தரிசனம் – (தத்துவார்த்தக் கவிதை)
உன்முகத்தையே தரிசிக்க முடியாத நீயும்
என்றுமே உன்முகத்தையே தரிசிக்கும் நானுமாகத்தானே
இந்த உலகம் உருண்டு கொண்டிருக்கிறது.
நீ உனக்குரியவனே அல்ல.
முகத்தையே தரிசிக்க முடியாத நீ
அகத்தை எப்படித் தரிசிப்பாய்?
என்விமர்சனங்கள் மட்டுமே
உன் தரிசனம்.
கண்ணாடி முன்னாடி நின்று
பின்னாடியல்லவா தேடுகிறாய்
முன்னாடி நிற்பவனே!
அலங்காரம் செய்கிறாய்
யார் யாருக்கோ அழகாய் இருக்க.
உனக்காக நீ
எப்போ அழகாய் இருக்கப்போகிறாய்?
அது நீயே அல்ல
மாயையின் விம்பம்
நீயாக நீ நினைக்கும்
உன் எதிரி
கண்ணாடியின் பின்னாடி நிற்பவனை
எட்டி அடித்துப்பார்
மறுகையால் உன்னை அறைவான்.
இனியாவது புரிந்து கொள்வாயா
உனக்கு நீயேதான் எதிரி
நீ கண்ணாடியில் காண்பதெல்லாம்
நிதர்சனமே இல்லா தரிசனங்களே.
சுயவிமர்சனம் செய்
மனக்கண்ணாடியாவது தெழிவாகும்
உன்விம்பத்தை காண்பதற்கே
கண்ணா! உனக்கு
கண்ணாடியின் சேவை தேவை.
உன்னை நீ காண்பதற்கு
சுயவிமர்சனம் தேவை.
யார் யாரோ அழகுபார்க்க
மனச்சாட்சியைக் கொன்று
அலங்காரம் செய்யும் நீ
மனமெனும் கோயிலில்
மனச்சாட்சி முன் நின்று
உனக்கு நீயே அழகு செய்
சுயவிமர்சனம் எனும் பூசை செய்
உனக்கு நீயே பூசை செய்
செய்த பாவங்களுக்கு
கண்ணீரால் அபிசேகம் செய்;
சுயமாகும்; நிதர்சனம்
உன் சுயதரிசனம்.
ஆம் நீதானே கடவுள்
நீயே தான் கடவுள்.
கடந்தும் உள்ளவன் தானே கடவுள்
கடப்பாய் உன்னை கடவுளாக.
நோர்வே நக்கீரா
4.12.2009