20

20

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் – 01 : பீ.எம். புன்னியாமீன்

sri-lanka.jpg1978ஆம் ஆண்டு 2ம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் இதுவரை ஜே.ஆர். ஜயவர்தனா,  ஆர். பிரேமதாஸ, டி.பி. விஜயதுங்க , சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க,  மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஜனாதிபதிகளாக பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 2005 நவம்பர் 18ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவிக் காலம் 2011 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவடைய உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும்,  மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப்பதற்காக தேர்தல் மூலம் ஆணையொன்றுக்கென மக்களை வேண்டி நிற்பதற்கான தமது வேண்டுகோளை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தலாம் என அரசியலமைப்பின் 31(3) (அ) (1) உறுப்புரை ஜனாதிபதிக்கு அதிகாரத்தை  அளிக்கிறது.  இதன்படி முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றியும்,  ஜனாதிபதி கடமைகள்,  அதிகாரங்கள் பற்றியும் இதுகால வரை இலங்கையில் 1982, 1988, 1994, 1999, 2005 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள் பற்றியும் ஆராய்வது பயனள்ளதாக இருக்கும். இந்த அடிப்படையில் இக்கட்டுரைத் தொடர் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி ஆட்சி முறையும்,  மந்திரிசபை ஆட்சி முறையும்

இன்றைய ஜனநாயக உலகில் காணப்படும் ஆட்சி முறைகளைப் பிரதானமாகப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1) சனாதிபதி ஆட்சிமுறை
2) மந்திரிசபை ஆட்சிமுறை (வெஸ்மினிஸ்டர் ஆட்சிமுறை)

ஒரு நாட்டின் நிர்வாகத்துறை சட்டத்துறையினின்றும் தெரிவு செய்யப்படாது சட்டத்துறையுடன் நெருங்கிய தொடர்பற்றுக் காணப்படுமாயின் அத்தகைய ஆட்சி முறையினை சனாதிபதி ஆட்சிமுறை என்று அழைக்கின்றோம். உதாரணமாக எமது இலங்கையில் 1978ஆம் ஆண்டின் பின்னர் நடைபெறும் ஆட்சி முறையைக் குறிப்பிடலாம்)

ஒரு நாட்டின் நிர்வாகத்துறை சட்டத்துறையோடு நெருங்கிய தொடர்பு கொண்டு சட்டத்துறையிலிருந்தே தெரிவு செய்யப்படுமாயின் அத்தகைய ஆட்சிமுறையி மந்திரிசபை ஆட்சி முறை  எனப்படுகின்றது. உதாரணமாக 1978ஆம் ஆண்டின் முன்னர் இலங்கையில் காணப்பட்ட ஆட்சிமுறையினைக் குறிப்பிடலாம்.

பொதுவாக இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டினதும் நிர்வாகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே அரசமுறை பெயரிட்டு அழைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஜனாதிபதி ஆட்சி முறைக்கும் மந்திரிசபை ஆட்சி முறைக்கும் இடையேயுள்ள பிரதான வேறுபாடுகளைப் பின்வரும் தலைப்புக்களின் கீழ் சுருக்கமாக நோக்கலாம்.

1. தெரிவுமுறை

மந்திரிசபை ஆட்சி முறையின் தெரிவானது சட்டத்துறைக்குள்ளே இருந்து இடம்பெறும். பொதுவாக மந்திரிசபையின் தலைவராக பிரதமமந்திரி சட்டத்துறையின் உறுப்பினர்களிடமிருந்தே தெரிவு செய்யப்படுவார். (அநேகமாக ஆளும் கட்சியின் தலைவர்) நிர்வாகத்துறைக்குப் பொறுப்பான இந்த மந்திரிசபை. சட்டத்துறையினுள்ளிருந்தே பிரதமரால் அமைக்கப்படும். எனவே மந்திரிசபை சட்டத்துறைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியதாக இருக்கும். ஆனால்,  ஜனாதிபதி ஆட்சிமுறையினை எடுத்து நோக்குகையில் நிர்வாகத்துறைக்குப் பொறுப்பான ஜனாதிபதி சட்டத்துறையிலில்லாமல் தனிப்பட்ட அலகாகவே தேர்ந்தெடுக்கப்படுவார். உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியை இலங்கை மக்கள் நேரடியாக வாக்கெடுப்பின் மூலமாகத் தேர்ந்தெடுப்பர். எனவே சட்டத்துறைக்கு இவர் எவ்விதத்திலும் பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லை.

2. அதிகாரப் பிரிவினை

ஜனாதிபதி ஆட்சி முறைக்கும்,  மந்திரிசபை முறைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கு மற்றுமொரு மூல காரணி ஜனாதிபதி ஆட்சிமுறை அதிகாரங்கள் பிரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதேயாகும்.  ஜனாதிபதி ஆட்சிமுறையில் நிர்வாகத்துறை, சட்டத்துறையில் இருந்து பிரிக்கப்படுவதால் நிர்வாகத்துறை தனி அலகாகப் பரிணமிக்கின்றது. ஆனால் மந்திரிசபை ஆட்சிமுறையில் நிர்வாகத்துறை சட்டத்துறைக்குள்ளே அமைந்திருப்பதனால் ஜனாதிபதி ஆட்சிமுறை போன்று தனி அலகாகப் பரிணமிப்பதில்லை. அதாவது மந்திரிசபை ஆட்சிமுறையில் நிர்வாகத்துறையின் வாழ்வும்,  சாவும் சட்டத்துறையினால் தீர்மாணிக்கப்படுகிறது. ஏனெனில், சட்டத்துறை கலைந்தால் நிர்வாகத்துறையும் கலைந்துவிடும். ஜனாதிபதி ஆட்சிமுறையில் சட்டத்துறை கலைந்தாலும் நிர்வாகத்துறை கலைய வேண்டும் எவ்வித கட்டாயப்பாடும் இல்லை.

3. சட்டங்களின் தன்மை

மந்திரிசபை ஆட்சிமுறையில் சட்டத்துறையும்,  நிர்வாகத்துறையும் இணைந்திருப்பதனால் சட்டம் ஓரிடத்திலிருந்தே (சட்டசபையிலிருந்தே) பிறப்பிக்கக்கூடிய நிகழ்தகவு உண்டு. ஆனால்,  ஜனாதிபதி ஆட்சிமுறையில் சட்டங்கள் பல திசைகளிலிருந்தும் பிறப்பிக்கப்படலாம். இத்தகைய சட்டங்கள் தொடர்பற்றதாகவும் இயல்பற்றதாகவும் காணப்படக் கூடிய நிகழ்தகழ்வுகள் அதிகம்.

4. நிர்வாகத்துறையின் ஆயுள்காலம்

இவ்விருவகையான ஆட்சி முறைகளிலுமுள்ள வேறுபாடு நிர்வாகத்துறையின் ஆயுங்காலம் சம்பந்தமாகவும் காணப்படுகிறது. ஜனாதிபதி தெரிந்தெடுக்கப்பட்ட காலஎல்லை வரை பதவி வகிக்கலாம். உதாரணமாக இலங்கையில் 6 ஆண்டுகள் கொண்ட பதவிக் காலத்திற்கென தெரிவு செய்யப்படுவார். ஆனால் மந்திரிசபை ஆட்சிமுறையில் சட்டசபையின் நம்பிக்கை இழந்ததும் பதவியிலிருந்து நீக்கப்படுவார். நிர்வாகத்துறை,  சட்டத்துறை என்பவற்றின் பதவிக்காலம் யாப்பளவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் சட்டத்துறையின் நம்பிக்கையைப் பொறுத்தே நிர்வாகத்துறை உள்ளதென்பது புலனாகிறது. 

மேலும்,  ஜனாதிபதி ஆட்சி நிலவும் சில நாடுகளில் ஜனாதிபதி பதவி வகிக்கக் கூடிய கால எல்லைகள் அரசியலமைப்பினூடாக வரையறுக்கப்பட்டிருக்கும்.  உதாரணமாக இலங்கையில் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. இதன்படி இலங்கை ஜனாதிபதியின் அதிகூடிய பதவிக்காலம்  12 ஆண்டுகளாகும். ஆனால், மந்திரிசபை ஆட்சிமுறையில் இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்படுவதில்லை.

மேலும்,  ஜனாதிபதி அரசியல் திட்டத்தினால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் காரணமாக தனது பதவியின் உறுதி காரணமாகவும்ää தனது அமைச்சரவையின் எஜமானாகக் காணப்படுவார். ஆனால்ää பிரதமருக்கும்ää அமைச்சரவைக்குமிடையே பாரிய வேறுபாடு காணப்படுதில்லை. காரணம் மந்திரியும் அவரது சகாக்களும் மக்களிடமிருந்து ஒரே விதமான அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதனால் அவர்கள் அந்தஸ்துடையவர்களாகவே கருதப்படுவர்.

மந்திரிசபை ஆட்சிமுறையில்,   இலங்கையில் ஜனாதிபதிப் பதவி

பிரித்தானியர் ஆட்சியிலிருந்த எமது இலங்கை 1948ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தது முதல் மந்திரிசபை ஆட்சிமுறையே பின்பற்றிவந்தது. 1948இல் டொமினியன் அந்தஸ்துடன் கூடிய சுதந்திரத்தைப் பெற்றமையால் இலங்கையின் தலைவராக பிரித்தானிய மகாராணி அல்லது மகாராஜா விளங்கினார். 1947 முதல் 1972 வரை மகாராணியின் நேரடிப் பிரதிநிதியாக மகாதேசாதிபதி எனும் பதவி அலங்காரத் தலைமையாக அமைக்கப்பட்டிருந்தது.

மகாதேசாதிபதி இலங்கைப் பிரதரின் ஆலோசனைப்படி பிரித்தானிய முடியால் நியமனம் வழங்கப்பட்ட போதிலும் இவரின் கடமைகளும், அதிகாரங்களும் பிரதமராலும்,  அமைச்சரவையினாலுமே தீர்மானிக்கப்பட்டன. எனவே மகாதேசாதிபதி எனும் பதவியானது இலங்கையில் பெயரளவு நிர்வாகமாகக் (நாம நிர்வாகம்) காணப்பட்டது.

1972ஆம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி இலங்கைக் குடியரசின் அரசியல்திட்டம் முன்வைக்கப்பட்டது.  இப்புதிய அரசியல் திட்டம் முன்வைக்கப்பட்டது முதல் ஏற்கனவே காணப்பட்ட அரசியல்திட்டத்தில் கூறப்பட்டிருந்த பிரித்தானியருடனான யாப்பு ரீதியான தொடர்புகள் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டன.  இலங்கையின் தலைவராக இலங்கைப் பிரஜை ஒருவரே விளங்கினார். இவரே ஜனாதிபதியாவார். (பிரித்தானிய முடியின் சார்பில் செயல்பட்ட நாமநிர்வாகமான மகாதேசாதிபதிப் பதவிக்குப் பதிலாக முதலாம் குடியரசு அரசியல் அமைப்பில் நாமநிர்வாகமாக ஜனாதிபதிப் பதவி ஏற்படுத்தப்பட்டது) இவர் பூரண நிறைவேற்று அதிகாரமிக்கவரல்ல. ஜனாதிபதியின் கடமைகளும், அதிகாரங்களும் இலங்கையின் பிரதமராலும்,  அமைச்சரவையினாலுமே தீர்மானிக்கப்பட்டமையினால் – ஜனாதிபதி அலங்காரத் தலைவராக, பெயரளவு நிர்வாகியாகக் காணப்பட்டார்.

1972ஆம் ஆண்டு அரசியமைப்பின் கீழ் அலங்காரத் தலைவரான ஜனாதிபதியின் தகைமைகள்,  தத்துவங்கள் என்பன பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

அ)  7ம் அத்தியாயம் – 19ம் உறுப்புரை
இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின்  தலைவராவார்.

ஆ) 7ம் அத்தியாயம் – 20ம் உறுப்புரை
ஜனாதிபதி ஆட்சித்துறைத் தலைவரும்,  ஆயுதம் தாங்கிய படைகளின் படைத்தலைவருமாவார்.

இ) 7ம் அத்தியாயம் – 21ம் உறுப்புரை
 அவர் போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்யவும்,  தேசிய அரசுப் பேரவையைக் கூட்டவும்,  கூட்டத்தொடர்களை நிறுத்தவும்,  கலைக்கவும் அதிகாரமிக்கவர். முதலமைச்சரையும், அமைச்சரவைக்கான ஏனைய அமைச்சர்களையும்,  பிரதியமைச்சர்களையும் அவரே நியமிப்பர். மேலும்,  இலங்கைக் குடியரசின் பகிரங்க இலச்சனையைக் காப்பில் வைத்திருப்பார்.

குடியரசின் ஜனாதிபதியின் நியமனம்,  அவர் பதவியேற்றலும்  

அரசியலமைப்பின் 25ஆவது உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அரசுப் பேரவையின் உறுப்பினரைத் தெரிவு செய்யும் நோக்கத்திக்கான தேர்தல் ஒன்றில் தேருனரொருவராவதற்குத் தகுதியுடைய பிரசை எவரும் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதிப் பதவிக்கு முதலமைச்சரால் பெயர் குறிப்பிடலாம். (இதன்படி ஜனாதிபதியைப் பிரதம மந்திரி தெரிவு செய்வார் என்பது புலனாகிறது. இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் திரு. வில்லியம் கொபல்லாவ அவர்களாவர்)

ஜனாதிபதியின் பதவிக்காலம் பற்றி அரசியமைப்பின் 26ம் உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். ஆயினும் அக்கால எல்லை கழியினும் கூட அடுத்துவரும் ஜனாதிபதி அவரது பதவியை ஏற்கும்வரை தொடர்ந்து ஜனாதிபதி பதவியிலிருந்து வருதல் வேண்டும்.

தேசிய அரசுப் பேரவை ஆக்கும் சட்டங்களுக்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட வேண்டியதில்லை. அவர் நிறைவேற்றிய நிறைவேற்றாது விட்ட எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கேள்வி கேட்க முடியாது. இவரின் செயற்பாடு தொடர்பாக இவருக்கெதிராக வழக்குத் தொடரமுடியாது. இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயலாற்றுவதால் அமைச்சரவையே இறுதிப் பொறுப்புக் கூறும்.

1ம் குடியரசு ஜனாதிபதியின் கடமைகளையும்ää அதிகாரங்களையும் அ) சட்டத்துறை சார்ந்தவை ஆ) நிர்வாகத்துறை சார்ந்தவை இ) நீதித்துறை சார்ந்தவை என பிரித்து ஆராய்ந்தாலும் பிரதமரின் (கெபினட்டின்) ஆலோசனைப்படியே புரிய வேண்டியிருந்தமை அவதானிக்கத் தக்கதாகும். ஆகவேதான் ஜனாதிபதி பெயரளவுநிர்வாகியாகவே கருதப்படுவார்.

இலங்கையில் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை

1977 ஜுலை 21ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 8ஆவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் முன்னெப்போதும் இடம்பெறாத வகையில் 168 பாராளுமன்ற உறுப்பினர்களுள் 140 உறுப்பினர்களை வென்றெடுத்து ஐக்கிய தேசியக்கட்சி வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் திரு. ஜுனியர் ரிச்சட் ஜயவர்தனா அவர்கள் இலங்கையின் 7ஆவது பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

ஜே.ஆர். அரசாங்கம் 1ம் குடியரசு (1972) அரசியலமைப்பினை மாற்றியமைத்து 1978 பெப்ரவரி 04ம் திகதி 2ஆவது குடியரசு அரசியலமைப்பினை முன்வைத்தது. இந்த அரசியலமைப்பில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

இதில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற அம்சமாவதுää இலங்கையில் 1947 முதல் காணப்பட்டுவந்த மந்திரிசபை (வெஸ்மினிஸ்டர்) ஆட்சிமுறை நீக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டமையாகும்.

1977 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபத்தில் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறையினை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தைக் கோரியிருந்தது.

1994 செப்டெம்பர் மாதத்தில் ஸ்ரீலங்கா ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட காமினி திசாநாயக்கா அவர்கள் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறை 2ம் குடியரசு யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டமைக்குக் காரணத்தினை விளக்குகையில் 1970 – 1977 வரை அரசாஙகம் இலங்கையில் கடைபிடித்த அரசியல், பொருளாதாரக் கொள்கையினால் இலங்கையில் சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரு பலமான நிர்வாகம் தேவை என்பதையும் கருத்திற் கொண்டே ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதித்துவ முறைக்கான அனுமதி கோரப்பட்டது. என்ற கருத்துப்படக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால்,  இலங்கையில் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற கருத்து நீண்டகாலங்களுக்கு முன்பே ஜே.ஆர். ஜயவர்தனா அவர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்ததை அவதானிக்க முடிகின்றது. 1966இல் இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றிய திரு. ஜே.ஆர். ஜயவர்தனா அவர்கள் விஞ்ஞான அபிவிருத்திற்கான இலங்கை சங்கத்தின் (Ceylon Association for the Advancement of Science) 22ஆவது வருடாந்த மகாநாட்டில் உரையாற்றுகையில் “மக்கள் வாக்குகளின் மூலம் நிர்வாகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கூடிய ஆட்சிமுறையொன்று ஏற்படுத்தப்படல் வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். J.R. Jayawardana Hon. Minister of State. Inaugural Address; Ceylon Association for the Advancement of Science. Twenty Second Annual Session 14th December 1966. Annual Publication for 1966 Page 61)  இதன் அடிப்படை இலங்கை வெஸ்மனிஸ்டர் முறை மாற்றியமைக்கப்பட்டு,  ஜனாதிபதித்துவ ஆட்சிமுறையொன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதாகும்.

இது மாத்திரமன்றி 1972 இல் 1ம் குடியரசு யாப்பு விவாதத்தின் போது திரு. ஜயவர்தன அவர்களினால் இக்கருத்து பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம். மேலும்,  1973இல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றபின்னர் இலங்கையில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதித்துவ முறைக்கிணங்க அரசியமைப்பு மாற்றியமைக்கப்படல் வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்ததுடன்,  1977 ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபன்திலும் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1977ம் ஆண்டு ஐ.தே.க. தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பொன்றை (அரசியலமைப்புத் திருத்தம்) முன்வைக்கப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் மக்களின் அனுமதி கோரப்பட்டதுடன்,  மக்களின் விருப்பத்திற்கிணங்க அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு,  அதிகாரங்களை வழங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டிருந்தது.

1977 பொதுத் தேர்தலில் ஐ.தே.க (5/6) பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றமையினால் இலகுவான முறையில்,  குறுகிய காலத்தினுள் முதலாம் குடியரசு யாப்பினை மாற்றியமைத்து புதிய அரசியலமைப்பினை முன்வைத்தது. 1978.02.04ம் திகதி அமுலுக்கு வந்த இந்த புதிய அரசியலமைப்பின்படி (மக்களின் ஏற்கனவே பெற்ற அனுமதிக்கிணங்க) திரு. ஜே.ஆர். ஜயவர்தனா அவர்கள் 1978.02.04 திகதி முதல் இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

(தொடரும்.)

சண்டே லீடரிடமிருந்து ரூ. 100 கோடி நஷ்டஈடு கோருகிறார் பாதுகாப்பு செயலாளர்

sarath1_koththapaja.jpgபாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, சன்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். குறித்த பத்திரிகை பாதுகாப்புச் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டதால், அதற்கு நட்ட ஈடாக நூறு கோடி ரூபாவை வழங்க வேண்டுமென்று பாதுகாப்புச் செயலாளரின் சட்டத்தரணி சனத் விஜேவர்தன, சண்டே லீடர் வெளியீட்டாளருக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் கோரிக்கைக் கடிதம் (வக்கீல் நோட்டிஸ்) அனுப்பி வைத்துள்ளார். நட்டஈட்டை வழங்க மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கல்கிஸை நீதிமன்றத்தில் பத்திரிகை நிறுவனத்தினர் அளித்த வாக்குறுதியை மீறி செய்தி வெளியிட்டமை தொடர்பாகவும் வழக்குத் தாக்கச் செய்யப்படவுள்ளது. கடந்த டிசம்பர் ஆறாம் திகதியும் 13ஆம் திகதியும் சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்திகள், பாதுகாப்புச் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற் படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிடக்கூடாதென கல்கிஸை நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவ்வாறான செய்திகளை வெளியிட்டிருப்பதாக சண்டே லீடர் பத்திரிகையின் வெளியீட்டாளர் லால் விக்கிரமதுங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் ஆகியோருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய ஐக்கியத்தை சிதைக்காமல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம்: – மனோ

ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் அரசியல் செயற்பாட்டை தமிழ் இனத்தின் தேசிய ஐக்கியத்தை சிதைத்து சின்னப்பின்னப்படுத்தாமல் நம்மால் கொண்டுவரமுடியும் என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மீண்டும் விடுத்துள்ள தமது பகிரங்க அழைப்பில் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றைய நெருக்கடி மிகுந்த காலகட்டத்திலே இந்த காலத்தின் கட்டாயத்தை புரிந்துகொண்டு நாம் செயற்படாவிட்டால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் அரசியல் செயற்பாட்டை தமிழ் இனத்தின் தேசிய ஐக்கியத்தை சிதைத்து சின்னாபின்னப்படுத்தாமல் நம்மால் கொண்டுவரமுடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதியை ஆதரிக்க தீர்மானம்?

மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இன்று ஹட்டனில் நடை பெறும் பேராளர் மாநாட்டில் இந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேக ரன் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். இதில் அர சாங்க தரப்பிலும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என தெரியவருகிறது.

ஜனாதிபதியை வெற்றிபெற செய்ய ரீ.எம்.வி.பி. கடுமையாக உழைக்கும். தளம்பல் நிலை கிடையாது என்கிறார் கிழக்கு முதல்வர்

siva.jpgஜனாதிபதித் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடுமையாக உழைக்கும் என கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது என தனது கட்சியின் உயர் பீடம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. அத்துடன் ஜனாதிபதியையும் சந்தித்து எமது ஆதரவையும் வெளிப்படுத்தியிரு க்கிறோம். இருப்பினும், சில ஊடகங்கள் எமது கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. முதலமைச்சர் முடிவு எடுக்க முடியாமல் தளம்பல் நிலையில் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். எமக்கு எவ்வித தளம்பல் நிலையும் கிடையாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது என்று எடுத்த தீர்மானத்தில் எதுவித மாற்றமும் இல்லை. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கு பொறுப்பானவருமான பசில் ராஜபக்ஷ எம்.பியுடனும் பலமுறை சந்தித்து பேசியிருக்கிறோம்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்றும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்துடனும் வருகை தந்தது மட்டுமல்ல ஜனாதிபதியை சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளேன். கிழக்கு மாகாணம் இன்று என்றுமில்லாதவாறு பாரிய அபிவிருத்தியை கண்டு கொண்டிருக்கிறது. இவற்றுக்கு மிக முக்கியமா இருப்பவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

கிழக்கு மாகாணம் குறித்து எமது நிலைப்பாடும் ஜனாதிபதியின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்கிறது. கிழக்கு மாகாணம் சுமுகமாக இருந்தாலேயே மாகாண சபை நிர்வாகமும் பலம்பெறும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்

கோர்டன் வெய்ஸ் பதவிக்காலம் முடிந்து இலங்கையில் இருந்து வெளியேறுகிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்புக்கான பிரதம பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தமது மூன்று வருட பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனிக்கு தடை

ms-dhoni.bmpநாக்பூரில் நாளை 21ஆம் திகதியும், 24ஆம் திகதியும் நடைபெறவுள்ள இலங்கை-இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவரான டோனிக்கு தடைவிதிக்கப்பட் டுள்ளது. இவருக்கு பதிலாக இவ்விரு போட்டிகளிலும் தற்காலிகமாக கெளதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிவதற்கு குறிப்பிட்ட நேரத்தை விட 45 நிமிடம் அதிகமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள் ளது.

இந்திய வீரர்கள் மெதுவாக பந்துவீசியதன் காரணமாகத் தான் நேரம் அதிகமானது என்பது தெரிய வந்ததை தொடர்ந்து மெதுவாக பந்துவீசியதற் காக இந்திய அணி கப்டன் டோனிக்கு 2 ஒருநாள் போட் டிகளில் விளையாட ஐ.சி.சி. நடுவர் ஜெப் குரோவ் தடை விதித்துள்ளார்.

இந்த தடை காரணமாக இலங்கைக்கு எதிராக நடைபெறும் 3வது போட்டி (21ந் திகதி), 4வது போட்டிகளில் (24ந் திகதி) தோனி விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த 2 போட் டிக்கும் தற்காலிக கப்டனாக தொடக்க வீரர் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sri Lanka in India ODI Series – 2nd ODI
India v Sri Lanka
Sri Lanka won by 3 wickets (with 5 balls remaining)
ODI no. 2933 | 2009/10 season
Played at Vidarbha Cricket Association Stadium, Jamtha, Nagpur
18 December 2009 – day/night (50-over match)
       
 India innings (50 overs maximum)
 V Sehwag  c †Sangakkara b Welegedara  4 
 SR Tendulkar  st †Sangakkara b Mendis  43 
 G Gambhir  run out (Mathews)  2 
 V Kohli  lbw b Randiv  54 
 MS Dhoni*†  c Dilshan b Randiv  107
 SK Raina  c Randiv b Mathews  68
 RA Jadeja  not out  12
 Harbhajan Singh  st †Sangakkara b Randiv  0
 Extras (lb 7, w 4) 11     
      
 Total (7 wickets; 50 overs) 301 (6.02 runs per over)
Did not bat P Kumar, Z Khan, A Nehra 
Fall of wickets1-4 (Sehwag, 0.4 ov), 2-19 (Gambhir, 4.1 ov), 3-81 (Tendulkar, 16.5 ov), 4-132 (Kohli, 26.3 ov), 5-258 (Raina, 46.2 ov), 6-300 (Dhoni, 49.3 ov), 7-301 (Harbhajan Singh, 49.6 ov) 
        
 Bowling O M R W Econ  
 UWMBCA Welegedara 9 0 53 1
 AD Mathews 10 1 60 1
 RAS Lakmal 8 0 57 0
 BAW Mendis 10 0 57 1
 S Randiv 10 0 51 3
TM Dilshan 3 0 16 0  
       
 Sri Lanka innings (target: 302 runs from 50 overs)
 WU Tharanga  c Sehwag b Harbhajan Singh  37 
 TM Dilshan  b Nehra  123 
 KC Sangakkara*†  run out (Raina/Khan)  21
 DPMD Jayawardene  c †Dhoni b Khan  39 
 SHT Kandamby  c Kohli b Khan  27 
 AD Mathews  not out  37 
 CK Kapugedera  b Khan  2
 S Randiv  run out (Harbhajan Singh)  5 
 BAW Mendis  not out  2  
 Extras (b 1, lb 5, w 3) 9     
      
 Total (7 wickets; 49.1 overs) 302 (6.14 runs per over)
Did not bat RAS Lakmal, UWMBCA Welegedara 
Fall of wickets1-102 (Tharanga, 13.6 ov), 2-147 (Sangakkara, 21.4 ov), 3-213 (Dilshan, 35.5 ov), 4-232 (Jayawardene, 39.1 ov), 5-264 (Kandamby, 44.3 ov), 6-267 (Kapugedera, 44.5 ov), 7-285 (Randiv, 47.2 ov) 
        
 Bowling 
 P Kumar 8 0 48 0
 Z Khan 10 0 63 3
A Nehra 10 0 74 1
Harbhajan Singh 10 0 58 1
RA Jadeja 9.1 0 42 0  
 SK Raina 2 0 11 0 5.50  
 
Match details
Toss India, who chose to bat
Series 5-match series level 1-1