2017 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கனவில் ரணில். தொலைக்காட்சி பேட்டியில் எஸ்.பி.

sb-dissanayake.jpg2017  இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் வரும் போது அதில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அனுமதி கிடைக்காது.  எனவே, 2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமென்று ரணில் விக்கிரமசிங்க கனவு காண்கிறார். ஆனால் அவ்வாறு நடைபெறப் போவதில்லையென ஐ. தே. க. வின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எஸ். பி. திஸாநாயக்க கூறினார்.

ITN தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

ஒரு கட்சியில் இருக்கும் வரை அக்கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். கட்சியில் ஒருமைப்பாடு அவசியம். இதனால் தான் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதும் அவருக்கு ஆதரவு தர நான் முன்வந்தேன்.  அவரை தோளில் சுமந்து சென்று வெற்றிபெற வைக்க தயாராக இருப்பதாகவும் கூறினேன். ஆனால் உண்மையை கூறுவதென்றால் ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா வெற்றி பெறமாட்டார். அவர் தோல்வியை தழுவியதும் ரணில் விக்ரமசிங்க கட்சியினரைப் பார்த்து நீங்கள் தேர்வு செய்த வேட்பாளர் தோற்றுவிட்டார்.  எனவே மீண்டும் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத்தான் உள்ளது என்று தலைவர் பதவியில் இருந்து கட்சியை தொடர்ந்து நடத்திச் செல்வார்.

அவரால் நியமிக்கப்பட்ட செயற்குழுவும் அதனை ஆமோதிக்கும். இதன் பின் 2017 இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வரும்போது அதில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அமைப்பின் பிரகாரம் அனுமதி கிடையாது. எனவே 2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கனவு காண்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த திறமைசாலி, முக்கியஸ்தர்கள் பலர் தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே கட்சியில் இருந்து வெளியேறினர். ரணில் விக்கிரமசிங்கவை கட்சியில் தலைமைப் பதவிக்கு கொண்டு வந்தவர் சிரிசேன குரே, ஆனால் அவர் தான் கட்சியில் இருந்து முதலில் வெளியேற்றப்பட்டார். சரத் அமுனுகம, நந்தா மத்தியூ, விஜேபால மெண்டிஸ் போன்ற அனுபவசாலிகளும் வெளியேற்றப்பட்டனர். விஜேபால மெண்டிஸ் கட்சியில் இரண்டாம் இடத்தில் இருந்தவர். ஆனால் அவரும் கூட கட்சியில் நிலைத்திருக்க முடியவில்லை.

அதன் பிறகு நான் கட்சியில் இருந்த போது கரு ஜயசூரிய தலைமையில் 17 பேர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சியில் சேர்ந்து கொண்டனர். ஆனால் நான் அப்போதும் கட்சியிலேயே தொடர்ந்தேன். கட்சியை சரியான வழியில் கொண்டு செல்லலாம் என்ற நோக்கத்திலேயே நான் தொடர்ந்து கட்சியில் இருந்தேன். ஆனால் அவ்வாறு முடியாது என்று நிச்சயமாக தெரிந்ததை அடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நான் வெளியேறினேன்.

ஐக்கிய தேசிய கட்சி இந்நாட்டின் மிகப் பெரிய கட்சி. 63 வருட பாரம்பரியத்தை கொண்டது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களினதும் பிரதிநிதிகளாகக் கொண்ட கட்சி. அக் கட்சியின் ஸ்தாபகர் முதல் இருந்து வந்த தலைவர்கள் திறமைசாலிகள்.

ஆனால் இப்போது அக்கட்சி அதன் பலத்தை இழந்து வருகிறது. இதற்கு கட்சியின் தலை மைத்துவமே காரணம். அக் கட்சிக்குள் இப்போது ஜனநாயகம் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகர் டி. எஸ். சேனநாயக்க முதல் விஜேதுங்க வரை கட்சியின் தலைவர் கட்சியின் வரு டாந்த மாநாட்டில் கட்சி உறுப்பினர்களின் தேர்தல் மூலமே தெரிவாவார். ஆனால் இப்போது அந்த நடைமுறை இல்லை. கட்சியில் தீர்மானங்களை எடுப்பது கட்சியின் செயற் குழுவாகும். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டவர்களே உள்ளனர். கட்சி யின் செயற் குழுவுக்கு ரணில் விக்கிரமசிங்க எப்போதுமே திறமையற்ற அனுபவமற்ற, தனது பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவர்களையே நியமிக்கிறார். இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க கட்சியில் தனியொரு சர்வாதிகாரி போல் செயற்பட முடிகிறது.

இம்முறை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் போது கட்சியில் இருந்த முக்கியஸ்தர்கள் பலர் தலைவர் விக்கிரமசிங் கவை வெற்றி பெறும் வகையில் சந்தைப் படுத்த முடியாது என்று கூறிவந்தனர். ரணிலும் அதனை ஏற்றுக் கொண்டார். அதனால் இம்முறை கட்சியில் இருந்து போட்டியிடும் ஆற்றல் மிகுந்த ஒருவரை செயற்குழு தேர்வு செய்திருக்க வேண்டும்.

ஆனால் செயற்குழு அதற்கு மா¡றாகவே முடிவெடுத்தது. ஏனெனில் செயற்குழு ரணிலினால் நியமிக்கப்பட் டது. அவர் சொற்படி தான் நடக்கும். எனவே கட்சியில் ஜனநாயகம் அற்ற வகையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவது தெளிவாகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *