கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு எமது ஈழம் எப்படி இருந்தது? கொள்ளை அழகோடு மக்களின் மகிழ்ச்சியோடு தான் இருந்தது என நான் நினைக்கிறேன். வயல் வெளிகள், வெங்காயத் தோட்டங்கள், தேயிலை பயிர்கள் போல் பசுமையாய் காட்சியளித்த புகையிலை, மிளகாய்கன்றுகள் இன்னும் சொல்லப் போனால், ஐம்பது வயது தாண்டிய கிழடுகளுடன் ஒரு சக நண்பனைப் போல ஒற்றை மாட்டு வண்டி நீர் இறைக்கச் செல்லும் காட்சி, தான் விளைவிக்கும் பயிர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் விவசாயி, மாணவர்கள் பள்ளி செல்லும் காட்சி என எல்லாம் நினைவில் வந்து மனதை வாட்டுகின்றது. இந்தியாவில் உள்ளவர்களை விட நாம் சுதந்திரமாக இருந்ததாகவே எனக்கு தோன்றுகின்றது. இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் எனில் எமது சுதந்திரங்களை நாம் ஏன் இழந்தோம். பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு இருந்த கோவணத்தையும் இழந்தவர்களாகி விட்டோம். இதை ஏற்படுத்தியவர்கள் யார்?
இந்த அவலத்தை எமக்கு தந்தவர்கள் யார்? அவர்களை மக்களாகிய நாம் எப்படி அனுமதித்தோம். சுதந்திரம் என்பது என்ன? அது யாருக்கு தேவைப்பட்டது? இப்பொழுதாகிலும் புலம்பெயர் தமிழர் புரிந்து கொள்கிறார்களா? சுதந்திரத்தை பணம் கொடுத்து வாங்க முடியுமா?
1) தற்கொலை போராளிகளை அனுப்பி வாங்க முடியுமா?
2) ராணுவ தளத்தை ஐம்பது தற்கொலை தாக்குதல் நடத்தி எல்லாளனைக் காட்டினால் அடைய முடியுமா?
3) அரசியல் சாணக்கியம் அற்ற ஆயுததாரிகளால் முடியுமா?
4) எந்த விதமான கேள்விக்கும் இடமின்றி எமது இனத்தில் இரண்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்களே இப்போதாவது சுதந்திரம் கிடைத்ததா?
5) வெறும் மாக்ஸியம் , லெனிஸிஸம் , ரொக்ஸிஸம் பேசிக் கொண்டு இவ்வளவு அழிவுகளுக்கிடையிலும் சிங்களவர்கள் எமது உடன்பிறப்புக்கள் என கூறிக் கொண்டு மேதாவித்தனத்துடன் உலா வந்து கொண்டிருந்தால் சுதந்திரம் கிடைத்து விடுமா?
கடந்த காலங்களில் பல சம்பவங்களை கேள்வியுற்று இருந்தேன். தமிழ் இளைஞர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்? படித்த பட்டதாரிகளுக்கு வேலையில்லை – சிங்கள அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். என்னை பொறுத்தவரை எமது ஊரில் பல்கலைக்கழகம் சென்று படித்து முடித்தவர்கள் எல்லோரும் வேலையில் தான் இருந்தார்கள். தரப்படுத்தல் என்ற பிரச்சனை இருந்தது என்பது உண்மையே. இதனால் சில மாணவர்கள் பாதிப்படைந்து கவலைப்பட்டார்கள். ஆனால் பலர் நன்கு படித்து பல்கலைக்கழகம் வரை சென்றார்கள். என்னைப் பொறுத்தவரை எமது இன விடுதலை என்றால் என்னவென்று தெரியாமல் – கல்வியறிவு குறைந்தவர்களால், ஆதிக்க வெறியர்கள் சிலரால் ஆங்காங்கே சில இன உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை சேர்த்து குழுக்களை அமைத்துக் கொண்டார்கள். இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? எமது தமிழினத்தின் குறைபாடு என்னவெனில் சமுதாயத்தை நேசிப்பதில்லை. மாறாக எது நடந்தாலும் தன்னை பாதிக்காத வகையில் மௌனமாக இருக்கும். இந்த குணத்தினாலேயே கடத்தல்காரனான குட்டிமணி அரச சொத்துக்களை கொள்ளையடித்த போது மௌனமாக இருந்தார்கள். மேலும் குட்டிமணியை சிலர் பொலிசிடம் பிடித்து கொடுக்க முற்பட்டபோது குட்டிமணியால் கொல்லப்பட்டார்கள். ஆனால் மக்கள் அங்கு பேசிக் கொண்டது என்னவெனில் அரசாங்கத்தின் சொத்தை கொள்ளையடித்தால் இவர்களுக்கென்ன? இதை வாய்ப்பாக பயன்படுத்தி குட்டிமணி, பிரபாகரன், உமாமகேஸ்வரன், சபாரட்னம் இன்னும் ஏனைய குழுக்கள் மேலும் மேலும் கொள்ளையடித்து கேள்வி கேட்க ஆளில்லாமல் கண்மூடித்தனமாக எமது மக்களுக்கெதிராக காட்டுத் தர்பார் நடத்தினார்கள்.
சமூக விரோதிகள் என்ற பெயரில் தமிழ் மக்களை மின்கம்பங்களில் கட்டி நெற்றியில் வெடிவைத்து கொன்றார்கள். இதையும் மக்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதோடு நிறுத்தாமல் ‘பெடியள் வெடி வைத்தால் நெற்றி வெடிதான்” என கேவலமாக குரூரமாக வர்ணித்தார்கள். பக்கத்தில் இருந்து ரிவோல்வரை நெற்றியில் வைத்துதானே சுட்டார்கள் – இதில் கிலாகித்து பேச வீரம் எங்கே இருக்கிறது. மக்கள் இதை சொல்வதிலே பெருமை கொண்டார்கள். அது இந்த பயங்கர குழுக்களுக்கு வலுவூட்டுவதாய் அமைந்தது. இதில் சில குழுத்தலைவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சில தலைவர்கள் விபச்சாரப் பெண்களிடம் சென்று வந்தார்கள். சிலர் ஒவ்வொரு இரவும் குடிபோதையில் மிதந்தார்கள். இப்படியே கொள்ளையடித்த பணம், மக்கள் கொடுத்த பணம் எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இவர்களுடைய ராஜபோக வாழ்விற்கு இடைஞ்சலாக இருப்பவர்களை தேசதுரோகி என்ற பட்டத்துடன் கொலையும் செய்தார்கள். கேட்பதற்கு யாரும் இல்லை. இவர்கள் செய்த எல்லா துரோகங்களையும் புலம்பெயர்ந்த தமிழர் கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள். இப்பொழுது ஈழத்தில் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புலிகளின் அதிகாரவெறியினால் கேட்பதற்கு நாதியில்லா நிலையில் பலரின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு தமது ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மீண்டும் புலம்பெயர் தமிழீழம் என்று பேசிக் கொண்டுதான் திரிகிறார்கள். இப்பொழுதும் மக்கள் மௌனிகளாகவே இருக்கின்றார்கள்.
இப்படியாயின் சுதந்திரம் என்பதுதான் என்ன? அதை மக்கள் மக்களுக்காக தாமே கட்டியெழுப்ப வேண்டும். எப்படி? முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். பின்பு பலருடன் விவாதம் செய்து ஆராய வேண்டும். மக்களை நேசிக்க வேண்டும். மக்களை நேசிப்பது என்பது என்ன? வாய்ப்பில்லாதவன், வசதியற்றவன், மென்மனம் கொண்டவன், துணையற்றவன், அமுக்கப்பட்டவன் என பலவகைப்பட்ட சமுதாயப் பிரஜைகளையும் மரியாதையாகவும் இரக்கமுடனும் எதிர்கொண்டு அவனுக்காக செயல் புரிதலே மக்களை நேசிப்பதாகும். போராட்டத்தை அந்த மக்களுடையதாக உருவெடுக்க வைத்தல் வேண்டும். போராட்டம் மக்களுடையதாக உருவாகி வரும் போதுதான் நல்ல அரசியல், இராஜதந்திர அனுபவங்களுடன் ஆயுதம் ஏந்த வேண்டும். உயிர்களின் மீது நேசமும் அவற்றின் அருமையும் தெரிந்திருக்க வேண்டும்.
ஐரோப்பிய மண்ணில் நல்ல வசதி வாய்ப்புக்கயோடு மிகவும் சுதந்திரமாக இருந்து கொண்டு போராட்டம் என்றால் மக்கள் அழியத்தான் வேண்டும். தவிர்க்க முடியாது எனவும், மக்கள் வெளியேற தவித்தபோது வன்னி மண் உங்கள் பூர்வீகம் அங்குதான் நீங்கள் இருக்க வேண்டும், நீங்கள் செத்தால்தான் வெள்ளைக்காரன் மனங்கசிந்து ஓடோடி வருவான் என்றெல்லாம் கூறிய ஈவு இரக்கமில்லா புலிப் பினாமிகளே!! உங்களுடைய ஒரு பிள்ளையை என்றாலும் யுத்தத்திற்கு அனுப்ப முடியுமா?
நாட்டில் நிலவிய பசி, பட்டினி – வறுமை என்ற நிலைகளைப் பயன்படுத்தி ஒன்றுமறியாக் குழந்தைகளுக்கு குண்டுகளைக் கட்டி அனுப்பி கொலை செய்து அதை கண்டு களித்ததீர்கள். இரக்கமில்லாத மனித முண்டங்களே, எத்தனை விலைமதிப்பற்ற போராளிகளை எல்லாம் கொன்றொழித்து விட்டு கிட்டு, குமரப்பா, நடேசன், சங்கர், பால்ராஜ் போன்றவர்களை கொண்டாடுகிறீர்கள்? யார் இவர்கள்? இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்? புலி ஆதரவாளர்களே! இதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.
எனது இளம்பருவத்தில் கல்வி கற்கும்போது எமது ஆசிரியர் அடிக்கடி நல்ல மனிதர்கள் எப்படி வாழவேண்டும் என்று கூறுவார். அதை கீழே குறிப்பிடுகின்றேன். ஒரு பகுதி மக்களை அவர் வாழைக்கு ஒப்பிடுவார். வாழைக்கு நீங்கள் எவ்வளவு தண்ணீர் கொடுக்கிறீர்களோ அதற்கு தகுந்த பலனை தரும். இரண்டாவதாக தென்னைக்கு ஒப்பிடுவார். தென்னைக்கு கொஞ்ச தண்ணீர் கொடுத்தால் போதும் பலன் தரும். ஆனால் பனை மரம் மனிதர்கள் எந்த உதவியும் செய்யாமலே மனிதர்களுக்கு உதவி செய்யும்.
இப்படித்தான் போராளிகளும், அல்லது இனிவரும் காலத்தில் நடக்கும் போராட்டங்களாக இருந்தாலும் பனை போன்ற குணமுடையவர்களால் தான் வழிகாட்டப்பட வேண்டும். இப்பொழுது இவ்வளவு வரட்சிக்கும் அழிவுக்கும் மத்தியிலும் பனை கம்பீரமாக காட்சி தருகிறது. பனைக்கு கற்பகதரு என்ற பெயரும் உண்டு.
நாம் கேணல், லெப்டினட், மாமனிதன், தேசப்பற்றாளன் என்றெல்லாம் பெயர்கள் வைக்கிறோம். ஆனால் இன்று பெயர் வாங்கினவனும் இல்லை. பெயர் வைத்தவனும் இல்லை. இத்தனை அட்டூழியங்கள் இந்த புலிகளால் செய்யப்பட்டும், அழிந்தும் திருந்தவில்லை. இவர்கள் எப்போதுதான் திருந்தப் போகின்றார்கள்? ஜிரிவியும், புலிகளும் முதலில் அகதிகள் முகாமில் இருக்கும் இளைஞர் யுவதிகளை தயவு செய்து ஒரு ஆயிரம் பேரையாவது இந்த ஐரோப்பாவிற்கு அழைத்து தாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பார்களானால் புண்ணியமாதல் கிடைக்கும். நன்றிகெட்ட மனிதர்களே, இப்பொழுதாவது திருந்தப் பாருங்கள். மேலும் மேலும் தவறுகள் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு மன்னிப்பே கிடைக்காது போய்விடும்!!