யாழ். குடாநாட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஏ-9 தரைப்பாதை மூலம் பேருந்துகளில் பயணஞ் செய்கின்ற பொதுமக்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற சிரமங்களை நிவர்த்திக்கும் முகமாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.
பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை (14) அதிகாலை யாழ். புகையிரத நிலையக் கட்டிடப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம், கிளிநொச்சி செல்லும் அரச ஊழியர்கள் காலை 6.00 மணிக்கு யாழ். சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்கு வருகை தர வேண்டும் இவர்கள் பயணஞ் செய்யும் பேருந்துகள் காலை 7.00 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.
இதேநேரம் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் இருந்து கிளிநொச்சி செல்லும் அரச ஊழியர்களை அப்பகுதிகளில் வைத்து பேருந்துகளில் ஏற்றிச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகளில் கொழும்பு செல்லும் பயணிகள் காலை 6.00 மணிக்கு யாழ். பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு வருகை தர வேண்டும். பின்னர் 7.00 மணிக்கு இப்பயணிகள் சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சோதனைக் கடமைகள் முடிவுற்றதன் பின்னர் இவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் காலை 8.30 க்கும் 9 மணிக்கும் இடையில் கொழும்பு நோக்கிப் புறப்படும்.
அதே நேரம் தனியார் பேருந்துகளில் கொழும்பு செல்லும் பயணிகள் காலை 6.30 மணிக்கு நேரே சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்கு வருகை தர வேண்டும். இப்பயணிகளும் 8.30 க்கும் 9.00 க்கும் இடைப்பட்ட நேரத்தில் புறப்படும் முதலாவது வாகனத் தொடரணியில் கொழும்பு நோக்கிப் புறப்பட இயலும்.
இதனிடையே வவுனியா செல்லும் பயணிகள் காலை 6.00 மணிக்கு யாழ். புகையிரத நிலையக் கட்டிடத்திற்கு வருகை தர வேண்டும். இப்பயணிகள் அங்கிருந்து நேரே வவுனியா செல்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவ்வேற்பாடுகள் நிறைவுறும் வரையில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் முறைமை சில நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது வாகனத் தொடரணி காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும்.