக்கு சார்பாக உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தற்போது நோர்வே நியூஸ் என்ற இணையத்தளத்தின் ஆசிரியராகச் செயற்படும் சேதுரூபன் ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கெ ரி ராஜசிங்கத்திற்கு எதிராக மானநஸ்ட வழக்கைத் தொடுத்துள்ளார். சுவீடனில் வாழும் கே ரி ராஜசிங்கம் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனத் தன்னைக் குறிப்பிட்டு தன் பற்றிய அபாண்டமான செய்திகளை வெளியிட்டதாக சேதுரூபன் குற்றம்சாட்டியுள்ளார். Submissions_to_the_court_2009-09-16_and_2009-09-30.pdf , Letter_from_the_court_dated_2009-12-03_and_submission_from_the_defendants_dated_2009-11-16.pdf
இதே சமயம் லண்டன் ரிபிசி வானொலி உடைப்பிலும் சேதுரூபன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.
இவற்றுக்கிடையே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டின் ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டக் குழு தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சேதுரூபன் தெரிவிக்கின்றார். ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். தற்போது ஏசியன் ரிபியூன் இணையத்திற்கான நிதியை இலங்கை அரசே வழங்கி வருகின்றது என்ற செய்தி கடந்த ஆண்டு இலங்கைத் தேசிய நாளிதள்களில் வெளிவந்திருந்தது. அண்மையில் சரத் பொன்சேகா பற்றிய ஆதாரமற்ற செய்திகள் ஏசியன் ரிபியூனில் வெளிவந்தது தொடர்பாக சரத் பொன்சேகாவின் சட்ட குழு ஏசியன் ரிபியூன் மீதும் கே ரி ராஜசிங்கம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு உள்ளனர். ஏசியன் ரிபியூன் மீது ஏற்கனவே சேதுரூபனின் வழக்கும் இருப்பதால் அது பற்றிய விபரம் அறியவே சரத் பொன்சேகாவின் சட்டக் குழு சேதுரூபனைத் தொடர்பு கொண்டதாக தெரியவருகின்றது.
மகிந்த ராஜபக்சவிற்கு சேதுரூபனின் ஆதரவு என்பது இவ்வாறான சட்டச் சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு நகர்வா எனக் கேட்ட போது எவ்வித கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதா எனக் கேட்ட போது ‘சரத் பொன்சேகா ஆட்சிக்கு வரும்பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும் அதுவொரு நல்லஅம்சம்’ எனத் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவதற்கோ அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா எனக் கேட்டதற்கு இப்போதைக்கு அவை பற்றி எதுவும் குறிப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.
._._._._._.
த ஜெயபாலனின் குறிப்பு:
//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.// என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டு இருந்தது.
மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார்.
தவறுக்கு வருந்துகிறேன். தற்போது திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.
த ஜெயபாலன்