ஜனவரி 26ல் நடைபெறவுள்ள இலங்கை அரசத் தலைவருக்கான தேர்தல் தீவின் கடல் எல்லைக்கு அப்பாலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. நடந்து முடிந்த உள்நாட்டுப் போரை கால அட்டவணைக்கு உட்பட்டு முடித்துள்ள இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அதன் பலனை இத்தேர்தலில் அனுபவித்துவிடத் துடிக்கின்றார். ஆனால் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசுத் தலைவரின் நடவடிக்கைகள் மேற்கு நாடுகளின் அரசியல் ராஜதந்திரங்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தது. இன்னும் சொல்லப் போனால் ஐ நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றக் கங்கணம் கட்டி நின்ற மேற்கு நாடுகளின் முயற்சிக்கு இலங்கை அரசு தனது இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி நெத்தியடி வழங்கியது.
இலங்கை அரசுத் தலைமைக்கு வாழ்த்துத் தெரிவித்து ஐநா மனிதவுரிமைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்: Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia (Plurinational State of), Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, Zambia.
அத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகள்: Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, United Kingdom of Great Britain and Northern Ireland;
வாக்களிப்பில் இருந்து விலத்தி இருந்த நாடுகள்: Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, Ukraine.
பிரித்தானியா உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ‘மேற்கு நாட்டு அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை விடுத்து இந்தியா, சீனா, ரஸ்யாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துங்கள். அவர்கள் தான் இலங்கை அரசின் மனித உரிமை நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்’ எனச் சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களே தங்களை அணுகும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தெரிவித்து இருக்கின்றார்கள். இவ்வாறு மேற்கு நாடுகள் இலங்கை அரசு மீதான தங்கள் கட்டுப்பாட்டை பெரும்பாலும் இழந்த நிலையே தென்பட்டது. அதனால் இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்காக மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றங்கள், ஜிஎஸ்பி பிளஸ் என்ற வடிவங்களில் சில அழுத்தங்களைப் பிரயோகித்த போதும் இலங்கை அரசு மீதான தங்கள் கட்டுப்பாட்டை நிலைப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
குறிப்பாக மனித உரிமைகள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க, பிரித்தானிய மேற்கு நாட்டு அரசுகளும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றங்களையும் புரிந்துள்ளதால் அவர்களால் ஒரு எல்லைக்கு அப்பால் இலங்கை அரசு மீதும் அழுத்தங்களைக் கொண்டுவர முடியவில்லை. மேலும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்ற மேற்கு நாடுகள் மேற்கொண்ட அதே பரப்புரையிலேயே இலங்கை அரசும் தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்தது.
Sri Lanka: Recharting US Strategy after the War.(pdf)
http://docs.google.com/fileview?id=0B8kHEIyKsdALYWRhYjc3MDAtNjY0Yi00NmVjLWE5YjUtMzYxM2E1Njg1MTA4&hl=en என்ற அமெரிக்க செனட்டின் வெளியுறவுக்குழு டிசம்பர் 7ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்த நாட்டை மேற்கு நாடுகளில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்திவிடும் என்று அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவின் நலன்களில் மாற்றம் ஏற்படும் என்பதை வருமாறு சுட்டிக்காட்டுகின்றது: ”யுத்தம் முடிவடைந்த நிலையில் ஐக்கிய அமெரிக்கா இலங்கையுடனான உறவுகளை அதன் புதிய அரசியல் பொருளாதார யதார்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் மீள்மதிப்பீடு செய்ய வேண்டும். மனிதத்துவம் தொடர்பான விடயங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கை ஒரு விடயத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது. இது உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உதவப் போவதில்லை. இது அப்பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவின் புவியியல் நலன்களில் குறுகிய மாற்றங்களை ஏற்படுத்தும்.’
இவற்றின் பின்னணியில் இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்பட்டு அதனைத் தனிமைப்படுத்தி அதனை மேற்குக்கு எதிரான அணியியை நோக்கித் தள்ளுவதிலும் பார்க்க இலங்கையில் தங்களுக்குச் சாதகமான ஒரு அரசினை ஏற்படுத்த வாய்ப்பிருந்தால் அதனை முயற்சி செய்வது மேற்குநாடுகளுக்கு அதீத பலனைக் கொடுக்கும். அந்த வகையில் வருகின்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் மூலம் ஒரு ‘ரெஜீம் சேன்ஜ்’க்கு மேற்குலகம் முயற்சிக்கின்றது. அதற்கான ஒரு முயற்சியாகவே ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு சந்தித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை தேசம்நெற்றில் வெளியான முன்னைய கட்டுரைகளில் சுட்டிக்காட்டி இருந்தோம். இச்சந்திப்பு போர்க்குற்றம் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கு அல்ல என்றும் சுட்டிக்காட்டி இருந்தோம்.
இந்த ‘ரெஜீம் சேன்ஜ்’ இன் பின்னணியிலேயே சூரிச் மாநாடும் இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டை ஏற்பாடு செய்த அமைப்புகளும் அதன் பின்னணியில் உள்ள நாடுகளுமே அதற்குச் சான்று. தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன் தமிழர் தகவல் நடுவத்துடன் International Working Group (IWG) என்ற அமைப்பும், Essex பல்கலைக் கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் Initiative on Conflict Prevention through Quiet இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாக தமிழர் தகவல் நடுவத்தின் நிறைவேற்றுச் செயலரான வி வரதகுமார் தெரிவித்துள்ளார்.
International Working Group on Sri Lanka என்ற இவ்வமைப்புப் பற்றி டிசம்பர் 11 1998ல் அமெரிக்க கொங்கிரஸ்ற்கு அதன் தலைவர் Richard Reoch பின்வருமாறு கூறுகிறார்‘The International Working Group on Sri Lanka is an independent, non-partisan network of organisations and individuals concerned with the promotion of human rights, development and peace in Sri Lanka. It has a management board in London and an international network that currently comprises humanitarian and advocacy groups in Asia, Australasia, Canada, Europe and the USA as well as Sri Lankan organisations working in the fields of development, peace and human rights.” இவ்வமைப்பின் சார்பில் Richard Reoch யை பிரித்தானிய அரசின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் Department for International Development of the UK Government) இரு வார வேலைத் திட்டத்தில் இலங்கைக்கு அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பொதுச் செயலாளராக Peter Bowling என்பவர் இருந்துள்ளார்.
Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு கனடாவைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற Human Rights Internet அமைப்பின் ஒரு பிரிவாகும். 2007ல் இவ்வமைப்பு ஒரு மில்லியன் டொலர் நிதித் திட்டத்தைக் கொண்டிருந்தது. இவ்வமைப்பிற்கு கனடிய சர்வதேச அபிவிருத்தி முகவரகம் நோர்வே வெளிநாட்டு அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் நிதி வழங்குகின்றன. Human Rights Internet அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒன்றான Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு செயற்படுகின்றது. இதன் ஆலோசணைக் குழுவில் பல்வேறு நர்டுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளனர். பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் பெர்னாட் கோச்னர், முன்னால் இலங்கை ஜனாதிபதி சத்திரிகா குமாரதுங்க ஆகியோர் அவர்களில் சிலர். சூரிச் மாநாட்டில் தேர்தல் விடயம் உட்பட பல தலைப்புகளில் சிறப்பு ஆய்வு அறிஞராக அழைக்கப்பட்ட ஜோன் பக்கர் Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பின் ஒட்டாவா கிளையில் நிபுணத்துவ ஆரோசகராக பணியாற்றுகிறார். இவர் பிரித்தானியாவில் உள்ள Essex பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிகின்றார்.
மேற்குறிப்பிட்ட அமைப்புகள் நாடுகளைத் தவிர சுவிஸ்லாந்து நாட்டின் வெளிநாட்டு அமைச்சும் சூரிச் மாநாட்டிற்கு நிதியுதவி வழங்கி உதவியுள்ளது. ‘இந்த நாடுகள் எல்லாம் இலங்கையின் விடயங்களில் தலையிடுகின்றது என்றால் அதற்கு ஒரு நோக்கம் இல்லாமல் இருக்காது’ என ஈபிஆர்எல்எப் தலைவர் சுகு இந்த மாநாட்டின் இறுதிநாள் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ரெஜீம் சேன்ஜ் ஒன்றை மேற்கு நாடுகள் விரும்புகின்றது’ என்றும் தெரிவித்தார். மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ‘ரெஜிம் சேன்ஜ் ஒன்றுக்காக தமிழ்க் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டும்’ எனச் சூரிச் மாநாட்டில் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.
இலங்கை அரசின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அடிப்படையில் திறந்த பொருளாதாரத்தை ஆதரிக்காத கட்சி. ஒப்பீட்டளவில் அதன் உறவுகள் கீழைத்தேய நாடுகளுடனேயே நெருக்கமாக இருந்தது. மேலும் இலங்கை அரசுக்கு முண்டுகொடுக்கின்ற ஜேவிபி, ஜேஎச்யு ஆகிய தேசியவாதக் கட்சிகளும் மேற்கு நாடுகளுக்கு எதிரான தீவிர சிங்கள தேசியவாதத்தை தம்முள்ளே கொண்டுள்ளன. 2009ல் மட்டுமல்ல 1971ல் இடம்பெற்ற ஜேவிபி கிளர்ச்சியை அடக்கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது இந்தியாவும் சீனாவுமே.
2009ல் இலங்கை அரசின் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிரான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், கியூபா, வெனிசுவெலா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளே இலங்கை அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்கி இருந்தன. இவற்றில் கியூபா, வெனிசுவெலா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகள் இலங்கையுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருக்காத போதும் மேற்கு நாடுகளின் – காலனித்துவ நாடுகளின் செயற்பாடுகளுக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இலங்கைக்கான அந்த நாடுகளின் ஆதரவு அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த யுத்தத்தில் இலங்கை அரசின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்தியா. ஏனைய அனைத்து நாடுகளும் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்து இந்தியா தனித்து நின்று இலங்கைக்கு விரோதமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு இருந்தால் இலங்கை அரசால் இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக காலனித்தவ நாடுகளையும் அவர்களது ராஜதந்திரங்களையுமே இறுதிவரை நம்பி இருந்தனர். அதற்கான மிக உயர்ந்த விலையையும் செலுத்தினர்.
இவற்றின் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தீர்மானிக்கப் போகின்றது. யார் ஆட்சிக்கு வந்தால் இலங்கையின் அரசியல் எதிர்காலம் தங்களுக்குச் சாதகமாக அமையும் என்பதில் மேற்கு உலகிற்கும் கீழைத்தேய உலகிற்கும் பாரிய முரண்பாடு உண்டு. இந்த முரண்பாட்டின் இரு துருவங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டும் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு மேற்கு நோக்கியும்- சீனா, இந்தியா உட்பட்ட கீழைத்தேய நாடுகள் ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சி நோக்கிச் சாய்வதும் இயல்பானதே.
ஆனால் இந்தத் தேர்தலில் குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடு கவனத்திற்குரியது. ஆனால் இந்தியா தனது நிலைப்பாடு பற்றி எவ்வித சமிக்ஞையையும் வெளிப்படையாக வழங்குவதாக இல்லை. தேர்தலில் நிற்கின்ற இரு பிரதான போட்டியாளர்களும் இந்தியாவுடன் தங்கள் நல்லுறவை உறுதிப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை மீறிச் செயற்பட முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. அதனால் நேரடியான எவ்வித சாய்வையும் இந்தியா மேற்கொள்வதற்கான தேவை அங்கில்லை.
ஆனால் மேற்கு உலகிற்கு எதிரான அணியில் உள்ள இன்றைய அரசின் பக்கம் ஒரு மென்போக்கு இந்தியாவுக்கு உள்ளது. சீனா, பாகிஸ்தான் போன்ற பிராந்திய போட்டியாளர்களை இலங்கையில் கையாள்வதிலும் பார்க்க மேற்குலகை கையாள்வது இந்தியாவுக்கு சற்று கடினமானதாகவே அமையும். அதனால் இன்றைய ஜனாதிபதி மீண்டும் தெரிவு செய்யப்படுவதில் இந்தியாவுக்கு எவ்வித சங்கடமும் இல்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவில் நிற்கும் சரத் பொன்சேகா அரசியலுக்கு அறிமுகமாகாதவர். அவர் எவ்வித அரசியல் முடிவுகளை மேற்கொள்வார் என்பது பற்றி எதிர்வுகூறக் கூடிய நிலையிலும் இந்தியா இல்லை. அதனால் தெரியாதா ஒருவரிலும் பார்க்க நல்லதோ கெட்டதோ அரசியலில் அறிமுகமான ஒருவர் ஆட்சிக்கு வருவதை இந்தியா சாதகமாகவே கணிக்கும்.
இந்திய அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து வெளிவரும் சமிக்ஞைகளும் இன்றைய ஜனாதிபதி ராஜபக்ச பற்றிய ஒரு மென்போக்கையே வெளிப்படுத்துகின்றன. அண்மையில் தமிழ்கட்சிகள் தங்கள் அடையாளங்களைக் களைந்து தேசியக் கட்சிகளுடன் ஒன்றிணைய வேண்டும் என்ற அழுத்தம் மகிந்த ராஜகபக்ச அரசால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக தனிப்பட்ட முறையில் கருத்து வெளியிட்ட இந்திய ராஜதந்திரிகள் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததன் பின்னர் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரியவருகின்றது. இந்திய ராஜதந்திரிகள் தேசியக் கட்சிகளுடன் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து செயற்படுவதே சரியானது என்ற வகையில் அழுத்தங்களை வழங்கி உள்ளனர்.
தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என்று பொதுப்படையாக இராணுவத் தளபதியாக இருக்கும் போது சரத் பொன்சேகா சரியாகவே விமர்சித்திருந்தாலும் அது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு எவ்வகையிலும் உதவப் போவதில்லை. குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றக் கூடிய ஆளுமை தமிழக அரசுக்கு உள்ளது. இன்று தமிழக அரசுக்கும் மகிந்த அரசுக்கும் மிக நெருக்கமான உறவுகள் ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயமும் அதனையொட்டி வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களின் விடுவிப்பும் மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வு. இது தற்போதைய இலங்கை தமிழக ஆளும் குழுமங்களிடையேயான உறவுகளை மிகவும் வலுப்படுத்தி உள்ளது.
இந்திய இராஜதந்திர மற்றும் புலனாய்வுத்துறையினரின் பின்புலத்தில் இயங்கும் SAAG இணையத்தளத்தில் கேர்ணல் ஆர் ஹரிகரன் (Col. R Hariharan, a retired Military Intelligence specialist on South Asia, served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90.He is associated with the South Asia Analysis Group and the Chennai Centre for China Studies.), பி ராமன் (B Raman is Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute for Topical Studies, Chennai.) ஆகியோர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் இந்திய ராஜதந்திரத்தின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தக் கூடியவை.
நவம்பர் 14ல் கேர்ணல் ஹரிகரன் ‘Comments on Gen Fonseka’s Resignation’, என எழுதிய கட்டுரையில் ‘President Rajapaksa has built close relations with Indian leadership. Probably he made no major move that would impact India’s strategic relations with his country without consulting India. – ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியத் தலைமையுடன் நெருக்கமான உறவை கட்டமைத்துள்ளார். அனேகமாக அவர் இந்தியாவின் நடவடிக்கைத் – திட்டமிடல் – உறவைப் பாதிக்கின்ற ஒரு நகர்வை இந்தியாவுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கமாட்டார்” என எழுதியுள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கான போட்டியில் இந்தியாவின் தெரிவு யாராக அமையும் என்பது பற்றி கேர்ணல் ஹரிகரனின் பதில் வருமாறு: ‘I think Rajapaksa has a better equation with Indian leadership. He is a seasoned politician who has cultivated the Indian leaders over the years. On Tamil autonomy issue he has no great differences with India, although he has pushed it down in his list of priorities for political reasons. – நான் நினைக்கின்றேன் ராஜபக்ச இந்திய தலைமையுடன் மேலான சமன்பாட்டைக் கொண்டுள்ளார். அவர் ஒரு பருவகால அரசியல்வாதி. அவர் கடந்த பல ஆண்டுகளாக இந்தியத் தலைவர்களை பயிரிட்டுள்ளார். தமிழர்களுடைய சுயாதீனம் தொடர்பில் அவருக்கும் இந்தியாவிற்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக அவ்விடயத்தை முக்கியப்படுத்தலின் வரிசையில் பின்தள்ளியுள்ளார்.’
கேர்ணல் ஹரிகரன் சரத்பொன்சேகா பற்றி எழுதுகையில் ‘General Fonseka has his networking more with Indian military leadership than with political leaders. His strong views smacking of Sinhala nationalism rather than Sri Lanka nationalism makes Government of India uncomfortable. -தளபதி பொன்சேகாவினுடைய வலைப்பின்னல் இந்திய அரசியல் தலைவர்களுடன் இருந்ததிலும் பார்க்க இந்திய இராணுவத் தலைமைகளுடனேயே கூடுதலாக இருந்தது. இலங்கைத் தேசியவாதத்திலும் பார்க்க சிங்களத் தேசியவாதத்தில் அவர் கொண்டுள்ள சுவை இந்திய அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.’ எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக அரசு பற்றிக் குறிப்பிட்ட விடயத்தையும் சுட்டிக்காட்டிய கேர்ணல் ஹரிகரன் இறுதியாக இவ்வாறு தனது கட்டுரையை முடிக்கின்றார். ;. ‘So overall, India would probably prefer Rajapaksa to continue as president. ஆகவே முழுமையாக் எடுத்துக் கொண்டால் அனேகமாக இந்தியா ராஜபக்ச ஜனாதிபதியாகத் தொடர்வதையே விரும்பும்.’
பி ராமனும் கேர்ணல் ஆர் ஹரிகரனுடைய தொனியிலேயே தனது கட்டுரையை வரைந்துள்ளார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு தளபதி பொசேகாவின் இராணுவத் தலைமையிலும் பார்க்க மகிந்த ராஜபக்சவின் அரசியல் தலைமையே பிரதான காரணம் என்கிறார். அதனால் ‘Gen. Fonseka Devalues Himself – தளபதி பொன்சேகா தன்மதிப்பைக் குறைக்கின்றார்’ என்ற தலைப்பில் பி ராமன் நவம்பர் 17ல் கட்டுரையை வரைந்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டிருக்கக் கூடாது என்ற வகையில் பி ராமனின் கட்டுரை அமைந்துள்ளது. கட்டுரையை அவர் வருமாறு முடிக்கின்றார். ‘Fonseka has only devalued himself. The political forces in Sri Lanka which are exploiting his pique as a stick to beat Rajapaksa with are playing an unwise game. They may end up by diluting the professionalism of the SL Army. – இதன் மூலம் பொன்சேகா தன்மதிப்பை மட்டுமே குறைத்துள்ளார். அவருடைய கடுப்பை இலங்கையில் உள்ள அரசியல் சக்திகள் ராஜபக்சவை அடிப்பதற்கான தடியாக பயன்படுத்திக் கொள்கின்றன. இது ஒரு புத்திசாதுரியமான செயல் அல்ல. இவர்கள் சிலவேளை இலங்கை இராணுவத்தின் தொழில்நேர்த்தியை பலவீனப்படுத்துவதில் முடிப்பார்கள்.’ இவை இந்திய ஆளும் குழுமத்தின் போக்கை நாடி பிடித்துப் பார்க்க உதவுகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை 2016 வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற உள்விருப்புடனேயே இந்தியா சில அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் இருப்பதாகத் தெரிகின்றது. பிரதான போட்டியாளர்களான மகிந்த ராஜபக்சவும் சரத்பொன்சேகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த வீரர்கள் என்ற இறுமாப்புடனேயே தேர்தல் களத்தில் குதிக்கின்றனர். இத்தேர்தலில் இந்த இரு தலைவர்களின் தேர்தல் கொள்கை விளக்கங்களில் சிறுபான்மையினருக்கு எவ்வித உறுதி மொழியும் வழங்கப் பட்டிருக்கவில்லை. இரு தரப்பிலும் தொங்கிக் கொள்ளும் சிறுபான்மையினக் கட்சிகள் வழமைபோல் வெறும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தங்கள் ஆதரவை வழங்கி உள்ளன. ஜனாதிபதித் தேர்தல் வரை, நடந்து முடிந்த அத்தனை தேர்தல்களிலும் ஆளும் மகிந்த அரசின் கூட்டே பெரும்பாலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மகிந்த அரசைத் தோற்கடிப்பதற்கு எதிர்த்தரப்பு முற்றிலுமாக இணைந்து செயற்படுத்துவதன் மூலமே அதனைச் சாத்தியமாக்க முடியும்.
ஆனால் எதிர்த் தரப்பின் நிலை அவ்வாறு இல்லை. ஏற்கனவே பிளவுகள் வெடிக்க அரம்பித்து உள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் கூட எதிர்த் தரப்புடன் முழுமையாக இல்லை. இரு வேட்பாளர்களுக்குமாக சிறுபான்மைக் கட்சிகள் பிளவுபட்டு உள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்ட தமிழ்ச் சமூகம் இத்தேர்தலில் ஆர்வம் காட்டுவதாக இல்லை. 2005 தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களை வாக்களிக்க அனுமதிக்காமல் செய்ததன் மூலம் மகிந்த ராஜபக்சவை தேர்தலில் வெற்றியீட்டச் செய்தது தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களின் பினாமிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்புமே. இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமற் போய்விட்டார்கள். அவர்களுடைய பினாமிகள் மட்டுமே உள்ளனர். அவர்களால் இத்தேர்தல் தொடர்பாக ஒருமித்த முடிவை எடுக்க முடியாது என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டது. இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிற்காவோ அல்லது சரத் பொன்சேக்காவுக்காகவோ தமிழ் மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியாது. அப்படிக் கேட்க முற்படுவது தமிழ் அரசியலில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரும் அரசியல் பல்டியாகவே அமையும். ஆயினும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது மகிந்தவின் அரசியல் தலைமையே என்றளவில் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்க சில தமிழ் தலைமைகள் முன்வருகின்றன. பொதுவாகவே தமிழ் தலைமைகளிடம் யுஎன்பி சார்புப் போக்கு என்றும் உள்ளது. அதனால் தமிழ் மக்களின் வாக்கு மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமையும் என்ற முன் கணிப்பு ஒன்றுள்ளது.
இவற்றின் பின்னணியில் இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களுடைய நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதால் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கு ஒலித்தன. ‘சரத் பொன்சேகாவையோ அல்லது ராஜபக்சவையோ தமிழ் மக்கள் ஆதரிக்க முடியாது. இருவருமே தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்கள். அதனால் தமிழ் மக்கள் இத்தேர்தலில் தங்களுக்கு என்று ஒரு வேட்பாளரை நிறுத்துவதையும் நாங்கள் பரிசீலிக்கின்றோம்’ என சூரிச் மாநாட்டில் கலந்துகொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் ‘தேசம்நெற்’க்குத் தெரிவித்தார். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இந்தியா சென்று திரும்பியபின் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றியும் ஆர் சம்பந்தனே தமிழ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற ஊகங்களும் தெரிவிக்கப்பட்டது. ‘ஆர் சம்பந்தன் தோல்வி அடையும் தேர்தலில் போட்டியிடவும் மாட்டார். வெற்றி பெறும் தேர்தலை விட்டுவிடவும் மாட்டார்.’ என்ற அடைமொழிக்கமைய தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு உடன்பட மறுத்துள்ளார். பெரும்பாலும் ஆர் சம்பந்தன் உட்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காமல் மௌனம் காப்பார்கள் என்றும் ஊகிக்கப்படுகின்றது.
ஆனால் அண்மையில் இந்தியா சென்றிருந்த சிவாஜிலிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் தவறினால் தான் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார். தற்போது இந்தியாவுக்கு நெருக்கமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமான ரெலோ இயக்கம் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான ஒரு அஸ்திரமாகவும் இந்த தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான கோரிக்கை அமையலாம்.
தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் மகிந்த ராஜபக்சவே கூடுதலான நன்மையடைவார். கடந்த தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாததால் வெற்றியீட்டிய அவர் இத்தேர்தலிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாமலேயே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. ஆனால் அந்த வாக்குகள் சரத் பொன்சேகாவிற்குச் செல்வது மகிந்த ராஜபக்சவின் வெற்றியைப் பாதிக்கும். அதனால் தமிழ் தேசியவாதி ஒருவரை தேர்தலில் நிறுத்துவதன் மூலம் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் வாக்குகள் செல்வதைத் தடுக்க முடியும். தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா சென்று திரும்பியதில் இருந்தே அழுத்தமாக வருவதால் இந்த நகர்விற்குப் பின்னணியில் இந்திய இருக்கலாம் என்ற முடிவுக்கே வரமுடியும். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ இயக்கம் ஒப்பீட்டளவில் அரசு சார்பு நிலைப்பாடுகளையே எடுத்துவருகின்றது. அந்த வகையில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற முடிவுக்குப் பின்னால் இந்திய – இலங்கை அரசுகள் இருந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. மேலும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தாங்கள் தமிழ் தேசியத்திற்காக நிற்பதாகக் காட்டிக் கொள்ளவும் முடியும். அதே சமயம் மகிந்த ராஜபக்சவைத் திருப்திப்படுத்தியதாகவும் அமையும். ரெலோ ஒரே கல்லில் இரு மாங்காய்களை விழ்த்த நினைக்கின்றது.
இந்த அரசியல் நகர்வுகளின் மையம் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா மகிந்த ராஜபக்சவை 2016 வரைக்கும் பதவியில் அமர்த்துவதை நோக்கி நகர்கிறது என்ற முடிவுக்கே வரவைக்கின்றது.